தொண்டிப் பத்து

தொண்டி என்பது சேர நாட்டின் கடற்கரை நகரமாகும். இது தற்போது குறும்பொறை நாட்டில் ஒரு சிற்றுராய்க் காட்சியளிக்கிறது என்பர். ஒரு சிலர் மலைநாட்டில் உள்ள இந்நாளைய ஆலப்புழைதான் தொண்டி என்பர். இராமநாதபுர மாவட்டத்திலும் தொண்டிப் பட்டினம் உள்ளது.

இப்பகுதியின் பத்துப் பாடல்களிலும் தொண்டி சிறப்பிக்கப்படுவதால் இப்பகுதி தொண்டிப் பத்து எனப்பட்டது. ஐங்குறு நூறு நூலில் இப்பகுதிக்கு ஒரு சிறப்பு உள்ளது. இப்பகுதிப் பாடல்கள் எல்லாம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன.

தொண்டிப் பத்து—1

திரையிமிழ் இன்னிசை அளைஅ அயலது

முழவிமிழ் இன்னிசை மறுகுதொ றிசைக்கும்

தொண்டி யன்ன பணைத் தோள்

ஒண்டொடி அரிவை என்நெஞ்சு கொண்டோளே!

[அளைஇ=கலந்து; இமிழ்தல்=முழங்கல்; மறுகு=தெரு]

 

அந்தக் கால வழக்கப்படி அவனும் அவளும் சந்திச்சாங்க; ஒருத்தரோடு ஒருத்தரு கலந்தாச்சு; அவன உட்டுட்டு இப்ப அவ அவகூட்டத்தோடப் பிரிஞ்சு போறா. அப்ப அவன் தனக்குள்ளயே பேசிக்கற பாட்டு இது.

கடல் அலையெல்லாம் இனிமையா சத்தம் போடுது; அது கூட சேந்து முழவெல்லாம் முழங்கற தெரு இருக்கற நகரம்தான் தொண்டி. அதைப் போலவே அழகா பெரிசா இருக்கற தோள்களையும், மெல்லிசான இடுப்பும் இருக்கற அவ என் நெஞ்சை அவகூடவே எடுத்துக்கிட்டுப் போறாளே”

கூட்டத்தோட போயி கலந்துட்டாளே; இனிமே அவளை எப்போ பாப்பேனோன்னு பேசற ஏக்கம் தெரியுதில்ல. தொண்டியோட சிறப்பு தெரியுது. எப்பவும் சத்தம் போடற கடல் ஒலியோட மக்கள் எழுப்பற முழவொலி சேந்து ஒலிக்குதுன்னு ஏன் சொல்றான்னா எப்பவும் எல்லாப் பிறவியிலும் தொடர்ந்து வர்ற ஒறவைச் சொல்றான். ரெண்டு ஒலிகளும் அவங்க ரெண்டு பேரையும் குறிக்குதாம். அத்தோட ரெண்டு பேரும் கலக்குறதுக்கு முக்கியமான தோளையும் இடுப்பையும் சிறப்பா பேசறான்.

தொண்டிப் பத்து—2

ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே

வண்டிமிர் பனைத்துறைத் தொண்டி ஆங்கண்

உரவுக்கடல் ஒலித்திரை போல

இரவி னானும்  துயிலறி யேனே!

 

[கடந்த பாடலின் இறுதி அடியில் உள்ள ஒண்தொடி என்பதில் இப்பாடல் தொடங்குகிறது]

 

[இமிர்தல்=ஒலியோடு பறத்தல்; உரவுக் கடல்=பரந்த கடல்]

 

அவ நெனைவாலே ராத்திரி பூரா அவன் தூங்கவே இல்ல. ஏன்னு அவன் தோழன் கேக்கறான். அப்ப அவன் சொல்ற பாட்டு இது.

நல்லா வெளிச்சம் தர்ற தொடி போட்டுக்கிட்டு அவ பிரிஞ்சு போயிட்டா; வண்டெல்லாம் எப்பவும் சத்தம் போடற குளிர்ச்சியான துறை இருக்கற தொண்டியில பரந்திருக்கற கடலானது சத்தம் போட்டுக்கிட்டே இருக்கும். சத்தம் போடற அந்த  அலைகளைப் போல ராத்திரி பூரா தூங்கறதே  எனக்குத் தெரியலே! அந்த அலைகளைப் போல நானும் பொலம்பிக்கிட்டு வருந்திக்கிட்டுத்தான் இருப்பேன்”

தொண்டிப் பத்து—3

இரவி னானும் இன்துயில் அறியாது

அரவுறு துயரம் எய்துப தொண்டி

தண்ணறு நெய்தலில் நாறும்

பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே

[அரவு=பாம்பு; நாரும்=மன்ங்கமழும்]

 

அவன் அவனோட தோழனைத் தூதாக அனுப்பறான். தோழன் போயி அவளைப் பாக்கறான். பாத்ததும் அந்தத் தோழன் சொல்ற பாட்டு இது.

 

”தொண்டி நகரத்துல இருக்கற நெய்தலைப் போல இவ கூந்தல் மணம் வீசுது. அத்தோட நல்லா பின்னப்பட்டிருக்கு. இவ அழகால தாக்கி வருத்தப்பட்டவங்க பாம்பு கடிச்சா எப்படி ராத்திரி பூரா தூங்கமாட்டாங்களோ அதே மாதிரி துன்பம்தான் அடைவாங்க”

============================================================================

தொண்டிப் பத்து—4

அணங்குடைப் படித்துறைத் தொண்டி யன்ன

மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிழை

பொங்கரி பரந்த உண்கண்

அம்கலிழ் மேனி அசைஇய எமக்கே

[அணங்கு=தெய்வம்; பொழில்=சோலை; நுணங்கு இழை=நுண்ணிய வேலைப்பாடு அமைந்த இழை; அரி=செவ்வரி; அம்கலிழ் மேனி=அழகு ஒழுகும் மேனி; அசைஇய=மெலிவுற்ற]

 

தோழனை அனுப்பி அவ அங்க நிக்கறாளான்னு பாத்துட்டு வரசொல்றான்.

அவனும் போயிப் பாத்துட்டு வந்து அங்க அவ நிக்கறான்னு சொல்றான். அதைக்கேட்டு அவளப் பாக்கப் போலாம்னு நெனக்கறான். அப்ப அவன் தனக்க்குள்ளேயே சொல்ற பாட்டு இது.

”தெய்வம் இருக்கற தண்ணித் துறையைக் கொண்ட தொண்டியில வாசனை வீசற சோலையில நல்ல நகையையும், வரி இருக்கற கண்களும் உள்ள அவள், அவளையே நெனச்சு மெலிஞ்சுபோன எனக்கு அவ நிக்கற எடத்தைக் காட்டினாளே”

அந்த காலத்துல தண்ணித் துறையில தெய்வம் இருக்குதுன்னு ஒரு நம்பிக்கை உண்டு.

தொண்டிப் பத்து—5

எமக்கு நயந்தருளினை ஆயின், பணைத்தோள்

நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி

வந்திசின் வாழியோ மடந்தை

தொண்டி அன்ன நின்பண்பு பல கொண்டே

[நயந்து=விருப்புற்று; மென்மெல இயலி=மெல்லென நடந்து; வந்திசின்=வருவாயாக]

 

அவன் அவளைப் பாக்கறான். பாத்துட்டு கெளம்பும் போது இனிமே நீ தனியே வராதே; தோழி துணையோட வான்னு சொல்ற பாட்டு இது.

மடந்தையே! நீ வாழ்வாயாக; தொண்டி நகர் போல நல்ல பண்பெல்லாம் ஒனக்கு இருக்கு. என் மேல ஒனக்கு ஆசையும் அன்பும் இருக்கு; ஆனா பருத்த தோள்களையும், வாசனையான நெத்தியையும் இருக்கற உன் தோழியோட மெதுவா நடந்து இங்க நீ வா”

தோழி அவளுக்குக் காவலா வருவான்னு நெனக்கறான், அதோட தனியா வந்தா எல்லாரும் சந்தேகப்படுவாங்கன்னும் நெனக்கறான்.

 

தொண்டிப் பத்து—6

பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்

தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்தொடி

ஐதமைந் தகன்ற அல்குல்

கொய்தளிர் மேனி! –கூறுமதி தவறே

[பாயல்=உறக்கம்; நாறும்=மணம் கமழும்]

 

அவ இப்ப ஏதோ வருத்தத்தோட அவங்கிட்ட இருந்து ஒதுங்கி நிக்கறா; அவனுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. அவளும் தோழியும் இருக்கற எடத்துக்குப் போறான். அங்க தோழிக்குச் சொல்ற மாதிரி அவன் சொல்ற பாட்டு இது.

தொண்டி நகரத்துல இருக்கற புதுப் பூவெல்லாம் நல்லா மணம் வீசும்; அதே போல இருக்கறவளே! ஒளி வீசும் தொடியும் அழகான அகன்ற அல்குலும் வச்சிருக்கறவளே! பாக்கறவங்கள எடுத்துக்கச் சொல்லும் அழகான ஒடம்பு உள்ளவளே! என் நல்ல குணங்களையும், என் தூக்கத்தையும், ஒன் தோழி எடுத்துக்கிட்டாளே! நான் என்னா தப்பு செய்தேன் சொல்லு?”

தொண்டிப் பத்து—7

தவறில ராயினும் பனிப்ப மன்ற

இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு

முண்டக நறுமலர் கமழும்

தொண்டி அன்னோள் தோள்உற் றோரே!

[இவறுதல்=மென்மேல் ஏறுதல்; உலாவுதல்; திளைக்கும்=மோதும்; இடுமணல் நெடுங்கோட்டு=குவித்த மணல்மேட்டின் உச்சியில்; முண்டகம்=கழிமுள்ளி மலர்; பனிப்ப=நடுங்க]

 

”என் மேல என்னா தப்பு நெனச்சுக்கிட்டு அவ என்னை வெறுத்து எனக்கு வருத்தம் உண்டாக்கறா?” ன்னு அவன் தோழிகிட்ட கேக்கறான். அப்ப தோழி சிரிச்சுக்கிட்டே சொல்ற பாட்டு இது.

” தொண்டியில அலையெல்லாம் ஒண்ணோட ஒண்ணு மோதி பெரிய மணல் திட்ட உண்டாக்கி இருக்குது. அங்க கழிமுள்ளிப் பூவெல்லாம் பூத்து வாசனை வீசுது. அதே மாதிரி அழகானவதான் என் தலைவி. அவளோட தோளை விரும்பி அடைஞ்சவங்க தப்பே செய்யாட்டா கூட தவறு செஞ்ச மாதிரிதான் நடுங்குவாங்களாம்”

தப்பே செய்யாத நீ  ஏன் நடுங்கறேன்னு அவ மறைவா கேக்கறா. தண்ணி இல்லாத மணல் மேட்டுல பூ வாசனை வீசற மாதிரி தவறே செய்யாத அவன் தப்பு செஞ்ச மாதிரி அவ நெனக்கறாளாம்

தொண்டிப் பத்து—9

நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப!

அலவன் தாக்கத் துறைஇறாப் பிறழும்

இன்னொலித் தொண்டி அற்றே

நின்னல தில்லா இவள்சிறு நுதலே

[நளி=பெருமை, குளிர்ச்சி; நல்குமதி=வரைந்து மணம் கொண்டு அருளுவாயாக; அலவன்=நண்டு; பிறழும்=புரளும்; இன்னொலி=இனிய இசைஒலி]

 

அவனும் அவளும் பகல்ல சந்திச்சுக் கலக்கிறாங்க. அப்புறம் அவன் அவளைப் பிரிஞ்சு வர்றான். அப்ப தோழி அவனைப் பாக்கறா; சீக்கிரம் அவ கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யணும்னு சொல்ற பாட்டு இது.

”தொண்டியோட பெரிய கடல்கரையில இருக்கறவனே! நண்டு வந்து மோதித் தாக்கறதால தண்ணித் துறையைல இருக்கற இறால் மீனெல்லாம் புரளுது. இனிமையான ஓசையெல்லாம் கேக்கற அந்தத் தொண்டி மாதிரி அழகான நெத்தி இவளுக்கு இருக்கு. அந்த நெத்தியின் அழகு நீ எப்பவும் இவ பக்கத்திலேயே இருந்தாலதான் இருக்கும். அதைப் புரிஞ்சுக்கிட்டு நீ இவளுக்கு எப்பவும் அருள் செய்ய வேணும்”

நண்டு தாக்க இறால் மீன் புரளற மாதிரி ஒங்க ஒறவு தெரிஞ்ச ஊரார் பழி சொன்னா அவளும் வருந்துவாளேன்றது மறைபொருளாம்.

தொண்டிப் பத்து—10

சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர்

வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்

பறைதபு முதுகுருகு இருக்கும்

துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே

[சிறுநணி=மிகவிரைவிலேயே; வல்சி=உணவு; பறைதபு=பறத்தலை விட்ட]

 

இதே மாதிரி யாருக்கும் தெரியாம வந்து அவளைக் கலந்துட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம்னு அவன் நெனக்கறான். அதைத் தெரிஞ்சுகிட்ட தோழி சீக்கிரம் வந்து கல்யாணம் செய்யணும்னு சொல்ற பாட்டு இது.

”வயசான இந்தக் குருகு இருக்குல்ல; வயசானதால அதால பறக்க முடியாது; அது மீன் பிடிக்கற வலைஞருங்க வலை வீசிக் கொண்டு வந்த மீனுக்காகப் பறக்கறதை உட்டுட்டுக் காத்திருக்கும். அப்படிப்பட்ட துறை இருக்கற நகரம் தொண்டி. அந்தத் தொண்டி மாதிரியே அழகான இவளை நீ ஒனக்குச் சொந்தமாக்கி வச்சுக்கணும்”

அவங்க உணவுக்காக  வலைஞர் எல்லாம் வலை வீசி மீன் புடிச்சுக்கிட்டுப் போறாங்க. ஆனா அதுக்காக வயசான குருகு வந்து காத்திட்டிருக்கு. அதுப் போல ஒனக்கு வேண்டியவளான இவளை வேற சிலர் வந்து கல்யாணம் செய்யக் காதிருக்காங்கன்றது மறைபொருளாம்.

நிறைவு

==================================================

Series Navigationபி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!