திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதை

This entry is part 2 of 3 in the series 12 அக்டோபர் 2025

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

எங்கிருந்துதான் அத்தனை சேறும் சகதியும் தூசும் தும்பும் 

குப்பையும் கூளமும் சிறுநீர்மலமும் கூட

கிடைத்ததோ

இருகைகளாலும் அள்ளிக்கொண்டது போதாதென்று இருக்கும் பைகள் பாக்கெட்டுகள் எல்லாவற்றிலும் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து

அப்படி ஆவேசமாய் வீசியெறிந்து 

அதுபோதாதென்று காறித்துப்பி

எதிரேயிருப்பவரின் முகமெங்கும் மேனியெங்கும் திப்பிதிப்பியாய்அப்பியிருக்கும் 

அந்த அழுக்கை அசிங்கத்தையெல்லாம் பார்த்து 

அப்படி ஆனந்திப்பவர்கள்

கைகளில் பிசுபிசுக்கும் சக்தியை வெகு நாசூக்காய்

கைக்குட்டையில் அல்லது சட்டையின் கீழ் விளிம்பில் 

அல்லது துப்பட்டாவில் 

அல்லது கைவசமுள்ள டிஷ்யூ தாளில் 

நாசூக்காய் துடைத்தபடி அங்கிருந்து நகர்கிறார்கள்

அவரவர் முதுகிலுள்ள அழுக்கை 

முற்றிலும் மறந்துபோனவர்களாய்

உத்தமபுருஷன்

இரண்டு ஆயுள்தண்டனைக் காலத்திற்கும் மேல்

சமூகத்தின் திறந்தவெளிச் சிறையில் 

கழித்துமுடித்துவிட்டுவந்தவன் 

கிழிந்து நைந்திருந்த கித்தானை சீர்படுத்தி

தனக்குப் பிடித்த சித்திரந்தீட்டத் தொடங்கினான் 

இப்பொழுது.

ஆகாவென்றெழுந்தன குரல்கள்

’விட்டேனா பார் அந்தக் கொலைகாரக் கணவனை’ 

என்று ஆங்காரமாயெழுந்தவனை 

ஏறிட்டுப் பார்த்த அவன் மனைவி சொன்னாள்:

கற்புடைக் கணவனாய் கூட அழைத்துப்போகும் நேரமெலாம் 

எதிர்ப்படும் பெண்களைக் கண்களால் கெடுப்பதை

கண்டுங்காணாமலிருப்பதும்

கண்றாவிக் கதையெழுதி ஒண்ணாந்தர படைப்பாளியாய்

தன்னைத்தான் பீற்றிக்கொள்ளும் 

கொண்டவனின் சுயபுராணத்தை சதாசர்வகாலமும் 

கண்ணகலக் கேட்பதும்

கொடுமையோ கொடுமைதான்

நான் இன்னும் செத்துதொலைக்காததால் 

நீர் உத்தமபுருஷன். அவ்வளவே’ 

Series Navigation அன்றொருநாள்…..அதெப்படி?  எங்கே சாவானாலும் எங்கள் சவாக இருக்கிறதே?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *