என்னாச்சு கமலம் ?

author
0 minutes, 58 seconds Read
This entry is part 7 of 11 in the series 16 பிப்ரவரி 2025

         மீனாட்சி சுந்தரமூர்த்தி.

                                               

கமலம் பட்டுச்சேலை பளபளக்க கழுத்தில் காசுமாலையும் வைரக்கல் அட்டிகையும்  கலகலக்க, காதில் வைர லோலாக்கு ஊஞ்சலாடப் பேருந்தில் ஏறினாள். பின்னாலேயே முருகேசன் பட்டு அங்க வஸ்த்திரம்,அகலக்கரை போட்ட வேட்டி, ஜிப்பா சிலுசிலுக்க  ஏறினார்..

கும்பிடறேனுங்க ஐயா, அம்மா வணக்கம் என்றார் நடத்துநர் 

ஓட்டுநர் திரும்பிப் பார்த்து,’ அம்மா வணக்கமுங்க, பெரியம்மா வரலியா?

‘.. மாடு, கண்ணுங்களை யாரு பாக்கறது?அதான் கெழவிய பாத்துக்கச் சொல்லி வந்துட்டோம்.’

கிழவி என்றது மாமியாரைதான். 

‘பெரியவரு தேங்கா மண்டியை கவனிச்சிப்பாரு’ என்றார் முருகேசன். பெரியவரு  என்றது தன் தகப்பனாரை.

‘ திருக்கோயிலூரு வரைக்கும் போறோம் ஒரு கல்யாணத்துக்கு,

கலெக்சனான பணத்தை ராத்திரி கணக்குப் பிள்ளையிடம் தந்துடு நடேசா.’

‘சரிங்க ஐயா’

இந்தப் பேருந்தின் முதலாளி முருகேசன், நிலபுலன்களும், தோப்பு துரவும் ஏகத்துக்கு இருப்பதால் பேருந்து வாங்கி ஓடவிட்டிருக்கிறார்.இந்த வழித்தடத்தில் உள்ள கிராம வாசிகளுக்கு  டவுனுக்குப் போகவர இது பெரிய வசதி.இதிலும் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. 

குஷன் இருக்கைகள், பேருந்து பச்சை, நீலத்தில்  புதிதாய் மினுக்கும். பக்க வாட்டில் நீலக்கடலும் அதில் பறக்கும் புறாக்களின் ஓவியமும் இருக்கும் ‘கடல் புறா ‘ என்பதே பேருந்தின் பெயர். புதுப்பெண் போலிருக்கும். . டேப்ரெகார்டரில் எஸ்.பி.பி,ஜானகி, சின்னக் குயில் சித்ரா. சுசீலா.,டி.எம்.எஸ்,  எல்.ஆர் ஈஸ்வரி,  ஏ.எம்.ராஜா,ஜிக்கி, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்கள் முறை போட்டு ஒலித்துக் கொண்டிருக்கும். பேருந்தில் பயணிகள் விரும்பி ஏறுவார்கள்

வழியில் பூக்கூடையோடு ஒரு பெண்ணும், கைக்குழந்தையோடு ஒருத்தியும் ஏறி கமலத்தின் பின்னிருக்கையில் அமர்ந்தனர்.

 ‘ஏண்டி கருவாட்டுக் கொழம்பு  சாப்பிட்டயே,  சோப்பு போட்டு கைய கழுவுனியா’

‘ஆமா அத்தே, நல்லாதானே கழுவுனேன்,’

‘சரீடி, சேலையைக் கூட மாத்திதான் இருக்கே’

‘ எதுக்கு அத்த கேக்குறீங்க?’

‘இல்லடி ,நாம சுத்தபத்தமா இருந்தாதான் பூவை கடையில வாங்குவாங்க’

‘உங்களுக்கு  வாசம் தெரியுதா அத்தே’ 

‘ ஆமாண்டி , அதுவும்  வீச்சமா இருக்கேடி’

‘ அத்தே வேற யாராவது எதுனா எடுத்துட்டு வந்திருப்பாங்க’

இப்படியாக அந்தப் பெண்கள் இரகசியம் பேசிக்கொண்டு முந்தானையால் முகத்தைத் துடைப்பது போல மூக்கைப் பொத்திக் கொண்டார்கள்.

கூடையிலிருந்து மரிக்கொழுந்து எடுத்து தலையில் செருகிக் கொண்டார்கள்.

நிஜமாகவே வண்டி முழுவதும் அத்தர், ஜவ்வாது குப்பென்று வீசுவதுபோல் ஒரு மணம் நிரம்பியிருந்தது. 

இன்னொரு நிறுத்தத்தில் கையில் கணினிப் பையோடு ஏறினார் ஒரு  இளைஞர். நடத்துநரின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தார்.சில நிமிடங்களில்  முகத்தைத் துடைப்பதுபோல் கைக்குட்டையோடு உறவாடினார். 

அடுத்த அரைமணியில் பேருந்து நிரம்பி வழிந்தது. பலரும் காற்றில் கலந்து அதிகமான இனம் புரியாத வாசத்தால் சங்கடப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்ணொருத்திக்கு குமட்டல் அதிகமாகி இறங்கிவிட்டாள்.ஓட்டுநரும், நடத்துநரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.அதிலொரு புரிதல் புகுந்திருந்தது.

ஓட்டுநரின் பின்னிருக்கையில் இருந்தனர் கமலமும், முருகேசனும்.

‘ ஏனுங்க  நானு ஒரு பத்துநாளு எங்க வீட்டுல இருந்துட்டு வரேனே’

‘உன்னைய ஒரு நாளு கூடப் பாக்காம இருக்க முடியாதுடி’

‘அதான பார்த்தேன்’ என்று வெட்கத்தில் முகம் சிவந்தாள் கமலம்.

இவர்களுக்கு மணமாகி முப்பத்தாறு வருடமாகிறது,  இரண்டு பிள்ளைகள், இரண்டு பெண்கள். 

பெரியவளைச் செஞ்சியிலும், .இளையவளை ராணிப்பேட்டையிலும் விமரிசையாகத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார் முருகேசன்.

பிள்ளைகள் சென்னையில், பெரியவன் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில்  வேலையில் சேர்ந்து மூன்று வருடமாகிறது., கைநிறையச் சம்பளம், இளையவன் இந்த வருடம் படிப்பை முடிப்பான். மகனுக்குப் பெண்பார்த்து ஓய்ந்து விட்டார்.அவன் ஊருக்கு வருவதே இல்லை, கேட்டால் ஏதாவது ஒரு சாக்கு போக்குச் சொல்லி சமாளித்து விடுகிறான்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் மகனுடன் பேசினாள் கமலம்,

‘ ஏண்டா தம்பி, ஊருக்கு வரமாட்டேங்கறே, ?’

‘ வேலை அதிகமா இருக்குதுமா’

‘நமக்கு என்னடா கொறைச்சல், இங்ஙன வந்து அப்பாவுக்கு ஒதவியா இரேன்’

‘  எனக்கு இந்த வேலைதாம்மா புடிச்சிருக்கு’

‘சரிடா, என் தம்பி மகளைக் கட்டிகிட்டு போய் வேலைய செய்யேன்’

‘சரிமா எல்லா ஏற்பாடும் பண்ணுங்க வந்திடறேன்’ 

மகன் சம்மதித்ததில் கணவனுக்கும் மனைவிக்கும் நிம்மதி.

இப்போது கமலத்தின் தம்பி மனைவியின் அக்கா மகளின் திருமணத்திற்குதான் கணவனும் மனைவியும் செல்கிறார்கள்.

ஒருவாரம் யோசித்தார்கள் ஆயிரம் ரூபாய் செய்தால் போதாதா என்று. ஒருவேளை தம்பி மனைவி கோபித்துக்கொண்டு பெரியவனுக்கு பெண்ணைத் தராமல் போய்விட்டால்  என்ன செய்வது? ,

அப்படியும் முருகேசன் சொன்னார்,

‘ ஏண்டி ஒன் தம்பி மவளை விட்டா வேற பொண்ணு கெடைக்காதா?’

‘ அட நீங்க வேற, ஒரே பொண்ணு, மூக்கும் முழியுமா அம்மன் செலையாட்டம் இருக்கா, படிச்சிருக்கா, பெரியவனுக்கு அவளைப் புடிக்கும் .’

‘ ஓ அப்புடி போகுதா கதை’

‘அதுமட்டுமில்லீங்க, கணக்கு போட்டுப் பாருங்க, ஒரே பொண்ணு, முப்பது ஏக்கரு நஞ்சையும், தென்னந்தோப்பும், முந்திரிதோப்பும் அரிசி மில்லும், போதாதுனு உரக்கடை வேற வச்சிருக்கான் தம்பி’

‘சரிடி, அப்ப பவுனுல நகை வாங்கலாமா?’

‘வெள்ளியில் ஏதாவது வாங்கிக்கலாம்’

இப்படி யோசித்து மணப்பெண்ணுக்கு தருவதற்கு. ஏகமனதாக ஆறாயிரம் ரூபாய்க்கு .வெள்ளியில் சந்தனக் கிண்ணம் வாங்கினார்கள்.

முருகேசனின் சொந்த மாமன்  மகள்தான் கமலம்.அப்படி ஒரு பொருத்தம் இருவருக்கும். ஜாதகப் பொருத்தமெல்லாம் பார்க்கவே இல்லை , கமலம் பிறந்தபோது முருகேசன் ஐந்து வயது சிறுவன்.  மூன்று மாதக் குழந்தையை மடியில் போடச் சொல்லி மாமியிடம் கெஞ்சுவான். அப்போதே அக்கம் பக்கத்துப் பெருசுகள்,

‘ பொண்டாட்டிய எப்புடிப் பார்த்துக்கறான் பாரு’ என்று கிண்டலடித்துச் சிரிப்பார்கள்’

கமலம் முருகேசனுக்கு என்று எழுதாத ஒரு சட்டம் அப்போதே பெற்றவர்களால் இயற்றப்பட்டுவிட்டது.காலங்காலமாக நிலபுலன்கள் வைத்து வேளாண்மை செய்த  குடும்பங்கள் உழைப்பாளிகள், கண்ணும் கருத்துமாகப் பார்த்துச் செலவு செய்பவர்கள், இத்தனை பணமிருந்தும் ஆண்கள் கண்டிப்பும், கண்ணியமும் நிறைந்தவர்கள், தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் எந்த உதவியும் செய்வார்கள்,அவரவர் ஊரில் இந்தக் குடும்பத்தினருக்கு  நல்ல பெயர் இருந்தது. கோவில் திருவிழாச் செலவில் கணிசமான பங்கு இவர்களுடையது. 

.முருகேசன் அப்பா தந்த நிலத்தில்தான் ஊரில் முதலில் தொடக்கப்பள்ளி வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் அது மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்து விட்டது. அதற்கு கூடுதலாக இடம் தேவைப்பட்டது,  பள்ளியின் பின்புறமிருந்த இரண்டு  ஏக்கர் நிலத்தை ஆசிரியர்கள் 45 பேரும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கினார்கள். இந்த விஷயம் முருகேசனின் தந்தையாருக்கு மூன்று மாதத்திற்குப் பிறகுதான் தெரிந்தது, அவ்வளவுதான்  அவர் பள்ளிக் கூடத்திற்குச் சென்றபோது மதிய உணவு இடைவேளை, தலைமையாசிரியர் ஓடிவந்து வரவேற்றார்,

‘ வாங்க ஐயா,  சொல்லியிருந்தா நானே வந்து பார்த்திருப்பேனே’

‘ எங்கிட்டச் சொல்லியிருக்கலாமில்ல, ஏன் இப்பிடி பண்ணீங்க?’

‘ என்ன சொல்றீங்க ஐயா, புரியலையே’

‘ டீச்சருங்ககிட்டப் பணம் வாங்கனீங்களே, ஞாயமா?’

‘ ஐயா ஏற்கெனவே அஞ்சு ஏக்கரு நெல்லு வெளையற பூமிய தந்திருக்கீங்க, இன்னும் கேக்கறது சரியாப் படலை. அதுனாலதான்’

‘ இந்தாங்க இதுல ஒரு லட்சமிருக்கு ,ஆலையில கரும்பு போட்ட பணம்,’

‘ அம்பதாயிரம் தான் தந்தோம் ஐயா’

எதுவும் பேசாதீங்க, எல்லாரையும் கூப்புடுங்க , இப்பவே என் முன்னாலயே  எல்லாருக்கும் பணத்தை குடுங்க’

‘ மீதிப் பணத்தைக் கட்டடம் கட்ட வச்சிங்குங்க’

கையெடுத்துக் கும்பிட்டனர் ஆசிரியர்கள்.

ஆனால் அன்று வீட்டில் பெரிய பிரளயமே நடந்தது. முருகேசன் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்.

‘ யாரைக் கேட்டு பணத்தைத் தந்தீங்க’

‘ நான் யாரை கேட்கணும், புள்ளைங்க படிப்புக்குதான தந்திருக்கேன்’

‘ ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் பா’

‘எல்லாந்தெரியும் போடா’

அதிலிருந்து  பனிப்போர் துவங்கியது. எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார் முருகேசன். தள்ளாமை வேறு கூடியதால் ஒதுங்கிக் கொண்டார் பெரியவர்.பெற்றவள் இருதலைக்கொள்ளி எறும்பானாள்.

ஏற்கெனவே சிக்கனமாக இருந்தவர் முருகேசன், அன்று ஒரு படத்திற்கு மனைவியோடு சென்று வந்தார்.அதில் கதாநாயகன் எல்லோருக்கும் அள்ளி அளளிக்  கொடுத்து ஏழையாகி கோவிலில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அன்றிரவு,

‘கமலம் படம் எப்பிடி இருந்தது,’

‘ நல்லா இருந்ததுங்க, ஆனா முடிஞ்சதுதான் சரியில்ல’

‘ நானு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்’

‘சொல்லுங்க,  மாமனைப்போல வாரித்தரக் கூடாதுதானே’

‘அது மட்டுமில்ல,இன்னும் சிக்கனமா இருக்கணும்’

‘இருக்கலாங்க’

அதன்படி புதிய பழக்கவழக்கங்கள் வீட்டில் வந்தது.சிக்கனத்தின் அவசியத்தைச் சொன்ன ஈரோட்டுச் சிங்கம் பெரியார் கூடப் பார்த்தால் அசந்து போயிருப்பார்.எதுவுமே வீண் என்ற பேச்சுக்கே இடமில்லை.

முன்போல கோவில் திருவிழாக்களுக்கு  செலவு செய்வதில்லை,ஊரில் எவரும் முன்போல் உதவி கேட்டு வருவதில்லை, பிள்ளைகளுக்கு  ஒரு ரூபாயை நூறு ரூபாயா நெனச்சு செலவு பண்ணும்னு கேட்டு அலுத்துப் போச்சு. பெரியவருக்காக, உறவுகள் பேருக்கு  வந்து போய்க் கொண்டிருந்தார்கள்

எதிர் வீட்டில்  புதிதாக வந்திருந்த தெய்வானையைப் பிடித்துவிட்டது கமலத்திற்கு, இருவரும் நெருங்கிய தோழியரானார்கள். அன்று கோவிலில்,

‘ கமலம்  நெய்விளக்கும், பூ, கற்பூரம் இன்னக்கி வாங்கலியா?

‘ இல்ல தெய்வான, ஒழைச்சி சம்பாதிக்கறாரு அவுரு, அதை எதுக்கு வீணாக்கணும்’.

‘ இன்னாது?’ ‘ஆமாம், சாமியக் கையெடுத்துக் கும்பிட்டா போதாதா?’

ஒரு வாரத்திற்குப் பின்னர் கமலம் தெய்வானை வீட்டில் பேசிக் கொண்டிருந்தாள்,

‘ கமலம் ஒண்ணு கேட்டா தப்பா நெனைக்க மாட்டியே’

‘ கேளு தெய்வானை,’

‘இந்தப் பொடவை நீ முந்தாநாளு கட்டுனதுதானே?’

‘ ஆமாம், அதே பொடவைதான்’

‘ துவைச்சியா?’

‘சிக்கனமா குடும்பம் நடத்தறதை நீயும் தெரிஞ்சுக்கோ, ஒனக்கு மட்டும் இந்த ரகசியத்தைச் சொல்றேன்’

‘ஒரு மாசத்துக்கு ஏழு சேலை அலமாரியில இருந்து எடுத்து வச்சிடுவேன்’

‘ ஓ அதையே மாத்தி மாத்தி கட்டிக்குவே’

‘ ஆமாம், ஆனா, ஒரு மாசத்துக்குப் பொறவுதான் துவைக்கறது’

‘ அது எப்பிடி முடியும் தெனமும் குளிக்க மாட்டியா?’

‘ வெள்ளிக்கெழமை மட்டும் சோப்பு போட்டுக்குவேன், ‘

‘ மத்த நாளு?’

‘ சும்மாதான் குளிப்பேன், .?

‘அது சரி. துணி துவைக்கறது எப்பிடி?’

‘குளிக்கறதுக்கு முன்னால கட்டியிருக்கறத அவுத்து கொடியில போட்ருவேன்,’

‘ அதை இன்னொரு நாள் கட்டிப்பியா?”ஆமாம், நீயும் இதே மாதிரி செய், எவ்ளோ மிச்சம் புடிக்கலாம் தெரியுமா?’

‘ நீ மட்டுந்தானே இப்பிடி’

‘ எல்லாருமே இப்படிதான், ஆனா இந்தப் பசங்க வெளியூரு போனப்பறம் கெட்டுட்டானுங்க’

‘ ஏன்?’

‘ சுத்தம் கித்தம்னு நெறைய பேசறானுங்க, ஊருக்கே வரமாட்டேன்றானுங்க’

‘ உங்க மாமனார் மாமியார் எப்படி’

‘அட இதைக் கேளு, இந்தக் கெழங்க, தோட்டத்து வூட்டுல தனியா இருக்குதுங்க’

என்று இடுப்பில் கையை வைத்துப் பரபரவென்று சொரிந்தாள்.

‘ என்னாச்சு கமலம்?’

இதப் பாரேன், ஒரே அரிக்குது, என்று இடுப்பைக் காட்டினாள் கமலம்,

ஒட்டியாணம் கட்டியதுபோல அகலமாகச் சொரிசிரங்கு அப்பியிருந்தது. அதிலிருந்து நாற்றம் வேறு அடித்தது. அடுத்த ஒரு வாரத்தில் தெய்வானை வேறு வீடு மாற்றிக் கொண்டு சென்றுவிட்டாள்.

பத்திரமா ஓட்டுப்பா என்று சொல்லி விட்டு  திருக்கோவிலூர் வந்ததும் மனைவியோடு இறங்கினார் முருகேசன்..பேருந்து நிம்மதியாகப் புறப்பட்டது.

Series Navigationவெளியே நடந்தாள்பூவண்ணம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *