கவிதைகள்

This entry is part 12 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

மு.இராமர் மாசானம்

1. உருவமில்லா மனிதர்கள்

உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் 

அவர்கள் எப்படி இருப்பர் 

நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா 

புராணக் கதைகளில் எல்லாம் கேள்விபட்ட 

மனக்கண்ணில் பதிந்துவிட்ட அந்த கொடூரமான 

மிகப்பெரிய அரக்கன் போன்றா 

கொன்றுவிடுவானோ என்ற பயத்தில்

நம்மை எதிர்த்து சீறும் சிறு பாம்பு போன்றா 

பயமுறுத்தும் விஷமில்லாத அந்த

பாம்பின் காட்சியில் தெரியும் நாம் போன்றா

கழட்டி வைத்துவிட்ட மனசாட்சியோடு திரியும் 

நாமும் அது போலவே

2. காலத்தில் அறுவடை

காலத்தில் அறுவடையின் அர்த்தம் தெரிந்தவராய் 

எங்கும் அவசரம் எதிலும் அவசரம் 

காலத் தேவை உணர்ந்தவராய் 

சாலையிலும் அவசரம் வாழ்க்கையின் 

அறுவடைக்காய்  

கணை தொடுக்கும் வில்லாய் 

காலத்தில் இல்லறம் நாடாதவரை 

சமயத்தில் குழந்தைப் பெறாதவரை 

கலங்கல் குழத்தில் தொலைத்ததை  

துளாவுவதுபோல் 

வதைக் கேள்விகள் துளைத்து துவைக்கின்ற 

சமுதாயப் பிரதியாய் ஒவ்வொரு மனிதனும் 

காலத்தில் அறுவடை என்பதன் அர்த்தத்தை 

காத்திருக்கும் பிரதி இழப்பிற்கும் கூறுவரோ. 

3. கழுதையா கட்டெறும்மா

‘கழுதை தேஞ்சு கட்டெறும்பா போச்சாம்’ 

‘கழுதை தேஞ்சு கட்டெறும்பா போச்சாம்’ 

என்று கேட்டு கேட்டு அலுத்துப்போன 

சுவர்களும் அவற்றை எதிரொலித்தன 

மதிப்பெண் குறைந்தவனை சூறையாடின அவை   

எதிர்வீட்டாளாக அம்மாணவனை அறிந்த நானோ 

அன்றோடு ஒழித்தேன் அக் கூற்றை.

4. ஊமைக் குசும்பி

அமைதிக் குன்றை அழுத்தி அழுத்தி 

அமைதிச் சிகரத்தின் உச்சத்தை எட்டவைக்கும்   

‘ஊமைக் குசும்பி’ ‘ஊமைக் குசும்பி’

‘பண்றதெல்லாம் ஊமை வேளை’ 

என்பன போன்ற கருணையில்லாச் சொற்கள்

வகுப்பறைச் சுவர்களில் ஊடுறுவி செவியை எட்டியதும் 

எனைபோல ஒருவர் என்று உடைந்த மழை மேகமாய் 

மனம் நிறைந்த கணத்தோடு பள்ளிப்பருவ நினைவு வெடித்தது.

5. பிராயத்து பையன்

வயசு பையன் எப்படி இருக்கனும்’

‘வயசு பையன் இப்படி இருக்கலாமா’

என்றெல்லாம் தினந்தினம் அபிஷேகம் 

கேட்டு கேட்டு புளித்துப் போன பழைய மாவே 

தினம் புதிதாய் பல பலவாய்

இந்நிலை மாற்ற உடல் கதி தேற்ற 

இடந்தாராது தங்கிவிட்ட வறுமையில் 

இறகிழந்த ஈசலாய் பால்யம் நீள 

நிலை கண்டு இரங்காது நிர்மூலமாய் கேலிக் 

கூத்தில் மூழ்கிய சக ஈசல்களையும் காண்கிறேன்.  

Series Navigationஅருகில் வரும் வாழ்க்கைமகிழ்ச்சி மறைப்பு வயது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *