அவன், அவள். அது…! -2

This entry is part 3 of 16 in the series 20 செப்டம்பர் 2015

( 2 )

      அடடா….ரொம்பத் தப்பாச்சேடா கண்ணா…அவளாத்தான் புறப்பட்டுப் போனான்னு நீ சொல்லலாமா….? இது உன் மனதுக்கு அசிங்கமாயில்லே? கண்ணியமான வாழ்க்கை வாழறவங்க நாம. சுற்று முற்றும் இருக்கிறவங்க எதுவும் தப்பாப் பேசிடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கிறவங்க…அவங்ககிட்டே நமக்கு ஒரு மரியாதை கிடைக்கணும்னு எதிர்பார்க்கிறவங்க….அமைதியா, அழகாக் குடும்பம் நடத்துறவங்கன்னு எல்லாரும் நினைக்கணும்னு விரும்புறவங்க….நாம போய் இப்படிச் செய்யலாமா? சொல்லு…உனக்குத் தெரியாததா இது?

வெளியே வந்ததும் வராததுமாக இனியும் தாமதிப்பதில் பலனில்லை என்பதுபோல் சித்தப்பா ஆரம்பித்து விட்டது தெரிந்தது. இடையில் புகுந்து பேச முடியாது. அவர் நினைப்பது அனைத்தையும் சொல்லி முடிக்கட்டும், பிறகு பேசுவோம் என்று நினைத்தான். குறுக்கே புகுந்து பேசினால், அவரது பேச்சை மறுப்பது போல் ஆகும். அல்லது அவரது பேச்சையே கேட்க விருப்பமில்லை என்பதாக நினைக்கக் கூடும். என்னைப் பேசவே விடலண்ணா…? என்று அப்பாவிடம் போய் சொல்வார். அப்பா தன்னைத் தவறாக நினைக்க வாய்ப்புண்டு. சித்தப்பாவை மதிக்காமல் அனுப்பிவிட்டதாக வருந்துவார். சித்தப்பாவே இங்கிருந்து கிளம்பும்போது மனம் வருந்திப் போனால் அதுவே தனக்கு ஆகாது. பிறகு அதை நினைத்து வேதனைப் பட வேண்டும். ரொம்பவும் நிதானமாகவும், பொறுமையோடும் செயல்பட வேண்டிய தருணம் இது.

இவ்வளவு நாளில் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குடும்பமா வாழ்ந்திருக்கீங்க…ஊரு உலகம் பார்க்கிறமாதிரி இருந்து, அன்றாடம் வாழ்ந்து, வெளில போயி, வந்து கழிச்சிருக்கீங்க…எல்லாரும் பார்க்க மகிழ்ச்சியாயிருந்திருக்கீங்க…ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவோ புரிஞ்சிட்டிருப்பீங்க…ஆத்மார்த்தமா ஒரு நெருக்கம், அன்பு, பாசம் எல்லாமும் ஏற்பட்டிருக்கும். அது எதுவுமே உங்களைத் தடுக்கலியா? ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தருக்குக் கூடவா இதுல எதுவும் உறைக்கல்லே? உணர்ச்சி உள்ளவங்கதானே நீங்க…வெவ்வேறுவிதமான மன வியாகூலங்களுக்கு ஆட்பட்டவங்கதானே…? மனுஷ மனம்ங்கிறது அத்தனை சாதாரணமானதில்லையே…

என்ன பேசுவது? இன்னும் அவர் முடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்படிக் குறுக்கே புகுவது? எல்லாவற்றையும் சொல்லி முடிக்கட்டும்…. – வாளாவிருந்தான் கண்ணன்.

எவ்வளவோ புத்தகம் படிக்கிறீங்க…எத்தனையோ விஷயங்களைப் புருஷன் பெண்டாட்டி வித்தயாசம் பார்க்காம அலசுறீங்க….மூத்த தலைமுறை கூச்சப்பட்ட எத்தனையோ விஷயங்களை நிறைய வெளிப்படையாப் பேசிக்கிறீங்க…அத்தனையும் உங்களை நீங்க வெளிச்சமா வச்சிக்கிறதுக்குன்னு சொல்றீங்க…எங்க மனசுல எதுவுமில்லே, எல்லாமும் யதார்த்தமானதுதான் எங்களைப் பொருத்தவரைன்னு பெருமையாச் சொல்லிக்கிறீங்க…? – பரவால்லியேன்னு எல்லாரும் உங்களைப் பார்த்துப் பெருமைப் பட்டுட்டிருக்கிற நேரத்துல, சந்தோஷப் பட்டுட்டிருக்கிற தருணத்திலே…இதென்னப்பா சண்டை…? இப்படியென்னப்பா ஒரு பிரிவு? புரியவே மாட்டேங்குதே…எங்களால உங்களைப் புரிஞ்சிக்க முடிலயா? அல்லது நீங்க எங்களைப் புரிஞ்சிக்கலையா?

சொல்லிக்கொண்டே வந்த சேதுராமன், கடை நெருங்கியதுமே பேச்சை நிறுத்திவிட்டு, அங்கிருந்த தினசரியைக் கையில் எடுத்தார். பெஞ்சில் அமரப் போனார்.

என்ன சித்தப்பா, இங்கேயா…? ஏதாச்சும் Nஉறாட்டலுக்குப் போவோமே…? – கடைக்காரன் காதில் விழாமல் மெல்லக் கேட்டான் கண்ணன்.

ஏண்டா…ரோட்டுக் கடையேன்னு பார்க்கிறியா? இங்கேயிருந்துதாண்டா நம்ம நாட்டுல நிறையப் பேர் உயர் பதவிகளுக்குப் போயிருக்காங்க…ஆட்சியையே கூட நிர்ணயிக்கிற இடத்தைப் பிடிச்சிருக்காங்க…கடையைப் பார்க்காதே…காபியைப் பாரு…ருசியாத் தர்றாராங்கிறதை மட்டும் பாரு….நீ தனியா வந்தா இங்கதானே சாப்பிடுவே…அந்தப் பழக்கத்தை ஏன் விடுறே? நானும் சாப்பிடுவேன் இங்கே…எனக்கு ஒண்ணும் கெளரவக் குறைச்சல் இல்லே…இப்படிக் காற்றாட பெஞ்சுல உட்கார்ந்து பேப்பர் படிக்கிற சுகம் எங்கடா கிடைக்கும்? நீ ஆர்டர் பண்ணு…என்னைப் பார்த்திட்டு ஸ்பெஷலாப் போடுவார்….அந்த மனசு இங்க இருக்கிறவங்களுக்குத்தாண்டா வரும்….சொல்லு…..சொல்லு….

ஆள் பெரிய திட்டத்தோடுதான் வந்திருக்கிறார். வந்ததிலிருந்தே இவர் பேச்சு பெரிய எடுப்பாகத்தான் இருக்கிறது. ஒரு வழி பண்ணாமல் இங்கிருந்து இவர் நகரப் போவதில்லை. நினைத்துக் கொண்டான் கண்ணன். இரண்ட்டி தள்ளியே உட்கார்ந்தான். இடையில் வேறு யாரேனும் அமரலாம். அதன் மூலம் பேச்சு கொஞ்ச நேரம் ஓயும். தினசரியில் ஒரு தாள் மட்டும் யாரும் சீந்துவாரின்றிக் கிடந்தது. எடுத்தான். வார ராசி பலன் போட்டிருந்தது. கும்பத்திற்குக் கீழே பார்வை போனது.

இந்த ராசிக்காரர்களுக்கு இது பிரச்னையான வாரம். நண்பர்களோடும், உறவுகளோடும் வார்த்தையாடல்கள் கூடாது. அமைதியும், நிதானமும், கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பொறுமையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். சிக்கல்கள் தானே தீர்ந்து போக வாய்ப்ப அதிகம்.

இந்த வார ராசியின் தொடக்கம்தான் சித்தப்பாவின் வருகை போலும் என்று நினைத்துக் கொண்டான் இவன். அருகே அவரை நோட்டமிட்டான். செய்தித்தாள் கையில் கிடைத்ததும், அதில் ஆழ்ந்து விட்டார் மனிதர். எதையும் ஊன்றி நோக்குவதே, கருத்தாக எதிர்கொள்வதே அந்தக் கால மனிதர்களின் பழக்கம். அதுவே இப்போது இவரிடம். இவர் இப்போது இங்க உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் ஏற்கனவே அவர் இங்கு வந்திருப்பவர் போலவும், அடிக்கடி வந்து செல்லக் கூடிய இடம் போலல்லவா ஆழ்ந்துவிட்டார். அரசியல் பிடிக்கும் அவருக்கு. அதிலும் லோகல் பாலிடிக்ஸ் லட்டு மாதிரி. அவன் செய்தது நியாயம்தானே என்றால் அன்னைக்கு அப்படிச் செய்தான், இன்னைக்கு இப்படிச் செய்றான், எதிர்ச்கட்சில அவங்க செய்யலியா…இங்க இருந்தா இப்படி…இவங்களே அங்க போனா அப்படி…எல்லாம் ஒண்ணுக்கொண்ணு நியாயம்னு நினைச்சிக்க வேண்டிதான்…என்று வியாக்கியானமாகப் பேச ஆரம்பித்துவிடுவார். அதற்கேற்றாற்போல் ஓரிரண்டு கட்சிப் பத்திரிகைகளும் அங்க கிடந்தன. சரிதான், இன்னைக்கு இவர் கிளம்பினாப்லதான்…என்று நினைத்தான் இவன். அலுவலகம் அன்று அவனுக்கு விடுமுறை. இஷ்டம்போல் படித்து முடித்துவிட்டு வரட்டும் என்று இவனும் செய்திகளைப் புரட்ட ஆரம்பித்தான். தலைப்புச் செய்திகளோடு சரி, அதற்கு மேல் மனம் ஊன்றியதில்லை. எல்லோரும் அயோக்கியர்கள் என்ற நினைப்பு உண்டு. அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். எவனும் நியாயஸ்தன் இல்லை. சந்தர்ப்பத்திற்குத் தகுந்தமாதிரிப் பேசிக் கொண்டு போகிறார்கள். மக்களும் ஸ்வாரஸ்யமாக ரசிக்கிறார்கள். அவர்களின் தவறுகளை மறந்து விடுகிறார்கள். சொல்லப் போனால் மக்களுக்கு அவர்களின் நேர்மையான உணர்வை மாற்றி, தவறு செய்யக் கற்றுக் கொடுத்தவர்களே இவர்கள்தான். தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி. இப்போது மக்களும் அவ்வழி. அல்லது எவ்வழி. யாருக்கும் தப்பாய் நடப்பதில் வெட்கமில்லை. தவறு செய்வதில் அச்சமில்லை. நாணமில்லை. எல்லோரும் நிர்வாணமாய் நிற்கிறார்கள். உலகம் இந்த அளவுக்குத்தான் இருக்கிறது இன்றைய நாளில்.

இஷ்டம்போல் படிக்கட்டும். நன்றாய் ஆசை தீரப் படித்து முடித்துவிட்டு வரட்டும் என்றிருந்தான். இவன் பக்கத்தில் இருக்கிறான் என்பதே அவருக்கு மறந்து விட்டது போலிருந்தது. போகும் வழிக்கு ஒரு பேப்பரை வாங்கிக் கொண்டு போய்விடலாம்தான். இவர் ஆழ்ந்து படிப்பதைப் பார்த்தால் அடுத்தாற்போல் அடுத்தவர் படிப்பதற்கு அதில் எழுத்து இருக்காது போலிருக்கிறது. அத்தனையையும் அப்படி உள்வாங்கி விடுவாரோ? இவனுக்கு அத்தனை சுறுசுறுப்பாய் செய்திகள் ஓடவில்லை. எப்படியாவது ஆளைக் கிளப்பி விட்டால் போதும் என்பதாகத் தோன்றியது. அது அத்தனை சீக்கிரம் சாத்தியமா என்றும் தோன்றியது. மனிதர் எதிலும் அத்தனை சீக்கிரம் தலையைக் கொடுக்க மாட்டார். கொடுத்தால் இரண்டில் ஒன்று பார்க்காமல் விட மாட்டார். அப்பா அனுப்பிய பிரதிநிதி. அவருக்கு ஊர் போய் நல்ல செய்தி சொல்ல வேண்டும். நிச்சயம் அதுவே அவரின் பிரார்த்தனையாக இருக்கும். அப்படி நோக்கமாய் வந்தவர் இப்படி ஆழ்ந்துவிட்டதுதான் அதிசயம். உற்றார் பிரச்னை, ஊரார் பிரச்னை என்று பேசிப் பேசியே காலம் கழிந்து விட்டது.

வாழ்க்கையில் சொந்த அனுபவங்கள்தான் ஒருவனைப் பக்குவப் படுத்துமென்றால் அது இவரைப் பொறுத்தவரை தவறு. எதிராளியின் அனுபவங்களிலேயே தன்னைப் புடம் போட்டுக் கொண்டவர் சேதுராமன் சித்தப்பா. அவரைப் பதப்படுத்தியது அவர் கண்ணுற்ற, உள்வாங்கிய வாழ்க்கை. அவர் மனிதர்களைப் படித்தவர். இந்த உலகத்தைப் படித்தவர். அவரின் அனுபவச் செழுமையின் முன்னால் நாமெல்லாம் ஒன்றுமில்லை. நினைத்துக் கொண்டான் கண்ணன். பிரச்னை என்று வந்துவிட்டால் அவர் கடைப் பிடிக்கும் நிதானம் அளவிடற்கரியது. அதுதான் அவருக்கு வெற்றியையும், சுற்றத்தையும் தேடித் தந்திருக்கிறது. இவரை வேண்டி விரும்பி அருகில் அமர்த்திக் கொண்டுள்ளது. எந்தவொரு விஷயத்தையும் எப்படி அணுகுவது என்பதை அவரிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி நினைத்தபோதுதான் தான் தன்னுடைய விஷயத்தை அணுகிய விதம் சரியில்லையோ என்று தோன்றியது இவனுக்கு.

நான் போகச் சொல்லலை…அவளாகத்தான் போனா….

சற்று நேரத்திற்கு முன் சித்தப்பாவிடம் சொன்ன வார்த்தைகள்.

ஏன் போனாள்? – கண்ணன் இப்போது அந்தக் கேள்வியைத் தன்னை நோக்கியே கேட்டுக் கொண்டான்.

(தொடரும்)

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை 5தோற்றம்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *