லதா ராமகிருஷ்ணன்
சில நாட்களுக்கு முன்பு படிக்க கிடைத்த செய்தி இது பெங்களூருவில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் மே மாதத்தில் சேர்க்கப்பட்ட 84 வயது கணவரும் அவருடைய மனைவியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள் தன் மனைவி செய்யும் சாப்பாடு அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்களே விரும்பித்தான் மூத்த குடிமக்கள் இல்லத்தில் தங்களை சேர்க்க சொன்னதாக கூறி இருக்கும் அவர்களுடைய மகன் தன்னுடைய பெற்றோரின் இறப்பு குறித்து புகார் அளித்திருக்கிறார் ஆனால் இந்த செய்தியை படிக்கும் போது அது விரட்டில் இந்த மூத்த குடிமக்கள் எடுத்த முடிவாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் என்று தோன்றுகிறது தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் எதுவும் எழுதி வைக்கப்படவில்லை.
சில ஊர்களில் வயதானவர்களின் மரணத்தை இறைவாக்க முடியாமல் விரைவாக முடியாமல் படுத்து கிடப்பவர்களுக்கு இளநீர் புகட்டுவது வழக்கம் என்று படித்திருக்கிறேன் அது குறித்து எழுத்தாளர் கவிஞர் எம்டி முத்துக்குமாரஸ்வாமி
ஜூலை 13 அன்று தனது ஃபேஸ்புக் நிலைத்தகவல் பகுதியில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது இங்கே பெட்டிச்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.
”இன்று வாட்ஸப்பில் வந்த செய்தி என்னைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை அப்படியே பகிர்ந்துகொள்கிறேன்” என்ற குறிப்போடு வெளியாகியிருந்தது. மூத்த குடிமக்களை வலுக்கட்டாயமாக இறக்கச்செய்யும் வழக்கம் தமிழகத்தில் சில பகுதிகளில் நிலவி வருவதைப் பற்றி பிரமிளா கிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ள அந்தக் கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது.
——
தலைக்கூத்தல்: முதியவர்களை கொலை செய்யும் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்த கதை..
–
பிரமிளா கிருஷ்ணன்.
—
‘தலைக்கூத்தல்‘ என்ற பெயரில் தமிழில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. 13ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக தலைக்கூத்தல் என்ற சொல்லை நான் எதிர்கொண்டபோது, எனக்கு அது அதிர்ச்சியைத் தந்தது.
தலைக்கு ஊத்தல் அல்லது தலைக்கூத்தல் என்பது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில், குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் முதியவர்களை தலைக்குக் குளிப்பாட்டி கொலை செய்யும் முறையைக் குறிக்கிறது. இம்முறையில் குடும்பத்துக்கு பாரமாகக் கருதப்படும் முதியவர்கள் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டப்படுவர்.
பின்பு நாள் முழுவதும் அவர்களுக்கு அதிக அளவில் இளநீர் குடிக்கத் தரப்படும். எதிர்ப்பு சக்தி குறைவாகக் கொண்ட முதியவர்களுக்கு இதனால் கடுமையான காய்ச்சல், வலிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு ஓரிரு நாட்களில் இறப்பு ஏற்படும். இச்செயல் இந்தியாவில் சட்டத்துக்குப் புறம்பானது. சில நேரங்களில் தலைக்கு ஊத்துவதற்கு பதிலாக குளிர்ந்த பால் தருவது, நஞ்சு ஊசி போடுவது போன்ற செயல்களின் மூலம் முதியவர்கள் கொலை செய்யப்படுவர். பெரும்பாலும் முதியவர்களின் உறவினர்களின் அனுமதியோடு அல்லது உறவினர்களாலேயே இக்கொலைகள் நடத்தப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில், நோய்வாய்ப்பட்ட முதியவர்களை அவர்களின் பிள்ளைகளே எண்ணெய் குளியல் மூலமாக கொலை செய்யும் வழக்கத்திற்குப் பெயர்தான் தலைக்கூத்தல். இந்த கொலை பழக்கத்தை 2010ல் முதன்முதலில் செய்தியாக வெளியிட்டபின்னர், பல முதியவர்கள் தங்களது குடும்பத்தினர் விரித்த கொலை வலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பெண் குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் பழக்கம் தமிழ்நாட்டில் 1990களில் பரவலாக இருந்தது. அதுபோலவே 2010ல் விருதுநகர் மாவட்டத்தில் பல கிராமங்களில் தலைக்கூத்தல் என்ற முதியவர்களை கொலைசெய்யும் பழக்கம் இருந்தது.
இது பற்றி தெரிய வந்ததும் முதியவர்களுக்குக் கொடுக்கப்படும் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளதாகக் கூறி, கிராமங்களில் உள்ள முதியவர்கள் பலரிடம் பேசி தகவலைச் சேகரித்தேன்.
பல வீடுகளுக்கு ஏறி, இறங்கினேன். தலைக்கூத்தல் பற்றி கேட்டபோது, அது ஒரு சமூகப்பழக்கம், முடியாத நேரத்தில் தலைக்கூத்தல் செய்து முதியவரை ‘அனுப்பி‘ வைப்பதில் தவறில்லை என்று பலரும் சொன்னார்கள். அதை கருணைக் கொலை என்றும் சொன்னார்கள். சில முதியவர்கள் தங்களது பெற்றோருக்கு தலைக்கூத்தல் செய்ததையும், தங்களது பிள்ளைகள் தங்களுக்கு செய்தாலும், அதில் தவறில்லை என்றும் சொன்னார்கள்.
இந்த செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பல நாட்களில் எனக்கு என் தாத்தாவின் பிம்பம் என் கண் முன் வந்துவந்து போனது. வேலை காரணமாக சென்னையில் குடியேறியிருந்தாலும், அவரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசுவது, அவரை நலம் விசாரிப்பது என்ற புதிய பழக்கம் எனக்குள் வந்தது.
மூன்று மாதங்களில் நான் விருதுநகரில் சந்தித்த பல முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரிடம் பேசியபோது, தலைக்கூத்தல் என்ற பழக்கம் இருப்பதை உறுதிப்படுத்த பல சான்றுகள் கிடைத்தன.
ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் பேசியபோது, தனது நண்பர் ஒருவர் தனது மகன்கள் தலைக்கூத்தல் செய்யவுள்ளதைத் தெரிந்துகொண்டு தன்னிடம் அழுத கதையைச் சொன்னார். ”இரண்டு நாட்கள் கழித்து என் நண்பர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவர் தனது பிள்ளைகளால் கொல்லப்பட்டிருந்தார் என்று ஊரில் பலருக்கும் தெரியும். ஆனால் யாரும் புகார் கொடுக்கமாட்டார்கள். அப்படி புகார் கொடுத்தால் எங்கள் கிராமத்தில் பாதிப் பேர் இந்த பிரச்னையில் மாட்டிக்கொள்வார்கள்,” என்றார்.
தனது இரண்டு மகன்கள் தனக்கு தலைக்கூத்தல் நடத்தப்போவதை உணர்ந்த பெருமாள் என்ற முதியவர் விருதுநகரில் இருந்து வெளியேறி பரமக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக சொன்னார்.
”என் மகன்கள் எனக்கு தலைக்கூத்தல் நடத்த முடிவு செய்திருந்தார்கள். கொஞ்சம் நடமாடும் நிலையில் இருப்பதால், நான் ஊரில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டேன். என்னை போல வாய்ப்பு கிடைக்காத பல முதியவர்கள் கொல்லப்படுவார்கள்,” என்றார். முதியவர் பெருமாளின் உரையாடல் என்னை உறையவைத்தது.
அடுத்ததாக நான் சந்தித்த ஒரு நபர், தீபாவளி பண்டிகையின்போது தனது தந்தையை ‘அனுப்பி‘ வைத்ததாகவும், பொங்கல் வந்தால் அம்மாவை ‘அனுப்பி‘ வைக்கலாம் என்று முடிவு செய்திருப்பதாகச் சொன்னார். ”எத்தனை காலத்திற்குதான் போகும் உயிரை பார்த்துக்கொண்டு இருப்பது…பண்டிகை தினங்களில் உறவினர்கள் பலர் இறப்புக்கு வரமாட்டார்கள், செலவு குறையும்,” என்றார்.
இந்த பயணத்தில் பெற்றோரை கொலை செய்த பலரை நான் சந்தித்தேன். அவர்கள் அதிர்ச்சியை இரட்டிப்பாக்கினார்கள்.
எண்ணெய் குளியல் மட்டுமே அல்ல பலவிதங்களிலும் முதியவர்கள் கொல்லப்படு கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். ஒரு சிலர் போலி மருத்துவர்களைக் கொண்டு ஊசி செலுத்துவதும் உண்டு. அதுபோன்ற ஊசி போடும் பெண் ஒருவரையும் சந்தித்தேன்.
என்னுடன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பூங்கோதை என்ற தன்னார்வலர் என் அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். எனக்கு டெல்லியில் வேலை கிடைத்துவிட்டது என்பதால், நானும், அம்மாவும் செல்கிறோம், ஊரில் தாத்தாவை விட்டுச் செல்லமுடியாது, ஊசி போடமுடியுமா என்று கேட்டேன். அவரும் ஒத்துக்கொண்டார்.
”தாத்தாவை ‘அனுப்பி‘வைக்க நல்ல நேரம் பார்த்துவிட்டு வா, உன் தாத்தா எப்படி இருக்கிறார் என்று பார்த்துவிட்டு, எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்கிறேன். நான்கு நாட்களுக்கு முந்திதான் ஒரு தாத்தாவுக்கு ஊசிபோட்டேன்,” என்றார் அந்த பெண். இவற்றை ஆடியோ பதிவு செய்துகொண்டேன்.
விருதுநகர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான அசோகன் தனது உறவினர் குடும்பத்தில் நடந்த கொலையைப் பற்றி என்னிடம் வலியுடன் பகிர்ந்துகொண்டார். அவரின் உதவியால் கிராமங்களில் பல போலி மருத்துவர்கள் இருப்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது. அவரது உறவினர் 76 வயதான முதியவர் ஒருவரை அவரது குடும்பத்தினர் போலி மருத்துவரின் உதவியால் கொலை செய்திருந்ததை என்னிடம் தெரிவித்தார்.
பல சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு, கிராமங்களில் முதியவர்களை அவர்களின் குடும்பத்தினர் கொலை செய்வதைச் செய்தியாக வெளியிட்டவுடன், விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் ஊசி போடும் போலி மருத்துவர்களை முதலில் கைது செய்தார்கள். கிராமங்களில் தலைக்கூத்தல் பழக்கத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முதியவர்களின் இறப்பை கிராம நிர்வாக அதிகாரிகள் கண்காணித்தனர்.
செய்தி வெளியிட்ட பிறகு எனக்கு சொந்தங்கள் பெருகின. பல முதியவர்கள் எனக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார்கள். அவர்கள் குடும்பங்களில் நடந்த கொலைகளைப் பற்றி விவரித்தார்கள். விருதுநகரில் இருந்து பல அழைப்புகள். அதில் ஒரு அழைப்பை இன்றும் என்னால் மறக்கமுடியாது.
மும்பையில் வசிக்கும் ஒரு மகன், வயதான தாய் ஒருவருக்கு தலைக்கூத்தல் நிகழ்த்த முடிவுசெய்திருந்தார் என்றும் தலைக்கூத்தல் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்ததால், அந்த நிகழ்வை நிறுத்திவிட்டார் என்றும் தகவல் வந்தது. எனக்கு பெரிய திருப்தி கிடைத்தது.
பல முதியவர்கள் தங்களது நட்பு வட்டத்தில் உள்ள முதியவருக்கு தலைக்கூத்தல் ஏற்பாடு செய்வது பற்றிய தகவல் தெரிந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார்கள். அதனால், பல கொலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த செய்தியை தொடர்ந்து, பல முறை விருதுநகருக்குச் சென்றேன். எனக்கு ஒரு நட்பு வட்டம் உருவாகியிருந்தது. தன்னார்வலர் இளங்கோ மூலமாக ஹெல்ப்ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் முதியவர்கள் சுயஉதவி குழுக்களை ஏற்படுத்தியது.
100க்கும் மேற்பட்ட அந்த சுயஉதவி குழுக்கள் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் முதியவர்களுக்கு, நல்ல உடல்நலத்துடன் இருக்கும் முதியவர்கள் நண்பர்களாக மாறினார்கள். அந்த சுயஉதவி குழுக் கூட்டங்களுக்கும் சென்றுவந்தேன். முதியவர்கள் தங்களது பிள்ளைகளிடம் அஞ்சி இருந்த நிலை மாறி, தங்களது உரிமைகளைக் கேட்டுப் பெறும் முதியவர்களாக மாறியிருந்தனர்.
அடுத்தடுத்த பயணங்களில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதியவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, தேர்தல் காலங்களில் முதியவர்களின் உதவித்தொகை குறித்து அரசியல் தலைவர்களை சந்திக்க அவர்களை அழைத்துச்செல்வது என பல நிகழ்வுகளில் தொடர்ந்து அவர்களுடன் பயணித்தேன்.
பல பாட்டிகளின் அன்பு முத்தங்கள், பல தாத்தாக்களின் கனிவான அழைப்புகள் இன்றும் தொடருகின்றன. அவர்கள் சமீபமாக எனக்குப் பரிசளித்த ஒரு கைத்தறி துண்டு எனக்குக் கிடைத்த பெரிய விருதாக பார்க்கிறேன்.
2012ல் வட இந்திய நடிகர் ஆமிர்கான் நடத்திய ‘சத்தியமேவ ஜெயதே‘ என்ற நிகழ்ச்சியில் தலைக்கூத்தல் குறித்த செய்தியை பற்றி பேசவேண்டும் என்று கேட்டனர். என்னுடைய அனுபவத்தைக் கேட்ட அமீர்கான், நிகழ்ச்சி முடிந்த பின்னர், என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, கண்கலங்கினார்.
”பெற்றோர்களைக் கூட கொலை செய்ய துணிந்துவிட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று முதலில் தோன்றியது. ஆனால் அதுபோன்ற சமூக அவலங்களை வெளிக்கொண்டுவர உங்களை போன்ற பேத்திகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது,”என்றார்.
சமீபமாக தன்னார்வலர் பூங்கோதையிடம் பேசியபோது, ”அந்த செய்தி வந்தபிறகு, தலைக்கூத்தல் குறைந்துவிட்டது. இப்போது அதுபோல யாரும் கொலை செய்வது இல்லை. முதியவர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு வந்துவிட்டது,”என்றார். அதேபோல, முதியவர்கள் தங்களது வீடுகளில் ஏதாவது துன்புறுத்தல்கள் இருந்தால்,காவல் நிலையத்திற்குச் செல்லவும் தயங்குவதில்லை என்றார்.
இந்த செய்தி சேகரிப்பின் ஊடாக சமூக மாற்றம் ஏற்பட்டதில் பெரிய மகிழ்ச்சி, அதேநேரம், எனக்குள் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டிருந்தது. முதியவர்களை நேசிக்கத் தொடங்கிய நான், என் தாத்தா ராமுவுக்கு பிரியமான தோழியாக மாறினேன். அவருக்காக நேரம் ஒதுக்கினேன். அவரின் இறுதிக் காலங்களில், அவருக்கு வாசிப்புப் பழக்கத்தில் ஆர்வத்தை ஊட்டி, அவரை கதை எழுத வைத்தேன், ஒரு புத்தகம் வெளியிடவைத்தேன். அவர் இறப்புக்கு முன்தினம் அவர் எழுத்தாளராக இருந்தார்.
தன்னுடைய வயதான தாய் தந்தையருக்கும், தன் மனைவிக்கும் ஒத்துவராததால் தாய் தந்தையரை வேற்றூருக்குப் புனிதத்தலங்களைப் பார்ப்பதாக அழைத்துச் சென்று அங்கேயே கைவிட்டு திரும்பிவரும் பிள்ளைகளைப் பற்றிய செய்தி படித்ததுண்டு.
வயதான தாய் தந்தையர் வாழுங்காலத்திலேயே அவர்களு டைய சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களைக் கைவிட்டு விடும் பிள்ளைகளைப் பற்றியும் கேள்விப்பட்ட துண்டு. மூத்த குடிமக்களுக்காக அயராது பாடுபட்ட, விஸ்ராந்தி என்ற மூத்த குடிமக்களுக்கான இல்லத்தை நிறுவிய அமரர் சாவித்திரி வைத்தி ‘வாழும்நாள் வரை உங்கள் சொத்துக்களை யாருக்கும் எழுதிக்கொடுத்து விடாதீர் கள் என்பார். ஆனால், அப்படி கறாராக எல்லாப் பெரியவர் களாலும் இருந்துவிட இயலாத நிலை.
இன்றைய 60 வயது கடந்த காலத்தை 40 வயதுக்கு சமம். மருத்துவ வசதி பொருளாதார வசதிகள், ஓய்வூதிய வசதிகள் எல்லாம் அதிகரித்திருக்கின்றன. இருந்தும், மூத்த குடிமக்கள் மனங்களில் SENSE OF BELONGING, SENSE OF SECURITY அதிகரித்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். கூட்டு குடும்பங்கள் என்று பெரும்பாலும் இல்லை. ’நியூக்ளியர்’ குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகிறார்கள். அல்லது, மகன், மகனின் வேலை – குடும்பம் வெளிநாட்டிலேயே ’செட்டில்’ ஆகிவிட்ட நிலை. வருடம் ஒருமுறை அல்லது இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மகன் குடும்பத்தோடு தாய்நாடு, சொந்த ஊர் வந்து தாய் தந்தையரைப் பார்த்து விட்டுச் செல்கிறார். மற்ற நாட்களெல்லாம் கைபேசி, WHATSAPP காணொளியில், பார்த்து இடையில் இருக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இல்லாமல் போய்விட்டதாக தமக்குத்தாமே பெரியவர்கள் பாசாங்கு செய்துகொள்ளவேண்டிய நிலை.
வசதி குறைந்த மூத்த குடிமக்கள் கூட்டுக்குடும்பங்களில் வாழ்ந்தாலும் வீடுகளில் இடமில்லாமல் பெரும்பாலும் வெளித்திண்ணை அல்லது வாசற்படிகளில் அமர்ந்திருப் பதைக் காண முடியும்
மூத்த குடிமக்கள் குறித்து நம் சமூகத்தில் ஒரு DICHOTOMY – இருநிலையான கண்ணோட்டம் அணுகுமுறை, நிலவுவதைக் காண முடிகிறது. ஒருபுறம் மத்திய, மாநில அரசு நிர்வாகங்களை வகிப்பவர்கள், முக்கிய அரசியல்வாதிகள் எல்லாம் 70 வயதுகளில் இருக்கிறார்கள். OLD IS GOLD, EXPERIENCE SPEAKS போன்ற பொன்மொழிகள் உதிர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னொரு புறம் மூத்த குடிமக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக பாவிக்கப்படுவதும், நடத்தப்படுவதும் நடப்புண்மையாக இருக்கிறது.
உண்ண உணவும், உடுக்கை உடையும், தங்க இடமும் அவர்களுக்குக் கிடைத்தாலே போதுமானது என்ற எண்ணமே பரவலாக நம்மிடையே இருக்கிறது. அதைத் தாண்டி, அவர்களுக்குத் தனித்துவமான தகுதித்திறனாற்றல் உண்டு, உளவியல் ரீதியான தேவைகள் உண்டு என்பதை எண்ணிப் பார்க்க மற்றவர்களின் அவசர வாழ்க்கை இடம் அளிப்பதில்லை.
பல வருடங்களுக்கு முன்பு, மூத்த குடிமக்களுக்காக சேவை செய்த திருமதி சாவித்திரி வைத்தி அவர்கள் DAY CARE CENTRES, பகல் நேர மூத்த குடிமக்கள் பராமரிப்பு மையங்களை சென்னையில் சில இடங்களில் ஏற்படுத்தினார். அந்த திட்டம் அரசுகளால் மாநிலமெங்கும், நாடெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டால் மூத்த குடிமக்கள் பகற் பொழுதில் சில மணி நேரங்கள் சென்றுவர, இளைப்பாற, நட்பினரை சந்தித்து உரையாட வழி பிறக்கும். மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு கூட இப்படிப்பட்ட மனமகிழ் மன்றங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
சமூக ஊடகங்கள், முக்கிய தொலைக்காட்சி சேனல்களின் விவாதங்கள் கலந்துரை யாடல்கள் எல்லாம் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் வாழ்வு சார் பிரச்சனைகள் குறித்து அபூர்வமாகவே பேசுகின்றன. இன்னும் சொல்லப்போனால், தொலைக்காட்சி மெகா தொடர்களில் எல்லாம் ’பெருசு’, ‘கெழம்’ என்ற அடைமொழிகளால் வயதானவர்கள் கேலி செய்யப்படுவது வெகு இயல்பான சித்தரிப்பாகிவிட்டது.
மூத்த குடிமக்களை அக்கறையோடு சித்தரிக்கிறோம் என்ற பெயரில் குடும்பத்திற்காக ஏங்குபவர்களாகவே திரும்பத் திரும்பக் காட்டுவது குடும்பம் தாண்டி அவர்களுக்கு இருக்கக்கூடிய, ஏற்படக்கூடிய சுயம் சார்ந்த சமூகம் சார்ந்த அக்கறைகளுக்கு ஆர்வங்க ளுக்கு அணை போட்டுவிடுவதாகிறது.
அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தரும் காப்பகங்கள் உள்ளன என்றாலும் அவை எண்ணிக்கையில் பற்றாக்குறையாகவே உள்ளது. அங்கெல்லாம் மூத்த குடிமக்கள் எங்கனம் பராமரிக்கப்படுகிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.
நடுத்தர வர்க்க, மேல் தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு என்று இருக்கும் SENIOR CITIZENS COMMUNITIES பெரும்பாலும் நகரை விட்டு தொலைதூரத்தில் அமைந்திருக்கின்றன. இதனால் அங்கே தங்கியிருப்பவர்கள் பலர் தனித் தீவுகளில் வாழ்பவர்களாக உணரும் நிலை. அவர்களுடைய உறவினர்களோ, நட்பினரோ அவர்களை எப்போதாவதுதான் சென்று பார்க்க முடிகிறது.
இங்கெல்லாம் முன்பணமாக சில பல லட்சங்களை வாங்குகிறார்கள். ஒருவேளை இடம் மாற விரும்பினால் அந்தப் பணம் திரும்பக் கிடைக்க ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்களே பெரும்பாலும் இங்கே தங்கியிருப்பதால், அவர்களே நல்ல ஓய்வூதியக்காரர்களாகவோ அல்லது சொத்து வசதி உடையவர்களாகவோ, பிள்ளைகள் அயல்நாடுகளில் வாழ்பவர்களாகவோ இருக்கிறார்கள் என்பதால் இங்கே பெரும்பாலும் பணப்பிரச்சனை இல்லையென்றாலும்,. உளவியல் ரீதியாக எல்லோரும் இத்தகைய இல்லங்களில் பொருந்தியிருக்கிறார்கள் என்று சொல்ல இயலாது. என்று எனக்கு தெரிந்த ஒருவர் “I DON’T SEE ANY YOUNG FACE HERE” என்று ஆதங்கத்தோடு கூறியது நினைவுக்கு வருகிறது. ஒருவித இயந்திரத்தனமான பொழுதுபோக்குகள்தான் இங்கே மூத்த குடிமக்களுக்கு கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளன.
பணமில்லாத மூத்த குடிமக்களின் நிலை இன்னும் மோசம். வெளி மாநிலத்தவர்கள் வேலைக்காக நம் மாநிலத்தில் இருப்பவர்கள் வாக்களிக்கலாகாது என்று ஆளாளுக்குக் குரலெழுப்புகிறார்கள். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிச்சைக்காரர்கள் வீதியோரவாசிகள் எல்லாம் அந்தந்த மாநில குடிமக்கள்தானே? அவர்களுக்கு வாக்குரிமை இல்லையா? அடிப்படை வாழ்வுரிமைகள் இல்லையா? இதைப்பற்றி ஏன் யாருமே அக்கறை காட்டுவதில்லை?
இன்றளவும் மனித இனத்தின் பல்வேறு வயதுநிலைகளில் உள்ளவர்களில் அரசாலும், சமூகத்தாலும் போதிய கவனம் தரப்படாமல் இருப்பவர்கள் இரு பிரிவினர். குழந்தைகள் – முதியவர்கள்.
முதியவர்களை இரண்டாம் குழந்தைப்பருவத்திலிருப்பதாகச் சொன்னாலும் அவர்க ளுடைய விழிப்புநிலை குழந்தையின் விழிப்புநிலையிலிருந்து மிகவும் வேறுபட்டது. குழந்தைக்குப் புரியாத அதன் வயதின் இயலாமை முதியவர்களுக்கு முழுக்க முழுக்கப் புரிந்து முள்ளாய்க் குத்தும்..
முதியவர்கள் என்றாலே அவர்களை மொந்தைகளாக்கி, அவர்களுடைய ரசனைகள், ருசிகள், விருப்புவெறுப்புகள் எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மைத்தாய் பாவித்து, பேசி, எழுதி வருவோர் நிறைய. முதியவர்களுக்கான காப்பகங்களில் இவ்வகை அணுகுமுறையைக் காணமுடியும்.
அதேபோல், குடும்பத்தின் மீது அதீதப் பற்றுடையவராய் அதையே உலகமாகக் கொண்டு உழலும் பெரியவர்களும், காலத்திற்குமான குடும்பத்தலைவராய் தன்னை பாவித்துக் கொள்ளும் பெரியவர்களும் அந்த நிலை மாறுவதைத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாய் மனமுடைந்துபோகிறார் கள்.
DETACHED ATTACHMENT மனநிலையை நாமெல்லோருமே வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நமக்கென்று சில பொழுதுபோக்குகளும் இருக்கவேண்டும்.
இப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியும் அலைபேசி யும் முதியவர்களுக்கு உற்ற தோழமையாய் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், தனித்தனியாக அறைகளோ, அலைபேசிகளோ, தொலைக்காட்சிப்பெட்டிகளோ இல்லாத வறிய, நடுத்தரக் குடும்பங்களில் அவை முதியவர்களின் தேவைக்குக் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
வசதி படைத்த குடும்பங்களில்கூட வயது முதிர்ந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா போன்றவர்களுக்குத் தனி அறை வசதியோ, தனி தொலைக்காட்சிப்பெட்டி வசதியோ தரப்படுவ தில்லை. அதற்கான தேவை உள்வாங்கப்படுவதில்லை. அல்லது, அவற்றை வாங்கித்தந்து அவர்களை தனியறையில் இருக்கச்செய்துவிடுகிறார்கள்
வீட்டிலுள்ள இளையவர்கள். தங்கள் வாழ்வின் தினசரி அவசரத்தில் வீட்டுப் பெரியவர் களிடம் தினமும் சற்று நேரம் உட்கார்ந்து பேசவும் அவர்கள் நேரம் செலவிட நினைப்பதில்லை.
Nuclear குடும்பம் என்ற நிலை பரவலாகிவிட்ட பிறகு பேரக்குழந்தைகளும் தாய், தந்தையிடம் கலந்துரையாடுவதோடு, கலந்துறவாடுவதோடு நிறுத்திக்கொண்டுவிடு கிறார் கள். அவர்கள் விஷயத்தில் தாத்தா- பாட்டி ஏதேனும் கருத்துரைப்பதை பெரும்பாலும் அவர்களும் விரும்புவதில்லை; அவர்களுடைய தாய்-தந்தையரும் விரும்புவ தில்லை.
மூத்த குடிமக்கள் உடற்குறையுடையவர்களாக இருந்தால், அல்லது வயது காரணமாக உடற்குறையேற்பட்டவர்களாய் இருந்தால், அவர்களுடைய நிலைமை இன்னும் அவலமாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைகள் நலனும் மூத்த குடிமக்கள் நலனும் குடும்பங் களாலும், சமூக அமைப்பாலும், அரசுகளாலும் இன்னும் அதிகமான அளவு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
—
இன்று 95 வயதாகியிருக்கும் திருமதி பத்மினி கோபாலன் என்ற இலக்கிய ஆர்வலர், சமூக ஆர்வலர் குறித்து நான் முன்பொரு சமயம் திண்ணை இதழில் எழுதியுள்ள கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது.
இன்று புதிதாய்ப் பிறந்தோம்!
_ லதா ராமகிருஷ்ணன்
வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக்கும் வழக்கம் நம்மி டையே பரவலாக இருந்துவருகிறது.
மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதியம், தங்கு மிட வசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித்துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதானவர்கள் அனைவருக்கும் ஒரேபோல் கிடைக்கிற தென்று சொல்லமுடியாது என்பதும் உண்மையே) முன்பு அறுபது வயதே முதுமையாகக் கருதப்பட்ட நிலை மாறி இன்றைய 60 வயது 40 வயதின் அளவே யாகியிருப்பதாகச் சொல்ல வழியுண்டு. ஆனாலும் 60 – 90 வரையான அனைத்து வயதினரையும் முதியவர்கள் (மூத்த குடிமக் கள் அழகான விவரிப்பு!) என்ற ஒரே அடைமொழியில் அடை யாளப்படுத்தும் போக்கே இன்றளவும் பரவலாக இருக்கிறது.
வயதானவர்கள் என்றால் ஏக்கத்தோடு தன் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். தன்னால் இப்போது இதைச் செய்ய முடிய வில்லையே, அதைச் செய்ய முடியவில்லையே, தன்னை யாரும் கவனிக்க வில்லையே, தன்னோடு யாரும் பேசுவதில் லையே, தன்னை யாரும் பொருட் படுத்தவில்லையே, தன்னிடம் யாரும் அறிவுரை கேட்க வில்லையே – இப்படி ஏங்கு பவர்களாகவே, அங்கலாய்ப்பவர்க ளாகவே வயதானவர்களைச் சித்தரிப்பதில் நிறைய பேருக்கு ஒரு சந்தோஷம்.
இப்படியிருக்கும் வயதானவர்களும் உண்டு என்பது உண்மைதான். ஆனால் இந்த அங்கலாய்ப்புகளும், ஆற்றாமைகளும் இளைய வயதினருக்கு இல்லையா என்ன?
சில நாட்களுக்கு முன்பு ஒருவர் முதுமை என்றால் பொய்ப்பல், ஹியரிங் எய்ட், மருந்து மாத்திரை, கைத்தடி என்று நிறைய வெளியாதரவுகளின் துணையோடு வாழும்படியாகிறது என்று வருத்தப்பட்டிருந்தார். ஒருவகையில் அது உண்மைதான் என்றா லும் அப்படிப் பார்த்தால் இளம் வயதில் பவுடர், குறிப்பிட்ட உடை கள், சிகையலங்காரம், பர்ஃப்யூம், என்று பல தேவைப் படுகின்றனவே? பிடிக்காத படிப்பு, அந்நியவுணர்வூட்டும் இடத்தில் வாழ்வா தாரத்திற்காக வாசம், என்று நிறைய சொல்லலாம்.
இந்த கையறு நிலையுணர்வுகளையெல்லாம் கடந்து தானே மாற்றுத் திறனாளிகள் தினசரி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்?
பத்மினி மேடமுக்கு இப்போது 90 வயதுக்கு மேலேயிருக்கும். (எனக்கே 65 வயதாகிவிட்டது). ஆனால் வாழ்வை ஏக்கத்தோடு பின்னோக்கிப் பார்ப்பதோ, அங்கலாய்ப்பதோ அவரிடம் கிடை யவே கிடையாது. அவருக்குக் காலாறக் கடற்கரையில் நடப்பதும், கடலைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மிகவும் பிடிக்கும். பத்து வருடங்கள் முன்புவரை கூட தினசரி தன் நட்பினர் சிலரோடு போய்க் கொண்டிருந்தார். இப்போது முடியவில்லை. அது குறித்து மனதில் அவ்வப்போது தோன்றக்கூடிய ஒரு சிறு இழப்புணர்வு அங்கலாய்ப்பாக உருவெடுக்க அவர் அனுமதித்ததேயில்லை!
ஒவ்வொரு வயதுக்கும், பருவத்துக்கும் அதற்கான அனுகூலங்கள் உண்டு என்று பத்மினி கோபாலன் கூறியது எவ்வளவு உண்மை என்பதை 40 வயதுகளில் தனியாக இயல்பாக ஹோட்டலுக்குச் சென்று, யாரும் பார்ப்பார் களோ என்று self-conscious ஆக படபடப் பாக உணராமல் ஆற அமர ருசித்துச் சாப்பிடும் போது உணர்ந்தி ருக்கிறேன்!
70 வயதுகளில் இளையதலைமுறையினர் பயிலும் கணினிப் பயிற்சி மையத்திற்குச் சென்று கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி பெற்றார்.
சில வருடங்களுக்கு முன்பு வீதியோரம் வசிக்கும் ஏழைப் பெண் மணி யொருவரின் மகள் விபத்தாக கருவுற்றபோது அவளுக்கு உதவ எங்கோ தொலைதூரத்திலிருந்த அமைப்பு ஒன்றுக்கு தோழர் மோகன் தாஸின் உதவி யோடு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு போய் அங்கே மணிக் கணக்காகக் காத்திருந்து அந்தப் பெண் ணுக்கு உதவமுடிந்த வழிவகைகளை அணுகி வேண்டினார் பத்மினி மேடம்.
இப்போது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தும் தமிழ் படிக்கவே வராம லிருக்கும் (தமிழ் வழியில் கல்வி பயின்ற) ஒரு இளம் பெண்ணுக்கு தமிழ் கற்றுத்தரும் வேலையில் இறங்கியிருக்கிறார்! எளிய தமிழிலான கதைப் புத்தகங்கள் இருக்கின்றனவா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்!
சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்காக இயங்கும் அரசுப் பள்ளிகளின் தர மேம்பாடு பற்றிப் பேசினால் ’உடனே தனியார் பள்ளிகள் மட்டும் ஒழுங்கா என்று கேட்க நிறைய பேர் கிளம்புகிறார்கள். இது ஏன் என்றே தெரியவில்லை’ என்று ஆதங்கப்படுவார்.
(அவருடைய ஆதங்கமெல்லாம் சமூகம் சார்ந்ததாகத் தான் இருக் குமே தவிர அவருடைய வயது காரணமாக எழுவதாக இருக்காது என்பது குறிப்பிடத் தக்கது).
இன்றைய இளந்தலைமுறையினர் பலருக்கு (தனியார் பள்ளி களில் பயிலும் பிள்ளைகளுக்குக்கூட) தாய்மொழியில் தங்கு தடையின்றி வாசிக்கவும் எழுதவும் தெரியாத நிலை பரவலாக இருக்கிறது. இந்நிலை மாறவேண்டி யது மிக அவசியம்.
மாண்டிசோரி கல்விமுறையில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங் களில் தமிழ் எழுதவும் வாசிக்கவும் பள்ளிமாணாக்கர்களுக்குக் கற்றுத்தர முடியும் என்று பத்மினி கோபாலனின் முன்முயற்சியில் உருவான அமைப்பின் வழி மாண்டிசோரி ஆசிரியைகளாக உரு வாகியுள்ளவர்கள் சமூகத்தின் அடித் தட்டிலிருந்து வரும் பள்ளிப் பிள்ளைகளிடையே நிரூபித்திருக்கிறார்கள். இந்த வழி முறையிலான மொழிப்பயிற்சி பரவலாக்கப்பட்டால் நிறைய மாணாக்கர்கள் பயனடைவார்கள்.
பத்மினி மேடமைப் பார்க்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிவது –
• நம்மைப் பற்றி மட்டுமே எண்ணாமல் நமக்கு வெளியே பார்க்கும் போது நம்மை அங்கலாய்ப்புகளும் தன்னிரக்கமும் அதிகம் பாதிக்காது.
• எந்த வயதிலும் மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியும்.
• இன்னொருவரோடு போட்டிபோடுவதாய், மூன்றாமவரை பிர மிக்கவைப்ப தற்காக வாழ்வது என்ற மன நிலையை வளர்த்துக் கொள்ளக்கூடாது.
• நம் வீட்டுக் குழந்தைகளையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளிலான குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வீட்டுச் சூழல், பள்ளிச் சூழலை உருவாக் கித்தர நம்மால் இயன்ற முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.
• எதற்காகவும் மனதில் வெறுப்பும், ஆணவமும், கழி விரக்கமும் மண்ட அனுமதிக்கலாகாது.
• தன்மதிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
இன்னும் நிறைய எழுதலாம்……..
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3
- வண்டி
- காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்
- குளிர்வித்தால் குளிர்கின்றேன்
- பூஜ்யக் கனவுகள்
- அசோகமித்திரனின் “ஒற்றன்”
- அப்பாவின் திண்ணை
- சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்
- யாசகப்பொழுதில் துளிர்த்து
- நடக்காததன் மெய்
- அருகில் வரும் வாழ்க்கை
- கவிதைகள்
- மகிழ்ச்சி மறைப்பு வயது
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 11
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 12