–பி.கே.சிவகுமார்
அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் அன்பை granted ஆக எடுத்துக் கொள்கிற மகன், அதைக் குறித்த புகார்கள் இல்லாத அம்மாவின் கதை என்பதற்கான குறிப்புகள் கிடைத்து விடுகின்றன.
இன்னைக்குச் சீக்கிரம் வீடு திரும்பி விடுகிறாயா எனக் கேட்கிற அம்மாவிடம், காரணத்தைக் கேட்காமலே என்னால் முடியாது போ என்கிறான் ரகு. அதைப் பொருட்படுத்தாமல் அவனுக்கு இன்னும் சாப்பிடக் காய்கறி போடட்டுமா என்று கேட்கிற அம்மாவிடம், ஒன்றும் வேண்டாம் போ என்று வாயில் இருந்த உணவுப் பருக்கை வெளியே தெறிக்கப் பதில் சொல்கிறான்.
அப்புறம் அலுவலகம் கிளம்பும்போது என்ன விடேசம் என அம்மாவிடம் கேட்கிறான். பக்கத்து வீட்டு மாமி ஆறு மணி சினிமாவுக்குப் போகலாமா எனக் கேட்டதை அம்மா சொல்கிறார். கூடவே அவன் சகோதரியும், சகோதரனும் சீக்கிரம் வீடு திரும்ப முடியாத நிலையைச் சொல்லி, வீட்டைப் பூட்டிக் கொண்டு போகமுடியாது என்பதையும் அம்மா சொல்கிறார். சீக்கிரமாக வீடு வந்துவிடு என அம்மா திரும்பக் கொஞ்சம் கண்டிப்புடன் சொல்லியிருந்தால் அவன் ஒத்துக் கொண்டிருப்பான் என அவனுக்கே தெரிகிறது. பின்னர் அம்மா போகிற படம் என்ன எனத் தெரிந்ததும், தான் அதைப் பார்க்கவில்லை எனினும் அம்மா அந்தப் படத்துக்கெல்லாம் போக வேண்டியதில்லை எனச் சொல்லிவிட்டு அலுவலகம் புறப்பட்டுப் போகிறான். அம்மா இதற்கெல்லாம் ஒன்றும் பதிலுக்குப் பேசுவதில்லை.
கதை எழுதப்பட்ட 1958ல் மாம்பலம் நிலையத்தில் இருந்து கடற்கரை நிலையம் வரை புகைவண்டி இருந்திருக்கிறது எனவும், காலை நேரத்தில் சுமார் 200 பேர் அந்த ரயிலுக்குக் காத்திருந்தார்கள் போன்ற நுண்தகவல்களும் கிடைக்கின்றன. அது ஒரு சனிக்கிழமை என்றாலும் அலுவலகம் பாதிநாள் இயங்கியது. சனி மதியம் சைனா பஜார் சாலை போக்குவரத்து, மக்கள் எனப் பரபரப்புடன் இருந்தாலும் அதிலிருந்து இருநூறு கெஜ தூரம் கூட இல்லாத பளபள சாலையில் எப்போதோ ஒருமுறை போகிற காரும் அதிக நடமாட்டமும் இல்லாத காட்சிகள்.
அலுவலகத்தில் ரகு மதியம் சினிமாவுக்குக் கூப்பிடற நண்பனை அம்மா சீக்கிரம் வரச் சொல்லியிருக்கா எனக் காரணம் சொல்லித் தவிர்த்து விடுகிறான். அலுவலகம் முடிந்ததும் அருகில் தனக்குப் பிடித்த இடங்களில் கொஞ்சம் காலாற நடந்து விட்டுப் புகைவண்டியில் ஏறி உட்கார்ந்தால், அது ரத்தாகி விடுகிறது. நண்பனும் அவனும் காபி குடித்ததில் செலவாகிப் போய் பேருந்து பயணத்துக்குக் கையில் இருக்கிற காசு போதவில்லை. அருகில் இருக்கிற நண்பன் வீட்டுக்குப் போனால் அவர் இல்லை என்கிறாள் நண்பனின் மனைவி. இந்த இடத்தில் அவன் அம்மா எப்படி வருகிறவர்களை நன்றாகக் கவனிப்பார், விவரங்கள் கேட்பார் என அவனுக்கு அம்மாவின் அருமை தெரிவதை அசோகமித்திரன் சிலவரிகளில் காட்டுகிறார். நண்பனின் மனைவி காய்கறிகாரிக்குக் காசு கொடுக்கும்போது நாலணா தவறிக் கீழே விழுந்துவிடுகிறது. அது பேருந்துப் பயணத்துக்கு உதவும் என ஆசையாகப் பார்க்கிறான். ஆனால் நண்பனின் மனைவியிடம் சும்மா வந்ததாகச் சொல்லச் சொல்லிவிட்டுத் திரும்புகிறான். தன்னை அவள் சற்று நன்றாக வரவேற்று நடத்தியிருந்தால் நிலைமையைச் சொல்லியிருப்பானோ எனத் தோன்றுகிறது. அம்மாவின் அருமையையும் இதையையும் வெளிப்படையாகச் சொல்லாமல் நம்மைப் புரிந்து கொள்ள வைப்பது அசோகமித்திரனின் முத்திரை.
கடைசியில் எப்படி வீடு திரும்புகிறான் என அ.மி. சொல்வதில்லை. நடந்து திரும்புகிறான் என நாம் முடிவு செய்கிறோம்.
முடிவிலும் இந்தக் கதையில் அசோகமித்திரன் டச் உள்ளது.
நீ சினிமாவுக்குப் போகலியா என நன்றாக இருட்டியபின் வீடு திரும்பியதும் அம்மாவிடம் கேட்கிறான். எங்கே போகிறது என்கிறாள் அம்மா. அதற்கு மேல் ஒரு வரி வருகிறது – “அவளுக்குக் கோபித்துக் கொள்ளவே தெரியாது”. கதை இந்த இடத்தில் உயர்ந்து விட்டதாக நாம் நினைக்கிறோம் ஆனால் அசோகமித்திரனுக்குத் தொட இன்னும் உயரங்கள் இருக்கின்றன.
ரகுவுக்கு உடலெல்லாம் வலித்தது என்பதை அம்மாவின் பதிலுக்கு அப்புறம் அ.மி. சொல்கிறார். கூட இன்னைக்கு ரயில் ஓடவில்லை, பஸ்ஸுக்குச் சில்லறை போதவில்லை என்றும் “இன்னும் என்ன என்னவோ” சொல்லவும் அவன் நினைக்கிறான். இந்த இன்னும் என்ன என்னவோ என்ற வார்த்தைகள் இந்த இடத்தில் கொள்கிற பொருள் வாசகரின் ஆழத்தைப் பொருத்தது. சொல்வதால் என்ன பயன், அம்மா ஆசை அதனால் பூர்த்தியாகிவிடுமா சொன்னாலும் அம்மா நம்புவாளா என ஒன்றும் சொல்லாமல் அமைதியாகி விடுகிறான்.
அவன் கைகால் கழுவி வந்ததும், அம்மா ஒன்றும் நடக்காததுபோல் பிளாஸ்க்கில் டீ வெச்சிருக்கேன் சாப்பிடு என்கிறாள். இதுவே கதையின் நுட்பமான உச்சம்.
அசோகமித்திரன் எதைச் சொல்லாமல் சொல்கிறார் எனில், ரகு சீக்கிரம் வந்துவிடுவான் – சாயங்காலம் அம்மா சினிமாவுக்குப் போய்விட்டால் – டீ குடிக்கிற வேளையில் அவன் கஷ்டப்பட வேண்டாம் என்றோ சினிமாவுக்குப் போகிற அவசரத்தில் டீ போட நேரமிருக்காது என்றோ அம்மா முன்கூட்டியே இவனுக்காக டீ போட்டு வைத்திருக்கிறார்.
இதில் தெரிகிற இன்னொரு விஷயம் – நீ அந்தச் சினிமா பார்க்க வேண்டியதில்லை என ரகு சொல்லிவிட்டுச் சென்றாலும், மகன் எப்படியும் நேரத்துக்கு வந்துவிடுவான் என மகனின் உள்மனதை அறிந்த தாயை அ.மி. காட்டுகிறார். மகன் தன் முரட்டுத்தனமான வெளிப்பூச்சைத் தாண்டி (external layer) உள்ளுக்குள்ளே தன்னை நேசிக்கிறவன், தன் ஆசையைப் பூர்த்தி செய்ய முயல்கிறவன் என அம்மாவுக்குத் தெரிந்திருப்பதை இந்தக் கதையில் உணர்கிறோம். அதனால்தானே ரகுவின் சகோதரனையோ சகோதரியையோ கேட்காமல் எடுத்தெறிந்து பதில் சொன்னாலும் ரகுவைக் கேட்கிறார் அம்மா என்று கதையின் முடிவில் புரிகிறது.
இது ஒரு நல்ல கதை. அசோகமித்திரனின் சிறுகதைச் சிறப்புகள் துலக்கமாகத் தெரிய ஆரம்பிக்கிற கதை. எழுத எழுத இத்தகையதொரு கதை சொல்லலில் அவர் விற்பன்னர் ஆகிவிட்டார். இதுவரை நாம் பார்த்த எட்டு கதைகளில், விபத்து, வாழ்விலே ஒருமுறை போன்ற நல்ல கதைகள் இருந்தாலும், எட்டில் என்னைப் பொருத்தவரை சிறந்த கதை இது. பத்து கதைகள் எழுதி அதில் ஒன்று இப்படிச் சிறப்பாக அமையும் என்றாலும் ஓர் எழுத்தாளருக்கு அது பெரிய வெற்றிதான்.
– பி.கே. சிவகுமார்
-ஜூலை 16, 2025
– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுதி 1 – கவிதா பப்ளிகேஷன்
#அசோகமித்திரன்
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3
- வண்டி
- காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்
- குளிர்வித்தால் குளிர்கின்றேன்
- பூஜ்யக் கனவுகள்
- அசோகமித்திரனின் “ஒற்றன்”
- அப்பாவின் திண்ணை
- சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்
- யாசகப்பொழுதில் துளிர்த்து
- நடக்காததன் மெய்
- அருகில் வரும் வாழ்க்கை
- கவிதைகள்
- மகிழ்ச்சி மறைப்பு வயது
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 11
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 12