– கு.அழகர்சாமி
(1)
பாறையின் விழி
என்னை நான்
உடைந்து போக விடுவதில்லை
கண்ணாடியாய்.
உடைக்கப்பட்டாலும்
உடைவேன்
ஒரு பாறையாய்
ஊற்றின்
விழி
திறந்து.
(2)
முடிபு
இன்னும்
முடிக்கப்பட வேண்டியிருக்கிறது
அது.
முடிக்கப்பட்ட அளவில்
முடிந்திருக்கிறது
முடிக்கப்பட வேண்டியதும்.
முழுதும் முடிந்த எதுவும்
ஒரு வகையில்
முடிக்கப்பட்ட அளவில்-
முடிக்கப்பட வேண்டியது போதுமென்றே-
முடிந்ததே.
முடிக்கப்பட்ட அளவில்
முடிந்து கனவு
முடிந்திருக்கவில்லையென்றால்
முழுதும் கனவு முடியாது
இன்னும் விடியாது
கனவாக
முடிந்திருக்குமோ
நனவு?
(3)
ஒரு காரணமுமில்லாமல்
பல நேரங்களில்
ஒரு காரணமுமில்லாமல் தான்
நினைக்கிறேன் உன்னை.
உன் மீது என் மதிப்பின்
அளவுகோலாகத் தெரிகிறது எனக்கு அது.
அதே போல்
உன் மதிப்புக்கு நான் உகந்தவனாயிருப்பேனென்றால்
பல நேரங்களிலில்லா விட்டாலும்-
சில நேரங்களிலாவது
என்னை நீ
நினைத்திருப்பாயென்று எண்ணுகிறேன்.
எதிர்பாராது என்னை நீ
தொலைபேசியில் அழைத்தாய்
ஒரு நாள் –
விரைவில் சந்திப்பதாக.
அதற்கு
ஒரு காரணமுமில்லாமல் தான்
என்னை நீ நினைத்திருப்பாயென்பதைத் தவிர
வேறு ஒரு காரணமுமில்லையென்றே
நம்புகிறேன் –
அதனால்
என் மீது உன் மதிப்பின் அளவுகோலாய் நான்
அதை எடுத்துக் கொண்டாலும்
அதை விட
உன் மீது என் மதிப்பை
மேலும் உறுதி செய்து கொள்வதற்கு
ஒரு வாய்ப்பாய்
உன் சந்திப்பை நீ
அளிக்கிறாயோ என்று தோன்றுகிறது
எனக்கு.
ஆனால் அதுவே
ஒரு காரணமாய்
இருந்து விடக் கூடாததில்
இப்போது
உன்னை நான் நினைப்பதில்
கவனமாயிருக்க வேண்டியிருக்கிறது
நான்.
(4)
ஆச்சரியத்தை தவற விட்டு
வீட்டின்
ஒரு ஜன்னல்
தன்னை
அழைப்பது போல்
குழந்தைக்கு தெரிகிறது.
அதன் மீது
அது மேலேறுவதில்
முதன் முதல்
அது மேலேறுவதாய்த் தோன்றுகிறது.
ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதில்
இப் பக்கம் அப் பக்கமென்று
இரு பக்கங்களாயுள்ள
உலகைக் காண்கிறது.
வெளியே கை நீட்டி
அப் பக்கத்திலுள்ள உலகை
இப் பக்கத்திற்கு –
அறைக்குள்-
இழுத்து
ஒரே பக்கமாக்கப் பார்க்கிறது.
அறைக்குள்
நுழைந்த உலகின்
வியாபகத்தின் ஆச்சரியங்களுள்
மூழ்குகிறது.
நுழைந்த வெளியுலகு
நுழைந்த நொடியிலேயே
வெளியேறி விட
மறுபடியும்
அறைக்குள் இழுத்து-
இப்படி
மறுபடியும் மறுபடியும்
விளையாடுகிறது.
கவனித்து விட்டு
குழந்தையை ஜன்னலிலிருந்து
கீழே இறக்கிய தாய்
ஜன்னலை மூடுகிறாள்
முதன் முதலான ஆச்சரியத்தில்
மூடாத குழந்தையின் விழிகளில்
மொத்த உலகமும் தெரிவதை
கவனிக்காமல்-
முதன் முதலானதால் குழந்தைக்கு
‘ஆச்சரியமாகிய’
ஆச்சரியத்தை
தவற விட்டு.
கு. அழகர்சாமி
- கவிதைகள்
- ஆடுகளம்
- ஶ்ருதி கீதை – 3