அசோகமித்திரன் சிறுகதைகள் – 13

பி.கே. சிவகுமார்
This entry is part 3 of 7 in the series 17 ஆகஸ்ட் 2025

பி.கே. சிவகுமார்

பத்தே முக்கால் பக்கம் உள்ள அசோகமித்திரனின் பதினொன்றாவது கதை – இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள வேண்டும்.

பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கவும் அசோகமித்திரன் அதிகம் மெனக்கெடுவதில்லை. இந்திரா, சரோஜா, ஜமுனா, பார்த்தசாரதி ஆகிய பெயர்கள் அவரது இதுவரையிலான கதைகளில் திரும்பத் திரும்ப வருகின்றன. எத்தனை பெயர்கள் அப்படி எத்தனை கதைகளில் திரும்ப வருகின்றன என்பதை அசோகமித்திரனின் மொத்த படைப்புகளையும் வைத்து யாரும் ஆய்வு செய்யலாம். ஆனால் இந்த அவதானிப்பைச் செய்ய 11 கதைகளே போதுமானதாக இருக்கின்றன. 

இந்தக் கதையில் வருகிற சித்திக்கும் அம்மாவுக்கும் இடையேயான குண வித்தியாசங்களை அசோகமித்திரன் அவர்கள் நடந்து கொள்ளும் விதங்களில் இருந்து வாசகரைப் புரிந்து கொள்ள வைக்கிறார். எல்லாவற்றுக்கும் கணவரின் அனுமதி கேட்கிற, கணவர் இல்லாதபோது வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிற அம்மா. கணவரை வீட்டுக்கு வெளியே தூங்க வைத்துவிட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு, கணவருக்குத் தண்ணீர் வேண்டுமெனில் பக்கத்து வீட்டில் வாங்கிக் குடித்துக் கொள்வார் என்கிற சித்தி.

ஆனால் – அந்த அம்மாதான் கடைசியில் மாதம் இருபது ரூபாய் கட்டணம் தந்து இந்திரா வீணை கற்றுக் கொள்வதற்குக் கணவரைக் கேட்காமல் சரி என்கிறாள். அதுவும் எப்படிப்பட்ட அம்மா, காய்கறியில் இருந்து எல்லாவற்றையும் பேரம் பேசி வாங்கிக் குடும்பத்தைச் சிக்கனமாக நடத்துகிற அம்மா. சங்கீதக் கச்சேரிக்குப் போனால் வாயைத் திறந்தபடி தூங்குகிற அம்மா.

அவள் என்ன இந்திரா ஆசைப்படுகிறாள் என்றா வீணை கற்றுக் கொள்ள சம்பாதித்தாள். அவளுக்குப் பின்னர் வரப்போகும் வரன்கள் ஏதும் பாடவோ, வாசிக்கவோ தெரியுமா எனத்தான் கேட்கப் போகிறார்கள். அதற்கு வீணை கற்றுக் கொள்வது உதவும் என்கிறாள். வீணை வாங்க வேண்டும் என்றதற்கு, வீடு கட்ட வேண்டுமெனில் செங்கல், சுண்ணாம்பு வாங்கத்தான் வேண்டும் என்கிறாள். பாட்டு வேணாம்மா, அப்பா ஏதாவது சொல்லுவார் எனத் திரும்பத் திரும்பச் சொல்கிற இந்திராவிடம் அப்பாவிடம் தான் பேசிக் கொள்கிறேன் என்கிறாள்.சொல்லிவிட்டு இரவில் அமைதியாய்ப் படுத்தபடி சத்தம் வராமல் உடல் குலுங்க அழுகிற அம்மா. அம்மா எதற்காக அழுகிறாள் என அம்மாவை அணைத்தபடி தூங்க முயல்கிற இந்திராவுக்குப் புரியவில்லை. 

வாசகருக்குப் புரிந்ததா என்பது வாசகரின் சூட்டிகையைப் பொருத்தது. அம்மா அழுகைக்கு வாசகர் சொல்லிக் கொள்கிற எல்லாக் காரணங்களும் பொருந்தலாம். மகளுக்கு ஒன்றைக் கற்றுக் கொடுப்பதற்குக் கூட, அவள் விருப்பத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பின்னாளில் அவள் கல்யாணத்துக்கு உதவுமே என நினைத்ததற்காக அழுகிறாளா?

அம்மா இதிலும் அப்பாவுக்குச் செலவு வைக்கவில்லை. இந்த மாதம் 20 ரூபாயச் செலவால் பின்னால் லாபம் இருக்கிறது என நினைத்து இருக்கலாம். இது அவள் வாய்விட்டுச் சொன்னாலும் நிஜமான கணக்கா அல்லது கணவரைச் சமாளிக்கக் கண்டுபிடிக்கும் காரணமா? கணவருக்கு மாதம் 20 ரூபாய் அதிகச் செலவு வைப்பதற்காக அவள் அழுகிறாள் எனச் சொல்ல முடியாது. 

இந்தக் கதையில் ஆரம்பத்தில் ராமச்சந்திரன் என்கிற சினிமா இயக்குநரின் வீணை கச்சேரிக்கு இந்திரா குடும்பத்துடன் போவது வருகிறது. இந்திராவுக்கு வீணையில் ஆர்வம் சினிமா ராமச்சந்திரன் சினிமாவில் பாத்திரங்கள் வீணையுடன் வருவதால் வந்ததா எனக்கூட நமக்குத் தோன்றுகிறது.

ராமச்சந்திரனின்  தாமதமான வருகை, டாம்பீகம் ஆகியன சொல்லப்படுகின்றன. ஆனாலும் அதைப் பார்த்ததும் இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என உறுதியாய்த் தோன்றிவிட்டது. அதற்கு இசையார்வத்தைவிட ராமச்சந்திரன் பெற்றிருக்கிற புகழ் காரணமாக இருக்கலாம் என நான் நினைக்க இடம் தருகிறார் அ.மி.

எதிர்வீட்டு சரோஜா வைதீஸ்வரன் கோவில் சகோதரர்கள் நல்ல பாட்டு வாத்தியார்கள் என்கிறாள். அவர்களிடம் அவள் படிக்கிறாள். அவர்களுக்கு இருக்கிற எதிரிகளால் அவர்கள் ரேடியோவில் மட்டும் வாசிக்கிறார்கள். சினிமா புகழ் பெறவில்லை என்கிறாள். சினிமா ராமச்சந்திரனுக்குச் சங்கீதமே தெரியாது என்றும் சொல்கிறாள் சரோஜா. அதைக் கேட்டு இந்திரா நம்பாதமாதிரியும் ஏமாற்றமடைந்தது மாதிரியும் தெரிந்ததும் சரோஜாவின் வாத்தியார் சொன்னதுதான் இது என்கிறாள். 

வைதீஸ்வரன் கோவில் வாத்தியாரைப் பார்க்க ரங்கநாதன் தெருவுக்கு எஸ் எஸ் எல் சி எழுதப்போற இந்திரா தனியாகப் போகிறாள் – அம்மாவுக்குச் சொல்லாமல். துண்டு மட்டும் கட்டியபடி இடுப்பில் குழந்தையுடன் எதிர்பட்ட ஒருவர் (வாத்தியார் என நாம் யூகிக்கிறோம்) யாருடி குழந்த என்ன வேணும் எனக் கேட்கிறார். தனியாக ரங்கநாதன் தெருவுக்குச் சென்ற மகளைக் கோபித்துக் கொள்ளும் அம்மாவையும் பார்க்கிறோம். 

இப்படி சினிமா ராமச்சந்திரனுக்கும் வைத்தீஸ்வரன் கோவில் வாத்தியாருக்கும் உள்ள வித்தியாசமும் கதையில் தெரிய வருகிறது. 

சித்தியுடன் பாட்டுக் கச்சேரிக்குப் போன இடத்தில் பலரையும் இவர்தானா சினிமா ராமச்சந்திரன் என அம்மா கேட்டுக் கொண்டே இருக்க, இந்திரா இல்லை எனச் சொல்கிற தொனியைப் பார்த்து ஏன் அதைப் பல்லைக் கடிச்சிட்டுச் சொல்றே எனக் கண்டுபிடிக்கிற புத்திசாலியாக சங்கீதமும் பொதுவிஷயங்களில் ஞானமும் இல்லாத அம்மா இருக்கிறாள். எழுத்துக் கூட்டி சஞ்சிகைகளைப் படிக்கிற அம்மாதான் எனவும் அ.மி. காட்டுகிறார்.

பழைய மாம்பலத்தில் இரவில் ஏதோ வாசனை மூக்கைத் துளைத்தது என்று ஒரு வரி வருகிறது. என்ன வாசனை என்று 1959-ல் மாம்பலத்தில் வசித்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். சித்தி பெண் வேதா, இரவில் மீந்துபோன மோர்க் குழம்பில் ரசம் கலந்து விடுகிறாள். நாளைக்கு வேலைக்காரியிடம் இதைக் கொடுத்தால் திருப்பி உன் முகரக்கட்டையில் கொட்டமாட்டாளா எனச் சித்தி மகளிடம் கேட்கிறாள். இந்திராவும் பொறுப்பாக சமையல் உட்பட எல்லா வீட்டு வேலைகளையும் செய்கிற பெண்தான்.

இப்படி இந்தக் கதை இந்திரா வீணை கற்றுக் கொள்ள விரும்புவதைக் குறித்து என்றாலும் அதை வைத்து இந்திராவின் குடும்பம், சித்தியின் குடும்பம், இந்திராவின் எதிர்வீட்டு சரோஜா, சினிமா ராமச்சந்திரன், வைதீஸ்வரன் கோவில் வாத்தியார்கள், பழைய மாம்பலம், ரங்கநாதன் தெரு என எல்லாவற்றையும் வீணையுடன் முடிச்சிப் போட்டுக் காட்டுகிறது.

இந்தக் கதையின் இந்திரா, சித்தி பெண் வேதா, இந்திராவின் உடன் பிறந்தோர் அனைவரும் குழந்தைகளே. இதுவரையான 11 கதைகளில் குழந்தைகளைப் பற்றிய 5ஆவது கதை இது. 

இந்தக் கதையில் அசோகமித்திரன் வாசகர்கள் பொருள்கொள்ள நிறைய இடமும் இடைவெளியும் விட்டிருக்கிறார். 

ஒவ்வொரு நிகழ்வையும் கதைக்குத் தொடர்பில்லாததுபோல் தெரிந்தாலும் அசோகமித்திரன் ஏன் சொல்கிறார் என யோசிக்கும்போது நமக்குள் ஒர்ய் பலமான அல்லது பலவீனமான காரணம் தோன்றுகிறது. அப்படி நம்மை நினைக்க வைப்பது அசோகமித்திரனின் பலம். அவர் இருந்திருந்து, இப்படியெல்லாம் நினைத்து இதை இந்த இடத்தில் எழுதினீர்களா எனக் கேட்டால், அவர் இயல்பின்படி “இல்லை. உங்களுக்கு அப்படித் தோணறது” என்று பதில் சொல்லியிருப்பார்.

அசோகமித்திரனின் பெரும்பாலான சிறுகதைகளைப் போலவே காட்சிகளில் நகரும் இந்தக் கதையும் குறும்படமாக்க நல்ல கதைதான். அப்படி இருந்தும், அசோகமித்திரன் படைப்புகள் ஏன் அதிகம் சினிமாகாரர்களைப் படமெடுக்க ஈர்க்கவில்லை என்பது ஆராயத்தக்க கேள்வியும். 

– பி.கே. சிவகுமார்

– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன்

#அசோகமித்திரன்

Series Navigationஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்அசோகமித்திரன் சிறுகதைகள் – 14

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *