தொடுவானம் 233. லுத்தரன் முன்னேற்ற இயக்கம்

Spread the love
          மாலையில்தான் தரங்கம்பாடியில் கூட்டம். நான் திருப்பத்தூரிலிருந்து காலையில்  புறப்பட்டேன். திருவள்ளுவர் சொகுசு பேருந்து புதுக்கோட்டை,தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வந்தடைடைய மதியம் ஆகியது.  அருகிலிருந்த சைவ உணவகத்தில் உணவருந்தினேன். பொறையார் செல்லும் சக்தி விலாஸ் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அது மன்னம்பந்தல் ஆக்கூர் வழியாக கடற்கரை சாலையில் சென்று தரங்கம்பாடியில் நின்றது. முன்பெல்லாம் அண்ணன் வீட்டுக்கு வருவது நினைவுக்கு வந்தது. இப்போது அண்ணன் சீர்காழியில் உள்ளார்.
          நேராக கூட்டம் நடைபெறப்போகும் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றேன். அங்கு ஒரு சிலர் வந்திருந்தனர். அவர்களில் ஜி.ஆர்.சாமுவேல் ஒருவர். ஒரு வகுப்பறையில் தஙகினேன். அண்ணன் இன்னும் வரவில்லை. அவர் சீர்காழியில் எல்.எம். உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கிருந்து மாலையில் புறப்பட்டாலே போதுமானது. கூட்ட நேரத்துக்கு வந்துவிடலாம்.
          சில சபைகுருக்கள் வந்திருந்தனர். அவர்களில் ஐ.பி. சத்தியசீலன், ஜெயராஜ், ஏ.ஜெ.தேவராஜ், ஜான், ஜெயசிங்கம் ஆகியோர் அடங்கினர். பிச்சானந்தம் இன்னும் வந்து சேரவில்லை. என்னை பலர் அண்ணனின் முகச் சாயலை வைத்தே கண்டுகொண்டு விசாரித்தனர்.
          நான் யாரிடமும் இது என்ன கூட்டம் என்று கேட்கவில்லை. என்ன கூடடம் என்று தெரியாமலேயே இத்தனை தூரம் பிரயாணம் செய்து வந்துள்ளதைத் தெரிந்தால் நகைக்கமாட்டார்களா! என்னை வரச்  சொன்ன பிச்சானந்தம் வரட்டும். அல்லது அண்ணன் வரட்டும்  என்று காத்திருந்தேன்.
          மாலையில் ஏராளமானவர்கள் வந்துவிட்டனர். ஒரு வகுப்பறையில் ஒன்று கூடினோம் கரும் பலகையில் ” லுத்தரன் முன்னேற்ற இயக்கம் ” என்று எழுதப்பட்டிருந்தது. அனைவருக்கும் தேநீரும் வடையும்  வழங்கினர்.
          கூட்டம் மறைதிரு ஜான் மாணிக்கம் அவர்களின் ஜெபத்துடன் துவங்கியது. வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசிய அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை ஒவ்வொருவராக எழுந்து தங்களை அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். கடைசி வரிசையிலிருந்து ஒவ்வொருவராக எடுத்து நின்று அறிமுகம் செய்து கொண்டனர். சென்னை,தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, பொறையார்,தரங்கம்பாடி, நாகப்பட்டினம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திண்டுக்கல், தொண்டி, ஆனைமலையான்பட்டி, விருதுநகர், சாத்தூர், பரமக்குடி, உசிலம்பட்டி, பெரம்பலூர், கோடை ரோடு, மேட்டுப்பாளையம், கொடைக்கானல் , ஈரோடு, கோவை,என தமிழகத்தின் பல பகுதியிலிருந்து வந்திருந்தது வியப்பை அளித்தது. நான் திருப்பத்தூரிலிருந்து வந்திருந்தேன். நான் என்னை மருத்துவர் என்றும் சபைச் சங்கப் பொருளார் என்றும் பீட்டரின் தம்பி என்றும் அறிமுகம் செய்து கொண்டேன். அண்ணனை அங்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது.
          அறிமுகம் முடிந்ததும் மறைதிரு தேவசகாயம் தலைமையுரை ஆற்றினார். அவர் நல்ல உயரத்தில் சாந்தமான முகத்துடன் காணப்பட்டார். மிகவும் அழுத்தமான குரலில் அவர் பேசினார்.
          ” திருச்சபையின் தலை எழுத்தை மாற்ற வந்துள்ள லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் செயல் வீரர்களே….. ” என்று அவர் ஆரம்பித்ததுமே வகுப்பறை கரகோஷத்தால் அதிர்ந்தது!
           ” நம்மை இதுகாறும் மற்றவர்கள் ஆண்டது போதும். நாம் பெரும்பான்மையுடன் இருந்தாலும் நம்முடைய பலம் தெரியாமல் அடிமைகளாகவே இருந்து வந்துள்ளோம். நாம் இன்னும் கிராம சபைகளிலும், அதிகம் போனால் ஆசிரியர்களாகவும் மட்டுமே இருந்து வ்ருகிறோம். நம்மிடையே படித்த படடதாரிகள் குறைவு. இங்கே நம் மத்தியில் எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ஜான்சன் அவர்கள் வந்துள்ளார் அவரை நம் மத்தியில் வரவேற்கிறோம். ”  நான் எழுந்து நின்று வணங்கினேன்.அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
          ” நம் மக்களிடையே அவரைப்போல் இன்னும் நிறைய டாக்டர்கள் உருவாக வேண்டும். நிறைய பட்டதாரிகள் உருவாக வேண்டும். அதற்கெல்லாம் நமக்கு வாய்ப்புகள் வேண்டும். இந்த நாள் வரை நமக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதிகம்  போனால் பள்ளி ஆசிரியர்களாகத்தான் உள்ளோம். பீட்டர் போன்றோர் பட்டதாரிகள் ஆகி தலைமை ஆசிரியர்களாக உள்ளோம். திருச்சபைத் தலைமைப் பொறுப்பில் நம்மால் இருக்க இயலவில்லை. அதற்கு காரணம் நம்மை வழிநடத்த ஓர்  இயக்கம் இல்லை. அதை சரி செய்யவே லுத்தரன் முன்னேற்ற இயக்கம் உருவாகியுள்ளது. நம்முடைய லுத்தரன் திருச்சபை தரங்கையில் உருவானதிலிருந்து இன்றுவரை அதை மேல் நாட்டு மிஷனரிகள் வழிநடத்தி வந்தனர். அவர்கள் சென்றபின்பும் நம்மால் தலைமை ஏற்று நடத்தும் அளவுக்கு நம்மால் முடியவில்லை. திருச்சபையை நாம் மற்றவரின் கைகளில் கொடுத்துவிட்டு அவர்களுக்கு சேவை செய்து வருகிறோம். நம்முடைய எண்ணிக்கையும் பலமும் பெரியது.இதை மாபெரும் சக்தியாக உருவாக்குவோம். திருச்சபையை நம் கையில் எடுத்து ஆள்வோம். “
            ஓரளவு கூட்டத்தின் நோக்கத்தை தலைமையுரையில் அவர் கூறிவிடடார். எனக்கு ஓரளவு தெரிந்துவிட்டது திருச்சபையின் ஒரு சமூகத்தினரின் கூட்டம் இது. இதில் பெரும்பாலானவர்கள் கிராம சபைகளை சேர்ந்தவர்கள். அதிகமாக சபை குருக்களும் ஆசிரியர்களுமாகவே இருந்தனர். வேறு தொழில்களில் யாரும்  இருப்பதாகவே தெரியவில்லை. இந்த சமூகத்தை உயர் நிலைக்குக் கொன்றவரவே இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.
          மறைதிரு பிச்சானந்தம் வந்தார். என்னைக் கண்டு கையசைத்துவிட்டு அமர்ந்தார்.
          தலைமை உரையை முடித்துக்கொண்ட மறைதிரு தேவசகாயம் சிறப்புரை ஆற்றுமாறு மோசஸ் தம்பிப்பிள்ளையை அழைத்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர் எழுத்து மேசை அருகில் சென்றார். அவர் சற்று நல்ல நிறத்தில் இருந்தார்.வேட்டி சட்டையும் தோளில் வெள்ளைத் துண்டும் அணிந்த்திருந்தார். பழுத்த அரசியல்வாதிபோல் காணப்பட்டார். அவருடைய முகத்தில் ஒருவித கவர்ச்சி கலந்த புன்னகை தவழ்ந்தது.
         இரு கரங்கள்  கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு பேசத் தொடங்கினார்.
          ” இனமானத் தோழர்களே,ஆயர் பெருமக்களே,நான் உளுந்தூர்பேட்டையிலிருந்து உங்களுடன் கலந்து பேச இங்கு வந்துள்ளேன்.அங்கு நான் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் உள்ளேன். என்னை அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கே லுத்தரன் திருச்சபையில் பணியாற்ற அதிர்ஷ்டம் என்னை அழைத்துள்ளார். அநேகமாக விரைவில் வந்து உங்களுடன் திருச்சபை வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.” அனைவரும் கைதட்டி அதை வரவேற்றனர்.
          தம்பிப்பிள்ளை தொடர்ந்து வருகை தந்துள்ளவர்களை இன உணர்வுடன் ஒன்றுபட்டு செயல்பட வேண்டினார். தாழ்த்தப்படட நிலையில் உள்ள நம் சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டியது நம்முடைய தலையாயக் கடமை என்றார். நம் எதிர்காலச் சந்ததியினர் எல்லா உரிமைகளோடும் சிறப்புடன் வாழ வழி வகுக்க லுத்தரன் முன்னேற்ற இயக்கம் பாடுபடும் என்றார்.ஒரு காலத்தில் தமிழகம் அறியாமையில் ஆழ்ந்திருந்தது.அப்போது தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும், கலைஞரும் பகுத்தறிவை பட்டிதொட்டிகளிலெல்லாம் பரப்பிய பின்பு மக்கள்  விழிப்படைந்தனர். அதன் பயனாக காங்கிரஸ் கட்சியை தோற்கடித்ததோடு இனிமேல் தலைதூக்க முடியாமல் செய்து ஆட்சியைப் பிடித்தனர்.நம்முடைய  லுத்தரன் முன்னேற்ற இயக்கம் அதுபோன்று மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஊட்டி அவர்களின் கண்களைத் திறக்க பாடுபட வேண்டும் என்றார்.
            தொடர்ந்து சிறப்பான வகையில்  திட்டங்கள் பற்றியும் கூறினார். அதில் முக்கியமாக ஒரு மத்திய செயற்குழுவும். மாவட்ட்ங்களில் கிளைகளும் அமைக்கவேண்டும் என்றார்.அதை செய்யும் விதத்தைப் பற்றியும் விளக்கினார்.
          தம்பிப்பிள்ளை சிறப்பான சொற்பொழிவாளர் என்பது தெரிகிறது. அவரால் மக்களைக் கவர முடிகிறது. சுமார் ஒரு மணி நேரம் தங்கு தடை இல்லாமல் அவ்வாறு செயல் திட்டங்கள் பற்றி  விளக்கினார். வந்தவர்கள் அவருடைய பேச்சை ஆர்வமுடன் உன்னிப்பாக கவனித்தனர்.அனைவர் முகத்திலும் நம்பிக்கை ஒளி படர்வதைக் கண்டேன். சிதறிக் கிடந்த மக்களுக்கு ஒன்றுபட்டு செயல்பட ஓர் இயக்கம் உதயமாகி விட்டது!
          லுத்தரன் முன்னேற்ற இயக்கம் ஒரு பெரிய அரசியல் கட்சியாக திருச்சபையில் விளங்கும் என்பது எனக்குப்  புலப்பட்டது.
           ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமருத்துவக் கட்டுரை — சொறி சிரங்கு ( SCABIES )உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 16 -ஓரின ஈர்ப்பு மாற்றம் குறித்த இரு படங்கள் (Conversion theraphy)