ஏ.நஸ்புள்ளாஹ்
இரவு
கடலின் அலைகள் சத்தமாக வந்துவிட்டுப் போய்க் கொண்டே இருந்தன.
அந்தக் கரையின் அருகே அவர் நின்றார்.
மணலில் காலடிகள் விழுந்தவுடனே அவை மறைந்து போகின்றன.
ஆனால் அவர் மீண்டும் திரும்பிப் பார்த்தபோது, அந்த அடிகள் மறையாமல் இன்னும் தெளிவாகக் காணப்பட்டன.
அதில் சில காலடிகள் அவருடையவை, சில காலடிகள் யாரோ ஒருவருடையவை.
ஆனால் அவர் மட்டும் தான் அங்கே இருந்தார்.
நீங்கள் எப்போதாவது கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும்போது, உங்களுடன் யாரோ வந்து சென்றது போல உணர்ந்ததுண்டா?
அலைகள் இருளில் பிரகாசித்தன
ஒவ்வொரு அலைக்கும் தனி குரல் இருந்தது.
முதல் அலை சொன்னது
“நீ பிறந்த நாள் நான் உன்னைத் தழுவினேன்.”
இரண்டாவது அலை சொன்னது
“நீ இழந்த நாள் நான் உன்னை அழைத்துச் செல்ல நினைத்தேன்.”
மூன்றாவது அலை நேராகக் கேட்டது
“இப்போது என்னை நம்புகிறாயா?”
அவர் அதிர்ந்து போனார்
அலைகள் பேசுகிறதா, இல்லை அவர் உள்ளே தானாகக் கேட்கிறாரா என்று புரியவில்லை.
மணலில் யாரோ எழுதிக் கொண்டிருந்தது போல வரிகள் தெரிந்தன.
அவர் அணுகி வாசித்தார்.
“நீங்கள் படிக்கிறீர்கள்.
அதனால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்.”
அவர் நின்றுவிட்டார்.
“இது யார் எழுதியது?”
அதே நேரத்தில் அடுத்த அலை வந்தது.
எழுத்துகள் அழிந்தன.
ஆனால் அவர் மனதில் அந்த வார்த்தைகள் நிலைத்துவிட்டன.
கடலின் சத்தத்தில் கலந்த மனிதக் குரல்கள் கேட்டது.
அவர் காதை மூடியும் பார்த்தார்.
ஆனால் குரல்கள் உள்ளே புகுந்து விட்டது.
நீங்கள் ஒருபோதும் கடற்கரையில் அமர்ந்தபோது, அலை சத்தம் தான் என்று நினைத்துக் கொண்ட சத்தத்தில், யாரோ உங்களிடம் பேசுவது போல உணர்ந்திருக்கிறீர்களா?
மணலில் ஒரு சிறிய பை கிடந்தது.
அவர் அதை எடுத்தார்.
அதில் பழைய கடிதங்கள்.
ஆனால் எந்த எழுத்தும் தெளிவாக இல்லை.
அவர் தொட்டவுடனே எழுத்துகள் உருவானது.
அதில் எழுதப்பட்டிருந்தது
“இங்கே வந்தவன் ஒருவன் மட்டும் அல்ல.
நீ எங்கே சென்றாலும், இந்தக் கடற்கரை உன்னைத் தொடரும்.”
அவர் கடிதத்தை மீண்டும் பைக்குள் வைத்தார்.
ஆனால் பை அவர் கையில் இருந்து மறைந்து விட்டது.
திடீரென்று மணலில் சிறு காலடிகள் தெரிந்தன.
அவர் அவற்றைப் பின்தொடர்ந்தார்
அவை கடலுக்குள் சென்றன.
அவர் நின்றுவிட்டார்.
“இந்தக் காலடிகள் யாருடையது?”
அலை மீண்டும் பதில் சொன்னது
“உனக்கு ஒருபோதும் பிறக்காத குழந்தையின் காலடிகள்.”
அவர் நடுங்கினார்.
“அப்படியென்றால் நான் காணாத நினைவுகளும் இங்கே வந்துவிடுகின்றனவா?”
கரையின் அருகே ஒரு கண்ணாடி கிடந்தது.
அவர் அதைப் பார்த்தார்.
அதில் அவர் முகம் இல்லை.
வேறு முகங்கள்.
சில அறிந்தவை, சில அறியாதவை.
ஒரு முகம் நேராகக் கேட்டது
“நீங்கள் யார்?
உங்களை நீங்கள் நினைத்தது உண்மையா?”
அவர் கண்ணாடியை மணலில் போட்டார்.
ஆனால் அது உடையவில்லை.
அதில் இன்னும் முகங்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.
அவர் திரும்பிப் பார்த்தார்
கரையில் எவரும் இல்லை.
ஆனால் அவர் உணர்ந்தார் யாரோ கதை படித்து கொண்டிருக்கிறார்கள்.
“நீங்கள்தானா வாசிக்கிறீர்கள்?
நீங்கள் நிறுத்தினால், இந்தக் கடற்கரையும் மறைந்து போய்விடும்.
ஆனால் நீங்கள் தொடர்ந்தால், நான் இன்னும் உயிரோடு இருப்பேன்.”
அவர் உங்கள் கண்களைப் பார்க்கிற மாதிரி நேரடியாகக் கேட்டார்.
அவர் எத்தனை தூரம் நடந்தாலும் மீண்டும் அதே இடத்தில் வந்துவிட்டார்.
அதே பாறை, அதே மணல், அதே அலை.
அவர் சிரித்தார்
“இது கடற்கரையின் விளையாட்டு.
எங்கு சென்றாலும் முடிவு இதே இடம் தான்.”
நீங்கள் கடற்கரையில் நடந்துகொண்டிருக்கும்போது முடிவில்லாத பாதையில் சிக்கியதாக உணர்ந்ததுண்டா?
அவர் அமர்ந்தார்
அலைகள் வந்தன.
அவை மீண்டும் கதைகள் சொல்லத் தொடங்கின
“நீ வாழ்ந்த ஒவ்வொரு நாளும் நாங்கள் சேமித்து வைத்திருக்கிறோம்.
நீ இறந்துவிட்டாலும், நாங்கள் அதை மீண்டும் உச்சரிக்கிறோம்.”
அவர் கண்களை மூடினார்
அவர் கேள்வி எழுப்பினார்
“அப்படியென்றால் நான் ஒருபோதும் மறையவில்லை.
நான் இன்னும் உங்களால் படிக்கப்படுகிறேன்.”
கடல் சிரித்தது
அலைகள் மோதின
மணலில் எழுத்துகள் மீண்டும் தோன்றின.
“நீங்கள் வாசிப்பதை நிறுத்தும் வரை, நான் உயிரோடு இருக்கிறேன்.”