கே.எஸ்.சுதாகர்
மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில்
பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப்
பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில்
பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல்,
தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணி
சஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.பறவைகள்’ என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் கூடியன. புலம்பெயர் நாடுகளில் வெவ்வேறு இனம், மதம், கலாசாரம் கொண்ட பின்னணியில் வாழும் இருவர், ஒருவருக்கொருவர் துணை தேடும்போது ஏற்படும் சிக்கல் தன்மையை பறவைகள் சிறுகதை பிரதிபலிக்கின்றது.
எனக்கொரு சினேகிதி’ சிறுகதையானது, காதல் என்பது
இதுதான் என்று இலக்கணம் வகுக்கும் கதை. புளிமாங்காய்’ என்ற கதை மிகவும் சிறப்பாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. கனடா பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய
நீங்காத நினைவுகள்’ என்ற தொகுதியில்
இடம்பெற்ற கதை இது.
சிறுவர் சிறுகதைகளில் கனவு நினைவாக வேண்டும்’ என்ற சிறுவர் கதை ஒரு அறிவியல் கதை ஆகும். வேற்றுக்கிரக வாசிகளின் அன்ரனாக்களை - பூமியிலே இருக்கும் லேடி பேர்ட், நத்தை போன்றவற்றுடன் ஒப்பிடுகின்றது இந்தக் கதை. கதையை ஒரு கனவு என்று சொல்லாமல், இடையில் நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.
மர்ம மாலை’ என்ற தொடர் சற்றே வித்தியாசமானது. பெயருக்கு
ஏற்றவாறு அமேசன் காடுகளில் நடக்கும் தொடர் மர்மமாக இருந்தது.
கனடாவில் பிறந்து வளர்ந்த 18 சிறுவர்களுடன் நூல் ஆசிரியரும் சேர்ந்து
தொடரை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். மொத்தம் 20
அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரின் முதல் – இறுதி அத்தியாயங்களை
நூலின் ஆசிரியர் எழுத, ஒவ்வொரு சிறுவர்களும் அந்தத் தொடரை
வாசிக்கத் தூண்டும் வகையில் மிக அழகாக எழுதியிருந்தார்கள். நூல்
ஆசிரியர் அவர்களை வழிநடத்தி தானும் எழுதியிருப்பது சிறப்பு. இந்தத்
தொடரின் இறுதி அத்தியாயமும், நடந்தவை அனைத்தும் கனவு என்று
சொல்லவருவது ஏமாற்றமாக உள்ளது.
தொகுப்பில் இடம்பெறும் பெரும்பாலான கட்டுரைகள் ஏதோ ஒரு
வகையில் பெண்கள் தொடர்பானவை. அவை விஞ்ஞானத்தில், சமூகத்தில்,
இலக்கியத்தில் என பெண்கள் அடைந்த முன்னேற்றம் பற்றிச்
சொல்கின்றன. முதல் இரண்டு கட்டுரைகளும் விண்வெளி ஆய்வில்
பெண்கள் வகிக்கும் பங்கினைச் சொல்கின்றன. அதிகரித்துவரும்
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவாகும் புதிய சொற்களுக்கு,
மாற்றீடாக தமிழ்ச்சொற்களைக் கொண்டு வருவதில் உள்ள
இடர்ப்பாடுகளை ஆராய்கின்றது புதியன புகுதலும், பழையன கழிதலும்’ என்ற கட்டுரை.
சமாதானத்திற்கான நோபல் பரிசுபெற்ற பெண்கள்’ என்ற
கட்டுரையில் நோபல்பரிசு சார்ந்த பல அரிய தகவல்கள் கொட்டிக்
கிடக்கின்றன. என்னதான் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிவிட்டார்கள் என்று சொன்னாலும், இதுவரை கிடைத்த 853 நோபல் பரிசுகளில் 43 நோபல் பரிசுகள் மட்டுமே பெண்களுக்குக் கிடைத்திருக்கின்றன’ என்ற தகவல் ஏக்கம் தருவதாகவே இருக்கின்றது.
திருக்குறளைத் திருத்த வேண்டும்’, பாரதிதாசனும் பெண்களை நுகர்பொருளாகத்தான் பார்த்தார்’ என்று சுபமங்களா இதழுக்கு நேர்காணல் வழங்கிய ராஜம் கிருஷ்ணன் பற்றிய கட்டுரை ஒன்றும் இதில் உள்ளது. சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்ட இவர், கனடாவில் வெளிவரும் தூறல் இதழின் சிறுவர் பகுதி ஆசிரியராக இருந்திருக்கின்றார். அதில் இவர் எழுதிய தலையங்கங்கள் சில புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. அவை புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் படிக்கும் சிறார்களுக்கு உதவியாக பல தகவல்களையும் அறிவுரைகளையும் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்த உலகத்தை எங்கள்
முன்னோர்கள் எங்களுக்குத் தந்துவிட்டுப் போகவில்லை, எங்கள்
பிள்ளைகளிடம் இருந்துதான் நாங்கள் கடனாகப் பெற்றிருக்கின்றோம்’
என்று வட அமெரிக்கப் பழங்குடி மக்கள் குறிப்பிடுவதுபோல இந்தப்
பூமிப்பந்தைக் கவனமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம்
ஒப்படைக்க வேண்டியது எங்கள் கடமையாகும் என்கின்ற நூல் ஆசிரியர்,
அந்தக் கடமையில் இருந்தும் வழுவாதவராகவும் இருக்கின்றார்.
இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் தங்களை அடையாளப்படுத்திக்
கொண்டு முன்னேறும் காலம் வந்துவிட்டது. அப்படி தன்னை
வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டவர் மாலினி அரவிந்தன்.
இனிய நந்தவனம் பதிப்பகம்
ஆகஸ்டு 2021
விலை ரூ 150