அசோகமித்திரன் சிறுகதைகள் – 14

அசோகமித்திரன் சிறுகதைகள் – 14
This entry is part 4 of 7 in the series 17 ஆகஸ்ட் 2025

பி.கே. சிவகுமார்

அசோகமித்திரனின் சிறுகதைப் பயணத்தைப் பார்க்கும்போது, அவரின் “ஐந்நூறு கோப்பை தட்டுகள்” அவரின் வளர்சிதை மாற்றத்தைச் சொல்லும் முக்கியமான கதை. இந்தக் கதையில்தான் அவர் இதுவரை எழுதிவந்த பிராமணர்கள் வாழ்க்கையைவிட்டு விலகி, இஸ்லாமியர்கள் குறித்து எழுதுகிறார். முக்கியமாய்ஹைதராபாத் இந்தியாவுடன் சேர்ந்த வரலாற்று நிகழ்வை அவர் நேரில் பார்த்தவர். பின்னால் அவருடைய 18வது அட்சக்கோடு நாவலில் அது விரிவாகவே வரும். ஆனாலும் 11 கதைகள் எழுதிப் பார்த்து நம்பிக்கை வந்தபிறகே அந்நிகழ்வை மையமாக வைத்து, இஸ்லாமியர் பார்வையில் ஹிந்து கதாபாத்திரங்களும் வருகிற இந்தக் கதையை அ.மி. எழுதியிருக்கிறார். கத்திமேல் நடக்கிற வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். இந்தக் கதையை நேர்மையுடன் எழுதியமைக்காக அ.மி. இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். கொண்டாடினார்களா எனத் தெரியவில்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்கிற வகைப்பாடு அறியப்படும் முன்னரே, அந்தப் பெயர் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை எழுதியவர் ஜெயகாந்தன் எனலாம். அப்படி இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்கள் வருவதற்கு முன்னரே, இஸ்லாமிய வாழ்க்கையை எழுதிய தமிழ் எழுத்தாளர் என அசோகமித்திரனைச் சொல்லலாம். 

ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆண் வேடமிட்டுப் போரிட்ட பெண் அரசிகளைக் குறித்துப் படித்திருக்கிறோம். அவர்களைக் குறித்து நம்மெல்லாருக்கும் வீராங்கனைகள் என்கிற பெருமித பிம்பம் இருக்கிறது. அதற்கிணையான ஒரு பிம்பத்தை, இரவுகளில் ஆண்வேடமிட்டு ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கிற இப்ராகிமின் மனைவி, கதை நாயகர் சையதின் மருமகளைக் குறித்த செவிவழிச் செய்திகள் மூலம் அ.மி. நமக்கு உருவாக்கி விடுகிறார். எந்த இடத்திலும் இப்ராகிமின் மனைவி கதையில் நேரடியாக வருவதில்லை. அவள் என்ன செய்கிறாள் என்பது கதையில் சில வரிகளில் சையதுக்குச் சொல்லப்படுகிறது. இன்னொரு இடத்தில் அவளைப் பற்றி சையது நினைக்கிறார். அவ்வளவுதான். அ.மி.யால் சில வரிகளில், அவற்றுக்கிடையே சொல்லாமல் விட்டதில் பெரிய சித்திரத்தை உருவாக்கி விடமுடியும் என்பதற்கு இது உதாரணம்.

ஹைதராபாத் நிஜாமின் ரஜாக்கர்கள் படை இந்தியாவுடன் தோற்று, ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகான சூழ்நிலையில் கதை நடக்கிறது. சையதின் மகன் இப்ராகிம் ரஜாக்கர்களுக்காகப் போரிடச் சென்று என்ன ஆனான் எனத் தெரியவில்லை. அதனாலேயே அவன் மனைவி சுதந்திர இந்தியாவில், இஸ்லாமியப் பெண்ணாக இருந்தாலும் மதம் விதிக்கக்கூடிய அந்தக் கால தடைகளை மீறி, ஆண்வேடமிட்டு, இரவுகளில் ரிக்‌ஷா ஓட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். கொள்கை / அரசியல் / மதம் என ஆண்கள் வீட்டை விட்டுச் சென்றுவிடும்போது பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை மீறி இத்தகைய புரட்சிகளை இயல்பாகச் செய்கிறார்கள். அவள் செய்வது தவறென சையது கூட நினைக்கவில்லை. அப்படி கஷ்டப்படுகிறாளே என்று நினைக்கிறார் என்றே புரிந்து கொள்கிறோம். நிஜாம் ஆட்சியின்போது ஒப்பந்தக்காரராக நன்றாக இருந்த சையது இப்போது ஏழ்மையில் நிற்கிற நிலையைச் சொல்லும் கதையும் இது. 

இந்து – முஸ்லீம் உறவின் நல்ல முகமும் நல்லதல்லாத முகமும் இந்தக் கதையில் எந்தச் சாய்வும் தீர்ப்பும் இல்லாமல் வெளிப்பட்டிருக்கிறது என்பது இந்தக் கதையின் சிறப்பு.

இதிலே – சையதுக்கும் அவருடைய வகுப்புத்தோழர் மகன் நாராயணுக்கும் இருக்கிற சுமூகமான உறவும் நாராயணன் வீடுபார்க்க சையதுக்குப் பத்து ரூபாய் கொடுத்து அதை அவர் வேறு வழியில்லாமல் ஏழ்மையில் செலவு செய்துவிட்டு, நாராயணிடம் அவனுக்கு நம்பிக்கை கொடுக்கும்விதமாகப் பொய் சொல்லி மாட்டிக் கொள்வது இந்து முஸ்லீம் உறவின் நல்ல முகத்தைச் சொல்லும் பகுதி. அதுவும் நாராயணன் சையதை மிகவும் நம்பி, மாமா மாமா என்று அழைக்கிறான். சையது நாராயணை வேண்டுமென்றே ஏமாற்றவில்லை என நமக்குப் புரிகிறது. நாராயணணிடம் தன் ஏழ்மையைச் சொல்லியிருந்தால் நாராயணன் புரிந்து கொண்டிருக்கலாம். அதைச் சையது விரும்பவில்லை. 

வீடுகளை வாடகைக்குத் தருகிற, சையதை நன்றாகத் தெரிந்த முனீம்ஜிகூட இப்போது சையதைத் தெரியாது எனச் சொல்லிவிடுகிறான். காரணத்தை அ.மி. விவரித்துச் சொல்லாவிட்டாலும் கதையின் ஓட்டத்தில் புரிந்து கொள்கிறோம். நிஜாமுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருக்கக் கூடிய இஸ்லாமியர்கள் கூட, இப்போது சுதந்திர இந்தியாவில், சையதை ரஜாக்கர் என நினைத்துத் தெரியாது என்கிறார்கள். 

உண்மையில் சையது ரஜாக்கரா? மகன் ரஜாக்கர் படையில் போரிட முடிவு செய்து சென்றதை அவர் தடுத்திருக்க வேண்டுமா? அது அவர் வேலையில்லையே. சையதுக்கும் அத்தகையதொரு விஷயத்தில் உடன்பாடு இருந்ததா? அப்படி இருந்திருந்தால்தான் என்ன தவறு? ஒரு விஷயத்தை நம்பி நடந்தால் நல்லது என நினைக்கிறோம். அது நடக்காதபோது நடந்ததை வைத்து வாழ்கிறோம். அப்படித்தானே எல்லாரும். சையதும் அப்படி இருந்தது தவறா? இதில் எந்தக் கேள்வியையும் அ.மி. கதையில் எழுப்புவதில்லை. வாசிக்கிற நம்முள் அக்கேள்விகளைக் கதை எழுப்புகிறது. 

ஊரே சையதை ரஜாக்கர் என ஒதுக்கும்போது, அவர் வகுப்புத் தோழனின் மகன் நாராயணன் சையதை மாமா என்று வழக்கம்போல் அழைத்து, வீடு பார்த்துத் தரச் சொல்லி சையதின் உதவியையும் கேட்கிறானே. ஆனால் அவனையும் கூட அல்லவா தன் பொருளாதார நிலையால் ஏமாற்றும்படி சையதுக்கு ஆகிறது? இதிலே சையது குற்றவுணர்வு கொண்டாலும், நாராயணன் தன்னை ரஜாக்கராக நினைக்கவில்லை என உணர்ந்தவர்போல் இல்லையே.

ரஜாக்கர் படையில் சேர்ந்தவுடன் இப்ராகிம் தெருவுக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தவர் மாடுகளை அவிழ்த்துத் துரத்தி, பால்காரன் மகனைத் துப்பாக்கியால் அடிக்கிறான். ஹைதராபாத் இந்தியாவுடன் சேர்ந்தபிறகு, சையது தெருவில் நடக்கும்போது அந்தப் பால்காரன் மகனும் அவன் தோழர்களும் சையதை அடிக்கிறார்கள். ரஜாக்கர் அயோக்கியன் எனத் திட்டுகிறார்கள். இந்து முஸ்லீம் உறவின் நல்லதல்லாத முகத்தைச் சொல்லும் பகுதி.

இப்ராகிமோ பால்காரன் மகனோ அதிகாரத்தில் இல்லாதவர்கள். ஆனால் அதிகாரம் தங்களைச் சார்ந்தவர்களிடம் இருக்கிறது எனத் தெரியும்போது அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, தனக்கான நீதி என்பதைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்கிற கும்பல் மனப்பான்மையில் விழுந்துவிட்டவர்கள். இதையெல்லாம் அ.மி. சொல்லாமல் நாம் புரிந்து கொள்கிறோம். பின்னால் ஹிந்துத்துவ சக்திகள் அதிகாரம் பெற்றபோது பால்காரப் பையன்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்த கதையே இந்தியாவெங்கும் நிகழ்ந்தது என்பதை வரலாறு காட்டுகிறது. பால்காரப் பையனாவது சையதை அடிப்பதோடும் திட்டுவதோடும் விட்டுவிட்டான். ஹிந்துத்துவர்கள் அந்த வன்முறையை வேறு எல்லைக்குக் கொண்டு சென்றவர்கள். 

இந்தக் கதையில் ஒரு வெண்புறா வருகிறது. எதற்கும் கவலையற்று யாராவது கொடுக்கிற தானியத்தை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கிற அதைப் பார்க்கும்போது சையதுக்குக் கோபம் வருகிறது. புறாவைக் கொல்ல நினைக்கிறார். முயல்கிறார்.  அதிகாரமிழந்தவர்களின் கோபம் இப்படியும் திரும்புகிற ஆபத்து இருக்கிறது. அதில் புறாக்களும் பலியாகக் கூடும். 

சையதைப் போன்று வாழ்ந்து கெட்டவர்கள் அப்படி மானத்தைப் புறா போல் விட்டு யாரிடமும் போய்க் கையேந்த முடியாமல் தவிக்கிறார்கள் என்பதையும் நாம் இத்தகைய விவரிப்புகளில் இருந்து புரிந்து கொள்கிறோம்.

பிரிட்டிஷார் போனபின் – சையதுக்கும் ஹைதராபாத்தில் நிஜாம் தலைமையில் இஸ்லாமிய அரசு அல்லது பாகிஸ்தானுடன் இணைதல் குறித்து இணக்கமே இருந்தது என்பதை, சையது கனவில் இபின் காசிமும் அலாவுதீன் கோரியும் ஔரங்கசீப்பும் அப்போது வரத் தொடங்கினார்கள் என்கிற விவரிப்பின் மூலம் மென்மையாகச் சுட்டுகிறார் அ.மி. ஆனால் சையது அப்படி ஆசைப்பட்ட பல முஸ்லீம்களில் ஒருவர். அதற்காக எதையும் செய்யவில்லை. மகன் ரஜாக்கர்களுக்காகப் போரிடச் சென்று இறந்துவிட்டான் என நம்புகிறார். வேலூரில் நிம்மதியாக வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த சையதை, நிஜாம் அரசின் ஒப்பந்தம் வாங்கித் தந்து வரவழைத்த அவர் மைத்துனர் குரேஷி, பாகிஸ்தானுக்குக் குடியேறிவிட்டார். நிஜாம் அரசுக்கு இப்படிப் பொருட்களைச் சப்ளை செய்த ஒப்பந்தகாரர்கள் வாழ்க்கையில் இந்திய ஆட்சியில் மண் விழுந்து விட்டது. இந்திய அரசாங்கம் அவர்களைப் பரிசீலித்து அவர்களுக்கு எதுவும் செய்யவில்லையோ என்கிற கேள்வியும் எழுகிறது.

இந்த நேரத்தில் அவரிடம் ஐநூறு கோப்பை தட்டுகள் சப்ளை செய்ய முடியுமா எனக் கேட்டு ஒரு கடிதம் வருகிறது. அதனால் 25 ரூபாய் அவருக்குக் கிடைக்கலாம். ஆனால் அது பெரிதல்ல, இனிமேல் தான் ரஜாக்கர் என ஒதுக்கி வைக்கப்பட மாட்டோம் என மகிழ்கிறார் சையது.

ஆனால் அந்தக் கடிதம் கதையின் முதல் பத்தியில் வருகிற – சையது அப்துல் காதர் அண்ட் கம்பெனிக்குப் போவதற்குப் பதில் இவருக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட கடிதம் என்பதைச் சையது உணர்வதுடன் கதை முடிகிறது.

இந்தக் கதையைப் படித்து முடித்தபின் – சையதைக் குறித்து வாசகர்களுக்கு ரஜாக்கர் என்ற எண்ணம் தோன்றாது என்பது அ.மி.யின் வெற்றி. அந்த ஐநூறு கோப்பைத் தட்டுகளுக்கான ஒப்பந்தம் உண்மையிலேயே சையதுக்குக் கிடைத்திருக்கலாமே என ஆதங்கப்படுகிறோம். அதனால்தான் இது அசோகமித்திரனின் முக்கியமான கதை. 

இந்தக் கதையைக் குறித்து இன்னும்கூட சொல்வதற்கு உண்டு. இடம் கருதி இப்போது நிறுத்திக் கொள்கிறேன். 1959ல் எழுதப்பட்ட இந்த 12வது கதை பத்தே முக்கால் பக்க அளவு கொண்டது.

தமிழில் இஸ்லாமிய வாழ்க்கையைப் பதிவு செய்த ஆரம்பகால முக்கியக் கதையும் கூட. இத்தகைய நேர்மையுடன் இஸ்லாமிய வாழ்க்கையைப் பதிவு செய்யப் பின்னால் தோப்பில் முகமது மீரான், ஆபிதின், ரசூல், சல்மா என அச்சமூகத்திலிருந்தே வந்தவர்களுக்கு அசோகமித்திரன் முன்னோடி. அசோகமித்திரனின் சாயலை எழுத்தில் அவர்கள் கொள்ளவில்லை என்றாலும். 

– பி.கே. சிவகுமார்

– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன்ஸ்

#அசோகமித்திரன்

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 13அசோகமித்திரன் சிறுகதைகள் – 15

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *