சிறுகதை
அநாமிகா
கதைக்கு ’வண்டி’ என்று தலைப்பு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டார் படைப்பாளி. அது பொருத்தமாகவும் இருக்கும். பலவிதங்களில் சௌகரியமாகவும் இருக்கும். 79வது குறுக்குத் தெரு என்பது போல் வைத்துக்கொண்டால் கொஞ்சம் சிரமமாகிவிடும். கதையில் 79வது குறுக்கு தெரு வந்தேயாக வேண்டும். குறைந்தபட்சம் 79வது குறுக்குத்தெருவைக் கடந்து 80ஆவது குறுக்குத்தெருவுக்குள் நுழைந்தான் என்றாவது எழுதியாக வேண்டும். வண்டி என்று வைத்தால் சும்மா உருட்டிக்கொண்டே போகலாம். கட்டை வண்டி, மாட்டு வண்டி, கார் வண்டி, ரயில் வண்டி – ஏன், கப்பல் வண்டி, விமான வண்டி, ராக்கெட் வண்டி என்று கூட, நவீன எழுத்து என்பதாய் வண்டி வண்டியாக எழுதிவிட முடியும். மனதில் வருடக்கணக்காய் மண்டிக் கிடக்கும் அழுக்கை, அழுக்காறை, குரோதத்தையெல்லாம் வண்டை வண்டையாய் எழுத்தில் வெளியே கொட்டி விட முடியும்.
‘உலக நல்லுறவு’க்காக அவரவர் வண்டியில் புறப்பட்டார்கள் என்ற வரியுடன் ஆரம்ப மாகியது கதை.
முதல் பத்தியில் தமிழக கிராமங்களிலிருந்து கலந்துகொண்ட முப்பதுபேர் பற்றிய விவரக்குறிப்புகள் – பெரும்பாலும் எள்ளல் தொனியில் தரப்பட்டிருந்தன.
இரண்டாவது பத்தியில் பேரணியிலான சக-பங்கேற்பாளர்களைப் பற்றிய கதாசிரி யரின் அல்லது கதைசொல்லியின் அவதானிப்புகள். வழக்கம்போல் பெரும்பாலும் ‘பீச்சாங்கைவீச்சாய்’ தரப்பட்டிருந்தன.
மூன்றாவது பத்தியில் பேரணி கடந்துசென்ற பகுதிகளில் காணக்கிடைத்த மனிதர்கள் – அவர்கள் முண்டாசு கட்டிக்கொண்டிருந்தார்களா, எத்தனை பேர் கட்டிக்கொண்டி ருந்தார்கள், வேட்டி கட்டிக்கொண்டிருந்தவர்கள் அதிகமா, லுங்கி கட்டிக்கொண்டிருந் தவர்கள் அதிகமா – இப்படி.
நான்காவது பத்தியில், கடந்துசென்ற ஊர்களின் நிலக்காட்சிகள் – போகிறபோக்கில் பார்த்ததையும் பார்க்காததையும் இத்தனை துல்லியமாகக் காட்சிப்படுத்துவதில்தான் படைப்புத்திறன் அடங்கியிருக்கிறது என்று படைப்பாளி கூறியிருந்தது பொதுவான கூற்றா, அவரைப் பற்றிய குறிப்பான கூற்றா என்று ஏதாவது இலக்கிய சச்சதுர வட்டத்தில் விவாதமோ, கலந்துரையாடலோ நடைபெற்றதா – தெரியவில்லை.
பேரணியில் கலந்துகொண்ட பெண்களின் அங்கலாவண்யங்களைப் பற்றிய விவரங்கள் இடம்பெறாமல் இருக்குமா? பழைய பாணி எழுத்தோ, நவீன பாணி எழுத்தோ – பெண்ணின் உடல் பற்றிய வர்ணனை இருந்தேயாகவேண்டும் அல்லவா… கதையின் பத்தாவது பத்தியில் அது இருந்தது. அந்த வர்ணனையிலேயே தான் சராசரி எழுத்தாளர் களைப் போல அல்ல என்று தெளிவாக எடுத்துக்காட்டிருந்தார் இந்தப் படைப்பாளி. மற்றவர்கள் மான்வழி, மீன்விழி என்று எழுதுவார்கள். இவர் முள்விழி என்று நுட்பமாக எழுதி கதாநாயகியின் கண்களுடைய கூர்மையை கணிசமாக அதிகப்படுத்தியிருந்தார். மற்றவர்கள் மேடுகள், சரிவுகள் என்று வர்ணிக்கும் இடங்களை இவர் வேறு மாதிரி நவீனமாக எழுதியிருந்தார். எந்த விதத்தில் நவீனம் என்று கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது. நான் சராசரிக்கும் கொஞ்சம் மேலான வாசகர் என்று என்னை நம்பிக்கொண் டிருந்தது தவறு என்று இப்போது புரிகிறது.
பதினைந்தாம் பத்தியில் சாலையின் ஒருபக்க ஓரமாகச் சென்றுகொண்டிருந்த அந்தப் பேரணியில் திடீரென்று படகு வண்டிகளும், குட்டி விமான வண்டிகளும் கலந்துகொண்ட போது அதை பார்த்து யார்தான் மூக்கின் மேல் விரலை வைக்காமல் இருக்க முடியும்! இதை அனுமதிப்பதா வேண்டாமா என்று தங்களுக்குள் முடிவில்லாமல் விவாதித்து முழித்து நின்ற காவல்துறையினர் இறுதியாக படகு, விமான, ரயில் வண்டிகள் பேரணியில் கலந்து கொள்ள ஆட்சியபம் தெரிவித்த போது, மனிதனுடைய பயணத் திற்கு உதவுவது எதுவானாலும் அது வண்டி தானே? அது பேரணியில் கலந்துகொள்வதை எப்படி ஆட்சேபிக்க முடியும் என்று படைப்பாளி தன் எழுதுகோலை உயர்த்தி எதிர்க்கேள்வி கேட்க, பதிலளிக்க முடியாமல் காவல்துறையினர் மௌனமாய் பின்வாங்க வேண்டியிருந்தது.
வண்டியென்றால் முன்னோக்கி மட்டும்தான் உருண்டோடிச் செல்லுமா என்ன? படைப் பாளியின் மனக்கரங்களால் அதைக் காலப் பாதையில் பின்னோக்கிச் செலுத்த முடியாதா என்ன? அப்படிச் செலுத்தினால்தானே செத்துப்போய்விட்டவர்களையெல்லாம் கூண்டில் நிறுத்தி நியாயத்தராசைத் தனது கையிலெடுத்து, தங்கள் தரப்பைச் சொல்ல முடியாத அவர்களை சிரச்சேதம் செய்து தண்டிக்கமுடியும்…. அதுவும் குறிப்பாக சம்பந்தப்பட்டவர்களின் உறவுகள் மனநஷ்ட வழக்கு போட மாட்டார்கள் என்று நன்றாகத் தெரிந்தால் பின் இஷ்டத்துக்கு சேறு வீச எந்தத் தடையுமில்லையே.
கதைசொல்லியெனில், அவர் ஒரு பெண்ணை இசகுபிசகாகத் தொடல் இயல்பு. தொட்ட பின் வருந்தினால் அவர் இரட்டிப்பு உத்தமர். அதுவும், சம்பந்தப்பட்ட பெண்ணே அப்படி யொரு அடைமொழியைத் தந்துவிட்டால் பின் மற்றவர்கள் சொல்ல என்ன இருக் கிறது?
சின்ன வயதில், தனது வீடிருந்த தெருவோர சின்ன மளிகைக்கடையிலிருந்து அருகேயிருக்கும் குப்பைத்தொட்டிக்குள் வீசியெறிந்ததில் குறி தவறி வெளியே விழுந்திருக்கும் வட்ட வடிவ காலி தகர டப்பாவை, தனது வீட்டின் ஓரமாய் இருந்த மரத்தின் தாழ்வான கிளைகளிலிருந்து ஒரு மெல்லிய கொம்பைப் பறித்து அதைக் கொண்டு தெருவின் நடைமேடையில் ஓட்டிச்சென்றது பற்றிச் சொல்லவேண்டி ஒவ்வொரு பத்தியிலும் குறைந்தது இரண்டுமுறையாவது படைப்பாளியின் வண்டி பின்னோக்கி உருண்டோடியது, அல்லது மிதந்தது அல்லது பறந்தது அல்லது ராக்கெட்டாய் சீறிப்பாய்ந்தது. எப்படியும் அதற்குப் பிறகு வழக்கம்போல் பேரணியில் முதல் வரிசையில் தன் முதலிடத்தில் சரியாக மீண்டும் வந்துசேர்ந்துவிடும்.
அடுத்தடுத்த சில பத்திகளில் மற்ற கதைகளில் மண்டிக் கிடக்கும் இலக்கணப் பிழைகள் நக்கலாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. அதேபோன்ற இலக்கணப்பிழைகள் அந்தந்தப் பத்திகளிலேயே இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டலாமென்றால் என் அலைபேசியின் தமிழ் எழுத்துரு தகராறு செய்கிறது.
பேரணியின் நோக்கமான உலக நல்லுறவு குறித்தோ, அதன் அவசியம் குறித்தோ, அதன் சாத்தியப்பாடு குறித்தோ, அதை சாத்தியமாக்க தன்னைப்போன்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தோ, பேரணியில் கலந்துகொண்டவர்கள் அது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ, பேரணி கடந்து சென்ற இடங்களில் நின்றுகொண்டும், போய்க்கொண்டும் இருந்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றோ இதுவரை ஒரு வரியும் வரவில்லை. இது எல்லையற்று நீளும் சிறுகதை என்ற அடைமொழியோடு பிரசுரமாகியிருப்பதால் இன்னும் எத்தனை பத்திகள் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஒருவேளை இனியான பத்திகளில் வரக்கூடும்…… நம்பிக்கை தானே வாழ்க்கை…..
***
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3
- வண்டி
- காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்
- குளிர்வித்தால் குளிர்கின்றேன்
- பூஜ்யக் கனவுகள்
- அசோகமித்திரனின் “ஒற்றன்”
- அப்பாவின் திண்ணை
- சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்
- யாசகப்பொழுதில் துளிர்த்து
- நடக்காததன் மெய்
- அருகில் வரும் வாழ்க்கை
- கவிதைகள்
- மகிழ்ச்சி மறைப்பு வயது
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 11
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 12