.பசுமையும் பதற்றமும்
சில துளிகள் மழை பெய்தால் கூட
வந்துவிடுகின்றன
எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள்.
கூட்டமாக அவை
குதித்துத் தாவுகின்றன.
கும்மாளமிடுகின்றன.
சிறிய முன்னங்கால்களால்
உடலைத் தாங்கும்
அவற்றின் மகிழ்வுக்கெல்லையில்லை.
பழுப்பு நிறப் புள்ளிகளாய்
பாய்ந்து பாய்ந்து செல்லும்.
வாய்க்கால் மழைநீரில்
வளைந்து வளைந்து செல்லும்
வட்டமிடும் படகுகள்.
ஓடுகின்றன ஓடுகின்றன
வாழ்வின் எல்லை நோக்கி.
பார்க்கும் கண்களில்
பசுமையும் பதற்றமும்
பதுங்கிக் கொள்கின்றன.
—-வளவ. துரையன்
தேடுதல்
ஆடுகளுக்குத் தழை ஒடிப்பவன்
கொழுந்துகளைத் தேடுவது போல
கூட்டின் குஞ்சுகளுக்குச்
சிறு மீன்களைத் தேடும்
பெரும்பறவையாக
கூடு கட்ட உறுதியான
சிறு குச்சிகளை நாடும்
காக்கை போல
என் மனம் எப்பொழுதும்
எதையோ தேடுகிறது.
தேடுதலே வாழ்வாகித்
திகட்டாமல் இருக்கிறது
சிலமுறைகள் முத்துக்குளித்தால்தான்
நல் முத்துகள் நம்மை
நாடி வரும் என்பார்கள்
எல்லா விதைகளுமே
எப்பொழுதும் முளைப்பதில்லை
ஏன் விதைக்கிறோம் தெரியுமா?
எப்படியும் துளிர்க்கும்
எனும் நம்பிக்கையால்தான்.
——-வளவ. துரையன்