தொடுவானம் 160. பட்டமளிப்பு விழா

Spread the love
 b

ஆவலோடு எதிர்பார்த்திருந்த !தேர்வு முடிவுகள் வந்தன. யாருமே தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கமாட்டார்கள். பயத்துடன்தான் காத்திருப்பார்கள். ஆனால் எனக்கு முடிவுகள் நேர்முகத் தேர்விலேயே தெரிந்துவிட்டதால் நான் ஆவலுடன்தான் காத்திருந்தேன்.

எதிர்பார்த்தபடியே நான் இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! இனிமேல் நான் எந்தத் தேர்வுக்கும் இரவு பகலாக படிக்கவேண்டியதில்லை. சிங்கப்பூரில் 1954 இல் ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய படிப்பை 1971 இல் முடித்துள்ளேன். இந்த கால கட்டத்தில் நான் எத்தனையோ தேர்வுகளை எழுதியிருப்பேன். படிப்பதும் தேர்வுகள் எழுதி வெற்றி பெறுவதும் எனக்கு சுவையான அனுபவங்களாகவே  அமைந்துவிட்டன. அதற்குக் காரணமும் உள்ளது. ஆரம்பப் பள்ளியிலிருந்தே முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பயின்றாலும் வகுப்பில் நானே முதல் மாணவனாகத் திகழ்ந்துள்ளேன். இந்த நிலை ஆறாம் வகுப்புவரை நீடித்துள்ளது. அதன் பிறகு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற நான்கு வருடங்களும் அப்பாவின் கெடுபிடியால் அந்த நிலை மாறியது. அங்கு என்னால் முதல் மாணவனாக வரமுடியவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அங்கு சேர்ந்துள்ள ஒவ்வொரு மாணவனும் அவனவன் ஆரம்பப் பள்ளியின் முதல் மாணவன். ஆதலால் என் வகுப்பில் ஒவ்வொருவனும் ஒரு முதல் மாணவன்தான்.அவர்களில் நானும் ஒருவன்!

jh

சிறு வயதிலிருந்தே படிப்பதில் மிகவும் நாட்டம் கொண்டுள்ளேன். பாட நூல்கள் படிப்பதோடு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நாவல்கள் இரவல் வாங்கி படிப்பதில் ஆர்வம் கொண்டேன். சிங்கப்பூரின் தமிழ் முரசும் மலாயாவின் தமிழ் நேசனும் நான் விரும்பிப் படித்த தினசரிகள்.அதோடு திராவிடர் இயக்கத்தின் முரசொலி, மன்றம், தென்றல், காஞ்சி ஆகிய வார இதழ்களையும் ஊக்கத்துடன் படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பித்த படிக்கும் பழக்கத்தை கல்லூரியிலும் தொடர்ந்தேன். படிப்பது என்னுடைய பொழுதுபோக்காகிவிட்டது. ஏராளமான நூல்களைப் படித்ததால்தான் எழுதும் ஆர்வமும் உண்டானது. படிப்பதும் எழுதுவதும் என்னுடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டன. இளம் வயதிலேயே நான் சிறுகதைகளும் கட்டுரைகளும் தமிழ் முரசிலும் தமிழ் நேசனிலும் எழுதினேன்.அதோடு மொழிபெயர்ப்பதிலும் என்னால் சிறந்து விளங்க முடிந்தது.

தேர்வுகள் முடிந்துவிட்டாலும், நான் நூல்களைப் படிக்கும் பழக்கத்தை விடமாட்டேன். இப்போதுகூட நான் ஐடா ஸ்கடர் வாழ்க்கை வரலாறு நூலைப் படிக்கத் துவங்கியுள்ளேன். அவர்தான் இந்த உலகப் புகழ் பெற்ற சி.எம்.சி. மருத்துவமனையையும், கல்லூரியையும் உருவாக்கியவர். இனி அவர் பற்றிய நூலை நிதானமாகப் படிக்கலாம். இந்த மருத்துவக் கல்லூரியில் நான் படித்து பட்டம் பெறப்போவதாலும், மருத்துவமனையில் நான் பயிற்சி மருத்துவனாக ஓராண்டு பணி புரியப்போவதாலும் ஐடா ஸ்கடர் அம்மையாரைப் பற்றி  தெரிந்து கொள்வது சாலச் சிறந்ததாகும்.

இன்னும் ஒரு வாரத்தில் பட்டமளிப்பு விழா. அதற்கு நாங்கள் தயாரானோம். மாணவர்கள் அனைவரும் ” சூட் ” அணிந்திருக்கவேண்டும். மாணவிகள் சேலை உடுத்தியிருக்கவேண்டும்.

நாங்கள் பிரியாவிடை விருந்தின்போது அணிந்திருந்த ஆடையை உடுத்திக்கொண்டால் போதுமானது. பட்டமளிப்புக்கு தனியாக ” சூட் ” தைக்க வேண்டியதில்லை.

விழா ஸ்கடர் கலையரங்கில் நடைபெறும். விழா முடிந்ததும் அரங்கின் பின்புறம் உள்ள மண்டபத்தில் இரவு விருந்து. பட்டமளிப்பு விழாவுக்கு நாங்கள் விருந்தினராக எங்கள் வகுப்பு மாணவிகளை அழைக்கவேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர்களுக்கும் விருந்தினர் இருப்பார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை. எங்களின் பெற்றோரும் உறவினரும். பட்டமளிப்பு என்பது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு. அதில் பெற்றோர் கலந்துகொள்ள விரும்புவார்கள். நாங்கள் எத்தனை உறவினர்கள்  வருவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிடவேண்டும்.அப்போதுதான் அவர்களுக்கும் சேர்த்து உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யலாம்.

அப்பா சிங்கப்பூரில் இருந்தார்.அம்மா கிராமத்தில் இருந்தார். ஆதலால் அண்ணனும் அண்ணியும் வருவதாக சொல்லியிருந்தார்கள். அத்துடன் சி.எம்.சி. மருத்துவமனையின் பதிவேடுகள் பிரிவின் தலைமை அதிகாரியான ரூபனும் வர சம்மதித்தார். அவர் எங்கள் உறவினர். பூர்வீகம் தெம்மூர்.

விழாவின் முதல் நாளே அண்ணனும் அண்ணியும் வந்துவிட்டார்கள். அவர்கள் வேலூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டனர். ரூபன் பாலாற்றின் மறுகரையில் விருத்தம்பட்டில் குடியிருந்தார்.

விழா நாள். மாலை ஐந்து மணிக்கெல்லாம் நாங்கள் கலையரங்கின் வெளியே கூடினோம். அங்கு பட்டதாரியின் அங்கிகள் வழங்கப்பட்டன. அதை அணிந்துகொண்டு தலையில் தட்டையான தொப்பியையும் மாட்டிக்கொண்டோம். நான்காம் வகுப்பு மாணவ மாணவியர் மல்லிகைச் சரத்தை இருபுறமும் ஏந்தி வந்தனர். நாங்கள் நடுவில் நடந்து வந்தோம். அந்த மல்லிகைச் சரம் மொத்தமாக நீளமாக இருக்கும். அதை மாணவ மாணவிகள் வரிசையாக நின்று தோளில் சுமந்து வருவார்கள். இந்த காட்சி மிகவும் அழகாக இருக்கும். இது வருடாவருடம் பட்டமளிப்பின்போது கடைப்பிடிக்கப்படும் நிகழ்வாகும். அவர்கள் இவ்வாறு புதுப்  பட்டதாரிகளான எங்களை மல்லிகையின் மணத்துடன் மங்களகரமாக அரங்கினுள் அழைத்துச் செல்வார்கள். நாங்கள் அரங்கின் முன்வரிசைகளின் இருக்கைகளில் அமர்ந்தோம். அரங்கின் அணைத்து இருக்கைகளும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பெற்றோர், உறவினர், விருந்தினர், ஜூனியர் மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். இருக்கைகள் போதாத நிலையில் பலர் அரங்கின் வெளியே நின்றனர்.

மேடைக்கு அன்றைய சிறப்பு விருந்தினரை கல்லூரி முதல்வர் டாக்டர் ஃபென் அவர்களும் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எல். பி. எம். ஜோசப் அவர்களும் அழைத்து வந்தனர். அவர் வேறு யாருமில்லை. தமிழகத்தின் கல்வி அமைச்சர். பேராசிரியர் அன்பழகன்! தி.மு.க. அரசில் கலைஞருக்குப் பின்பு, நாவலருக்கு அடுத்து முக்கிய தலைவர் அன்பழகன்.அவரை நேரில் அருகில் கண்டது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! அவர் கையால்தான் நான் பட்டம் பெறப்போகிறேன்! என்னால் அதை நம்ப முடியவில்லை.

கல்லூரிப் பாடலுடன் விழா தொடங்கியது. அச்சன் ஊமன் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து அவர் எங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சில குறிப்புகள் தந்து அறிமுகம் செய்து வைத்தார். என்னை தி.மு. க. வென்றும் சிறந்த அரசியல் பேச்சாளரென்றும் கூறினார்.
பேராசிரியர் அன்பழகன் ஆங்கிலத்தில் அருமையாக உரையாற்றினார். தமிழகத்தில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் ஆற்றிவரும் மருத்துவப் பணி இயேசு கிறிஸ்து போதித்த அன்பை அடிப்படையாகக் கொண்டது என்றார். ஐடா ஸ்கடர் அம்மையாரின் தூரநோக்கு சிந்தையை அவர் நினைவு கூர்ந்தார். அவருடைய தியாக உள்ளம் கொண்டவர்களாக,  ஒவ்வொரு புதுப்  பட்டதாரியும் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் தரமான தன்னலமற்ற மருத்துவச் சேவையைப்  புரியவேண்டும் என்று எங்களை வாழ்த்தினார். குறிப்பாக மருத்துவ வசதி குறைவாக உள்ள கிராமப்புறங்களில் சேவை புரிவதின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.புதிய மருத்துவப்  பட்டதாரிகளான எங்களுக்கு ஏற்ற வகையில் அவருடைய உரை மிகவும் சிறப்பாக இருந்தது.முன்பு அதே மேடையில் அறிஞர் அண்ணா ஆங்கிலத்தில் உரையாற்றி அனைவரையும் மெய்மறக்கச் செய்தது அப்போது என்னுடைய நினைவுக்கு வந்தது

எங்கள் பெயர் வரிசைப்படி வாசிக்கப்பட்டது. நாங்கள் மேடைக்குச் சென்றோம். கல்லூரிச் சின்னத்தைமுதல்வர் சட்டையில் குத்தி விட்டார். பேராசிரியர் அன்பழகன் பட்டங்களைத்  தந்தார். அது வாழக்கையில் மறக்கமுடியாத நிகழ்வாகும்!

தேசிய கீதத்துடன் விழா முடிவு பெற்றது.பட்டம் பெற்ற நாங்கள் வகுப்பு படம் எடுத்துக்கொண்டோம்.  அண்ணன் அண்ணி ரூபனுடனும் சேர்ந்து படம் எடுத்துக்கொண்டேன்.

அரங்கத்தின் பின்புறம் இரவு உணவு வழங்கப்பட்டது. அது சுடச்சுட சுவையான கோழி பிரியாணி. அப்போது திறந்தவெளி  அரங்கில் ஜுனியர் வகுப்புகளின் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் வழங்கினர் .

விருந்துக்குப் பின்பு அண்ணன் அண்ணி ரூபன் வேலூர் திரும்பினர்.

பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடந்தேறிவிட்டது. இனி நான் மருத்துவப்  பட்டதாரி

          வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயங்களில் ஒன்று அன்றோடு நிறைவேறியது!

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationகிழத்தி கூற்றுப் பத்துஅட கல்யாணமே !