அசோகமித்திரன் சிறுகதைகள் – 15

This entry is part 5 of 7 in the series 17 ஆகஸ்ட் 2025

பி.கே. சிவகுமார்

1959-ல் அசோகமித்திரன் பதினொன்றரை பக்கங்களுக்கு எழுதிய “ஒரு ஞாயிற்றுக்கிழமை”யை அவருடைய சாதாரணமான கதைகளில் ஒன்று எனச் சொல்லிவிடலாம். ஞாயிற்றுக்கிழமை என்ற தொடர் தலைப்பில் வருவதும் முதல்முறையல்ல.

மகள் பேபிக்குத் திருமணமாகிப் போய்விட்டால் மகள் சம்பாத்ய்த்தில் வாழ்வது பாதிக்கப்பட்டுவிடுமோ என்று மகள் மீது அன்பிருந்தாலும் தந்தையாகத் தான் உண்மையான சிரத்தை எடுத்துத் திருமணத்துக்கு முயலவில்லையோ என முத்துசாமி ஐயர் உணர்ந்து வருந்தும் கதை. கதையின் மூன்றாவது பத்தியிலேயே அவருக்கு மகள் திருமணத்தில் ஆர்வமில்லையோ என நம்மை எண்ண வைக்கிற தடயங்கள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. பின்னர் அவருக்கு வருகிற தலைவலி அதை உறுதிப்படுத்துகிறது. போய்ப் பார்த்த வரன் அமையாது எனத் தெரிந்ததும் தலைவலி நின்றுவிடுகிறது. சாக்ரடீஸ் சொல்வதுபோல், acting good and being good இரண்டுக்குமான வித்தியாசத்தை முத்துசாமி ஐயரிடம் பார்க்கிறோம். ஆனால் மகள் மீதான அவர் அன்பு உண்மையானது என்பதை உணர்த்த அ.மி. இந்தக் கதையில் நன்றாகவே முயன்றிருக்கிறார்.

மகளுக்குத் திருமண ஆர்வம் இல்லாமல் முத்துசாமி இருப்பதுபோல் அவர் போய்ப் பார்க்கிற வரனின் தந்தையும் மகன் திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருக்கிறாரோ என நமக்குத் தோன்றுகிறது. 

அதனால் இந்தக் கதையைக் குறித்து அதிகம் பேசாமல் – இந்தக் கதையையும் வைத்து அசோகமித்திரன் கதைகளின் பொதுப்போக்கைப் பேசுவோம்.

ஐயர் மகளுக்கு பேபி என்று வித்தியாசமான பெயர். அசோகமித்திரன் எழுத்தில் செய்கிற மரபு மீறல்கள் இத்தகைய எந்தத் தாக்கத்தையும் யாருக்கும் ஏற்படுத்தாதவை. குளிப்பதற்கு முன் குச்சியில் கட்டிக் கொள்ளப் போகிற புடைவையைத் தொடாமல் எடுத்துச் செல்கிற முத்துசாமி ஐயரின் மனைவி. மணல் குறுநாவலில் உயிரியல் ஆய்வகத்தில் விலங்கை அறுத்ததால் வீட்டுக்குள் வராமல் நேரிடையாகப் புழக்கடையில் இருக்கிற குளியலறைக்குச் சென்று குளிக்கிற மாணவி. இப்படி பிராமண வீடுகளில் இருந்த பழக்கங்களை internalize செய்து கொண்டு, அவற்றில் எந்தத் தவறும் இல்லை என்பது போலவே அசோகமித்திரன் சொல்லிச் செல்கிறார். அசோகமித்திரன் கதைகளில் பிராமண வீடுகளில் வேலை செய்கிற வேலைக்காரிகள் வருகிறார்கள். அவர்கள் அங்கே செய்ய அனுமதிக்கப்படுகிற வேலைகளை அ.மி. சொல்கிறார். அவர்கள் செய்ய அனுமதிக்கப்படாத வேலைகள் குறித்து அ.மி. எதையும் விரிவாக எழுதிய மாதிரி தெரியவில்லை. அந்த விஷயத்தில் அசோகமித்திரன் கவனமாக இருக்கிறார். இதெல்லாம் அந்த பிராமண வாழ்க்கையை ஓர் எழுத்தாளராகக் கூட அவர் விமர்சனமின்றியே அணுகினார் என்பதையே காட்டுகிறது. இது இப்படித்தான் இருக்கிறது. இப்படி இருப்பதில் தவறில்லை என அவர் அதை internalize செய்து கொண்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதைப் போன்றவற்றையும் – எதுகுறித்தும் தீர்ப்பெழுதாமல் காட்சிப்படுத்த மட்டுமே செய்கிறார் அசோகமித்திரன் எனப் பாராட்டிவிட முடியாது. இது அசோகமித்திரன் கடந்திருக்கக் கூடிய ஆனால் கடக்காத அல்லது கடக்க விரும்பாத விஷயமாகவே அவர் கதைகளில் வருகிறது. எல்லாவற்றையும் அப்படியே சொல்லிச் செல்கிறவர் அந்தக் காலத்தில் வேலைக்காரிகளை எதையெல்லாம் செய்ய அனுமதிக்கவில்லை எனவும் சொல்லியிருக்கலாம். அப்படியே தன் உடையில், தன் உடலில் தீட்டும் சுத்தமும் பார்த்தவர்களைச் சொல்கிறவர், பிற மனிதர்களிடம் அவ்விஷயங்களில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்றும் எழுதியிருக்கலாம்.  

இந்த என்னுடைய அவதானிப்பைக் கோபால் ராஜாராமிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, அலங்காரமாக எழுதியதாகச் சொல்லப்படுகிற, பிராமண வாழ்க்கையையே அதிகம் எழுதிய லா.ச.ரா. எழுத்தில் இந்தப் பிரச்னை இல்லை. பிராமணர்கள் வேலைக்காரிகளை அனுமதிக்காத இடங்கள், அவர்களின் மரபுகள் மீதான விமர்சனம் அவர் எழுத்தில் உண்டு என்கிற அவதானிப்பையும் சொன்னார். லா.ச.ரா.வை நான் அதிகம் படித்ததில்லை. கோபால் ராஜாராம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 

தத்துவம் என்பது தனித்துறையன்று. வாழ்வின் எல்லா விஷயங்களோடும் தொடர்புடையது. என்றாலும் பின்வரும் ஆறு விஷயங்களோடு மிகுந்த தொடர்புடையது என்கிறார் பால் க்ளெய்ன்மேன். மேற்கோளில் கீழே வரும் ஆங்கிலப் பட்டியல் பால் நூலொன்றில் இருந்து எடுக்கப்பட்டது. அதைத் தமிழ்ப்படுத்த இப்போது நேரமில்லாமல் அப்படியே இப்போதைக்குத் தருகிறேன்.

“In a very broad sense, there are six major themes philosophy touches on:

1. Metaphysics: The study of the universe and reality 

2. Logic: How to create a valid argument

3. Epistemology: The study of knowledge and how we acquire knowledge 

4. Aesthetics: The study of art and beauty 

5. Politics: The study of political rights, government, and the role of citizens 

6. Ethics: The study of morality and how one should live his life”

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது கலையோடும் அறத்தோடும் எனக் குறைந்தபட்சம் இரு விஷயங்களிலாவது தத்துவம் நெருங்கிய தொடர்புடையது எனலாம்.  கலை என்பது வாழ்க்கையைச் சொல்வது எனக் கொண்டால் மேற்சொன்ன ஆறுமே கலையிலும் வரும்.

அசோகமித்திரனின் எழுத்தில் தத்துவத்தின் எந்தச் சாயலும் சுத்தமாக இல்லை. உள்ளீடற்ற எழுத்து என அவர் எழுத்துச் சிலரால் ஏற்கப்படாததற்கு இதுவே காரணம். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை உண்டு. அதனால் அசோகமித்திரன் சொல்லாத பொருளை, தத்துவ விசாரத்தை நாம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்கிற பிரக்ஞையுடனே நான் அவர் கதைகளை அணுகுகிறேன்.

பதினாறு, பதினேழாம் நூற்றாண்டில் மேலைத் தத்துவம் “crisis of thought” (சிந்தனையின் சிக்கல்) என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டு விரிவடைந்தது. எழுத்தில் நவீனத்துவத்தின் சிறந்த தமிழ் முகமாக முன்வைக்கப்படும் அசோகமித்திரன் எழுத்தில், பாத்திரங்களில், கதைகளில்  நவீன தத்துவம் பதில் சொல்ல முயன்ற crisis of thought இல்லை – மறைமுகமாகக் கூட. 

அசோகமித்திரன் கதைகளில் வருகிற அதிகபட்ச தத்துவம் இந்தக் கதையில் முத்துசாமி ஐயர் உபன்யாசம் கேட்கப் போனபோது பிரசங்கி சொல்கிறாரே, அந்த மாதிரியான தத்துவம்தான். இத்தகைய உபநிஷத் விளக்கத்தைக் கேட்டு முத்துசாமி ஐயர் என்ன நினைத்தார் என்பதை அ.மி. கவனமாக எழுதுவதில்லை. உபநிஷ விளக்கத்தைக் கேட்கிற பாத்திரம் அதைக் குறித்துச் சிந்திக்காமலேயே இருந்திருக்குமா? 

அவரின் பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, உலக வாழ்வின் சுமைகளோடு, அசோகமித்திரனுக்கும் கூட, crisis of thoughtம் அதனால் உண்டாகிற தவிப்பு, தேடல் இருந்ததில்லை என்று சொல்லலாமா? 

சரி அசோகமித்திரன் கதைகளிலும், அசோகமித்திரனுக்கும் crisis of thought ஓ அல்லது தத்துவ விசாரமோ இல்லை. ஆனால் அவை வாசகர்களை அத்தகைய தத்துவ தேடலை நோக்கித் தள்ளுகின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

ஏனென்றால் – Pre-socratic தத்துவத்தில் இருந்து இன்றைய தத்துவம் வரை அசோகமித்திரனின் எழுத்துகளை எந்தவகையான இரண்டு அல்லது மூன்று தத்துவ வகைகளுக்குள் அடக்க முடியும் என்ற கேள்வியை நான் எழுப்பிக் கொள்ளும்போது, எனக்கு அது குறித்த எந்தத் தெளிவான பதிலும் அவர் எழுத்துகளில் இருந்து கிடைக்கவில்லை. அவரை நவீனத்துவத்தின் முகம் என்று அவர் எழுதிய முறையை வைத்துதான் எல்லாரும் சொல்கிறார்கள். உள்ளடக்கத்தை வைத்து அல்ல. எக்சிஸ்டென்சியலிசம் என்கிற லேபிளுக்குள் அவர் எழுத்துகளை முழுவதும் அடக்கி விடவும் முடியாது. 

எந்த லேபிளுக்குள்ளும் சிக்கிக் கொள்ள விரும்பாத ஜாக்கிரதையுணர்வு கொண்டவராக அசோகமித்திரன் இருந்திருக்கிறார் என அவரைப் பிடித்தவர்கள் இதை நல்லவிதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். 

மற்றபடி – இந்தக் கதையில் 1959-ல் மாதச் செலவுக்கு ரூபாய் 37 போதும், எழும்பூருக்கும் மாம்பலத்துக்குமிடையே அப்போதைய மின்ரயில் கட்டணம் போன்று அசோகமித்திரன் எப்போதும் தரும் நுண்வரலாற்றுத் தகவல்களும் இருக்கின்றன.

இப்படியான பிரச்னைகள் அசோகமித்திரன் எழுத்தில் இருந்தும், அவர் வாழ்க்கையில் இருந்தும் மனிதர்களில் இருந்தும் தான் காட்ட விரும்பிய சித்திரங்களை ஒரு புகைப்படக் கருவிபோல் மட்டும் அல்லாமல், சிறந்த எடிட்டர் போலவும் கூட்ட வேண்டிய இடங்களில் கூட்டி, குறைக்க வேண்டிய இடங்களில் குறைத்தும் காட்டுவதில் வெற்றியடைந்திருப்பதால் புறக்கணிக்க முடியாதவர் ஆகிறார்.

– பி.கே. சிவகுமார்

– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன்

#அசோகமித்திரன்

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 14சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *