ஏ.நஸ்புள்ளாஹ்
♪
ஒரு இரவு, நேரம் எது என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. சுவரில் கடிகாரத்தின் ஊசிகள் கூட அசையாமல் நின்றிருந்தன. வெளியில் சத்தங்கள் இல்லாத அமைதி. ஆனால் அந்த அமைதிக்குள் ஒரு நுண்ணிய அதிர்வு இருந்தது. யாரோ நடக்கிறார்கள், யாரோ இருக்கிறார்கள் போன்ற தோற்ற அசைவு இல்லாமலில்லை.
அந்த அறைக்குள் ஒருவர் படுத்திருந்தார். அவர் விழித்திருந்தாரா அல்லது கனவில் இருந்தாரா என்று அவருக்கே தெரியவில்லை. கண்கள் திறந்திருந்தாலும் பார்வை எங்கோ தொலைவில் போயிருந்தது. அவர் இழுத்துவிடும் பெருமூச்சு பெரியதா சிறியதா என்று கூட அவர் உணரவில்லை. உலகமே அவரிடம் இருந்து விலகிச் செல்வது போல இருந்தது.
அறையின் சுவர்கள் மெதுவாக பின்னோக்கி நகர்ந்தன. மேசை, நாற்காலி, அலமாரி எல்லாம் தூரத்துக்கு சென்று கொண்டிருந்தன. அவர் சற்றும் அசையவில்லை. அவர் பார்வையில் இருந்தவை அனைத்தும் இப்போது கரையத் தொடங்கின.
நீங்கள் வாசித்தூக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்களுக்கு அந்த அறை எப்படி இருக்கிறது என்று தோன்றுகிறது? ஒரு சாதாரண அறைதானா? இல்லை உங்கள் கனவில் நீங்கள் பார்த்தது போல வேறொரு வடிவமா? இந்தக் கதையின் புள்ளி என்னவென்றால், நீங்கள் எப்படித் நினைக்கின்றீர்களோ அல்லது நம்பிக்கை கொள்ளுகிறீர்களோ அது அந்த அறையின் வடிவம்.
அவர் கண்களை மூட முயன்றார் ஆனால் அவருக்கு பயம் எழுந்தது. கண்களை மூடினால் இருட்டு அதிகமாகும். அந்த இருட்டில் யாரோ நிழலாய் வந்து நிற்பார்கள் போல. கண்களைத் திறந்தால் பொருள்களின் விலகல் இன்னும் வேகமடையும். அல்லது கரைந்துகொண்டு போகும் இரண்டும் அவருக்கு சிக்கலாக இருந்தது.
அந்த நேரத்தில் வெளியிலிருந்து ஒரு சத்தம் கேட்டது தண்ணீர் விழும் சத்தம். ஒரு சிறிய குட்டையில் விழும் துளி சத்தம் போல சாதாரணமாக இருந்தாலும் அது அவருக்கு ஒரு எச்சரிக்கையாகக் கேட்டது. ஒவ்வொரு துளியும் விழும் போதும், அவர் உள்ளுக்குள் திடுக்கிட்டார். அந்த ஒலி அவரை ஏதோ நினைவூட்டியது. ஆனால் நினைவு என்ன என்பதைச் சொல்ல முடியவில்லை. பெயரற்ற, வடிவமற்ற ஒரு நினைவு.
அவர் பக்கத்தில் இருந்த தலையணையை மார்போடு இறுகப் பிடித்தார். அந்தச் அணைப்பால் ஒருவித நிம்மதி கிடைத்தது. ஆனால் அதே நேரத்தில் அச்சமும் வந்தது. யாரோ அந்த தலையணையின் உள்ளே மறைந்து இருப்பதை போல பீதி அவர் திடீரெனத் தலையணையைத் தூக்கி எறிந்து விட்டார்.
அந்த நேரத்தில் அவர் ஒரு குரலைக் கேட்டார். எங்கிருந்து வந்தது தெரியவில்லை. உள்ளத்திலிருந்தோ, வெளியில் இருந்ததோ, கனவிலிருந்ததோ என்று பிரித்தறிய முடியவில்லை. குரல் யாருடையது என்பதையும் அவரால் சொல்ல முடியவில்லை. அது ஒருவிதத்தில் பழக்கமானதாகவும், அதே நேரத்தில் புதியதாகவும் இருந்தது.
அந்தக் குரல் சொன்னது “நீ தேடுவதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.”
அவர் திடுக்கிட்டார் அவர் உண்மையில் ஏதாவது தேடிக்கொண்டிருந்தாரா? அவர் மனதை ஆழமாகப் பார்த்தார். உண்மையில் ஏதோ ஒன்று தொலைந்து போயிருந்தது. அது ஒரு பொருளா? ஒருவரா? ஒரு நினைவா? இல்லை ஒரு உணர்ச்சியா? எதுவென்று சொல்ல முடியவில்லை. ஆனால் அவர் ஏதோ ஒன்றை இழந்திருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை.
நீங்கள் இதுவரை உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை இழந்ததுண்டா? ஒருவேளை நீங்கள் கூட அந்தத் தேடலின் பாதையில் இருக்கலாம். இந்தக் கதையின் இடைவெளிகளில் உங்களின் சொந்த இழப்புகள் கூட காட்சியாக அமையலாம்.
அவர் எழுந்து அமர்ந்தார். அறை இன்னும் கரைந்துகொண்டே இருந்தது. அவர் நடக்கத் தொடங்கினார். ஆனால் அவர் எங்கு செல்கிறார் என்பதை அறியமுடியவில்லை. கதவு இருக்க வேண்டிய இடத்தில் சுவர் இருந்தது. சுவர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பாதை திறந்தது. அந்தப் பாதை அவரை நகரின் மையத்துக்கு அழைத்துச் சென்றது.
நகரின் மையத்தில் மக்கள் நிரம்பியிருந்தார்கள். எங்கோ எல்லோரும் வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்தார். ஒவ்வொரு முகமும் அவருக்குத் தெரிந்தது போல இருந்தது. ஆனால் அடையாளம் காண முடியவில்லை. எல்லாமே பாதி முகங்கள்.வெளிச்சமும் நிழலும் கலந்து இருந்தன. அவரால் யாரையும் சரியாகப் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர் தன்னையே அவர்களுக்குள் தேடிக்கொண்டிருந்தார்.
அவர் ஒரு மரத்தின் கீழ் நின்றார் அந்த மரம் பெரிதாகவும் பழமையானதாகவும் இருந்தது. கிளைகள் வானத்தை மூடியிருந்தன நிழல் பரவலாகக் கிடந்தது. அங்கே அவர் தரையில் ஏதோ ஒன்றைக் கண்டார். அது ஒரு பை. பழையதும் அழுக்கானதுமாக இருந்தது. அவர் அதை எடுத்தார். பை மிகவும் கனமாக இருந்தது.
அவர் அதைத் திறக்க நினைத்தார் ஆனால் அஞ்சினார். உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருந்தது. பையில் அவரது இழந்த நினைவு இருக்கலாம். ஒருவேளை வெறும் கற்கள்தான் இருக்கலாம். ஒருவேளை பையின் உள்ளே வார்த்தைகள் இருக்கலாம். அவர் வாழ்ந்ததெல்லாம் அங்கே எழுதப்பட்டிருக்கும்.
அவர் பையைத் திறந்தாரா? இந்தக் கதை அதைப் பற்றி சொல்லவில்லை. ஏனெனில் உண்மை எதுவும் இல்லை. உணர்வுகளே உள்ளன. பை அவரிடம் இருக்கிறது. ஆனால் அது உங்களிடமும் இருக்கிறது. நீங்கள் அதைத் திறக்க வேண்டிய நேரம் வரும்.
இங்கே கதை முடிவடையலாம். ஆனால் அது உண்மையில் முடிவடையவில்லை. அவர் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் கூட தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தத் தேடல் ஒருபோதும் நிறைவடையாது.