அப்போதுதான்
வந்தமர்ந்த
புதுப்பறவையை பார்த்தேன்.
இணைக் காண சோகம்
பாடும் தேடலில் கண்டேன்.
எங்கிருந்தோ
வந்த
வண்ணத்துப்பூச்சி
பறவையின்
முகத்தில் அமர்ந்து சென்றது.
அது கொடுத்த
மகரந்த யாழின்
பாடலில்
பல்லாங்குழி வாசித்தது
புதிய பறவை.
தேடி
நிதம் சோறு தின்னும்
எறும்பின் உரசலில்
ஒய்யாரமாக ஆடியது பறவை.
கூடு விட்டு, கிளை வந்த
காக்கையாரும்
ஒரு பிடி
அமாவாசை பருக்கைப்போட்டது.
கண்ணீரோடு
தின்ற
புதிய பறவை
தன்
பாட்டியை நினைத்து
கண்ணீர் விட்டது.
வந்தமர்ந்த காகம்
பறவையின் கண்ணீர் துடைத்து
நான்தானட
உன் பாட்டி என்றது.
ஆடும் ஆட்டத்திலும்
பாடு பாடல்களிலும்
துள்ளித்திரிந்த
பறவைகள்
கூடிக்குலாவி
இந்த
பூமியின்
வசந்தத்தை வரவேற்றது.
புதிய இலைகள்
புதிய கிளைகள்
நாளை தரும்
நாவல் பழத்திற்காக
புதிய கூடுகளில்
புதிய பறவை
புதுத்துணையை தேடிக்கொண்டது.
வாழ்க்கை
வசந்தத்தில் மலரலாம்
பனியில் மடியலாம்.
வசந்தம்
மறுபடியும் வரும்.
– ஜெயானந்தன்