ஆதல்….

Spread the love

 rishi2

மாமாங்கங்களுக்குப் பிறகு பார்க்கிறேன்

ஆத்தும நண்பன் மாணிக்கத்தை.

பேச ஆயிரம் உண்டு…. ஆனால்,

(தொலை) பேசியில் அழைத்தபோதெல்லாம்

பேரனைப் பள்ளிக்குக் கூட்டிச்செல்லவேண்டுமென்று

அவசரமாய் இணைப்பைத் துண்டித்துவிடுவான்.

 

அடுத்த வருடம் ஆவணி மாதம் அரைமணிநேரம் பார்க்கவரவா

என்றேன் ஒருநாள்.

அந்தச் சமயத்தில் மகள்வயிற்றுப்பேத்தியின் சடங்குநீராட்டுவிழா நடக்கப்போவதாய் பெருமைபொங்கத் தெரிவித்தான்.

 

மகளோ மகனோ இருந்ததாகச் சொன்னதில்லை யவன்……

ஆனால், மறதி வயதின் பயன்.

 

’பேசப்பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடு’ என்றதற்கு

‘இப்படிப் பேசலாமா என்னுயிர் நண்பா’ என்றான்.

அவன் கண்கலங்கி குரல் கம்மியிருந்ததாய் தோன்றியது.

பிரமையாகவும் இருக்கலாம்.

 

பொங்கிப் பூரித்துப் பனித்த கண்களோடு

நட்பில் உனக்கு நான் சற்றும் சளைத்தவனல்ல என்று

சொல்லத் தொடங்குவதற்குள்

’பேரனுடைய மகளுக்குப் பேன்வாரவேண்டும்,

பேத்தியுடைய மகனுக்குப் பீவார வேண்டும்’

என்று பேச்சை முடித்துக்கொண்டுவிட்டான்.

 

இன்று பேரனோடு வந்திருந்தவனை நேரில் பார்க்கிறேன்.

நவநாகரீகச் சட்டையும் ஜீன்ஸும் மாட்டி யென்ன?

நெடுநாளைப் பிரிவுக்குப் பின் நண்பர்கள் சந்திக்கையில்

நந்திபோல் குறுக்கே நின்றான் இளைஞன்,

நகர்ந்து பால்கனி பக்கம் செல்லாமல்.

 

நலமா என்றேன் நண்பனையே பார்த்தவாறு.

’நலமோ நலம் என் தாத்தா’ என்றான் பேராண்டி.

அட்டையாய் அவன் ஒட்டிக்கொண்டுநின்றதைப் பார்க்க

சட்டெனத் தோன்றியது –’ஓரினப்புணர்ச்சியாளனோ’….?’

 

“வாராது போல வந்த மாமணியைப் பார்க்கிறேன்”

என்றேன் விழிகசிய..

’மாமணியல்ல, தாத்தாவின் பெயர், மாணிக்கம்;

மறந்துவிட்டீர்களா?’ என்றான் பேரன்.

 

அவன் பாட்டனாகிப்போன என் ஆத்தும நண்பன்

அடிக்கொருதரம் அவனைப் பார்த்தபடியே

அடுத்த வார்த்தையை என்னிடம் பேசினான்.

பேரன் வாயில் தன் குரலை தாரை வார்த்தவனாய்

பிரயத்தனப்பட்டான்.

 

புரிந்தது

மெகா சீரியலானாலும் ஒருநாள் முடியத்தான் வேண்டும்…

மகா குடும்பியாகிவிட்டான் ஆத்துமநண்பன்.

 

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தென்ன’

என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி

‘நல்லது நண்பா, போய்வருகிறேன் –

நீ கண்ணனல்ல நான் குசேலனல்ல என்றாலும்

நான் கொண்டுவந்திருக்கும் அவிலை

முடிந்தால் வாய்க்குள் போடு

இல்லை வாசற்பக்கம் இருக்கிறதே குப்பைத்தொட்டி’

எனச்சொல்லி வெளிவந்தேன்.

 

கதவருகே நின்றபடி

’நல்லவேளையாக உங்கள் மின்னஞ்சல் முகவரியும்

அலைபேசி எண்ணும் என்னிடமிருக்கிறது.

ஏதாவதென்றால் தகவல் தருகிறேன்’ என்று

தெரிவித்தான் பேராண்டி..

 

அஞ்சலிக் கூட்டங்களுக்கு (மட்டுமே) அவசியம் தேவை

ஆத்தும நண்பர்கள்…….

 

நீடுவாழட்டும் நண்பன் என்று நெக்குருகித் தொழுதபின்

என் கவிதையிலிருந்து அவனைக் கிழித்துப்போட்டேன்.

 

இனியொருபோதும் இந்தக் கட்டத்தை எட்டிவிடாதிருக்க

ஒவ்வொரு எட்டிலும் உருண்டையைத் தட்டையாக்கி

நேர்க்கோடாய் நீட்டிவிட்டேன்.

 

Series Navigationபயணம்‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்