எனக்கில்லை
மத்திய சிறைக்குள்ளே
நுழைவதென்றாலே
மனத்தில் ஓர் அச்சம்தான்.
மாறாத ஒரு நடுக்கம்தான்.
நான்கைந்து தடுப்பு
வாசல்களிலும்
நல்லமுறைச் சோதனைகள்.
கோரிக்கைகளை வென்றெடுக்க
ஆசிரியர் போராட்டத்தில்
அடியேனும் கலந்துகொண்டு
அங்கிருந்த நாள்கள்
அசைபோட வந்தன.
இப்பொழுதும் எதுவும்
மாறவில்லை.
பார்வையாளர் சந்திக்குமிடம்
அதிகாரிகளின் அலுவலகங்கள்
மிடுக்கான காவலர்கள்
வானளாவிய சுற்றுச் சுவர்.
கண்காணிப்பாளர்
இனிமையுடன் பேசினார்.
இனிப்பும் தேநீரும்
பிஸ்கட்டும் வந்தன.
எல்லாமே எனக்கில்லை
நான் அன்பளிப்பாகய்
அளித்த நூல்களுக்கே.
===========================================
. நீ அறிவாய்
நிறங்களின்
அடிமையாகிவிடாதே
உன்னுள்ளே
பல வண்ணங்கள்
குமைந்து கிடக்கின்றன.
சிவப்பும் கருமையும்
மஞ்சளும் நீலமும்
பகிர்ந்து வைத்துள்ளாய்.
குருவிக்குக் கூடு கட்டலும்
கறையானுக்குப் புற்றமைத்தலும்
தனித் திறமைகள்தாம்.
அதுபோல
ஒவ்வொரு வண்ணமும்
ஒவ்வொரு வைகையில்
உன்னை வசப்படுத்துகின்றன.
எல்லாமே தேவைதான்
இருந்தாலும்
கவனம் தேவை
உன்னையே நீ அறிவாய