வெங்கடேசன் நாராயணசாமி
[ஶ்ரீம.பா.10.87.31]
ஆக்கலுமில்லை! காத்தலுமில்லை! அழித்தலுமில்லை!
எங்குமெதுவும் எவரும் பிறக்கவுமில்லை! இறக்கவுமில்லை!
பிறப்பில்லா காளியும் காளையும்
உன் உளவாக்கலால் கூடிக் குழைந்து
குணத்திரிபால் பல உயிர்களாய்த் தோன்றினர்
உன்னிடமே நீர்க்குமிழி போல்.
குமிழும் நுரையும் அலையும் அரியாமே!
ஊனுயிர் உலகம் ஈஶன் பரமனாம் நீயே அன்றோ?
ஆழிசேர் ஆறுகள் பெயருரு அற்றுப்போவது போல்,
மலைத்தேனுள் வெவ்வேறு மகரந்த மலரின்பம்
மறைந்து செறிந்திருந்தாற் போல்,
உயிர் உலகம் ஊழி உம்பர் உம்பர்கோன் ஏனையோர் பலரும்
என்றும் மாறா உம்மிடம் உறைந்தனரே! ஆதியே! அப்பா!
[ஶ்ரீம.பா.10.87.32]
பிறப்பிறப்பற்ற பேரருளாளா! நின்
மாயையில் சிக்கித் தவிப்பர் மதியிலி ஜீவர்கள்.
உம்மை உம்மிலிருந்து வேறாய் நினைப்போரே
சிக்குவர் இம்மாயச் சுழற்சியில்!
பிறவிச் சுழல் மீட்கவல்லோன் நீயே என
உம்மிடமே தஞ்சம் புகுவார் உமதடியார் உறுபத்தியுடன்!
உம்மைச் சரணடைந்தோர்க்கு பவபயமேது?
குனித்த புருவம் குவிய நெறித்து
மீண்டும் மீண்டும் முப்புடி சகடம் சுழற்றி
அனைவரையும் அஞ்சவைத்தாய்.
உன் இணையடி ஏற்றிப் பணியார்
அஞ்சுவார் கூற்றுவன் சீற்றம்!
உன் இணையடி சரண் புகுந்தோர் நமனை அஞ்சார்!
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடப்பாரே!
[ஶ்ரீம.பா.10.87.33]
மூச்சடக்கி பேச்சடக்கி புலனடைத்த யோகிகள்
மனப்புரவி அடக்க வழியறியாது குருசரணம்
விட்டொழித்து தன்முயற்சி தோல்வியுற்று
விழலுக்கிறைத்த நீராய் உழைப்பும் துன்பமும்
வீணாகி இன்னல்கள் பலவுற்றுத் தவிப்பரே!
மீகாமன் இல்லாமல் மாகாற்று அலைகலன் மேல்
திரைகடலோடி திரவியம் தேடும்
வணிகர் போலவே இச்சாதகர்களின் நிலையுமே!
மனக்குதிரை அடக்க நல் ஆசானாம் குதிரைப்பாகன் போல்
முத்தி அடைய குருதேவர் சரண் புகுதல் வேண்டும்.
பிறப்பற்றவரே! தங்களைத் தவிர உத்தம ஸத்குரு யாருளர்
இப்பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்க?
[ஶ்ரீம.பா.10.87.34]
ஸச்சிதானந்த ஆன்மாவாம் உம்மைத்
தேர்ந்து உணர்ந்தார்க்கு தம் மக்கள், சுற்றம்,
உடல், பொருள், ஆவி, உற்றார்-உறவினர், ஊழியர்,
மனைவி, சொத்து, வீடு, நிலம், வாகனம் இவற்றால் என்ன பயன்?
ஆத்ம ஸ்வரூபமும் ஸுகமும் வேறன்று, ஒன்றே!
பிரபஞ்சப் பொருள்களில் ஒன்றிலாவது ஸுகமென்பதில்லை!
அவற்றில் ஸுகமிருப்பதாக
நினைத்து ஏமாறுவது நம் அவிவேகமன்றோ?
தன் இச்சை பூர்த்தியாகும் போதெல்லாம் மனமும் பிராணனும் அந்தர்முகமாகி ஆத்ம ஸுகத்தையே அனுபவிக்கின்றன!
ஆத்மாநுபூதி பேரின்பமே அனைத்தின்ப உறைவிடமாம்!
எப்பொழுதுமதில் மூழ்கித் திளைக்கும் ஆத்ம ஞானியர்க்கு
அற்ப விஷய ஸுகங்களால் என்ன பயன்?
ஸுகங்களின் தாரதம்யம் அறியாதார்
கூடுவார் கூடி இளையவர் தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி. ஆயின்,
சுவையற்ற இவ்வற்ப ஸுகச் சக்கையில்
பேரின்ப ரஸாநுபூதி பெறமுடியுமா?
எனவே, ஜீவன் பரமானந்த ஆத்மாவாம்
உம்மையே பணிந்தொழுகல் வேண்டும்.
[ஶ்ரீம.பா.10.87.35]
அகந்தையறுத்து முத்தளைகள் முறிக்கும் தங்கள் மலர்ப்பாதம்தனைத் தன் நெஞ்சகத்தே சூடிக் கோயிலாய்க் கொண்டு அகிலமனைத்தும் புனிதமாக்கும்
முனிவர்களே உயர் புண்ணிய தீர்த்தங்கள்!
அப்புனிதர்களின் திருவடித்தாமரை தீர்த்தம்
அனைத்து பாவங்களையும் அழித்தொழிக்குமே!
இருப்பினும், அத்தவசிகள் ஏனைய புண்ணியத் தலங்களையும்
மகான்களின் மடாலயங்களையும் தரிசிக்கச் செல்வர்.
இறைவனே! தன் முழுமனதையும்
நித்திய ஸுகஸ்வரூப ஆன்மாவாம் உம்மிடமே ஒருமுறையேனும்
ஸமர்ப்பித்த ஒருவர் உலகியல் சுழற்சியில்
மீண்டும் சிக்குண்டு தவியார்.
தங்கள் திருவிளையாடல்களிலும், திருக்கதையமுதத்திலும் மூழ்கித்
தங்கள் திருவடிகளிலேயே களித்திருப்பார் அவரே!
[ஶ்ரீம.பா.10.87.36]
“உண்மையில் இருந்து உதித்தது இவ்வுலகமெனில்
இவ்வுலகமும் உண்மையே” என்பது வெற்று விதண்டாவாதமே!
எண்ணற்ற முரணியக்க வேற்றுமை கொண்ட
பொய்த் தோற்றமே இவ்வுலகம்.
உருவரு தோற்றம் சராசர
உலகில் கலந்து ஊடுருவியுள்ளதே!
பேராசையினால் வழிவழியாய் வந்த
வாஸனா அறியாமை இருளே
உலகம் உண்மையென நடைமுறையில் நம்பக் காரணமாம்.
பரமார்த்திகத்தில் உண்மையன்று இவ்வுலகத் தோற்றம்!
வேதத்தில் இவ்வுலகை முன்னிருத்தி அல்லவோ
வைதீக கர்மங்கள் கூறப்பட்டுள்ளன?
வைதீக மறை மந்திரங்கள், கர்மங்கள், மற்றும் அதன் பலன்கள்
ஆகியவற்றின் உட்பொருளாவது:
உலகப் பொது நன்மை கருதி நற்கர்மங்களைத் தூண்டவும்,
ஸுயநலமின்றி பயன் கருதாது இறை அர்ப்பிதமாய்
ஆற்றும் வினைகளால் சித்தசுத்தி அடைந்த ஜீவனைப் பரமாத்ம ஸ்வரூப தரிசனக் குறிக்கோளில் ஊக்கப்படுத்தவே!
மாறாக, கர்ம பலனிலேயே கண்வைத்து ஸுயநலம் பேணி
வைதீக அனுஷ்டானம் செய்வோர் வினையில் எதிர்வினை அறுவடை செய்து உலகியல்
மாயச்சூழலில் மதிமயங்கித் தவிப்பாரே!
பரமாத்ம தரிசனம் பெறத் தகுதி அற்றவராவாரே!
அடிக்குறிப்பு:
புழக்கத்தில் மாயையை இனங்காணும் விவேகமே
ஸத்திய விளக்கின் ஒளியாம்.
மாயைத் தோன்றுவதே மெய்மையின் பிரகாஶ ஒளியினால்.
நிர்குணம் நடைமுறையில் ஸகுணமாய்த் தோன்றும்!
நிர்குணத் துன்னிருள் பரிமாணம்
தளர்த்தி தழைக்கும் மாயத் தாரகைகள்
மண்டிய ஸகுண பிரபஞ்சமே!
நாம-ரூப மறைப்பும் ஆரோபமும் நடைமுறையில்
ஸகுண பிரம்மதின் தவிர்க்க இயலா தன்னிச்சையே!
ஸகுண விளக்கின் கீழ் இருள்போல மாயை!
ஸகுண பிரம்ம ஒளியில் தோன்றும் மும்மலப் பொய்ப் பிம்பங்கள் இறையின் தவிர்க்க இயலா தன்னிச்சையே!
[ஶ்ரீம.பா.10.87.37]
நித்திய ஸத்திய ஒருமை உணர்வின் அமுதமாய்
அனைத்தினுள் ஒன்றாய் ஒளிர் உம்மிடம்
படைப்பின் முன்னும் பிரளயத்தின் பின்னும் இல்லா இவ்வுலகம்
இடையில் தோன்றிய பொய்த் தோற்றமே!
உருவகமாய்க் கூறின்:
பொன்னணி பூடணமாய், வெவ்வேறு உருவில்
வனைந்த களிமண் பாண்டமாய்,
உலோகச் சிலைகளாய், பரமனை மறைத்த
பார்முதல் பூதமாய் நடைமுறையில்
வெவ்வேறு நாம-ரூபங்களாய்த் தோன்றிய இஜ்ஜட உலகு,
முத்துச் சிப்பியில் வெள்ளிபோல் வெறும் கற்பனையே!
கற்பனையை உண்மையெனெ நம்பி
உலகியல் பொருட்களையே காண்பார் அறிவிலிகள்,
உலகினூடே உருவரு தோற்றுவாயாம் உம்மைக் காணாரே!
அடிக்குறிப்பு:
உதித்து ஒடுங்கும் உலகம் ஸத்தியமாகுமா?
உதித்து ஒடுங்கும் உலகத்திற்கு இடனாய்
உதியாது ஒடுங்காது ஒளிரும் பரப்பிரம்ம பூரணமே
உண்மை ஸத்தியமாம்!
அவ்வதிட்டான உண்மையே இவ்வுலகு
உண்மையைப் போல் தோன்றக் காரணமாம்.
நாம் உலகம் காண்டலால், நாநா ஆம் ஶக்தி உள
ஓர் முதலை ஒப்பல் ஒருதலையே, நாமவுருச்
சித்திரமும், பார்ப்பானும், சேர்படமும், ஆரொளியும்
அத்தனையும் தானாம் அவன்.
- உள்ளது நாற்பது, 1
‘உலகு மெய்,’ ‘பொய்த் தோற்றம்,’ ‘உலகு அறிவு ஆம்,’
‘அன்று’ என்று ‘உலகு ஸுகம்’, ‘அன்று’ என்று உரைத்து என்?
‘உலகு விட்டுத் தன்னை ஓர்ந்து’, ‘ஒன்று’, ‘இரண்டு’ தான் அற்று
‘நான்’ அற்ற அந்நிலை எல்லார்க்கும் ஒப்பு ஆம்.
- உள்ளது நாற்பது, 3
உலகு அறிவும் ஒன்றாய் உதித்து ஒடுங்குமேனும்
உலகு அறிவு தன்னால் ஒளிரும் – உலகு அறிவு
தோன்றி மறைதற்கு இடனாய்த் தோன்றி மறையாது ஒளிரும்
பூன்றமாம் அஃதே பொருள்.
- உள்ளது நாற்பது, 7
உலகு உண்மை ஆகும், உணர்வு இல்லார்க்கு உள்ளார்க்கு;
உலகளவாம் உண்மை உணரார்க்கு; உலகினுக்கு ஆதரமாய்
உரு அற்று ஆரும் உணர்ந்தார் உண்மை;
ஈது ஆகும் பேதம் இவர்க்கு; எண்.
- உள்ளது நாற்பது, 18
[ஶ்ரீம.பா.10.87.38]
மாயையில் மதி மயங்கி அம்மாயையில் துயின்று
முக்குணச் செயல், உடல் பொறி-புலன்களில் உழன்று தன்
உண்மை ஆனந்தம் மறந்து பிறப்பிறப்பு
வலையில் சுழன்று திரிவான் ஜீவன்.
நாகம் தன் தோலுரித்துத் தள்ளுவதுபோல், இறைவா!
அவித்தையாம் அம்மாயை உதறித்தள்ளி
நீங்காத செல்வம் எட்டுடன் அளப்பரிய மகிமையால்
மஹாமகிமை பூண்டு என்றும் நிலைத்து நின்றீர் தாங்களே!
தங்கள் அமிசமாம் ஜீவனும் ஆனந்த வடிவினனே!
அற்பனவன் ஆனந்த செல்வமதை மாயை வயத்தால்
உலகியலில் மூழ்கி வீண் விரயம் செய்வான்.
[ஶ்ரீம.பா.10.87.39]
பகவானே! துறவி வேடம் பூண்டு தன்
ஆழ்மனக் காமக்கசடுகள் களையாதார்
உள்ளத்தில் நீயே உறைந்திருந்தும், தன் மாரபில் அணிசெய் மணிமாலை தொலைந்தது என எண்ணிப் புறத்தே
தேடுவார் போல், உணரார் உன்னைத் தன்னகத்தே.
அற்ப புலன் இன்பம் மூழ்கி வீழ்ந்த கபட யோகியர்
இகபரமிரண்டிலும் இடும்பை எய்தி இயமனுக்கு ஈந்தார் தன்னை,
இறையாம் நின் எழிலடி இணையாரே!
[ஶ்ரீம.பா.10.87.40]
உண்மைப் பரம்பொருளாம் உம்மை உணர்ந்தார்க்கு
உம்மில் உதித்தொடுங்கும் இன்ப துன்பங்கள் மற்றுமவற்றின் நன்மை தீமைகள் ஒரு பொருட்டே அல்ல!
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீயே!
துணையாய் அவர் நெஞ்சம் துறப்பிப்பாய் நீயே!
இரட்டை முப்புடிகள் கடந்து நின்றாரவரே!
தேஹான்ம புத்தி வென்றார் தேஹாபிமானம் கொன்றாரே!
வேத அறநெறிப் பதங்கள் ஒவ்வா அவர்கட்கே!
உம்மை உணர்ந்தறியார் ஒவ்வொரு யுகந்தோறும்
வாழையடி வாழையாய் மனுவின் வழித்தோன்றலாய் உன் திருவவதார லீலைகள் தம்மை
நாள்தோறும் தன் செவியாரப் பருகி, உன்னையே அவர் தன்
இதயக் கமலத்தில் இருத்தி இரட்டை மும்மைக்கப்பால்
நான்மறை அறங்கள் கடந்து முடிவில்
உன்னடியில் இணைந்து முத்தியும் பெறுவாரே!
பத்தியும் ஞானமும் பழகா மற்றோர்
நான்மறை அறநெறி தழுவாதொதுங்கி
நின்று எய்துவர் கீழ்நிலையே!