பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள்

This entry is part 4 of 5 in the series 21 செப்டம்பர் 2025

_ அநாமிகா

இரண்டு பழைய சூட்கேஸுகள் நிறைய இருந்தன பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள். 

கணவன் – மனைவிக்கிடையே இடம்பெறும் சாதாரண பேச்சுவழக்கிலான உரையாட லாய் விரியும் விளம்பரம் திடீரென “நல்ல நறுமணம் இல்லே!” என்று அந்த மனைவி, கணவன் போட்டுக்கொண்டுவந்த காபியை ருசித்துக்குடித்துக்கொண்டே சொல்லும் போது சட்டென்று ஒரு நெருடலை மனம் உணரும். ”நல்ல வாசனை இல்லே?” என்றோ. “எத்தனை ஜோரான வாசனை!” என்றோ பேசியிருந்தால் இன்னும் இயல்பா யிருந்திருக்கும் என்று தோன்றும்….. 

ஆனால், பெரியப்பாவின் டயரிகள் என்று குறிப்பிடமுடியாதபடி அந்தப் பெட்டிகளில் இருந்தவை நாற்பது பக்க நோட்டுப் புத்தகங்கள், டயரிகள், வீட்டுவிலாசங்கள் – தொலைபேசி எண்களையெல்லாம் எழுதிவைக்கும் சிறு சிறு ஏடுகள் – இப்படி கலந்துகட்டி இருந்தன.

சிறிய ஏடுகளாயிருந்தால் கையில் ஐந்தாறை அள்ளியும், சற்றே பெரிய டயரி அல்லது நோட்டுப்புத்தகமாக இருந்தால் ஒற்றையாய்க் கையிலெடுத்தும் பரபரவென்று கிழித்தபடி ‘கருமமே கண்ணாயிருந்தாள்’ பெரியம்மா.  இரண்டு பெட்டிகளில் உள்ளதை அப்படியே எடுத்து பழைய பேப்பர் கடையில் போட்டுவிடப் போவதாகச் சொன்னபோது பதற்றத்தோடு வேண்டாமென்று சொல்லி எல்லாவற் றையும் கிழித்துப்போடுவதுதான் நல்லது என்று ஏன் சொன்னேன்? யாராவது படிப்பார்கள் என்றா….

ஆனால், ஒருவர் டயரி எழுதுவது எதற்காக…..? பின்னாளில் தனக்குத்தானே படித்துக்கொள்வதற்காகவா? அல்லது, வேறு யாராவது படித்துப்பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையிலா?  ஒரு வலிநிவாரணமாகவா…. தனக்குத்தானே பேசிக்கொள்ளலா… அப்படிப் பேசிக்கொண்டு தெளிவு ஏற்படுத்திக்கொள்ளலா…. அன்று முழுவதும் செய்தி ருக்கக்கூடிய தவறுகளுக்கு மன்னிப்புக்கோரலா…. தன்னைத்தானே நியாயப்படுத் திக்கொள்ளலா…. 

அம்மா, ’இன்று பால்காரருக்கு மாதப்பணம் கொடுத்தேன், நேற்று மாமா வீட்டுக்கு வந்திருந்தார்’ என்று தன் டயரியில் எழுதிவைத்திருப்பாள். அப்படி எழுதும்போது ஒருநாள் யதேச்சையாகப் பார்த்து ”இதென்ன அம்மா, பால் கணக்கு, தயிர் கணக்கு எல்லாமா டயரியில் எழுதுவாங்க?” என்று குற்றஞ்சாட்டுவதாய் கேட்டதற்கு, “இன்னொருத்தர் டயரியைப் படிக்கிறது தப்பு” என்று மட்டும் கண்டிப்பான குரலில் சொல்லி அம்மா தன் டயரியை மூடினாள். ஒருவேளை, பால் கணக்கு, தயிர் கணக்கு என்று அம்மா எழுதுவதெல்லாம் ஒருவித மறைபொருளெழுத்தா என்று கூட எண்ணம் தோன்றி மனது திடுக்கிட்டது.

ஆனால், பெரியப்பாவின் டயரிகள் அப்படியல்ல என்பது அவரைத் தெரிந்தவர்க ளுக்குத் தெரியும். பத்துப்பன்னிரெண்டு வயதில் அவர் அம்மாவை இழந்தார். உதிரிப்பூக்கள் படம் அவருக்கு மிகவும் பிடிக்கும். செல்வராகவன் படங்களில் ஆண்-பெண் உறவைப் பல கோணங்களில் ஆராய்வதாகச் சொல்வார். மற்றவர்களிடம் சொல்லவியலாத ஏதோவொன்று அவரைத் தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது போல், அலைக்கழித்துக்கொண்டேயிருந்ததுபோல் தோன்றும். தன்னால் முடிந்த நல்ல காரியங்களையெல்லாம் செய்வார்….

” பெரியம்மாவுக்கு அவர் வெறும் சமூக அந்தஸ்து, அடையாளம் – அவ்வளவுதான் அக்கா. மற்றபடி, அவளுக்கு அவர் மீது அன்பெல்லாம் கிடையாது” – காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஒன்றுவிட்ட தங்கை  – அவளுக்கு பெரியம்மாவிடம் சண்டை – கூறியபோது “அப்படியெல்லாம் யாரையும் சொல்லிவிட முடியாது. ஷீலா. அதுவும், ஹஸ்பண்ட் – வைஃப் பற்றி மூன்றாமவராகிய நாம் எதுவும் சொல்ல வியலாது. சிலருக்கு அன்பை வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாது”, என்று சட் டென்று கூறினாலும் ‘வெளிக்காட்டத் தெரியாத அன்பு என்ன அன்பு’ என்றும் மனதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது. 

சிவாஜி படத்தில் சிவாஜிக்குத் துன்பம் வரும்போதெல்லாம் பெரியம்மாவின் கண்களில் நீர் ததும்பி வழியும். பெரியப்பாவுக்கு உடம்பு முடியாமல் போய் படுக்கை யில் கிடந்தபோது அவ்வப்போது பெரியம்மா கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அது எல்லாமே தனது சமூக அந்தஸ்து, அடையாளம் தொடர் பானது மட்டும்தானா….

”அந்த பக்கத்து வீட்டில அற்புதமா சமைச்சுத் தராங்க. அமிர்தமா இருக்கும். இவள் வாங்க விடலை. எனக்கு சமைச்சுப்போடுவது இவளுக்கு என் மீது ஒரு அதிகாரத் தைத் தருது” – பெரியப்பா இதை அவள் மீது குற்றம் சுமத்துவதாகச் சொல்ல வில்லை. மனித உளவியலை அலசுவதாகத்தான் சொன்னார். ஆனால், அதில் ஒரு தனிமனித நிறைவின்மையையும் உணர முடிந்தது.

“ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் சிகரெட் குடிக்கிறார் தெரியுமா – ஒரு மனைவியா அவளுடைய கஷ்டம், அவளுடைய ஏமாற்றம் – அதையும் நம்ம யோசிக்கணும் இல்லையா?”

‘யோசித்து என்னவாகப்போகிறது….எல்லாவற்றையும் யோசித்து யோசித்து மண்டை காய்ந்துபோவதுதான் மிச்சம்….. அதுவும், அவரவர் கோணத்தில்தான் எல்லாமே உள்வாங்கப்படுகிறது. அவரவர் கோணம் என்பது அனுபவம் மூலம் கிடைக்கப் பெறலாம். அவரவர் நம்பிக்கைகளின்படி, எதிர்பார்ப்புகளின்படி, முன்னூகங்களின்படி, முன் நிபந்தனைகளின்படி…. எத்தனையெத்தனை படிகள்…. எல்லாவற்றையும் ஏறிக் கடந்து அறியக்கிடைப்பது என்னவாக இருக்கும் என்ற பயம் எல்லாவற்றையும் விடப் பெரியதாய்…..

எல்லாம் மொத்தமாகக் கிழிந்து கந்தலாகும் முன் பெரியப்பாவினுடைய ஒரு டயரி யின் சில பக்கங்களையாவது படித்துப்பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருந்தது. அது அவருக்கு செய்யும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும் என்று தோன்றியது. 

யாசுநாரி கவாபாட்டாவின் அந்தக் கதையில் அப்படி இறந்த தந்தையின் கடிதங்களைப் (கடிதங்களையா, டயரிகளையா – இப்போது நினைவில்லை) படிக்க ஆரம்பிக்கும் மகள் அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறதென்பதை அறிந்து கொள்வாள். ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் கடிதங்களைப் படிப்பதை நிறுத்திவிடு வாள். 

தற்கொலை செய்துகொண்ட அக்காவின் குழந்தைகளுக்காக அவளுடைய குடிகார, படிப்பறிவற்ற கணவனுக்கு இரண்டாந்தாரமாக மனமுவந்து வாழ்க்கைப்பட்ட படித்த, இளவயது அலுவலகத் தோழி காதல் கோட்டை படம் வந்த சமயம் அப்படி காணாமலே ஒருவரோரு பழகி கடிதங்கள் எழுதி காதல் வளர்த்தது அலுவலகத்தில் அனைவருக்கும் தெரியவர ஆளாளுக்கு அவளைப் பழித்து, அவளோடு சேராதே என்று எனக்கு இடித்துரைத்து இறுதியில் அவளே என்னிடம் வந்து ஒரு கற்றைக் கடிதங்களைக் கொடுத்து படிக்காமல் அவற்றை எரித்துவிடும்படி அழுதுகொண்டே சொன்னபோது அப்படியே செய்தேன். ஒரு வரியையும் படிக்கவில்லை. அதில் எனக்குப் பெருமையும்கூட. 

ஆனால், அதற்குப் பிறகு, நான் படித்துப்பார்க்கவேண்டும் என்று எதிர்பார்த்திருப் பாளோ என்ற கேள்வியும் சில காலம் தொடர்ந்தது.

தெரிந்தவர் ஒருவர் இறந்தபோது அவருடைய பொருட்களையெல்லாம் அடுக்கி அவருடைய மனைவி எடுத்துச்செல்ல ஏதுவாய் வேண்டாததைத் தூக்கிப்போட்டு, தேவையானதை மட்டும் எடுத்துவைக்க நாங்கள் நாலைந்துபேர் நாலைந்து நாட்கள் மும்முரமாக எல்லாவற்றையும் பிரித்துப்பார்த்துக்கொண்டிருந்தோம். புத்தக அடுக்கிலிருந்த புத்தகங்கள் சிலவற்றில் எழுதப்பட்ட தாள்கள் திணிக்கப்பட்டிருந்தன. எடுத்துப்பார்த்தால் அதில் அறிந்த, தெரிந்த பெண்களை அங்க அங்கமாக வர்ணித்து எழுதப்பட்டிருந்தது. அவருடைய அக்கா, மச்சினி, நான், என் தங்கை , அடுத்த வீட்டு சரளா, பால் விற்கும் சத்யா….’ என் கையில் கிடைத்ததையெல்லாம் மற்றவர் அறியாமல் கிழித்துப்போட்டேன். மற்றவர்களும் அப்படியே செய்திருக்கக்கூடும்…

எழுதியிருந்த விதம் ஏதோ பயிற்சி செய்வதுபோல் இருந்தது. இல்லை, தெரிந்தவர் என்பதால் அப்படி எண்ணிக்கொண்டேனா…. அப்படியுமிருக்கலாம்…. இல்லாமலுமிருக் கலாம்…. 

இல்லாமலுமிருக்கலாம் – எத்தனை ஆழமான தத்துவம்….

பெரியப்பாவுக்குத் தத்துவப் புத்தகங்கள் படிக்க மிகவும் பிடிக்கும். அவருடைய புத்தக அலமாரியில் பெரும்பாலும் தத்துவப் புத்தகங்கள்தான் இருக்கும். பெரியப்பா தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதை எப்படி எடுத்துக்கொண்டார்? அவருக்குக் குழந்தை களோடு விளையாட, பேசிச் சிரிக்க மிகவும் பிடிக்கும். தன்னுடைய இன்னொரு சகோதரனுடைய பிள்ளைகள் சின்னவர்களாக இருக்கும்போதெல்லாம் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பும்போதெல்லாம் மறக்காமல் அவர்களுக்கு ஏதாவது வாங்கிவருவார். பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்களுடைய பெற்றோர், நட்பினரை மட்டுமே பொருட்படுத்துபவர்களாக மாறிவிட்டது பெரியப்பா வுடைய மனதை பாதித்திருக்குமோ… பெரியம்மா வேலையே முக்கியமென்று குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வங்காட்டாதது அவருக்கு வருத்தமாக இருந்திருக் குமோ….

”பணம் கட்டித் தங்கும் வயதானவர்களுக்கான இல்லங்களில் பெரியவங்களை நல்லா பாத்துப்பாங்களா அனு?”

வயதான அப்பா தன்னோடு இருப்பது தன் மனைவிக்குப் பிரச்சனையாயிருக்கிறது என்பது புரிந்தபோது, ‘உங்க அப்பாவை எங்கேயாவது முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுங்கள்’ என்று பெரியம்மா சொல்லிவிட்ட நிலையில், என்னிடம் கேட்டார். நான் செய்யும் நல்ல காரியங்களுக்கெல்லாம் தன்னாலான பங்களிப்பைக் கட்டாயம் செய்யும் பெரியப்பா அப்படிக் கேட்டபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. “அங்கேயெல்லாம் வீட்டிலே இருக்கிறதை விடக்கூட நல்லா வசதிகள் இருக்கும் பெரியப்பா. ஆனால், இதுநாள் வரை குடும்பமே தனது அடையாளம்னு இருக்கிற தாத்தா மாதிரி ஆளுங்களை அங்கெல்லாம் சேத்தா மனசொடிஞ்சு போயிடுவாங்க” 

நான் சொல்வது சரி என்று மௌனமாய் தலையசைத்த போது பெரியப்பாவின் முகத்தைப் பார்க்க மிகவும் கஷ்டமாயிருந்தது. 

அவரிடம் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாத, ஆனால் பகிர்ந்துகொண்டு நிவாரணம் தேட விரும்பும் எதுவோ இறுதிவரை இருந்தது… ஒருவேளை இந்த நாட்குறிப் பேடுகளைப் படித்தால் அது என்னவென்று தெரியவருமோ….? ஒருவேளை பெரியப்பா சிறுவயதில் வேலைக்குப் போன இடத்தில் யாரையாவது கொலை செய்திருப்பாரோ… அப்போதெல்லாம் முரடனாகத்தான் இருந்தார்… எங்காவது நாலைந்துபேராய்ச் சேர்ந்து அவரை அடித்துத் துவைத்திருப்பார்களோ…. ஒருவேளை பெரியப்பா யாரையாவது மனதாரக் காதலித்து ஏமாற்றியிருப்பாரோ…. அல்லது, அந்தப் பெண் இவரை ஏமாற்றி வேரொருவரைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டாளோ…

பெரியம்மாவுக்கு எத்தனை தூரம் பெரியப்பாவைத் தெரியும்… எனக்குத் தெரிந்திருப் பதைவிட அதிகமாகவே தெரியும் என்றுதான் தோன்றுகிறது…. ஒருவரைத் தெரியும் என்பதற்கு என்ன அளவுகோல்….?. யாரையும் யாருக்கும் முழுமையாகத் தெரிந்துவிடு தல் சாத்தியமா? சத்தியசோதனையிலும் அத்தனை சத்தியங்களும் அத்தனை சோதனைகளும் பதிவாகியிருந்திருக்குமா…. 

பெரியப்பா தனக்கே சொந்தம் என்ற உடைமையுணர்வு பொங்க அவருடைய டயரிகளை, நோட்டுப்புத்தகங்களை பரபரவென்று கிழித்துக்கொண்டிருந்த பெரியம்மாவைப் பார்க்க பாவமாயிருந்தது. நான் பெரியப்பாவின் டயரிகளைப் படிக்க விரும்புகிறேன் என்று எப்படிக் கேட்பது…? உண்மையிலேயே நான் படிக்க விடும்புகிறேனா என்ன….

நான் படிக்கவேண்டுமென்று பெரியப்பா விரும்பியிருப்பாரோ… எங்கள் குடும்பத்தி லேயே நான் அறிவாளி, மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பவள் என்று அவர் எண்ணிக்கொண்டிருந்தது எனக்குத் தெரியும்…. 

“ஹப்பாடி!– ஒருவழியா எல்லாத்தையும் கிழிச்சுமுடிச்சு ரெண்டு மூட்டையா இறுக்கக் கட்டியாச்சு. குப்பைத்தொட்டியிலே போடவேண்டியதுதான் பாக்கி”  – 

ஒரு பார்வைக்கு அந்த இரண்டு மூட்டைகளும் பெரியப்பாவினுடைய இதயத்தின் இரண்டு பாதிகளாகக் கண்டதுபோல் இருந்தது.

எழுந்துகொண்டு கைவிரல்களை நெட்டிமுறித்து, தன் தோள்களை கைகளால் ஓரிருமுறை அழுத்திக்கொண்ட பெரியம்மா குனிந்து ஒரு மூட்டையைக் கையி லெடுத்துக் கொண்டாள்.

இன்னொன்றை நான் தூக்கிக்கொண்டேன்.

***

Series Navigation(பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் நான்காம் அத்தியாயம்கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய ‘வாழ்க’ சிறுகதை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *