அநாமிகா


சில புகைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் பரிதவிப்பு தாங்கமுடியாதது. ஒரு சிறு குழந்தை அம்மணமாக ஓடிவரும் அந்த போரின் அவலத்தைக் காட்டும் படம்.
நல்லவேளை அப்போதெல்லாம் காணொளிகள் இந்த அளவுக்குக் கிடையாது. ஆனாலும் வரலாறு காணாத அந்த வெள்ளம் வந்த பிறகு சில காலம் வரை அந்தப் படம் காணொளியாகவும் வந்துகொண்டிருந்தது. காலப்போக்கில் அது காணாமல் போய்விட்டது. ஆனாலும், அந்த மங்கலான, தூரத்துப் புகைப்படம் மட்டும் இன்றளவும் அப்போதைக்கப்போது ஏதாவது தமிழ், ஆங்கில தினசரிகள், வாராந்தர, மாதாந்தர இதழ்களில் வெளியாகியபடியே…..
ஊஞ்சல் போன்ற நீள்பலகையொன்றின் மேலே முப்பது வயதிருக்கக்கூடிய பெண் குப்புறப்படுத்து கைகளால் இருபுறமும் அந்தப் பலகையை இறுகப் பிடித்தபடியே பெருகும் வெள்ளத்தில் மிதந்தபடியிருக்கும் தெளிவற்ற காட்சி……
பெரும் சேதம் விளைந்திருந்ததால் அது என்ன இடம் என்று யாராலும் சரியாகக் கணிக்க இயலவில்லையோ என்னவோ…. அந்தப் பெண் குறித்த கூடுதல் தகவல் எதுவும் பத்திரிகைகளில் வெளியானதாகத் தெரியவில்லை.
வெள்ளத்தின் அழிவுச்சீற்றத்தில் சிக்கியிருந்ததில் யாரும் அதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை.
***
வேறு மாநிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். மனதுக்குப் பிடித்த வனைப் பார்க்க வர வேண்டுமென்றால் அது எளிதாக நடந்துவிட முடியுமா என்ன?
” எங்கே போகிறாய்?”
இந்த ஒரே கேள்விக்குத் தான் எத்தனை பதில்களைத் தரவேண்டியிருக்கிறது. எப்படியோ இங்கே வந்துசேர்ந்தாயிற்று. கொட்டும் மழையில் ரயிலிலும் பேருந்திலும் வருவதே பேராபத்தாகத் தோன்றியது. ஆனாலும், இருவரும் சந்தித்து எத்தனை நாட்களாயிற்று… சமயங்களில் அந்த ஏக்கம் தாங்க முடியாமல் கேவ வைத்துவிடும். விடுதி அறையில் அடுத்த கட்டிலில் இருப்பவளுக்குக் கேட்கக்கூடாதே என்ற பதற்றத்தில் மூச்சுத்திணறும்.
ஒருவழியாக அவன் ஏற்பாடு செய்திருந்த அறைக்கு வந்துசேர்ந்தாயிற்று. பார்க்கப்பார்க்க கண் நிறைந்தது.
அறைக்கதவு தட்டப்படும் ஓசை திடுக்கிட வைத்தது. கேள்விக்குறியோடு அவனைப் பார்த்தாள்.
”பேச்சுவாக்கிலே என் ஃப்ரெண்ட் கிட்ட இன்னிக்கு இங்கே தங்கப்போறேன்னு சொல்லிட்டேன். அவன் தான் வந்திருப்பான்.”
கோபமும் ஏமாற்றமும் பொங்க அவனைப் பார்த்தாள்.
அவன் அப்படித்தான். கெட்டவன் கிடையாது. ஆனால், இப்படி ஏடாகூடமாக ஏதாவது செய்வது அவன் இயல்பு. அதற்காக அவனை நேசிக்காமல் இருக்கமுடியுமா?
”சாரி. சீக்கிரம் பேசி அனுப்பிடறேன்.”
தாளிடப்பட்டிருந்த அறைக்குள் ஓர் ஆணும் பெண்ணும் இருப்பதைப் பார்த்தால் அவர்கள் இன்னும் சின்னதாகத் தொட்டுக்கொள்ளக்கூட இல்லை என்பதை யார் நம்புவார்கள்?
“ப்ளீஸ், நான் அந்த அலமாரிக்குப் பின்னால் போயிடறேன். அப்புறமா கதவைத் திறங்க” – சன்னமாகச் சொல்லிவிட்டு சரேலென அகன்றாள். கண்ணில் நீர் குத்தியது.
கதவைத் திறந்ததும் உள்ளே வந்த அந்த நண்பனை அவளும் அறிவாள். ஒருவேளை அவளைப் பார்த்தும் பாராததாய் பாவனை செய்யும் பெருந்தன்மை வாய்க்கப்பெற்றிருக்கலாம் அவன்.
ஏறத்தாழ 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் அந்த இரண்டு ஆண்களும். சினிமாக்களில் வருவதுபோல் அப்போது பார்த்து தனக்குத் தும்மல் வந்துவிடக்கூடாதே என்று பதற்றமாயிருந்தது அவளுக்கு.
பின், இருவரும் வெளியே செல்லும் ஓசை கேட்டது.
இரண்டு மூன்று நிமிடங்கள் அலமாரிக்குப் பின்னாலேயே அசைவர்று நின்றுகொண்டிருந்தவள் மெதுவாக எட்டிப் பார்த்து மறைவிலிருந்து வெளியே வந்தபோது வெளியே மழையின் பேரோசை கேட்கத்தொடங்கியது.
அறை நடுவிலிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கையிலிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து இரண்டு மூன்று மிடறுகள் குடித்துத் தன்னை நிதானப் படுத்திக்கொண்டவள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் கீழேயிருந்து தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்று சஞ்சலத்தோடு அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். பின், மெதுவாக எட்டிப்பார்த்தபோது கீழே மழைவெள்ளம் பெருகியோடிக்கொண்டிருந்தது. “அணை உடைந்துவிட்ட தாம் – ஆற்றுவெள்ளம் எங்குபார்த்தாலும்” என்று யாரோ அலறிக்கொண்டே தகவல் தெரிவித்தபடி ஓடிக்கொண்டிருப்பது கண்டது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவளிருந்த அறையின் கதவிடுக்கு வழியாக நீர் உள்ளே வரத் தொடங்கியது.
அதிர்ந்துபோய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அறையினுள் நீரின் மட்டம் உயரத்தொடங்கியது.
வேகமாக ஓடிச்சென்று கதவைத் திறக்க முயன்றாள். கதவு வெளிப்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. ஒருவேளை அவன் பூட்டியிருக்கலாம். அவன் எங்கே யாவது நீரில் அகப்பட்டுக்கொண்டிருக்கக்கூடாதே… பாவம், வழக்கம் போல் தன்னுடைய இயல்புக்காகத் தன்னைத்தானே நொந்துகொண்டிருப்பான்.. அவனால் முடிந்தால் கண்டிப்பாக இதற்குள் வந்திருப்பான்… கடவுளே, அவனுக்கு ஒன்றும் ஆகியிருக்கக்க்கூடாது…..
கூவிப் பார்த்தாள். அறைக்கு வெளியே எல்லோரும் அவசர அவசரமாய் அங்கேயிங்கே ஓடுவதும், தேடுவதும் ஒரே இரைச்சலாக இருந்தது. வீதியில் அதைவிட நாராசமான பேரோசை.
தண்ணீர் முழங்கால் வரை வந்துவிட்டதும் அவசர அவசரமாக அங்கிருந்த மரப்படிகளில் ஏறி மேலேயிருந்த மரப்பரணில் படுத்துக்கொண்டாள். அமரலாமென்றால் தலை இடித்தது. ‘கடவுளே, அவனுக்கு ஒன்றுமாகியிருக் காது…. அவன் திரும்பிவந்துவிடுவான்… சிறு முத்தத்திற்கும் கொடுப்பினை இல்லை. அதனாலென்ன, பரவாயில்லை…. இருவரும் உயிரோடிருந்தால் போதும்…. பின், இழந்த சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்ளலாம்….
அறையின் முக்கால் உயரத்திற்கு வெள்ளம் புகுந்துவிட்டபோது கவிழ்ந்து படுத்துக்கொண்டு அந்த மரப்பலகையைச் சுற்றி இரண்டு கைகளையும் இறுகப்பிணைத்துக்கொண்டாள்.
வந்த களைப்பில் உறங்கிவிட்டாளோ….. கண்விழித்துப்பார்த்தபோது அவள் படுத்திருந்த பலகை தனியாக வெள்ளத்தில் மிதந்துபோய்க்கொண்டிருந்தது. ‘அவனுக்கு ஒன்றும் ஆகியிருக்கக்கூடாது – பாவம்….’ என்ற எண்ணம் நினைவு தப்பும் வரை அவளுக்குத் திரும்பத்திரும்ப வந்துகொண்டேயிருந்தது…..
ஊரே வெள்ளக்காடாக மாறியிருந்தது. அவசர முகாம்களில் அவரவர் தத்தமது மனிதர்களைத் தேடியோடிக்கொண்டிருந்தனர். அடித்துக்கொண்டு போன வெள்ளம் அவளை கடலின் அடியாழத்தில் கொண்டுசேர்த்து விட்டதோ… அவள் உடல் கிடைக்கவேயில்லை. அதைத் தேட அவன் இருந்திருப்பானா என்ற கேள்விக்கு விடையும் கிடைக்கவில்லை.
ஆனாலும், அந்த மங்கலான, தூரத்துப் புகைப்படம் மட்டும் இன்றளவும் அப்போதைக்கப்போது ஏதாவது தமிழ், ஆங்கில தினசரிகள், வாராந்தர, மாதாந்தர இதழ்களில் வெளியாகியபடியே…..
ஊஞ்சல் போன்ற நீள்பலகையொன்றின் மேலே முப்பது வயதிருக்கக்கூடிய பெண் குப்புறப்படுத்து கைகளால் இருபுறமும் அந்தப் பலகையை இறுகப் பிடித்தபடியே பெருகும் வெள்ளத்தில் மிதந்தபடியிருக்கும் தெளிவற்ற காட்சி……
***