குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை.
முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா
பெரியகுளம், தேனி. தமிழ்நாடு.
குரு அரவிந்தனின் சிறுகதைகள் பன்முகப்பார்வை
முன்னுரை
குரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது.
வாழ்வியல் விழுமியங்கள்
படைப்பாளர்களின் முக்கிய நோக்கம் படைப்பு வழியாக மனித வாழ்வியலை வடித்தெடுப்பதே ஆகும். விழுமியம் என்பதற்கு மதிப்பு, சிறப்பு, உயர்வு போன்ற பொருள்களையே அகராதிகள் தருகின்றன. குரு அரவிந்தனின் சிறுகதைகளிலும் வாழ்வியல் விழுமியங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.
காதலும் அன்பும்
‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் தன் அத்தை மகள் பிரியா மேல் ஏற்பட்ட காதல் உணர்வை அப்பா தனது மகளுக்குக் கூறுவதிலிந்து இளம் வயதில் ஏற்படும் அன்பும் பாசமும் காலங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்பதை அறிய முடிகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதை, கதைக்கு உயிரூட்டம் அளிப்பதாக உள்ளது.
“உயிரோடு அவள் அருகே இருந்தபோதே அவர் தனது அன்பைக், காதலை மனப்பூர்வமாகப் பலவிதமான முறையில் அவளிடம் வெளிக்காட்டியிருந்தார். மேலை நாடுகளில் புரிந்துணர்வோடு ஒருவருக்கொருவர் துணையாகக் கடைசிவரை வாழ்வதென்பது ஆச்சரியமானதுதான், அப்படியான புரிந்துணர்வுள்ள ஒரு வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்” என்பதன் மூலம் மேலைநாட்டினரின் குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மத்தியிலும், இணைந்து வாமும் குடும்பத்தினரின் மேன்மையையும், நோய்நொடியிலும் இறுதிவரை அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்துப் பாதுகாக்கும் உறவின் உன்னத நிலைகளை ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
குடும்ப வாழ்வு
குடும்ப சூழல் காரணமாக, திருமணம் செய்து தாய் நாட்டிலிருந்து அயலகம் சென்ற பெண்ணின் குடும்ப வாழ்வு ‘பனிச் சறுக்கல்’ என்ற சிறுகதையில் வெளிப்படுவதை, “வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கிராக்கி அதிகம் என்பதால் கனடா மாப்பிள்ளை என்றதும் எல்லோரும் வாயைப் பிளந்தனர். … தங்கைகளைக் கரைசேர்க்க வேண்டுமே என்று தியாகம் செய்வதாக நினைத்து அவள் கண்ணை மூடிக்கொண்டு ராஜனுக்கு வாழ்க்கைப்பட்டாள்”, என்று புதிய வாழ்க்கை, புதிய நாடு என்று எல்லாமே கொஞ்ச நாட்களுக்கு இரசிக்கக் கூடியதாக அமைந்தாலும், பின்பு கணவன் ஒரு பெரும் குடிகாரன் என்பதை அறிந்து வருந்தும் பெண்ணின் அவல நிலை புலப்படுகிறது. குடும்பம் என்பது ‘சரஸ்வதி இருக்க வேண்டிய இடம்’ என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதோடு, குடும்பத்தைக் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கவும், தங்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவம் இக்கதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வியின் சிறப்பு
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் கலிஸ்ரா எனும் பண்ணை வீட்டுக்கார மகள் ஓய்வு நேரத்தில் வண்டி ஓட்டுவதையும், படிக்கச் செல்வதையும், ஆண்கள், படிக்கும் பெண்களை ஊக்குவிப்பதையும், படிக்கவில்லை என்றால் அதனைச் சுட்டிக்காட்டுவதை, “உன்னைப் போலவா அவள், அவள் உன்னைவிட உயர் வகுப்பில் படிக்கிறாள், ஓய்வு நேரத்தில் மட்டும்தான் வருவதாகச் சொன்னாள், படிக்கிற பிள்ளைகளைக் குழப்பக்கூடாது, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” எனும் வரிகள் கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.
‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் தவறு நேர்ந்தது என்று அறிந்தபின்பு “படித்தவள், புத்திசாலி என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் செயல்பட்டாள்” என்பதன் மூலம் பெண் தான் பெற்ற கல்வியின் அறிவால் தனது அவலமான நிலையில் முடிவெடுப்பதும், தன்னைச் சமநிலைப்படுத்தி, தெளிவாக நடந்து கொண்ட போக்கும், பெண்கள் தங்கள் தன்மானத்தைத் தவறாகப் பயன்படுத்தும் சூழலுக்கு உட்படும் நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இச்சிறுகதை உணர்த்தியுள்ளது.
“நான் படித்துக் கொண்டிருந்தேன். மாணவப் பருவம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது”… “மாணவர்கள் போராட்டம் என்றால்தான் உலகமே திரும்பிப் பார்க்கும்” என்று ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையும் கல்வியின் சிறப்பை வலியுறுத்தி அமைகின்றது.
தொழிலின் மேன்மை
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் வரும் விவசாயக் குடும்பத்திலுள்ள நிக்கோலாஸ் என்பவர் பிக்கப், டிராக்டர், பெரிய வண்டிகள் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் பெரியதொரு விவசாயப் பண்ணையில் வண்டி ஓட்டும் வேலை செய்ததையும், நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ரா இருவரும் கனடா வந்தபின்பு இயற்கை விவசாயம் செய்து நல்ல வருமானம் பெற்று பூந்தோட்டங்களையும், காய்கறித் தோட்டங்களையும் பராமரித்து வாழ்ந்துள்ள தகவல்களும், கற்ற தொழில் முறையைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த நாட்டிலும் நல்ல முறையில் வாழ்ந்துள்ள வாழ்க்கை அனுபவங்களும், தொழில் பயணமாகப் பிற நாடுகளுக்குப் பயணிப்போர்க்கு அனுபவப் பதிவாக அமைந்துள்ளது.
தாய் மண்மேல் பற்று
ஈழப்போரின் விளைவாக ஆண்களும் பெண்களும் நாட்டிற்காக உழைக்க வீட்டை விட்டு செல்வதைத் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “பிரியா வீட்டைவிட்டுப் போய்விட்டதாகவும், விடுதலைப் போராட்டத்தில் அவளுக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவள் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. பிரியாவா.. எப்படி..? தாய்மண்ணை நேசித்த வயது வந்த ஒரு பெண் என்பதால் அவளது விருப்பத்தை யாராலும் தடுக்க முடியவில்லை”எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன. புலம்பெயர்ந்து பிறநாடுகளில் குடியேறினாலும், தாய்மண்மேல் கொண்ட பற்றும் பாசமும் நீங்காத நினைவுகளாக உள்ளன.
பெண்ணின் பெருமை
குரு அரவிந்தன் தனது சிறுகதைகளில் பெண் பாத்திரப் படைப்புக்களை உயர்வாகப் படைத்துள்ளார். ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் வயது பெண் நாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும்இ ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பெண் என்பவள், “பள்ளியின் பாட்மின்டன் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். பல மாணவிகளுக்குப் பயிற்சியாளராக இருந்திருக்கின்றார். வலைப்பந்தாட்டக் குழுவுக்கும் பயிற்சியாரளாரக் கடமையாற்றி வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவர்” என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும், இக்கதையில் வரும் கலிஸ்ரா எனும் பெண் வண்டி ஓட்டக்கூடியவராகவும், ஆண்கள், படிக்கும் பெண்களுக்கு மதிப்புக்கொடுப்பதையும் ஆசிரியர் எடுத்துரைக்கும் விதம் சிறப்புக்குரியது.
‘பனிச் சறுக்கல்’ கதையில் வீட்டில் நடந்த விருந்தில் விஜி என்ற பெண் களங்கப்படுத்தப்பட்டாலும், குடும்பம் என்ற வாழ்விற்குள் நுண்ணறிவோடு செயல்படுபவளாகப் பெண் பாத்திரப்படைப்பு அமைந்துள்ளதை, “நல்லவளாய் நடந்து கொண்டு தனது எதிர்கால வாழ்க்கையில் சேற்றைப்பூச அவள் தயாராகவில்லை. தான் தவறு செய்யாவிட்டாலும், பெண் என்பதால் நடந்தது வெளியே தெரிந்தால் தன்மீது தீராப்பழி சுமத்தக் கணவனே தயங்க மாட்டான் என்பதை அனுபவ மூலம் அவள் அறிந்தே வைத்திருந்தாள். காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பத் தன்னை காப்பாற்றிக் கொண்டுஇ இருத்தலுக்காய் வாழ்வதே இப்போதைய தேவை என்ற நிலைப்பாட்டோடு அவள் செயற்பட்டாள்” எனும் வரிகள் இதனை எடுத்துரைக்கின்றன.
மூத்தோர்களின் வாழ்வியல் நெறி
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் முதியோர்களின் வாழ்வைக் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. “நிக்கோலாஸ்இ உரையாடிக் கொண்டிருக்கும் போது, தனக்கு என்ன வயது இருக்கும் என்று சொல்லுங்க பார்க்கலாம் என்றார். என்ன, ஒரு 73 – 74 -க்குக் கிட்ட இருக்கும் என நினைக்கிறேன் என்றேன். அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் இல்லை எனக்கு 84 ஆச்சு என்று. அவரை இளமையாகப் பத்து வயது குறைத்து நான் காட்டியதில் அவருக்குள் மகிழ்ச்சி இருந்தது. அவரது மனைவி கலிஸ்ராவுக்கு 78 வயது ஆகிறது என்றார்” இதன்மூலம் முதிர் வயதிலும் கணவன், மனைவியைக் கவனித்துக் கொள்ளும் நற்பண்பும், நட்புறவோடு பழகும் பண்புகளும் வெளிப்படுகின்றன. வயது போகும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்தும், அதனால் ஏற்படும் வேதனைகள்இ இளமையில் அழகுடன் இருந்த உறுப்புக்களின் மாற்றங்கள் குறித்தும் இச்சிறுகதை எடுத்துரைக்கிறது. மேலும், “பிறப்பு என்று ஒன்றிருந்தால், இறப்பு என்றும் ஒன்றிருக்கும், உலகே மாயம், இதுதான் இந்த உலகம்” என்ற வாழ்வியல் படம் இம்மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தியாக அமைந்துள்ளது.
‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ எனும் சிறுகதையில் 80 வயது ஆப்பிரிக்கா நாட்டு முதியவர், “ஆரோக்கியமானவர் போல இருந்தார். அன்று சரித்திரத்தை மாற்றிப் படைத்த போராளிகளில் ஒருவர் என்பதால் என் மதிப்பில் உயர்ந்து நின்றார்”எனும் வரிகளும், அந்த முதியவர் வெள்ளை இனத்து மக்களிடம் தாங்கள் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாற்றைப் பதிவு செய்யும் விதமும், கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடி பெற்றுக் கொண்ட உரிமைகளை எடுத்துரைக்கும் விதமும் வரலாற்று உண்மைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
பண்பாடும் பழக்கவழக்கமும்
பண்பாடென்பது ஒரு தலைமுறையினர், சென்ற தலைமுறையினரிடம் பெற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாகும். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை அறிந்து கொள்வதற்குப் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் அடிப்படைக் கருவிகளாக அமைகின்றன.
உணவு
இலங்கை மக்கள் உண்ணும் உணவு குறித்த தகவலை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை வெளிப்படுத்துவதை, “அத்தை பிட்டு பரிமாறினாள். பிட்டுக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ச் சம்பல். வறுத்த மிளகாயை இடித்து தேங்காய்த் துருவலுடன் உப்பும் புளியும் கலந்து தயாரிப்பதுதான் சம்பல்”,எனும் வரிகளால் அறியலாம்.
பூப்பெய்தல்
பெண்களைப் பூப்பெய்த பின்பு வீட்டின் இருட்டறையில் அமரவைத்தல், அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகள், பூப்பெய்த பின்பு முன்பு போல் குழந்தைகளோடு இணைந்து விளையாடக் கூடாது, பெரியபிள்ளையானல் தனிமைப் படுத்தப்படுதல், குமரப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற சமூக நிலையை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “அவளைக் கிணற்றடிக்குக் கொண்டு சென்று தலையிலே தோயவார்த்தனர். இன்று இவள் இந்த அறையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாள். அத்தை நல்லெண்ணையும், முட்டையும் எடுத்துக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குப் போவதை அவதானித்தேன்” எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன.
விளையாட்டு
சண்டிலிப்பாய் வயல் வரம்பு வழியே ஓடிப்பிடிப்பது, இலுப்பங்கொட்டை பொறுக்குவது, வானரப்படைகளோடு ஒல்லித்தேங்காய் கட்டிப் பூவல் குளத்திலே தாமரைக் கொடிகளில் சிக்காமல் நீச்சலடிப்பது, ஐயர் வீட்டு வளவிலே கொய்யாப்பழம் பறிப்பது, வேப்பமர நிழலில் மாங்கொட்டை அடிப்பது, மாட்டுவண்டில் சவாரி விடுவது, இப்படி குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளாக ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை வெளிப்படுத்துகிறது.
கொண்டாட்டம்
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பண்ணை வீட்டுப்பெண்ணின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டாம் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுடன் நடந்துள்ளதையும், அக்கொண்டாட்டத்தில் இடம் பெற்ற கேக்வெட்டுதல், மதுஅருந்துதல், நடனம் ஆடுதல் போன்ற மேலைநாட்டுக் கலாச்சாரத்தை அறிய முடிகிறது.
‘பனிச் சறுக்கல்’ சிறுகதையிலும் வீட்டில் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதையும், மதுபானங்களுடன் விருந்து பருமாறும் நிகழ்வு நடைபெற்றாலும், அயல்நாட்டில் வாழ சென்ற வீட்டின் இல்லத்தரசி விஜி மதுபானங்களை வெறுப்பதையும், ஆனாலும் அவர்கள் வீட்டில் நடைபெற்ற விருந்தில் ஆடல் பாடல்களுடன் அவளையும் குடிக்கவைத்து, அலங்கோலப்படுத்திய மேலைநாட்டு கலாச்சார சீரழிவை ஆசிரியர் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
பொழுதுபோக்கு
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பிசியோதொரப்பி வைத்தியரிடம் தனது மனைவியை அழைத்து வந்த நிக்கோலாஸ் என்பவர் ‘றீடேஸ் டையஸ்ட்’ என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த தகவல் இடம் பெற்றுள்ளது. மேலும். இக்கதையில் புலம் பெயர்ந்த பெண்கள் பலர், கனடாவில் பொழுது போக்குவதற்காகத் தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் சங்கீதம், நடனம், விளையாட்டு என்று ஈடுபடுவதையும் அறிய முடிகிறது.
“குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையின் மூலம் மேலை நாட்டு மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.
போரின் அவல நிலை
போருக்குப் பின் ஈழ நாட்டின் அவல நிலையை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை“ஏனைய வீடுகள் போல அத்தையின் வீடும் யுத்தத்தின் அவலத்தை எடுத்துக் காட்டியது. செல் குண்டுகள் வந்து விழுந்ததில் கூரை முற்றாகவே தூர்ந்து போயிருந்தது. செடி கொடி பற்றைகளுக்கு நடுவே வீடு ஒன்று இருந்ததற்கு அடையாளமாய் ஆங்காங்கே இடிந்து போன சுவர்கள் தலை தூக்கி நின்றன” எனும் வரிகள் எடுத்துரைகின்றன.
புலம்பெயர்தல்
ஈழப் போரின் காரணமாகப் புலம்பெயர்ந்துள்ளதை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “மகளின் பிரிவால் மட்டுமல்ல, யுத்தம் காரணமாக அவர்களின் குடும்பமும் சொல்லெனாத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு சொந்த வீட்டைவிட்டு இடம் பெயரவேண்டி வந்தது” எனும் வரிகளால் அறியலாம். ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ், கலிஸ்ரா இருவரும் காதலால் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த செய்தி இடம் பெற்றுள்ளது.
அடிமை நிலையும் போராட்ட உணர்வும்
‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையில், ஆப்பரிக்கா மக்கள் எவ்வாறு வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு, சுதந்திரம் பெற்றார்கள் என்ற வரலாற்றைக் கூறும்போது, “எமது முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இவர்களுக்கு அடிமைகளாக இருந்ததால், எங்களையும் அப்படியே நடத்தினார்கள். எங்களால் என்ன செய்யமுடியும், சட்டம் அவர்கள் பக்கம் இருந்தது. 1600 -களில் தொடங்கிய அடிமை முறை 1865 வரை நடந்தது. கறுப்பினப் பெண்களை வேலைக்காக மட்டுமல்ல, அடிமைகளின் இனப்பெருக்கத்திற்காகவும் அவர்கள் பாவித்தார்கள். ஆறு, ஏழு தலைமுறையினர் அடிமைகளாகவே இருந்தார்கள்”என்று கறுப்பின மக்களின் அடிமை வரலாற்றைக் கூறுவதோடு, அவர்கள் கண்டு மகிழ்ந்த நாட்டிய நாடகத்தின் கருத்துக்கள் போராட்ட உணர்வினை ஏற்படுத்தியுள்ளதை, “அந்த நாட்டிய நாடகத்திலே வந்த பாடலில் சில வரிகள் எங்கள் உணர்வுகளை எழுப்பிவிட்டன. … எங்களுக்குள் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எங்க உரிமையை நாங்கதானே வென்று எடுக்க வேண்டும், முடியாது என்று நினைத்தால் எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடும்” என்ற உணர்வுடன் போராடி, 1962 ஆம் ஆண்டு ரெட் காபோட் என்பவர், “கறுப்பினத்தவர் கடலில் குளிப்பது குற்றமாகாது, இந்த மண்ணில் அவர்களுக்கு அதற்கான சுதந்திரமிருக்கிறது என்று அவர் தீர்ப்பு வழங்கியது சரித்திரத்தில் முக்கியமாக எழுதப்பட வேண்டியது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
“இதனால் இன்று நாங்கள் எல்லாம் சுதந்திரமாகக் கடலில் இறங்கிக் குளிக்க முடிகின்றது. 60 வருடங்களுக்கு முன் ஆபிரிக்க அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் அமைதியான வழியில் போராடி வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்தத் தீர்ப்பினால்தான் இன்று பிறவுண் நிறத்தவர்களான நாங்களும் மியாமிக் கடலில் குளிக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த எங்களுக்கு இந்த வரலாறு தெரியாவிட்டாலும், அவர்கள் பெற்றுத் தந்த இந்த சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிட்டல் நாங்களும் மியாமிக் கடற்கரையில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டி வந்திருக்கும்” என்ற வரலாற்று உண்மை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். எங்குச் சென்றாலும் ஒவ்வொரு இடத்திலும் நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், யாரோ எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்ததுதான். இது போன்ற சில விடயங்களை வரலாறு பதியத் தவறிவிடுகின்றது. சுதந்திரம் என்பது இலவசமாகக் கிடைப்பதில்லை, போராடித்தான் பெறவேண்டும் என்ற உண்மையும் இக்கதையில் பதிவு செய்துள்ள விதம் சிறப்புக்குரியதாகும்.
உத்தி
படைப்பாளன் தான் சொல்ல வரும் கருத்தையும், படிப்போர் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு படைக்கும் இலக்கிய முறைகளே உத்திகள் எனப்படும்.
தலைப்புப் பொருத்தம்
தாயகக் கனவுடன்’ என்ற சிறுகதையில் புலம்பெயர்ந்து பிறநாடுகளுக்குச் சென்றாலும், தாயக மண்ணின் கனவுகளைச் சுமந்து வாழ்வதையும், தாய்நாட்டிற்காக ஆண்களும் பெண்களும் தங்களையே அர்ப்பணிக்கும் போக்கிலும் தலைப்புப் பொருத்தம் வெளிப்படுகிறது.
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் தலைப்பை ஓட்டியே கதையின் போக்கு அமைந்துள்ளது. ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் பனிச் சறுக்கல் ஏற்பட்டு எதிர்படும் விபத்துக்கள் போன்று குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ கதையில், “ஆபிரிக்க கறுப்பின அடிமைகள் தப்பி ஓடினால் வேட்டை நாய்களை வைத்துத்தான் வெள்ளையின முதலாளிகள் அவர்களைத் தேடிப் பிடித்தார்கள். தண்ணீரில் மோப்ப நாய்களால் மோப்பம் பிடிக்க முடியாது.” “தண்ணீரைக் கண்டால் விலகிநில் என்று எமது பெற்றோர் அறிவுறுத்துவார்கள். தண்ணீரைக் கண்டால் விலகிப் போகாதே, நீச்சலடிக்கக் கற்றுக் கொள் என்று வெள்ளையினப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவார்கள்” எனும் வரிகளைக் கொண்டு கதையின் தலைப்புப் பொருத்தம் சிறப்பாக அமைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்.
முன்னோக்கு உத்தி
கதையின் பிற்பகுதியில் நடக்கும் ஒன்றைக் கற்போர் ஏற்றுக்கொள்ளும் வகையில் கதையின் முற்பகுதியிலே கூறுவது முன்னோக்கு உத்தியாகும். “முளைத்துப் பூத்திருந்த கார்த்திகைச் செடியின் பூதான் … மஞ்சள் சிகப்பு நிறத்தில் பளீச்சென்று கண்ணில் பட்டது. பழைய நினைவுகள் எல்லாம் திடீரெனக் கண்முன்னால் வந்து நின்றன. … குடியிருந்த அந்த வீட்டைப் பார்க்கவே எவருக்கும் அழுகை வரும், ஆனால் நான் அழுதது அதற்காக அல்ல, என் அத்தை மகள் பிரியாவுக்காகத்தான்” எனும் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையின் வரிகள்; முன்பு நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டுவதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள கனிகளில் மாம்பழத்தின் வகைகளைக் குறிப்பிட்டுக் கூறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதையைக் கூறும் நிகழ்வு, முன்பு நடந்த நிகழ்வை நினைவுக் கூர்ந்து மகிழ்வதாக உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த பழைய நினைவுகளை மீண்டும் மீள்பதிவு செய்வதாக ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகத்தின்’ சிறுகதை அமைந்துள்ளது.
இலக்கிய இன்பம்
படைப்பாசிரியர் இலக்கியங்களைத் தனது படைப்புகளுக்குள் பயன்படுத்துவதன் மூலம் படைப்பாசிரியரின் இலக்கிய ஆர்வத்தை அறிந்து கொள்ள முடிகிறது. “எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிவ்வீடே.. அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே..” என்று ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் இலக்கிய வரிகளின் பயன்பாட்டைக் காண முடிகிறது.
“யானைக்கும் ஒரு நாள் அடிசறுக்கும்” என்று பழமொழிகள் பயன்படுத்தியுள்ளதை ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் காண முடிகிறது.
“சாக்கடையில் தவறி விழுந்து விட்டது போன்ற உணர்வில் ஒரு கணம் நிலை குலைந்தாள்” என்பதன் மூலம் உவமை பயன்படுத்தியுள்ளதோடு ‘பனிச் சறுக்கலை’ குடும்ப வாழ்வோடு ஒப்புமைப்படுத்தி ஆசிரியர் தான் கூறவந்துள்ள கருபொருளைக் குறித்துக் கூறியுள்ள விதம் படிப்போரின் சிந்தனைத் திறனைத் தூண்டுவதாக உள்ளது.
மெய்பாடுகள்
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப” (தொல்.மெய். 3)
என்று தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்பாடுகள் குருஅரவிந்தனின் சிறுகதைகளில் வெளிப்படுகிறது.
“அழாதீங்கப்பா, அத்தைப் பாட்டியோட வீடு மட்டுமல்ல, இங்கே எல்லா வீடும்தான் சிதைந்து போச்சு, மெல்ல மெல்லத் திருத்தியிடுவாங்க” எனும் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் அழுகை மெய்பாடு வெளிப்படுவதைக் காணலாம். மகிழ்ச்சி என்பது எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்றாகும்.
“போருக்கு முன்னைய நாட்கள், மனதைவிட்டகலாத எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை என்பதால் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தேன்” என்று ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையின் வரிகள் எடுத்துரைப்பதைப் போன்று ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் தனது வயதையும், தனது மனைவியின் வயதையும் குறித்துக் கூறும் போது மகிழ்ச்சியை வெளிப்டுத்துகின்றார். தனது காதல் கதையைக் கூறும் நிகழ்விலும் மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
மெய்ப்பாடுகளில் கோபம் என்பது, வெகுளி என்றும் சொல்லப்படும், எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்றாகும். ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் கலிஸ்ராவைக் காதலிக்கும் முன் அவளைக் குறித்து முழுமையாக அறியாமல் கோபம் கொள்வதைக் காண முடிகிறது.
“ஏமாற்றப்பட்ட இனத்தைச் சேர்ந்த இவள் இருக்கிறாளா இல்லையா என்பது கூட உறவுகளுக்குத் தெரியாத ஒரு அவலம்” என்பது ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் அவலச்சுவை வெளிப்படுகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் மனைவியின் இறப்பு அவலச் சுவையை வெளிப்படுத்துகிறது. ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் விஜிக்கு நேர்ந்த இழிவான செயல் மூலம் அவலச் சுவையைக் காணலாம். ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ கதையில் ஆப்பிரிக்க மக்களின் வரலாற்றைக் கூறும் நிகழ்வில் மூன்று தலைமுறைகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அவல நிலை வெளிப்படுகிறது.
முடிவுரை
பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட, குரு அரவிந்தனின் சிறுகதைகளில் தான் வாழும் நாடுகளில் நடக்கின்ற நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டு சிறுகதைகளைப் படைக்கும் திறன் வெளிப்படுகிறது. சிறுகதைகளில் வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்வியல் விழுமியங்களை இலக்கிய சுவையுடன் அனைவரும் படிக்கும் விதத்தில் எடுத்துரைக்கும் ஆசிரியரின் நடையமைப்பு சிறப்புக்குரியதாகும். சங்க இலக்கியத்தில் இருந்து அறிவியல் வரை, ஆய்வுகளை மேற்கொள்வோருக்குப் பயன்பெறும் விதத்திலும், சமூகத்திற்குப் பலவித நற்கருத்துக்களை அறிவிக்கும் போக்கிலும், தீமைகளைச் சுட்டிக்காட்டும் பண்புகளிலும் இவரது சிறுகதை இலக்கியம் இவ்வுலகிற்குப் பயனுள்ள படைப்பாக அமைந்திருப்பது பாராட்டுகுரியது.