அன்று
பிஞ்சு என்னைக்
கொஞ்சிய தஞ்சை மண்
இன்று என முதுமையை
கொஞ்சுகிறது
70 ஆண்டுகள்
ஊர் ஊராய்ச் சுற்றியபின்
சொந்த மண்ணில் சங்கம்ம்
சோழனின் நாணயம் நான்
எனக்கு மரணமில்லை
நான் வாழ்ந்த கதை
வரலாறாகலாம்
வீட்டுக் கொல்லையில்
பன்னீரப் பூமழை
அள்ளிக் குவித்து
முத்தமிட்டேன்
மேகம் காகம் பார்க்க
குளிக்கிறேன்
பள்ளித்தோழனோடு
பதநீர் நுங்கு சுவைக்கிறேன்
ஆப்பக்கடை அம்மு பேரனுக்கு
ஆயிரம் தந்தேன்
அன்றைய காலணா கடனை
இந்த ஆயிரம் அடைக்குமா?
சட்டை துவைத்த
பலகைக் கல்லை
கழுவி முத்தமிட்டேன்
பால்க்கார கோனார் பேரன்
ஆவின் பால் விற்கிறான்
கோனாரின் மாடுகள்
எவனெவன் தப்புக்கு
தோல்களானதோ?
வீட்டுப்பல்லி என்னை
அந்நியனாய்ப் பார்க்கிறது
பெட்டிக்கடை குட்டையன் பேரன்
‘பிரிண்டிங்’ செய்கிறான்
சில கவிநைகளை
நகலெடுத்தேன்
கொல்லுப்பட்டரை ரங்கன்வீடு
இப்போது படக்கொட்டகை
‘தக்லைஃப்’ பார்த்தேன்
எருக்கு மொட்டு உடைத்தேன்
சிந்துபாத்தின் பயணம்
தினத்தந்தியில் 23737ஆம் நாள்
தலைக்குமேல் முழு நிலா
முழு வானும் என் வசம்
சைக்கிள்கடை
மாட்டுவண்டி
விறகுவண்டி
புல்லுக்கட்டு
வண்ணான்
குளம் கிணறு
கோலி பம்பரம்
கிட்டிப்புல்லு
அம்மி ஆட்டுக்கல்
அனைத்துக்கும் என்றோ
கண்ணீர்அ்ஞ்சலி
வாசல் கோலம்
விடியல் சேவல்
இன்றும் அப்படியே
வாழ்ந்தது கிடைக்காது
வாழ்ந்த நினைவுகள் வாழும்
என் கதைகளில் கவிதைகளில்
அது போதும்
அமீதாம்மாள்