எதுவும் வேண்டாம் சும்மா இரு

Spread the love

முல்லைஅமுதன்

போராடச் சொல்லி
அம்மாவால்
சொல்லித் தர முடியவில்லை.
அரசியல் சொன்ன அப்பாவால்
அக்
கதைகளுக்குள்ளேயே
முடங்கிப்போனார்.
காவல் நிலையத்தில்
களங்கப்பட்ட
அக்காளை
மௌனமாக இரு என்
வெந்நீரில்
குளிக்கவைத்து
பாடசாலைக்கு
மீண்டும் அனுப்பினாள்.
கிட்டிபுல் விளையாடப் போன
தம்பியின் வருகை
இன்னும் தாமதமாகியே போனது.
அண்ணன்
இன்னும் காணாமல் போனோர்
பட்டியலில் தான்..
தருமன் தேர்தலில் வென்றான்
கைதட்டி மகிழ்ந்தோம்.
தர்மம்
தோற்றதை
மறந்து போய் நிற்கிறோம்.
முன்
வீட்டுச் சிறுவன்
அவர்களுக்கு
கல்லெறிந்து கோபத்தை வெளிக்காட்டுகையில் கூட
அம்மா
வீட்டுக்குள் எம்மை
அடைத்து வைத்தாள்.
எதுவும் வேண்டாம்
சும்மா இரு என்று சொன்னாள்.
ஆயின்
கோபம் வருகையில்
எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
கல்
முற்றத்தில்
தூங்கிக் கிடந்தது
எனக்காக…

——–
முல்லைஅமுதன்

Series Navigationசுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்திண்ணை வாசகர்களுக்கு