புத்தகக்கடைக்கு
மனைவியையும்
அழைத்துச்சென்றேன்
வயோதிகத்தில்.
கோயில்,குளமோ போகாமல்
புதுமைப்பித்தனையும்
கி.ரா.வையும், பிரமீளையும்,
ஜெயகாந்தனையும் காட்டியவுடன்
மிரண்டுப்போய்,
மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு
வழிக்கேட்டாள்.
அந்த தெய்வம்
இங்கும் இருக்கின்றது
வா, வாங்கிப்படிக்கலாம்.
இனி
படியேறி, முருகனை அடையமுடியாது.
முட்டிவலி, முதுகுவலி,
கைக்கால் குடைச்சல்.
டிவி சீரியல் ஒருபக்கம்,
யுடியூப் மறுப்பக்கம்
பார்த்தது போதும்
படி
இந்த புத்தகங்களையும்
படி.
கடற்கரை காற்று
வீணாகப்போகின்றது
நட்சத்திரங்கள்
நடைக்கட்டி ஆடுகின்றது.
குடிசையில்
கோலமயில் பாடுகின்றது.
வண்ணமயமான வாழ்க்கை
இந்த
புத்தகங்களில் விரிகின்றது.
வா,
படிக்கலாம்,
நான் மட்டுமே
எத்தனை நாள்கள்
தனியாக படிப்பேன்
நீ
என் வாழ்க்கைத்துணை
வா
சேர்ந்தே படிக்கலாம்
பேசலாம் விரிவாக.
– ஜெயானந்தன்