பட்டினப்பாலை காட்டும் வாழ்வியல்

This entry is part 4 of 8 in the series 20 ஜூலை 2025

                                                                                      மீனாட்சி சுந்தரமூர்த்தி.  

        

உள்ளங்கையில் உலகைக் காணும் அறிவியல் முன்னேற்றம் பெற்றிருந்தும் ஒத்துஉதவி வாழும்வகை மறந்து போகிறோம். 

ஆனால் கடின உழைப்பில் வாழ்ந்த ஈராயிரமாண்டு பழமையான நம் முன்னோர் செழுமையான வாழ்வு வாழ்ந்தனர். அதைச் சொல்லி நிற்பவையே சங்க இலக்கியங்கள்.

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்களாக அதில் பத்துப்பாட்டு நூல்கள்,

‘ முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி- மருவினியக்

கோலநெடு  நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.’

(திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகாடாம்.)

 பட்டினப்பாலையில்  வஞ்சியடிகளும், ஆசிரிய அடிகளும் விரவி வருகின்றன அதிலும் வஞ்சியடிகளே அதிகம் உள்ளதனால் வஞ்சி நெடும்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.

பாடியவர்               –   கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

பாடப்பட்டோன்    –   சோழன்  திருமாவளவன் .

திணை                    –    பாலை

துறை                       –    செலவழுங்குதல்.

பா வகை                  –   ஆசிரியப்பா, வஞ்சிப்பா , மொத்த அடிகள்   –    301.

புலவர்:  கடியலூர் உருத்திரங்கண்ணனார்  .

வாழ்வியல் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் பழக்கவழக்கங்களையும், அவன்  மற்றவர்களோடு நடந்து கொள்ளும் முறைமையையும், உளவியல்  பண்புகளையும்,இன்னும் சொல்வதானால் அவன் சார்ந்த சமூகத்தின் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது எனலாம்.  

தனிமனிதர் பலரின் கூட்டே சமூகமாகிறது. அந்த வகையில்  இலக்கியங்கள் அவை உருவான காலச் சமுதாயத்தின் காலக்கண்ணாடிகள் ஆகின்றன. இவ்வளவில் பட்டினப்பாலை காவிர்ப்பூம்பட்டினச் சமுதாயம் பற்றியும் பாலை என்பது புலவர் பெருமானின்  வறுமை வாழ்வையும் காட்டுகிறது.

பட்டினத்திற்கும் பாலைக்குமான இணைப்பு புலவரால் உருவாகி மன்னனால் நிறைவுறுகிறது.

இனி நூல் நுவலுவன காண்போம்.

காவிரி;

சோணாட்டின் வளத்திற்கு ஆதாரமான காவிரியாற்றின் சிறப்பில் தொடங்குகிறார் புலவர்.

‘ வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

திசைமாறித் தெற்கு ஏகினும்

தற்பாடியத் தளிஉணவின்

புள் தேம்பப் புயல்மாறி

வான்பொய்ப்பினும் தான் பொய்யா

மலைத்தலையக் கடற்காவிரி

புனல்பரந்து பொன்கொழிக்கும்.

குற்றமற்ற வெள்ளியெனும் கோள் வடதிசையினின்று தென்திசை செலினும்,

மழைத்துளி உண்டு வாழும் வானம்பாடி வாட வானம் மழைதராது பொய்ப்பினும், குடகு  மலையில்  தோன்றி  ஓடிவந்து கடலென ,நீர் பெருக்கி, பொன் செழிக்க வைக்கும் காவிரி.

1. தொழில்கள்:

உழவு,

மருத நிலங்களில் ஒருபோதும் விளைச்சலை மறவாத கழனிகளில்  நெல்லும், கரும்பும், இஞ்சி, மஞ்சள், சேம்பும் வளமாய் வளர்ந்திருக்கும்.எருமைக் கன்றுகள் வயிறாற நெற்கதிரருந்தி வைக்கோற் போர்களின் நிழல்களில் உறங்கும். கரும்பாலைகளின் புகையால் அருகுள்ள நீர்நிலைகளில் நெய்தல்   பூக்கள் வாடும். தென்னை, மா, பனை,வாழை கமுகு மரங்களின் தோப்புகள் மலிந்திருக்கும்.

உப்புக் காய்ச்சுதல்,

நெய்தல் நிலங்களில்,

‘வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி’

‘கழிசூழ் படப்பை’

என்பதில் உப்பளங்கள் இருந்தன என்பதால் உப்புக் காய்ச்சினர் என அறியலாம்.

அணிகலன்கள் செய்வது,

‘நேரிழை மகளிர் உணங்கு உணாக்கவரும்

கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை’  

 பொற்கால், புதல்வர் காலில் பொற்சிலம்பு அணிந்தனர் ,அணிகலன்கள் செய்யும் பொற்கொல்லர் இருந்தனர்.

மரவேலை செய்யும் தச்சுத் தொழில்

‘ பொற்கால் புதல்வர் புரவியின்றி உருட்டும்

முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்’

மரத்தேர் உருட்டி விளையாடினர் சிறுவர் என்பதால்

தச்சர் இருந்தனர்.

மீன்பிடி தொழில்,

‘வலை உணங்கும்மணல் முன்றில்’

மீன்பிடி வலைகளைக் காயவைத்திருந்தனர் என்பதாலும்,

‘ கருந்தொழில் கலிமாக்கள்

கடல் இறவின் சூடு தின்றும்

வயல் ஆமைப் புழுக்குண்டும்’

இறால்மீன்களைச் சுட்டுத் தின்றனர் என்பதால் மீன்பிடி தொழில் அறிந்தமை புலனாம்.

நெசவு,

‘துணைப் புணர்ந்த மடமங்கையர்

பட்டுநீக்கித் துகில் உடுத்தும்’ 

மங்கையர் பட்டாடை நீக்கிப் பருத்தி ஆடை அணிந்தனர் என்பதால் நெசவுத் தொழில் சிறந்திருந்தது.

வாணிபம்;

நீரினின்று நிலத்தேற்றவும்

நிலத்தினின்று நீர் பரப்பவும்

அளந்தறியாப் பலபண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி’

 என்பதால் துறைமுகம் ஆரவாரத்தோடு இருந்தது. ஏற்றுமதியும், இறக்குமதியும் குறைவின்றி நடைபெற்றதால்

உள்நாட்டு வாணிபமும்,வெளிநாட்டு வாணிபமும் சிறந்திருந்தது.

2.வழிபாடு;

உருகெழு திறல் உயர் கோட்டத்து

முருகமர்பூ முரண்கிடக்கை

வரியணி சுடர் வான்பொய்கை

இருகாமத்து இணையேரி’

இங்கு சிவன் கோட்டம் ,காமவேள் கோட்டம், நிலாக்கோட்டம், குமரகோட்டம்  எனும் ஆலயங்கள் இருந்தன.

காமவேள் கோட்டத்தில் சோமகுண்டம்,சூரிய குண்டமெனும் இரு ஏரிகளும் இருந்தன, இவற்றில் நீராடித் தொழுதேத்தினால் கணவரைப் பிரியாது இன்புற்று வாழ்வர் மங்கையர் என்பது நம்பிக்கை.

‘சோமகுண்டஞ் சூரியகுண்டந் துறை மூழ்கிக்

காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு

தாமின் புறுவ லகத்துத் தையலார்”- சிலம்பு- கனாத்திறம் உரைத்த காதை.

சிலம்பும் இதனைச் சொல்லியுள்ளது.

‘ செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்

வெறியாடு மகளிரொடு  செறியத்தாய்’

மகளிர் முருகனுக்கு  வெறியாட்டு ஆடி வழிபட்டனர்

3.விளையாட்டுகள்;

வீர விளையாட்டுகளும், காதலர், கணவன்,மனைவி மகிழ்ந்தாடும் விளையாட்டுகளும் இருந்தன.

‘ வீரமறவர்கள்,

‘ மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ

கையினுங் கலத்தினும் மெய்யுறத் தீண்டி

பெருஞ்சினத்தாற் புறக்கொடாது

இருஞ் செருவின் இகல்மொய்ம்பினோர்’

கையினாலும்( குத்துச் சண்டை, மல்யுத்தம்), ஆயுதங்களாலும் ( விற்போர், வாட்போர்)போர்ப்பயிற்சி செய்யும் முரண்களரிகள் ஆற்றோரங்களிலும் இன்னபிற இடங்களிலும் இருந்தன.

இன்புற விளையாடல்;

‘ மடற்றாழை மலர்மலைந்தும்

பிணர்ப்பெண்ணை பிழி மாந்தியும்

புன்றலை இரும்பரதவர்

பைந்தழை மாமகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது

உவவு மடிந்துண்டாடியும்’

முழுமதி நாளில் பரதவர் கடலில் வலைவீசச் செல்லாமல் தம் துணையோடு கள்ளருந்தி விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 இன்னும் ,

‘ தீதுநீங்கக் கடலாடியும்

மாசு நீங்கப் புனல் படிந்தும்

அலவனாட்டியும், உரவுத்திரை உழக்கியும்

பாவை சூழ்ந்தும் பல்பொறி மாட்டியும்

அகலாக் காதலொடு பகல் விளையாடி’

கடல் நண்டுகளைப் பிடித்தும், அலைகளிலாடியும்,மணலால் பொம்மைகள் செய்தும்,இன்னும் பல எந்திரங்கள் கொண்டும் விளையாடி இன்புறுவர்,

இரவில் ,’ மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்

மகளிர்க் கோதை மைந்தர் மலையவும் ‘களித்தனர்.

4.கலைகள்;

குறுந்தொடை நெடும் படிக்கால்

கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்

புழைவாயில் போகு இடைகழி

மழைதோயும் உயர் மாடத்து’

‘ வளி நுழையும் வாய்’

சாளரங்கள்.

நீண்ட படிக்கட்டுகள்,வளைந்த திண்ணைகள், இடையில் தாழ்வாரம்,மேன்மாடங்கள், இவற்றில் புகுவதற்கான வாயில்கள்.

என்றிவை கொண்ட மாடமாளிகைகள் கட்டடக்கலைச் சிறப்பு சொல்லும்.

இசைக்கலை, நாடகக் கலை:

பாடலோர்த்தும், நாடகம் நயந்தும்

வெண்ணிலவின் பயன் துய்த்தும்

கண்ணடைஇய கடைக்கங்குலான்’

பரதவர் இசைகேட்டும் நாடகம் பார்த்தும் அங்கேயே உறங்கினர்.

பலவகை இசைக்கருவிகள்:

‘ குழலகவ   யாழ் முரல

முழவதிர முரசியம்ப

விழவறா வியலாவணத்து’

வாய்ப்பாட்டு, குழல், முழவு, யாழ் முதலான இசைக்கருவிகளை மீட்டுதல் இருந்தது.

ஓவியக்கலை,

‘வேறுபட்ட வினை ஓவத்து வெண்கோயில்’

அரண்மனை என்றதால் ஓவியக்கலை வளர்ந்திருந்தது.

5.பழக்கவழக்கங்கள்:

வணிக வீதிகளில் பொருட்களை அடையாளப்படுத்தவும், பிற இடங்களில்  இவை இன்ன இடங்கள் என்று தெரியப்படுத்தவும் விதவிதமான கொடிகள் நாட்டி வைத்திருந்தனர்.

கோவிலில்,

‘ மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய

மலரணிவாயில் பலர்தொழுகொடியும்’

படை வீரர்களுக்கும், காவல் புரிவோர்க்கும் உணவு சமைத்து இடும் அறச்சாலைகளில்;

‘கூழுடைக் கொழுமஞ்சிகைத் 

தாழுடைத் தண்பணியத்து

வாலரிசி பலிசிதறி

பாகுகுத்த பசுமெழுக்கிற்

காழூன்றிய கவிகிடுகின்

மேலூன்றிய துகிற்கொடியும்.’ 

வீரத்தின் அடையாளமான வேல்நட்டு படையலிடுவதுண்டு இங்கு.

அறிஞர் வாதம் செய்யும் பட்டிமன்றங்களில்;

‘பல்கேள்வித் துறைபோகிய

தொல்லாணை நல்லாசிரியர்

உறழ்குறித் தெடுத்த உருகெழுகொடியும்’

துறைமுகத்தில் நாவாய்களில்;

‘ தீம்புகார்த் துறை முன்றிருக்கை

தூங்குநாவாய்த் துவன்றிருக்கை

மிசைக்கூம்பின் அசைக்கொடியும்.’

மீன் விற்குமிடங்களில், கள்விற்குமிடங்களில்,

‘மீன்தடிந்து விடக்கறுத்து

ஊன்பொறிக்கும் ஒலிமுன்றில்

மணற்குவைஇ மலர்சிதறி

பலர்பகுமனைப் பலிப்புதவின்

நறவுநொடைக் கொடியோடு’

என்று பலவித கொடிகள் நிறைந்திருந்தன

வரி வசூலித்தல்.:

‘நல்லிறைவன் பொருள் காக்கும்

தொல்லிசைத் தொழில் மாக்கள்

……

வைகல்தொறும் அசைவின்றி 

உல்குசெயக் குறைபடாது’

ஏற்றுமதி,இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி வசூலிக்கப்பட்டது

வென்ற நாடுகளிலிருந்து மகளிரைக் கொண்டு வருதல்

‘கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்

மலரணி மெழுக்கமேறிப் பலர்தொழ’

கோவில்களில் பகைநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆடல் பாடல் வல்ல நங்கையர் இறைப்பணி புரிந்தனர்.

6.பண்பாடு;

‘கொலை கடிந்தும் களவு நீக்கியும்

அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்

நல்லானொடு பகடோம்பியும்

நான்மறையோர் புகழ் பரப்பியும்’

மக்கள் வாழ்ந்தனர்

மக்கள் நலம் கருதி முனிவர், துறவியர் தவச்சாலைகளிலிருந்து வேள்விகள் இயற்றி வந்தனர்.

‘தண்கேணித் தகை முற்றத்துப்

பகட்டெருத்தின் பலசாலைத்

தவப்பள்ளித் தாழ்காவின்

அவிர்சடை முனிவர் அஃகி வேட்கும்

ஆவுதி நறும்புகை’

வணிகர்

‘ கொடுமேழி நசையுழவர் 

நெடுநுகத்துப் பகல்போல

சடுவு நின்ற நன்னெஞ்சினோர்

வடுவஞ்சி வாய்மொழிந்து

கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறைபடாது

பல்பண்டம் பகர்ந்து வீசும்’

உழவர் கலப்பையின் நுகத்தடியின் நடுவிலிருக்கும் பகலாணிபோல் 

அறவழி நின்று உரியவிலை பகர்ந்து விற்றனர்.

7.காவிரிப்பூம்பட்டினத்தின் வளமும்,சிறப்பும்:

‘நீரின் வந்த நிமிர்பரிப்புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத்துளவும் காழகத்து ஆக்கமும்

அரியவும் பெரியவும் நெறிய ஈண்டி.’

வெளிநாடுகளிலிருந்து கடல்வழி வந்த குதிரைகள், வண்டிகளில் வந்த மிளகு, இமயத்தினின்று வந்த மணி, பொன்,குடகு மலையின் அகில், சந்தனம், குமரிக்கடலின் முத்து, குணகடலின் பவழம், ஈழம் மற்றும் கடாரத்திலிருந்து வந்த பொருட்கள் அகன்ற வீதிகளில் நிறைந்திருந்தன.

காவிரி விளைச்சலைத் தந்து, கங்கைச் சமவெளி விளைந்தவையும்,சோழநாட்டின் குணகடலில் எடுத்த பவழத்திற்கு பாண்டிய நாட்டின் முத்தும், சேரநாட்டின் அகில், சந்தனமும் வாங்கப்பட்டன.

‘நீர்நாப்பண்ணும்,நிலத்தின்கண்ணும்

ஏமாப்ப இனிது துஞ்சிக்

கிளை கலித்துப் பகை பேணாது

வலைஞர் முன்றில் மீன் பிறழவும்

விலைஞர் குரம்பை மாவீண்டவும்’

மீனவர் இல்லத்து முற்றங்களில் நிறைந்த நீரில் மீன்களும், குதிரைகள் விற்போரின் இலாயங்களில் குதிரைகளும் நிம்மதியாக நிறைந்திருந்தன.மக்கள் நாவாய்களிலும், நிலத்தில் வேண்டிய இடத்திலும் நிம்மதியாக உறங்கினர்.சுற்றம் பெருக்கி பகை ஒழித்து வாழ்ந்தனர்.

“மொழிபல பெருகிய பழிதீர் தேயத்து

புலம்பெயர் மாக்கள் கலந்தினிதுறையும்’

வேற்றூரினரும், வேற்று நாட்டவரும், இன்னும் துறைமுக நகரமாதலின் கடல்வழி வந்த வேற்று மொழி பேசுபவரையும் அன்புடன் ஏற்றுக் கலந்து வாழும் மக்கள் நிரம்பியது.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.’

குறையாத விளைச்சல், சான்றோர், பண்பால், பொருளால் செல்வந்தர் சேர்வதே சிறந்த நாடு.

இதற்கொரு சான்றானது காவிரிப்பூம்பட்டினம்.

8.ஆட்சியும்,அரசனும்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’

 மன்னன் திருமாவளவன் வீரமும், ஈரமும், திறமையும் உடையவன்.

பகைவர்க்குக் காலனவன். 

‘விலங்கு பகையல்லது கலங்கு பகை அறியா

கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்

குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு’

விலங்குகளின் பகை உண்டு, உள்நாட்டு, வேற்றுநாட்டுப் பகை ஏதுமில்லை.செல்வம் கொழித்த குடிகள். செழுமிய பாக்கங்கள்,

சிற்றூர்கள் நிரம்பிய சோணாட்டில்.

மன்னன் அறவழி நடப்பவன்

‘ ஈகையேப் புகழ் சேர்க்கும், 

‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே’

என்பதறிந்தவன்.

வரிப்புலியின் இளங்குருளை கூண்டில் அடைபட்டதுபோல் மாற்றார் சிறையில் அடைபட்டுத் தன் வீரத்தால் மீண்டு வந்து அரசாள்பவன்.

‘கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்கு

பிறர் பிணியகத்திருந்து பீடுகாழ் முற்றி

…………………………………….நண்ணார்

செறிவுடைத் திண்காப்பேறி வாள்கழித்து

உருகெழுதாயம் ஊழின் எய்தி,’

வீரம்;

மலையகழ்க்குவனே, கடல் தூர்க்குவனே

வான் வீழ்க்குவனே வளிமாற்றுவனென’ எனச் சூளுரைக்கும் வீரன்.

போர்முரசம் முழங்கச் சென்று பகைவரை வென்ற போர்க்களத்தைப், பருந்துகளுக்கு விருந்தாக்குபவன்..

ஆட்சி;

‘காடுகொன்று நாடாக்கிக்

குளம்தொட்டு வளம்பெருக்கிப்

பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக் 

கோயிலொடு குடிநிறீஇ

வாயிலொடு புழையமைத்து’

காட்டைத் திருத்தி புதியதொரு நகரத்தை நிர்மாணித்தான்.

தன்னை நாடிவரும் புலவர்களுக்கு அவர்கள் தகுதியறிந்து பரிசில் தருபவன்

‘தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்

பத்தொடு ஆறுநூ றாயிரம்பெறப்

பண்டு பட்டினப்பாலை கொண்டதும்'{ கலிங்கத்துப் பரணி)

பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசு பெற்றார் உருத்திரங்கண்ணனார்

உளவியல்;

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வாரிருங் கூந்தல் வயங்கிழையொழிய

வாரேன் வாழிய நெஞ்சே’

தலைவனைப் பிரிதற்கு வருந்தும் தலைவியைத் தேற்றுதற் பொருட்டு

பயணத்தைத் தள்ளி வைத்து

திருமாவளவனின் செங்கோலை விடவும் குளிர்ச்சியும் இனிமையும் தருவது தலைவியின் மென்தோள் அறிவாய் நெஞ்சே என்கிறான் தலைவன்.

இப்படிக் கூறு முகத்தான் வளவனைப் புகழ்வதுவும், தலைவிக்குக் குறிப்பால் நம் வறுமைதீர அவன் உதவுவான் என்று உணர்த்துவதுமாகும்.

இங்ஙனம் பட்டினப்பாலை செம்மாந்த வாழ்வியல் நெறியைக் காட்டி நிற்கிறது.

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ்அசோகமித்திரன் சிறுகதைகள்  – 1

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *