3 கவிதைகள்

Spread the love

 

வசந்ததீபன்

(1) அப்பாலும் இருள்வதினூடாக ஒளி 
______________________________________
 
உலகம் இருக்கும் ஆனால் அப்படியேவா…இருக்கும் ?
மனிதன் இழக்க இழக்க… 
இழந்தது திரும்புமா ?
அதே பொருட் செறிவில்?
இழப்பில் உலகம் 
அப்படியே இருப்பதில்லை
மனிதம் தான் கவித்வம்
நேசம் தான் வாழ்வின் திறவுகோல்
எளிய வாழ்க்கையா  இது ?
கனக்கும் சுமையால் திணறுவது 
பின் ஏன் ?
அவலமும் ஓலமும் சூழ்ந்த
இக்காலத்தில் 
மண்ணில் தலை புதைக்கும் 
நெருப்புக் கோழியாய்
கனவுகளுக்குள் எப்படி 
மயங்கிக் கிடப்பது ?
இன்று பார்ப்பதை 
நாளை பார்க்க முடியுமா ?
மானுடத்தின் 
போதாமைகளையும்
அபத்தங்களையும்
மகத்துவங்களையும்
லெளகீகத் தன்மைகளையும்
விருப்பமும் அச்சமும் துக்கமும்
பகிர்ந்து கொண்டிருக்கின்றன
அணைந்து போனவைகள் தவிர்த்து 
மிஞ்சியுள்ளவை யாவும்
அப்படியேவா இருக்கும் ?
பறவைகளின் மரஞ் செடிகொடிகளின்
வாழ்வினூடாக 
மனிதனும் தன் இருப்பை 
அறிவித்துக் கொள்ள 
காலம் நிர்ப்பந்திக் கொண்டே இருக்கிறது
ஒளி இருள் பெளதீகம்
பயம் வலி வேதனை அரூபம்
யாவும் நிரந்தரம்
யாவும் தற்காலிகம்
மாற்றம் மாறாதது.
 
 
(2) இயற்கையிடம் மன்றாட்டு
___________________________________
 
 
இறஞ்சுகிறோம்
பொறுத்தருள்க!
உணவிட்டாய்
நஞ்சூட்டினோம்
அன்பு கொண்டாய்
விரோதித்தோம்
கருணை காட்டினாய்
புறக்கணித்தோம்
உன் உடலை சிதைத்தோம்
உன் உயிரை வதைத்தோம்
எம் ஞானம்
எம் பராக்கிரமம்
எம் கம்பீரம்
உன் கோப பார்வையில்
உருகி மறையக்கூடியது
எம் சந்தோஷம்
எம் கனவுகள் 
எம் செயல்கள்
உன்னில் விளைந்தவை.
 
பஞ்சபூதங்களால் 
எம்மை ஆள்கிறாய்
பருவகாலங்களால்
எம்மை வழிநடத்துகிறாய்.
 
சாந்தம் கொள்…
எம் பிழைகள்
எம் தப்பிதங்கள்
எம் பாவங்கள்
உன் இதயத்திலிருந்து அழித்திடு.
 
எம் சந்ததி
ஏதும் அறியாதது
இரக்கம் கொள்
மனம் இளகிடு
இயற்கையே
எம்மைக் காத்திட.
 
 
 
(3) அன்பில் ஒளிந்திருக்கும் கொலையின் ருசி
_______________________________________

 
அழகோடு  அலைகிறாள்
இறக்கி  வைக்க  தயக்கம்
சுமந்தலைய  பயம்
ஒற்றை  மான்
தனிமை
உடல்  தளும்பும்  குளம்
விதைத்தான்
கனவுகள்  விளைந்தன
அறுவடை  செய்ய  திரும்பாத இடத்திற்குப்  போனான்
மதம்  பிடித்திருக்கிறது
மிருகத்திற்கு  என்றால்  கட்டிப்  போடலாம்
மனிதனுக்கென்றால்  என்ன  செய்யலாம்  ?
அதிகாரம்  ரத்தத்தால்  எழுதப்படுகிறது
அடிமைத்தனம்  பயத்தால்  வரையப்படுகிறது
சமத்துவம்  விடுதலை  வெளி அழிய
தப்பானது  அதிகாரம்
கண்மூடித்தனமாய்  வெறியாடும்
தந்திர  எதிர்ப்பில்  நிர்மூலமாகும்
பலி  மேடைக்கு  இழுத்து வந்திருக்கிறாய்
வெட்டாமல்  வியாக்கினம் பேசுகிறாய்
உன்  அன்பில்  
நதிச்  சுழிப்பின் தனிமை தள்ளாடுகிறது
ஒவ்வொரு  நொடியும்  
கரை  சேர  காலம்  வருமாவென தவிக்கிறது மனது
சித்தர்கள்  பலர்  வந்தனராம்
சித்துக்கள்  கணக்கற்று நிகழ்ந்தனவாம்
சத்தியம்  தழைக்கவில்லை
கடலில் மூழ்கியது போல 
திணற
அல்லாடும் கணத்தில்
அழகின்  புயலில்  நான்  சிக்கித் தவிக்கிறேன்
குஞ்சுகளைத்  தழுவி  நிற்கிறது தாய்க்கோழி
அடைக்கலத்தைக்  குஞ்சுகள் தாண்ட  முயல்கின்றன
அன்பின்  வேலி  வலுவானது
முத்தங்கள்  அருவருப்பானவை அல்ல
அன்பின்  செயல்பாடு
நேசத்தின்  வெளிப்பாடு
தொட்டால்  தீட்டு
பட்டால்  பாவம்
விஷ மரம் வேரோடு சாயட்டும்.


 
வசந்ததீபன்
 

 
Series Navigationகொலுசுஇரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு