மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3

This entry is part 1 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

(THE CONQUEST OF HAPPINESS) 

– BERTRAND RUSSEL

அத்தியாயம் 3   

போட்டி

(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)

C:\Users\computer\Desktop\images.jpg

 அமெரிக்காவில் உள்ள எந்த மனிதரையும் அல்லது இங்கிலாந்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எந்த மனிதரையும், வாழ்வின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் அவர்களைத் தடுக்கும் மிக முக்கிய விஷயம் எது என்று கேட்டால் அவர் வாழ்தலுக்கான போராட்டம் என்றே பதில் அளிப்பார். அதை மிகவும் உண்மையாகவே அவர் கூறுவார். அதை அவர் தீர்மானமாக நம்புவார். ஒரு குறிப்பிட்ட வகையில் அது உண்மையே. ஆனால், இன்னொரு வகையில் – இது மிகவும் முக்கியமானது  – அது அப்பட்டமான பொய்; பாசாங்கு. வாழ்க்கைப்போராட்டம் அல்லது வாழ்தலுக்கான போராட்டம் ஏற்படுகிறது என்பது உண்மைதான். அது நம்மில் யாரொருவருக்கும் நமது துரதிஷ்டமான நேரத்தில் ஏற்படலாம். உதாரணத்திற்கு,  அது CONRADன் கதாநாயகன் FALKற்கு அவன் ஒரு கப்பலில் இருக்க நேரும்பொழுது அங்கே இரண்டு பேர் துப்பாக்கியோடு இருக்க, சக மனிதர்களை தவிர வேறு எதுவுமே சாப்பிடக் கிடைக்காத நிலையில் ஏற்படுகிறது. அந்த இரண்டு மனிதர்களும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிற உணவை உண்டு முடித்த பின் வாழ்தலுக்கான, உயிரோடு இருத்தலுக்கான உண்மை யான போராட்டம் தொடங்கியது. அதில் வெற்றி பெற்றான் ஆனால் அதற்குப் பிறகு அவன் என்றுமே சைவ உணவுக்காரனாகிவிட்டான். ஆனால் ஒரு வர்த்தகர், தொழிலதிபர் வாழ்தலுக்கான போராட்டம் என்று சொல்லும்போது  அவர் அர்த்தப்படுத்துவது மேற்குறிப்பிட்ட வகை போராட்டத்தை அல்ல. அடிப்படையில் அற்பமான விஷயம் ஒன்றுக்கு கௌரவத்தை உண்டாக்கும் பொருட்டு அவர் கையிலெடுத்துக்கொண்ட பொருத்தமற்ற சொற்றொடர் அது.  தனது வர்க்கத்தை சேர்ந்தவர்களில் பசியால் இறந்து போன எத்தனை பேரை அவருக்குத் தெரியும் என்று அவரிடம் கேட்டுப்பாருங்கள். அவருடைய நண்பர்கள் வியாபாரத்தில் நொடித்துப்போன பிறகு அவர்களுக்கு என்னவாயிற்று என்று அவரிடம் கேட்டுப்பாருங்கள். எல்லோருக்குமே தெரியும், வியாபாரத்தில் நொடித்துப்போன ஒருவர் அப்படி நொடித்துப்போக வழியே அற்ற ஒருவரை விட வாழ்வு வசதிகளில் மேலானவராகவே இருப்பார். எனவே, வாழ்க்கைப் போராட்டம், வாழ்தலுக்கான போராட்டம் என்று மனிதர்கள் சொல்லும்போது வெற்றி பெறுவதற்கான போராட்டத்தையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பதே உண்மை. அந்தப் போராட்டத்தில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக மக்கள் கூறும் போது  அடுத்த நாள் காலை சிற்றுண்டிக்கே வழியில்லை என்ற அர்த்தத்தில் அவர்கள் அப்படிக் கூறவில்லை. தங்கள் அண்டைவீட்டாரை விட அதிக பொலிவுடன், பெருமளவு ஒருபோதும் வசதி படைத்தவராக இல்லாத ஒரு மனிதரை விட என்றுமே மேலான இடத்தில் தான் இருப்பார் என்பதை எல்லோருமே அறிவர். எனவே, வாழ்க்கைப்போராட்டம், வாழ்வதற்கான போராட்டம் என்று மக்கள் கூறுவது வெற்றிக்கான போராட்டம் என்ற அர்த்தத்தில்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் போது மக்கள் அச்சப்படுவது அடுத்த நாள் காலை தங்களுக்கு காலை உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காக அல்ல தங்கள் அண்டை வீட்டுக்காரர்களை விட அதிகமாக வாழ்வில் மேன்மை வராமல் போய்விடுவோமோ என்பதை அவர்களுடைய அச்சமாக இருக்கிறது

 தான் தப்பிக்க வழியே இல்லாத ஓர் இயந்திரநுட்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்க வில்லை. மாறாக, தம்மை முன்னேற்றம் அடையச் செய்ய வழியற்ற ஒரு உடற்பயிற்சி இயந்திரத்தின் மீது தாமே விரும்பித் தங்கியிருக்கிறார்கள்  என்பதை அவர்கள் உணர்வதேயில்லை. காரணம் அது தம்மை மேம்பட்ட நிலைக்கு உயர்த்துவதில்லை என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. இங்கே நான் தொழில்துறையில் ஏற்கனவே மேற்படிகளில் இருப்பவர்களை பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருப்பவர்கள், அவர்கள் மனம் வைத்தால் தங்களிடம் இருப்பதைக்கொண்டு வாழ முடிந்தவரைப் பற்றியே இங்கே நான் பேசுகிறேன். ஆனால், அப்படி வாழ்வது அவர்களுக்கு அவமானகரமான விஷயமாகத் தோன்றும். எதிரிப் படையின் முன்னிலையில் தங்களுடைய ராணுவத்தைக் கைவிட்டு ஓடிவிடுவதைப் போல் தோன்றும். ஆனால் அவர்கள் தங்களுடைய வேலைகளால் என்ன பொதுநல காரியத்தைச் செய்கிறார்கள் என்று அவர்களைக் கேட்டால் விளம்பரங்களில் கடுமையான வாழ்க்கை குறித்துக் காணப்படும் வழக்கமான வாசகங்களைப் பேசிமுடித்த பின் எந்தவொரு பதிலும் அவர்களுக்கு இருக்காது.

அத்தகையதொரு மனிதனின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அவருக்கு ஒரு அழகான வீடு இருக்கும் என்று நாம் அனுமானித்துக்கொள்ளலாம். மனைவியும் குழந்தைகளும் இருப்பார்கள். அவருடைய குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருக்கும் காலைவேளையில் அந்த மனிதர் சீக்கிரமாக எழுந்துகொண்டு தனது அலுவலகத்திற்கு விரைகிறார். அங்கே அவருடைய கடமை ஒரு மகத்தான நிர்வாக அதிகாரியாக தனது தகுதித் திறனாற்றல்களை வெளிப்படுத்துவது. அவர் ஒரு இறுகிய முகவாயைத் தரித்துக்கொண்டு திட்டவட்டமான தொனியும் தோரணையுமாய் உறுதியாகப் பேசி எல்லோரையும் கவரும்படியான – அலுவலக கடைநிலைப் பணியாள் தவிர்த்து – அதற்கென கணக்காக திட்டமிடப்பட்ட ஒருவகை விவேகமான தோற்றத்துடன் இருப்பதை வழக்கமாக்கிக்கொள்வார். அவர் கடிதங்களைச் சொல்லச்சொல்ல உதவியாளர் எழுதுகிறார்; அவர் வர்த்தகச்சந்தையை கவனமாகப் பார்க்கிறார். ஏதாவது ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ளப்போகும் அல்லது செய்துகொள்ள விரும்பும் நபருடன் மதிய உணவு உட்கொள்கிறார். பல முக்கியமான நபர்களுடன் தொலைபேசியில் உரையாடுகிறார். இதேவிதமான நியமங்களுடன் அவருடைய மதியம் கழிகிறது. இரவு சாப்பாட்டுக்கு உடைதரிக்கும் நேரத்தில் சோர்வாக வீடு திரும்புகிறார். உணவு மேஜையில் அவரைப் போன்று களைத்து வீடு திரும்பும் வேறு சிலரும் தங்களோடு உணவருந்தும் பெண்களின் – அவர்கள் களைத்திருக்க எந்தக் காரணமும் இல்லை –  வருகையும் அருமையும் தங்களை மகிழ்விப்பதாக பாசாங்கு செய்யவேண்டும். இந்தச் சடங்கு எத்தனை நேரம் நீடிக்குமோ – சொல்லமுடியாது. எப்போது தப்பிக்க முடியுமோ தெரியாது. அதை முன்னூகிக்க முடியாது. இறுதியில் ஒரு வழியாக அவர் தூங்குகிறார். சில மணி நேரங்கள்  இறுக்கம் தளர அவர் இளைப்பாறுகிறார்.

 இந்த மனிதரின் பணிசார் வாழ்க்கை நூறு கஜ ஓட்டப்பந்தயத்தின் உளவியலைக் கொண்டது. ஆனால், அவர் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கும் அந்த ஓட்டப்பந்தயத்தின் முதலும் முடிவுமான ஒற்றை நோக்கம் கல்லறையாக இருப்பதால், அந்தப் பந்தயத்தில் அவர் காட்டும் முனைப்பும் கவனமும், நூறு கஜ ஓட்டப்பந்தயத்திற்கு மிகவும் சரியானவையாக இருப்பவை முடிவில் ஒருவித அதீதமாகிவிடுகிறது. அவருக்கு தன்னுடைய குழந்தைகளைப் பற்றி என்ன தெரியும்? வார வேலை நாட்களில் அவர் அலுவலகத்தில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் கோல்ஃப் விளையாட்டுத் தொடர்புகளில் இருக்கிறார். அவருக்கு தன்னுடைய மனைவியைப் பற்றி என்ன தெரியும்? அவர் காலையில் அவளை விட்டு வெளியேறும்போது அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள். மாலைநேரம் முழுவதும் அவளும், அவரும் தங்கள் சமூகக் கடமைகளை ஆற்றுவதில் மும்முரமாய் இருப்பார்கள். அது அவர்களுக்கிடையே எந்த விதமான அந்தரங்க உரையாடலும் நடக்கவிடாமல் தடுக்கும். ஒருவேளை அவரும்  சில பேரிடம் தனக்கு இருக்கவேண்டும் என்று விரும்பும் நட்புறவை பாவனையாக பேணிக் கொண்டிருந்தாலும் அவருக்கு உண்மையான நண்பர்கள் இல்லாமல் இருக்கலாம். வசந்த காலம் பற்றியும், அறுவடை பற்றியும் அவருக்குத் தெரிந்ததெல்லாம் அவை சந்தையில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகிறது என்பது மட்டுமே. வெளிநாடுகளை அவர் பார்த்திருக்கக்கூடும் – ஆனால், மிகவும் அலுப்பும் சலிப்பாக உணரும் கண்களால். புத்தகங்கள் பயனற்றவையாக அவருக்குத் தோன்றுகின்றன. இசை உயர்மட்ட ரசனையாகப் படுகிறது. வருடமாக ஆக அவர் மிகவும் தனியாகக்கொண்டேபோகிறார். அவருடைய கவனம் அந்த அளவு ஒன்றின் மீதே குவிகிறது. அவருடைய தொழிலுக்கு, வர்த்தகத்திற்கு வெளியே ஆன அவருடைய வாழ்க்கை மேலும் மேலும் வரண்டு போகிறது.  இத்தகைய அமெரிக்கரை, அவருடைய நடுத்தர வயதின் பிற்பகுதியி லிருக்கும் இவ்வகையான அமெரிக்க ஒருவரை ஐரோப்பாவில் பார்த்திருக்கிறேன். தன் மனைவியுடனும் இரு மகள்களுடனும் இருந்தார் அவர். பாவம், அவர் விடுமுறையில் செல்லவேண்டுமென்றும், தன்னுடைய மகள்களுக்கு ’பழைய உலகி’ன் வாழ்க்கையை அனுபவிக்க ஒரு வாய்ப்பைத் தர வேண்டும் என்றும் மற்றவர்கள் அவரிடம் வற்புறுத்திக் கூறினர். அம்மாவும் மகள்களும் குதூகலம் கொப்பளிக்க அவரைச் சூழ்ந்துகொண்டு தனித்துவம் வாய்ந்ததாக தங்கள் கவனத்தைக் கவரும் புதுப்புது பொருட்களை நோக்கி அவருடைய கவனத்தைத் திருப்பினர். ஒரேடியாகக் களைத்துப்போய் ஒரேயடியாக சலிப்புற்றவராகி, இந்தத் தருணத்தில் அலுவலகத்திலிருந்தால் என்ன செய்து கொண்டிருப்போம் என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள் ஆண்கள். அல்லது, இப்போது BASE BALL உலகில் என்ன நடந்துகொண்டிருக்கும் என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறுதியில் அவரைப் பற்றிய நம்பிக்கையை கைவிட்டுவிடுகிறார்கள். ஆண்களே PHILISTINES, கேடுகெட்டவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். தங்களுடைய பேராசைக்கு அவர் ஒரு பலிகடாவாக்கப்பட்டிருக் கிறார் என்பது அவர்களுக்கு ஒருபோதும் புலப்படுவதில்லை. இதுவும் முழு உண்மை என்று கூறிவிட இயலாது. ’சதி’ ஒரு ஐரோப்பியவாசிக்கு என்னவாகப்படுகிறதோ அதுவல்ல என்பதுபோல். ஒருக்கால் பத்துக்கு ஒன்பது பேர் விஷயத்தில் அந்த விதவைகள் விரும்பி பலிகடாவானவர்களாக இருக்கலாம் – பேர் – புகழுக்காகவும், அவர் சார்ந்த மதம் அப்படி விதித்திருப்பதாலும் தீக்கிரையாக்கப்படத் தயாராக இருக்கக்கூடும். தொழிலதிபரின் மதமும் புகழும் அவர் நிறைய நிறைய பணம் சேர்க்கவேண்டும் என்று கூறுகிறது. எனவே இந்த வர்த்தகரும் அந்தக் கொடுமையை விரும்பி அனுபவிக்கிறாரா யிருக்கும். அமெரிக்க வர்த்தகர் இன்னமும் மகிழ்ச்சிகரமானவராக ஆக்கப்படவேண்டும் என்றால் அவர் முதலில் தனது மதத்தை மாற்றிக்கொண்டாக வேண்டும். அவர் வெற்றியை விரும்புவதோடு மட்டுமல்லாமல் வெற்றியை நாடித் தேடிச் செல்வது ஒரு மனிதனின் கடமை என்றும், அப்படிச் செய்யாதவன் அவலமான பிறவி என்றும் நம்பும் வரை, அப்படி நம்பும்படியாக வலியுறுத்தப்படும் வரை. அவருடைய வாழ்க்கை அந்த ஒற்றை இலக்கை நோக்கி மிகவும் கவனக்குவிப்போடு இருக்கும். அந்தக் கவலை அவரை மகிழ்ச்சியடைய விடாமல் தடுக்கும். ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் முதலீடுகள். ஏறத்தாழ எல்லாம் அமெரிக்கர்களுமே நாலு சதவிகிதம் கிடைக்கும் பாதுகாப்பான முதலீட்டை விட அதைவிட விரைவாக, அபாயகரமான முதலீட்டிலிருந்து 8% பெறவே விரும்புவார்கள். இதன் விளைவாக அடிக்கடி பணத்தை இழக்கிறார்கள். தொடர்ந்து கவலையும் பதற்றமும் மனிதர்களை ஆக்கிரமிக்கிறது. என்னைப் பொறுத்தவரை, பணத்திடமிருந்து நான் பெற விரும்புவது பாதுகாப்பு நிறைந்த ஓய்வு; இளைப்பாறல். ஆனால், ஓர் அச்சு அசலான நவீன மனிதன் பெற விரும்புவது அதிகப் பணம், அதன் மூலம் அதிக ஆடம்பர வாழ்க்கை, மற்றும், இதுகாறும் அவனுக்கு சமமாக இருந்தவர்களை பின்னுக்குத் தள்ளி அவர்களை விட அந்தஸ்தில் தான் மேலானவராவது. அமெரிக்காவில் நிலவும் சமூக அந்தஸ்து அளவீடு தொடர்ந்து ஏறி இறங்கி மாறிக்கொண்டேயிருக்கிறது. அதன் விளைவாக எல்லாவிதமான மேட்டிமை உணர்வுகளும் சமூக அந்தஸ்து அளவீடு நிலையாக உள்ள இடத்தை விட அதிக அளவு அலைக்கழிப்போடு இருக்கின்றன. பணம் மட்டுமே மக்களை மகத்தானவர்களாகக் காட்டப் போதுமானதல்ல. என்றாலும், பணமில்லாமல் பெரிய மனிதர்களாக இருப்பது சிரமமான காரியம். மேலும், பணத்தால் உருவாக்கப்பட்டவையே சமூக அந்தஸ்து அளவீடுகளாக மனிதமூளைகளில் பதிந்திருக்கின்றன. அதிகமாக பணத்தை ஈட்டக்கூடிய மனிதன் புத்திசாலி; அப்படி சம்பாதிக்கத் தெரியாதவன் அறிவாளியில்லை. யாருமே தன்னை முட்டாள் என்று மற்றவர்கள் நினைப்பதை விரும்ப மாட்டார்கள். ஆகவே, ஒரு வர்த்தகச் சந்தை ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கிறது. இளைய தலைமுறை யினர் தேர்வு எழுதிக்கொண்டிருக்கையில் எப்படி உணர்வார்களோ அப்படி ஒருவர் உணர்கிறார். 

ஒரு வர்த்தகரின் கவலைகளில் நொடித்துப்போய்விடுவோமோ, மீள முடியாதபடி நஷ்டப்பட்டுவிடுவோமோ என்ற ஒருவித உண்மையான, எனில், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பயம் அடிக்கடி இடம்பிடித்துக்கொள்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ARNOLD BENNETன் CLAYHANGER – அவன் எத்தனை பெரிய பணக்காரனாக ஆனபோதும் பணியிடத்திலேயே இறந்துவிடுவோமோ என்று தொடர்ந்து பயந்து கொண்டேயிருந்தான். தங்கள் குழந்தைப்பருவத்தில் வறுமையால் வெகுவாக பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் குழந்தைகளும் அத்தகைய துன்பங்களுக்கு ஆளாவார்களோ என்ற பீதியுணர்வால் ஆட்கொள்ளப்படுகிறார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அத்தகைய பேரழிவுக்கு எதிரான அரணாக அமையும்படியான போதுமான அளவு லட்சங்களை சம்பாதிப்பது இயலாத காரியம் என்பதே அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. இந்த மாதிரி கவலைகளும் அச்சங்களும் முதல் தலைமுறையினரிடம் தவிர்க்க முடியாததாக இடம்பெற்றிருக்கலாம். ஆனாலும், அத்தகைய அச்சங்களும் கவலைகளும் மிக மோசமான வறுமையை அனுபவிக்காதவர்களை பிடிக்கும் வாய்ப்பு மிகவும் சொற்பமே. எப்படிப் பார்த்தாலும் இவை பிரச்சினையின் ஒரு சிறிய, ஓரளவு விதிவிலக்கான அம்சம் மட்டுமே .

 நான் பேசிக் கொண்டிருக்கும் பிரச்சினையின் ஆணிவேர் போட்டியின் அடிப்படையிலான வெற்றியே மகிழ்ச்சிக்கான முக்கிய வழியாக மிக அதிகமாகப் பார்க்கப்படும், வலியுறுத்தப்படும் மனப்போக்கிலிருந்து முளைத்தெழுகிறது. வெற்றியடைந்த உணர்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதை அதிகமான அளவு சுலபமாக்குகிறது என்பதை நான் மறுக்கவில்லை. எடுத்துக்காட்டாக, ஓர் ஓவியர் தனது இளமைக்காலம் முழுக்க அறியப்படாமல் இருந்தவர், அவரது ஓவியத்திறமை கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டால் மகிழ்ச்சியாக உணரக்கூடும். என்பதை நான் மறுக்கவில்லை. அதேபோல், ஒரு கட்டம் வரை பணம் மனிதனின் மகிழ்ச்சியை அதிகமாக்கக்கூடிய வலிமை வாய்ந்தது என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அந்தப் புள்ளிக்கு அப்பால் பணத்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்த முடியும் என்று நான் எண்ணவில்லை. நான் இங்கே வலியுறுத்த விரும்புவது இதைத்தான்: வெற்றி என்பது மகிழ்ச்சியில் ஒரு காரணியாக மட்டுமே உள்ளது. அதை அடைய மற்ற எல்லாக் காரணிகளும் புறக்கணிக்கப்பட்டால், பின், மகிழ்ச்சியை அடைதல் என்பதற்கு நாம் கொடுக்கும் விலை, நாம் இழக்கும் விஷயங்கள் மிக அதிகமாகிவிடும்.

 இந்த பிரச்சனையின் மூலவேர் வர்த்தக வட்டாரங்களில் வாழ்க்கை குறித்து நிலவும் தத்துவம். ஐரோப்பாவில் மரியாதைக்குரிய கவுரவமான பிறவேறு வட்டாரங்களும் உண்டு. சில நாடுகளில் உயர்குடி வர்க்கம் இருக்கிறது. எல்லா இடங்களிலும் அறிவுத்திறனாற்றல் வாய்ந்த, கற்றறிந்தவர் மிக்க, வாழ்க்கைத் தொழில் வட்டாரங்கள் என்று உண்டு. ஒரு சில சிறிய நாடுகளில் ராணுவமும் கப்பற்படையும் மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவையாக பாவிக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கைத்தொழில் என்னவாக இருந்தாலும் சரி, அதில் அவர் பெறும் வெற்றி என்பதில் போட்டி சார்ந்த அம்சம் கண்டிப்பாக இருக்கிறது என்பது உண்மைதான். அதேசமயம், மதிப்புக்கு மரியாதைக்கும் உரியதாகப் பார்க்கப்படுவது வெறும் வெற்றி மட்டும் அல்ல. ஒரு விஞ்ஞானி பணம் சம்பாதிக்கலாம், சம்பாதிக்காமல் போகலாம் –  ஆனால், பணம் சம்பாதிப்பதால் அவர் கூடுதலான மதிப்பு மரியாதையைப் பெறுவதில்லை; குறைவாக சம்பாதிப்பதால் குறைவான மதிப்பு மரியாதையைப் பெறுவதில்லை.  அந்த மகத்தான திறமை, மேதமை  -அது என்னவாக இருந்தாலும் சரி, வெற்றி கிட்டத் தகுதி வாய்ந்த அந்த ஒன்றே உண்மையில் அப்படிப் பார்க்கப்படுகிறது போற்றப்படுகிறது. ஒரு மகத்தான ராணுவ அதிகாரி ஏழையாக இருக்கக் கண்டு யாரும் ஆச்சரியமடைவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இப்படிப்பட்டவர்களின் விஷயத்தில் ஏழ்மை என்பதே ஒரு மதிப்பார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது, இந்தக் காரணங்களுக்காக ஐரோப்பாவில் முழு மொத்த அளவில் பணம் பணம் சார்ந்த போட்டி என்பது சில குறிப்பிட்ட பிரிவுகளில் வட்டாரங்களில் மட்டுமாக இடம்பெறுகிறது. அவை மிகவும் செல்வாக்கானவை, மிகவும் மதிக்கப்படுபவை என்று சொல்ல முடியாது, அமெரிக்காவில் நிலைமை வேறு, ராணுவம் போன்ற சேவைத்துறைகள் தேசிய வாழ்வில் மிகவும் சிறிய பங்கே வகிப்பதால் அவற்றின் தாக்கம் என்பது அறவே இல்லை. கல்விஞானம் சார்ந்த வாழ்க்கைத் தொழில்களை பொறுத்தவரை, ஒரு மருத்துவருக்கு உண்மையிலேயே நல்ல மருத்துவ அறிவு இருக்கிறதா, ஒரு வழக்குரைஞருக்கு உண்மையிலேயே நல்ல சட்ட அறிவு இருக்கிறதா என்பதை வெளியாள் யாரும் சொல்ல இயலாது. எனவே, அந்த நபர்களின் வாழ்க்கைவசதிகளைக் கொண்டு அவர்களுடைய வருவாயை அனுமானித்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் அவர்களுடைய தகுதியை மதிப்பிடுவது அதிக சுலபமான காரியமாகிறது. பேராசிரியர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வர்த்தகர்களிடம்/ தொழிலதிபர்களிடம் கூலி வாங்கிப் பிழைக்கும் பணியாட்கள். அவ்வகையில் பழைய நாடுகளில் அவர்களுக்கு இருந்த மதிப்பை விட குறைவான மதிப்பு அவர்களுக்கு இன்று கிடைக்கிறது.

இவையெல்லாவற்றின் விளைவு, அமெரிக்காவில் வாழ்க்கைத்தொழிலர்கள் தொழிலதி பர்களைப் போலவே நடந்துகொள்கிறார்கள். ஐரோப்பாவில் அவர்களுக்கு இருப்பதைப் போல ஒரு தனிப் பிரிவாக தங்களை உருவாக்கிக்கொள்ளவில்லை. எனவே, வசதி படைத்த வர்க்கத்தினரிடம் நிதிசார் வெற்றிக்கான அப்பட்டமான, தீவிரங்குறையாத சண்டையை மட்டுப்படுத்த எதுவுமே இல்லை.

 மிக இளம் பருவத்திலிருந்தே அமெரிக்கப் பையன்கள் இது மட்டுமே பொருட்படுத்தப்பட வேண்டிய ஒரே விஷயம் என்று நினைக்கின்றனர். பணமதிப்பு இல்லாத வேறு எந்த வகைக் கல்வியும் கற்பது வீண் வேலை என்று நினைக்கின்றனர், கல்வி என்பது மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான ஆற்றல் வளர்க்கும் பயிற்சியாகவே மிக அதிகமான அளவு பார்க்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதாவது, முழுமுற்றாக நவநாகரிகப் பண்பாடுகள் அற்ற மக்களுக்கு கிடைக்க வழியில்லாத நயமான கல்வி மூலம் பெறும் மகிழ்ச்சிக்கான பயிற்சியாகவே பெருமளவு பார்க்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இலக்கியம், சித்திரங்கள், இசை ஆகியவற்றில் தனிப் பிரிவுகளை தனக்கென ஒதுக்கிக் கொண்டு ஆனந்தப்படுவது ஒரு கனவானின் அடையாளமாக இருந்தது. இந்தக் காலத்தில் நாம் அவருடைய ரசனையை ஏற்றுக்கொள்ளாமலிருக்கலாம். ஆனால் அவருடைய அந்த ரசனை உண்மையானதாகவாவது இருந்தது. ஆனால், இப்போதிருக்கும் செல்வந்தர் மிக வேறானதொரு பிரிவாக இருக்கவே முனைகிறார். அவர் வாசிப்பதே இல்லை தனது பெயரையும் புகழையும் அதிகமாக அதில் காட்சிப்படுத்துவதற்கான ஓவியங்களைத் தேர்ந்தெடுக்க வல்லுனர்களின் உதவியை வேண்டி நிற்கிறார். அவற்றிலிருந்து அவர் அடையும் ஆனந்தம் என்பது அந்த சித்திரங்களைப் பார்ப்பதால் கிட்டுவதல்ல. வேறு யாராவது செல்வந்தர் அவற்றை அடையாமல் தடுப்பதில் தான் அது அவருக்குக் கிடைக்கிறது.  இசையைப் பொறுத்தவரை, அவர் ஒரு யூதராக இருப்பின் அவருக்கு இசை சார்ந்த உண்மையான ரசனை இருக்கலாம். அப்படியில்லையெனில், இசை விஷயத்திலும் அவர் மற்ற நுண் கலைகள் விஷயத்திலிருப்பது போலவே ஞான சூனியமாகத்தான் இருப்பார். இந்த அறியாமைகளின் விளைவு, அவருக்கு தனது ஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது என்பதே தெரியாமலிருக்கிறது. அவர் அதிகதிகமாக செல்வந்தராக ஆக பணம் பண்ணுவது அவருக்கு மேலே மிகவும் எளிதான காரியமாகிவிடுகிறது. இறுதியில், ஒருநாளின் ஐந்து நிமிடங்கள் அவருக்கு செலவழிக்கும் வழியறியாத அளவு பணத்தை அவரிடம் கொண்டுவந்துசேர்க்கிறது. இவ்வாறு, வெற்றியின் விளைவாய் அந்த மனிதர் செய்வதறியாத ஒரு நிலைக்கு வந்துசேர்கிறார். வெற்றி என்பதே வாழ்க்கையின் குறிக்கோளாக முன்வைக்கப்படும் வரை இதுவே தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்.  வெற்றியை எட்டியபின் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட்டிருந்தாலொழிய, வெற்றியை அடைதல் என்ற சாதனை அவரைக் கண்டிப்பாக அலுப்புக்கும் சலிப்புக்கும் இரையாக்கிவிடும்.

 மனிதமூளையின் போட்டி போடும் பழக்கம் அதற்குத் தொடர்பில்லாத பிராந்தியங்க ளிலெல்லாம் எளிதாகப் படையெடுத்து முற்றுகையிடும். எடுத்துக்காட்டாக, வாசிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, அதை வாசித்து ஆனந்தப்படுதல். இன்னொன்று, அதை வாசித்ததை மற்றவர் களிடம் கூறி பெருமையடித்துக்கொள்ளுதல். அமெரிக்காவில் உள்ள சீமாட்டிகள் மத்தியில் குறிப்பிட்ட சில புத்தகங்களைப் படிப்பது, அல்லது, படித்ததாக காட்டிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. சிலர் அந்தப் புத்தகங்களைப் படிக்கிறார்கள். சிலர் முதல் அத்தியாயத்தைப் படிக்கிறார்கள். சிலர் விமர்சனங்களைப் படிக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோருமே அந்தப் புத்தகங்களை தங்கள் மேஜைகளில் வைத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் உலகத்தரமான எந்த புத்தகங்களையும் வாசிப்பதில்லை. ஹாம்லெட் அல்லது கிங்க்லியர் இந்த புத்தகமன்றங்களால் ஒரு மாதமும் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லை. தாந்தேவை (DANTE)த் தெரிந்துகொள்வது கட்டாயமாக இருந்த நிலை ஒரு மாதமும் ஏற்பட்டதில்லை. இதன் விளைவாக, இந்தp புத்தக மன்றங்களில் நடந்தேறும் வாசிப்பு என்பது முற்றமுழுக்க சாதாரணமான நவீன புத்தகங்களைத்தானே தவிர ஒருபோதும் உலகத்தரமான புத்தகங்களாக இருப்பதில்லை இதுவும் போட்டியின் விளைவுகளில் ஒன்று. முற்றாக மோசமானது என்று சொல்ல முடியாமலிருக்கலாம். காரணம், சம்பந்தப்பட்ட பெண்மணிகளெல்லாம், அவர்களை அவர்கள் போக்கில் விட்டிருந்தால், உலகத்தரமான புத்தகங்களை படிப்பதிலிருந்து வெகு தொலைவாக விலகிச் சென்று அவர்கள் படிப்பதற்கான அவர்களுடைய இலக்கிய போதகர்கள் அல்லது ஆசான்களால் தேர்ந்தெடுத்துத் தரப்படும் புத்தகங்களை விட படும் மோசமான புத்தகங்களைப் படிப்பார்கள்

 நவீன வாழ்க்கையில் போட்டிக்குத் தரப்படும் அழுத்தம், முக்கியத்துவம் AUGUSTAN காலகட்டத்திற்கு பிறகு ரோம் நகரில் கட்டாயமாக தோன்றியிருக்கும்படியான பண்பட்ட தர நிர்ணயங்களிலான பொதுவான வீழ்ச்சியோடு தொடர்புடையது. ஆண்களும் பெண்களும் மேலான அளவு அறிவு சார் ஆனந்தங்களை அனுபவிக்க இயலாதவர்களாகி விட்டது போல் தோன்றுகின்றனர். உதாரணத்திற்கு, பொதுவான உரையாடல் என்ற கலை – பதினெட்டாம் நூற்றாண்டைய பிரெஞ்சு அழகுநிலையங்களில் ஆகச்சிறந்த நேர்த்தித் தன்மையை எட்டியது – 40 வருடங்களுக்கு முன் கூட உயிர்ப்போடு இருக்கும் பாரம்பரிய மாக இருந்தது. அது ஒரு மிகச்சிறிய கலை. நிலையற்று மறையும் ஒன்றுக்காக ஆகச்சிறந்த  திறனாற்றல்களையெல்லாம் பயன்படுத்துவது. ஆனால் நம்முடைய காலகட்டத்தில் யார் அத்தனை ஓய்வாக எதற்காகவாவது அக்கறை காட்டுகிறார்கள்? சீனாவில் அந்தக் கலை 10 வருடங்களுக்கு முன்பு கூட அத்தனை ஆகச்சிறந்ததாய் தழைத்தோங்கியிருந்தது. ஆனால் தேசியவாதிகளின் மறைப்பணிக்குழு அதை முற்றி லும்  வழக்கொழிந்ததாக விரட்டியடித்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. நல்ல இலக்கியம் பற்றிய அறிவு, 50 அல்லது 100 வருடங்களுக்கு முன்பு கல்வி யறிவு பெற்ற மக்களிடையே பரவலாக எல்லோரிடமுமாக இடம்பெற்றிருந்தது, இப்போது வெகு சில பேராசிரியர்களுக்கு மட்டுமே உரியதாகிவிட்டது. ஒப்பீட்டளவில் ஆரவாரமற்ற மற்ற, அமைதி நிரம்பிய, ஆனந்தங்களெல்லாம் புறமொதுக்கப்பட்டு விட்டன, அமெரிக்க மாணாக்கர்கள் சிலர் என்னை வசந்தத்தில் தங்கள் கல்லூரி வழியாக எல்லைப் பகுதிகளில் இருந்த ஒரு வனப்பகுதியின் ஊடாக காலாற அழைத்துச் சென்றனர். அந்தப் பகுதி முழுக்க அற்புதமான காட்டுப் பூக்கள் நிரம்பியிருந்தன, ஆனால் என்னை நடத்திச் சென்றவர்களில் ஒருவருக்குக்கூட அந்தப் பூக்களில் ஒன்றினுடைய பெயர்கூடத் தெரிந்திருக்கவில்லை. அந்த அறிவால் என்ன பயன்? அது யாருடைய வருமானத்தையும் எந்த விதத்திலும் அதிகரிக்கப் போவதில்லையே.

 பிரச்சனை தனிநபர் சார்ந்தது மட்டுமல்ல. ஒரு தனி நபர் தனது விஷயத்தில் மட்டுமாக அதைத் தடுத்துவிட இயலாது. பிரச்சினை பொதுவாகப் பெறப்பட்ட வாழ்க்கைத் தத்துவத்திலிருந்து – அதாவது, வாழ்க்கை என்பது ஒரு போட்டி என்று அறிவுறுத்தும் வாழ்க்கைத்தத்துவத்திலிருந்து உருவாகிறது. அவ்வாறு அந்த வாழ்க்கை வெற்றியடை பவருக்கு உரியது, தரப்பட வேண்டியது. இந்தக் கண்ணோட்டம் புலனுணர்வுகளையும் அறிவுத்திறனையும் காவு கொடுத்துவிடுகிறது. அல்லது, ஒருவேளை இதைச் சொல்வதில் நாம் வண்டியை குதிரைக்கு முன்பாக வைக்கிறோமோ என்னவோ…. PURITAN ஒழுக்கவாதிகள் எப்போதுமே நவீன காலங்களில் ‘உறுதியான விருப்பத்தை’ வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அடிப்படையில் அது ஒரு நம்பிக்கையாகத் தான் இருந்தது. அதைத்தான் அவர்கள் வலியுறுத்தினார்கள். என்றாலும், பல காலம் PURITANISM புத்தகத்தில் இருந்தது. WILL என்பது தேவைக்கு அதிகமாக வளர்ச்சியடைந்திருக்குமோர் இனத்தை உருவாக்கியிருக்கும் என்றும் அத்தகையதொரு இனம் தன் இயல்புக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்படியான போட்டித் தத்துவத்தை தனக்கானதாக ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும் நாம் அனுமானித்துக்கொள்ள முடியும். எப்படியிருந்தாலும், இந்த நவீன டைனோஸார்களின் வியக்கத்தக்க வெற்றி, யார் யார் எல்லாம் அறிவை அல்லாமல் வலிமையைத் தேர்ந்தெடுத்து கொள்கிறார்களோ அவர்களின் வெற்றி அவர்களையே எல்லோருக்கும் முன்மாதிரியாக்கி, எல்லோரும் அவர்களைப் போலவே நடந்துகொள்ளச் செய்கிறது. அடுத்த நூறு ஆண்டுகளில் இந்தப் போக்கு அதிகரிக்க அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். என்றாலும் இந்த நாகரீக பாணியில் பொருந்த இயலாதவர்கள் இறுதியில் டினோசர்கள் வெற்றி பெறவில்லை என்ற எண்ணத்தில் நிம்மதியடையக்கூடும். அவர்கள் ஒருவரையொருவர் கொன்றழைத்துக்கொண்டார்கள். அறிவார்ந்த பார்வையாளர்கள் அவர்களுடைய சாம்ராஜ்யத்தை சுவீகரித்துக்கொண்டார்கள், நம்முடைய நவீன டினோஸார்கள் தம்மைத்தாமை கொன்றழைத்துக் கொள்கின்றன. சராசரியாக அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கின்றன. குழந்தைகளைப் பெறும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கையை போதுமான அளவு அனுபவிப்பதில்லை. இந்தக் கட்டத்தில் அவர்கள் தமது தூய்மைவாதிகளான முன்னோர்களிடமிருந்து வழிவழியாகச் சுமந்து வரும்  மிக க் கடினமான வாழ்க்கைத் தத்துவம் உலகிற்குப் பொருந்தாததாய் உலகத்தோடு தன்னை தகவமைத்துக்கொள்ள முடியாததாய் வெளிப்படுத்திக்கொள்கிறது. வாழ்க்கை குறித்த யாருடைய கண்ணோட்டம் குழந்தை பெற்றுக்கொள்ள கூட அக்கறை காட்டாத அளவு அவர்களை மகிழ்ச்சி என்பதையே உணராமலிருக்கச் செய்கிறதோ அவர்கள் உடல் ரீதியாக மீட்சிக்கு வழியின்றி அழிந்துவிட்டவர்கள். அதிக நாட்களாகும் முன்பே வேறு ஏதாவது அதிக உற்சாகமான, மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கண்டிப்பாக அவர்களை வீழ்த்தி வெற்றி பெறும்,

 வாழ்க்கையின் பிரதான விஷயமாக பார்க்கப்படும் போட்டி மிகவும் இறுக்கமானது மிகவும் கொடுமையானது. விடாப்பிடியானது.வாழ்க்கையில் முக்கிய விஷயமாகக் கருதப்படும் போட்டி, இறுகிய தசைகளும், தீவிரமான விடாப்பிடியான மனப்போக்கும் கொண்டதாய் விளங்குவது, அதிகபட்சம் ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு மேல் வாழ்வின் ஆதாரமாக, அடிப்படையாக நீடிக்க வழியில்லை. அந்தக் காலத்திற்குப் பிறகு அது அதீத சோர்வுண்டாக்கும், தப்பித்தலுக்கான பல்வேறு விஷயங்களைக் கொண்டுவரும், வேலையைப் போலவே அத்தனை இறுக்கமான அத்தனை கடினமான வகையில் இன்பங்களை அனுபவிப்பதற்கான தேடலை, நாடலை ஏற்படுத்தும்.. (இளைப்பாறல் சாத்தியமற்றதாகிவிட்டதால்).  இறுதியில் மலட்டுத்தன்மை மூலம் இருப்பு (STOCK) மறைந்துவிடும். போட்டித் தத்துவத்தால் விஷம் கலந்ததாகியது பணி மட்டுமல்ல; ஓய்வும் அதே அளவுக்கு விஷம்கலந்ததாகிவிட்டது. நரம்புகளை அமைதிப்படுத்தும், மீட்டெடுக்கும்படியான இளைப்பாறலும் சலிப்பை ஏற்படுத்துவதாய் உணரப்படுகிறது. இந்த வேகம் கண்டிப்பாகத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகும். இதன் இயற்கையான முடிவு மருந்துகள் மற்றும் நிலைகுலைவு. இதற்கான சிகிச்சை, நிவாரணம் என்பது அறிவமைதி வாய்ந்த மற்றும் ஆரவாரமற்ற அமைதியான  ஆனந்தம் அனுபவித்தலை வாழ்க்கைக்கான சமநிலையான குறிக்கோளின் ஓர் அம்சமாக இடம்பெறசெய்வதில் அடங்கியிருக்கிறது.

***

Series Navigationவண்டி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *