மாநடிகன்

This entry is part 2 of 8 in the series 20 ஜூலை 2025

(அன்புடையீர்,

வணக்கம்.

தங்களது திண்ணை இணைய இதழில் வெளியிடுமாறு, “மாநடிகன்” எனும் ஒரு புதுக்கவிதையை பணிவுடன் ஸமர்ப்பிக்கின்றேன். 

இக்கவிதை, யோக வாசிஷ்டம், பிரஹ்ம சூத்திரம் மற்றும் ஶிவஞானபோதம் ஆகியவற்றின் உள்ளார்ந்த தத்துவங்களை, ஒரு மாநாடக அரங்கத்தின் உருவகத்தில் இலக்கிய வடிவமூலம் வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும் .

“நாடகம்” என்பது இங்கு வெறும் உருவகம் மட்டுமன்றி —

இது பிரபஞ்சத்தின் வடிவான மாயையின் இயக்கம்,

இது “தன்னை” மறந்த “நான்” வேடம் தரித்தாற் போல் பகரும் பரிதாப உண்மை. இக்கவிதையின் உட்கருத்து:

“மாயை எனும் உலக அரங்கில், ‘பக்தன்’ எனும் வேடத்தில் கூட நாம் நடித்தாலே போதும்… ‘நடிகன்’ மறைந்து விடுவார்!”

இது வெறும் உருவகம் அல்ல. இது சாதனையின் உளவியல்.

பக்தியாக நடிக்கத் தொடங்குகிறோம். பக்தி யாருடையது என்ற அறிவின்றி.

ஆனால் காலம் மாறும். வசனம் மறையும். நடிப்பு மீறுகிறது.

நடிகனே இல்லை எனும் உண்மை தெளிகிறது.

இது “fake it until you make it” என்ற சித்தவியல் கருத்தின் ஒரு வேதாந்த வடிவமே! இக்கவிதை, திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், கம்பர் ஆகியோரின் பங்களிப்பையும், அழகியல் மற்றும் மொழியியல் அமைப்பையும், உள்வாங்கி ஒரு நவீன வாசலில் அழைத்துச் செல்கிறது. இக்கவிதை, வாசகரை மயக்கத்திலும், விழிப்பிலும் மாய்க்கும் இருமைத் தன்மை கொண்டது.

இக்கவிதை, மனித வாழ்வை ஒரு மாநாடக அரங்கம் என, அவ்வரங்கில் ஒவ்வொருவரும் தத்தமக்குரிய வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு கனவு நாடகத்தின் வெளிப்பாடாக விவரிக்கின்றது.

இக்கவிதையின் உள்ளார்ந்த தத்துவத் தோற்றம் பின்வரும் மூன்றை அடிக்கோளாகக் கொண்டுள்ளது:

ஷேக்ஸ்ஃபியர் கூறினாற் போல்:

  “உலகமெனும் நாடக மேடையில் அனைவரும் நடிகர்களே!”

ஶ்ரீ வேத வியாஸ மஹரிஷி, பிரஹ்ம ஸூத்திரம் 2.1.33:

“அண்டம் பிரஹ்மனின் லீலா விளையாட்டே” என அருளினார்கள்.

Sri Ved Vyāsa Maharishi, Brahma Sūtram 2.1.33:

  “लोकवत्तु लीलाकैवल्यम्”

  (The universe is merely the sportive play of Brahman.)

கம்பனின் அழகிய தமிழில்:

  “அலகிலா விளையாட்டுடையார் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.”

இக்கவிதை, அறிவு, மாயை, அவஸ்தைகள், மற்றும் அவதாரங்களை ஒரு அரங்க நாடக படிமத்தில் எளிமையாகவும் ஆழமாகவும் புலப்படுத்த முயல்கிறது. திண்ணை வாசகர்களிடையே சிந்தனையையும், உளவியல் அவதானிப்பையும் தூண்டக் கூடியதாயிருக்கும் என நம்புகிறேன்.

தங்களது வாசிப்பிற்கும், மதிப்பீட்டிற்கும் முன்வைக்கிறேன்.

அன்புடன்,

வேங்கடேஶன் நாராயணஸ்வாமி )

மாநடிகன்

ஒப்பனைகள் இன்னும் கலையவில்லை!

ஒப்பாரிகள் இன்னும் ஓயவில்லை!

கனவுகள் கலையவில்லை! கனவினின்று விழித்தெழ விழைவுமில்லை! அச்சமா? அறியாமையா? 

இல்லை விருப்பமின்மையா?

ஓயாமல் நடந்தேறும் ஒப்பனைகள், ஒத்திகைகள், ஒப்பாரிகள்!

ஒத்திகைகளை ஒப்பும் நாடகங்கள்!

தோன்றி மறையும் உலகங்கள், தாவர-ஜங்கமங்கள், 

மற்றும் மானுட நவ-நாகரீகங்கள்,

ஓய்ந்தொழியா மாயப் பிறப்பிறப்புகள்!

மாமாயோனிற்கும் மருநிலத்திற்கும் 

இடையில் ஸகல ஜீவ நடிக-நடிகையர்கள்!

சலிப்பேயிலா எதார்த்த நடிப்பால் 

ஜென்மம் கடைத்தேற களமிறக்கி 

விடப்பட்ட விளையாட்டு வீரர்கள்!

போரும்-அமைதியும், காதலும்-களிப்பும், வெறுப்பும்-விருப்பும்,

இனிப்பும்-கசப்பும், வறுமையும்-செம்மையும், வன்மமும்-வஞ்சமும், நன்மையும்-தீமையும், அன்பும்-அரவணைப்பும், போகமும்-யோகமும், பத்தியும்-முத்தியும், பொய்யும்-மெய்யும் ஆக 

யுகயுகமாய் நடந்தேறும் ஜென்ம-ஜென்மாந்திர 

நவரஸ நாடகங்கள்! நாடகத்துள் நடிகர்கள்,

கனவிற்குள் கனவாய், அரங்கத்துள் அரங்கமாய்

 உட்பொதிவுடன் அசைந்தாடும் அழகுப் பதுமைகள்!

அன்பு, பண்பு, பகைமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், பத்தி, மற்றும் பொறுமை என்னும் நகைகளணிந்து

ஆசான், மக்கள், கணவன், மனைவி, சுற்றம், பெற்றம் 

மற்றும் அடியாரென ஸுந்தர வேடங்கள் பல பூண்டு

உணர்ச்சியின் உச்சம் தொட்ட உயிர் பெற்றெழுந்த சிற்பங்களாய் 

உவகை பொங்கும் நடிப்புடன்

அரங்கேறும் எண்ணற்ற உள்ளமைவு நாடகங்கள்!

கோடி கோடி கோடி நடிகர்கள்!

அனந்தகோடி அரங்கினுள் அரங்குகள்!

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ

பற்பல வேடங்களில் பரிமளிக்கும் பல்கலை வினைஞர்கள்!

அரவணைமேல் அறிதுயில் பள்ளியான்

அலகிலா விளையாட்டுடையான்

அமுத முறுவலில், கடைக்கண்ணாடலில், 

ஆர்ப்பரிக்கும் கனவுப் பெட்டகங்கள் இந்நாடக அரங்குகள்!

கனவிற்குள், கனவிற்குள்,…..கனவாய் விரிந்தும்

அரங்கிற்குள், அரங்கிற்குள்,…..அரங்கமாய் அதிர்ந்தும் 

அன்பெனும் அகக்கோயிலுள் அரங்கேறும்

கற்பனைக் காவிய நாடகங்கள்!

“இல்லா ஒப்பனையை எங்ஙனம் களைவது?!”

எள்ளி நகையாடுவான் எல்லாம் அறிந்த நடிகன் ஒருவன்!

ஈஶன் வஶத்தில் மிகப்பெரிய 

ஸொப்பனத்துள் ஸொப்பனங்களாய் விரியும் இந்நாடக நடிகர்கள்!

எண்ணிலடங்கா எழில்மிகு அரங்கங்கள்! 

எகத்தாளமுடன் ஆட்டுவித்தால் ஆடும் 

பொம்மலாட்டக் காவியங்கள் 

இத்தோல் பொம்மைகள் போடும் கனவு நாடகங்கள்!

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே!

ஆளவைத்தால் ஆரொருவர் ஆளாதாரே!

(தடுத்து) ஆட்கொள்ளவைத்தால் ஆரொருவர் கொள்ளாதாரே!

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே!

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே!

ஒழுகுவித்தால் ஆரொருவர் ஒழுகாதாரே!

உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே!

உன்னவைத்தால் ஆரொருவர் உன்னாதாரே!

உள்கவைத்தால் ஆரொருவர் உள்காதாரே!

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே!

பணியவைத்தால் ஆரொருவர் பணியாதாரே!

பழகவைத்தால் ஆரொருவர் பழகாதாரே!

காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே!

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே!

நடிக்கவைத்தால் ஆரொருவர் நடியாதாரே!

நடிப்பாரார் நம்பனவன் நடித்துக் காட்டேல்!

நடித்து நடித்து நற்றழும்பேரி

அரங்கந்தோறும் பொய்யினைப் பலசெய்து

“நான்”, “எனது” எனும் மாய அரவம்

கடித்த வலியில் துடியாய்த் துடித்து 

கதறி அழுது கழறித் திரிவோரைப் பிடித்து

அடித்து அடித்து அக்காரம் முன் தீற்றிய

ஆடற்க் கூத்தனின் கூத்துப் பட்டறையில்  

பட்டை தீட்டிய வைரமாய்

 ஜ்வளிக்கும் பழவடியார் சிலர் 

பத்தராய் பணிந்து பிச்சைப் 

பாத்திரமேற்று நடிப்புப் பித்தரானார்!

நாடகத்தில் நல்லடியாராய் நடிப்பார்!

வீடகத்தே புகுந்திட மிகப்பெரிதும் விரைகுவார்!

ஆடகச்சீர் மணிக்குன்று ஆசான் நடிகன்தன் 

இடையறா அன்புக்கும் அருளுக்குமேங்கி

ஊடகத்தே நின்றுருகுவார் தன்னுடையான் 

தன்னையே தந்தருளும் வரை!

இந்நடிப்பே இறுதி நடிப்பாய் உருகித் திரிகுவார்,

 முடிவிலியாய்த் தொடரும் மாய உள்ளமைவு நாடகங்கள் மற்றும்

அரங்குகளினின்று முற்றிலும் உதறித் துறந்து

அனைத்தையும் பார்க்கும் மாநடிகனாம் 

மூவா முனைவனடி சேருவார்!

காண்பானையன்றி காட்சிகள் ஏது?

இம் மாநடிகனையன்றி நாடகங்கள் ஏது? அரங்குகள் ஏது?

காண்பானாய், காட்சியாய், காட்சிப் பொருள்களாய்-கனவுகளாய், 

உள்ளார்ந்தும், அப்பாற்பட்டும் எல்லாமுமாய் 

ஊழி முதல்வனாய், நடுவாய்-முடிவாய் 

நின்ற மாநடிகன் ஒருவன் அடி போற்றி! போற்றி!

நாடக அரங்குகள் போற்றி!

நடிக-நடிகையர்கள் போற்றி!

கனவுகள் போற்றி! காட்சிகள் போற்றி! 

காட்சியின் மாட்சிமை போற்றி! 

பொய்மைகள் போற்றி! பொம்மைகள் போற்றி! பொம்மலாட்டக் கலைஞர்கள் போற்றி! பல்கலை தொழில்நுட்ப 

வினைஞர்கள் போற்றி! பத்தராய் பணிந்து பிச்சை பாத்திரமேற்ற

நடிப்புப் பித்தர்கள் போற்றி! போற்றி!

Series Navigationகனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடுசொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *