மஞ்ஞைப் பத்து

மஞ்ஞை என்றால் மயில் என்று பொருள். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடலிலும் மயில் பயின்று வருதலால் இப்பகுதிக்கு மஞ்ஞைப் பத்து எனப் பெயர் வந்தது.

=====================================================================================

மஞ்ஞைப் பத்து—1

மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்

துறுகல் அடுக்கத் ததுவே பணைத்தோள்,

ஆய்தழை நுடங்கும் அல்குல்

காதலி உறையும் நனிநல் ஊரே

[ஆல=ஆட; குடிஞை=பேராந்தை; இரட்டும்=மாறி மாறி ஒலிக்கும்; துறுகல்=குண்டுக்கல்; அடுக்கம்=பக்கமலை; பணை=பருத்த; தழை=தழையாடை; நுடங்கும்=அசையும்; உறையும்=தங்குகின்ற]

கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப் போறேன்னு  அவகிட்ட  சொல்லிட்டு அவன் ஊருக்குப் போறான். அப்ப எதிரே அவன் தோழன் வரான். தோழன்கிட்ட அவன் தன்னோட தலைவியோட ஊரைப் பத்திச் சொல்ற பாட்டு இது.

”மூங்கில் போல பருத்தத் தோளிருக்கும் அவளுக்கு. தழையாடை போட்டிருக்கற அவளுக்கு அழகா அசைஞ்சாடற அல்குல் உண்டு. அழகா இருக்கற அவ ஊர் ரொம்ப நல்ல ஊர். அங்க மயிலெல்லாம் ஆட, பேராந்தன்ற கூகையெல்லாம் மாறி மாறிச் சத்தம் போட்டுக்கிட்டே இருக்கும். குண்டுக்கல் இருக்கற மலைப்பக்கத்துல அந்த ஊரு இருக்கு.”

=====================================================================================மஞ்ஞைப் பத்து—2

மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிர,

தண்மழை தலைஇய மாமலை நாட!

நின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்து

நல்மனை அருங்கடி அயர,

எம்நலம் சிறப்பயாம் இனிப் பெற்றோளே!

[ஆல=ஆட; பெருந்தேன்=பெரிய தேனீ; இமிர=ஒலிக்க; தலைஇய=பெய்தலை மேற்கொண்ட; அருங்கடி அயர=சிறப்பாக மணம் செய்து கொள்ள]

அவளை அவன் மொதல்ல கட்டிக்கிட்டான். அப்பரம் வேர ஒருத்தியையும் மொறையா கல்யாணம் செஞ்சுக்கிட்டு அவளோட ஊட்டுக்கே கூட்டிக்கிட்டு வரான். அப்ப அவ மகிழ்ச்சியா வரவேத்து சொல்ற பாட்டு இது

”மயிலெல்லாம் ஆடவும்,பெரிய தேனீயெல்லாம் சத்தம் போடவும் இருக்கற மழைபெய்யற மலையைச் சேந்தவனே! நீ ஒனக்கி இஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கிட்டு இட்டாந்திருக்க; அதை இங்க ஊட்லயும் நானும் நல்லதாவே நென்னக்கறோம். இப்ப எனக்கு இங்க தங்கையா வந்திருக்கறவ ஒனக்கு இருக்கறத விட எனக்கே சிறந்தவ போல இருக்கா”

=====================================================================================

மஞ்ஞைப் பத்து—3

சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை அன்ன

நலம்பெறு கயின்என் கண்புதைத் தோயே!

பாயல் இன்துணை ஆகிய பணைத்தோள்

தோகை மாட்சிய மடந்தை!

நீஅலது உளரோ என்நெஞ்சு அமர்ந்தோரே!

[சிலம்பு=மலைப்பக்கம்; நறுங்குலை=மணமுடைய; பாயல்=படுக்கை; தோகை=மயில்]

பகல்ல ஒரு நாள் அவன் வந்து காத்திருக்கான். அப்ப அவ அவனோட பின்னால அவனுக்குத் தெரியாம மெதுவா வந்து அவன் கண் ரெண்டையும் கையாலப் பொத்தறா. அப்ப அவன் சொல்ற பாட்டு இது.

”மலைப்பக்கமெல்லாம் கொலைகொலையாப் பூத்து வாசனை வீசற காந்தள் பூப்போல இருக்கற ஒன் கைகளால என் கண்னைப் பொத்தறவளே! என் படுக்கையில இருக்கற மனைவியாகியதோட  அழகா பருத்த தோளும்,, மயில்போல அழகும் உள்ளவளே! என் மனசில இருக்கற ஒன்னைத் தவிர என் கண்ணைப் பொத்தி வெளயாடறவங்க வேற யாரு இருக்காங்க?

====================================================================================

மஞ்ஞைப் பத்து—4

எரிமருள் வேங்கை இருந்த தோகை

இழைஅணி மடந்தையின் தோன்றும் நாட!

இனிது செய்தமையால் நுந்தை வாழியர்!

நல்மனை வதுவை அயரஇவள்

பின்இருங் கூந்தல் மலர்அணிந் தோயே!

[எரிமருள் வேங்கை=நெருப்பு போன்ற வேங்கை; தோகை=மயில்; இழை=அணிகலன்; நுந்தை=உன் தந்தை; வாழியர்=வாழ்க; வதுவை=திருமணம்]

மொறையா அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்திருச்சு. அவனைப் பாராட்டித் தோழி சொல்ற பாட்டு இது.

”நெருப்புப் போல பூ பூக்கற வேங்கை மரத்துல ஒக்காந்து இருக்கற மயிலானது அழகான பொண்ணைப் போல இருக்குது. அப்படிப்பட்ட மலைநாட்டைச் சேந்தவனே! இவளக் கல்யாணம் செய்யப் போகும் நீயும் இவளுக்குக் கருப்பான கூந்தல்ல பூவும் சூட்டினாய்! நீ நல்லதச் செய்தாய். ஒன் அப்பா வாழ்க.

=====================================================================================

மஞ்ஞைப் பத்து—5

வருவது கொல்லோ தானே வாராது

அவண்உறை மேவலின் அமைவது கொல்லோ?

புனவர் கொள்ளியின் புகல்வரு மஞ்ஞை

இருவி இருந்த குருவி வருந்துற

பந்துஆடு மகளிரின் படர்தரும்

குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே!

[மேவல்=பொருந்துதல்; அமைவது=அங்கேயே பொருந்தியிருப்பது; புனவர்=குறவர்; மஞ்ஞை=மயில்; இருவி=அரிதாள்]

கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய அவன் போனான். அவன் பிரிவால அவ வருந்தறா. அவனை நெனச்சு அவ சொல்ற பாட்டு இது.

”தெனையை அறுத்த பின்னாடி வயலைக் கொறவங்க வச்சுக் கொளுத்துவாங்க. அந்த நெருப்புக்குப் பயந்துக்கிட்டு மயிலெல்லாம் அரிதாள்ள இருக்கற குருவியெல்லாம் வருத்தப்படற அளவுக்குக் குதிச்சுக் குதிச்சு பந்தாட்டம் ஆடற பொண்ணுங்க போல ஓடும். அப்படிப்பட்ட மலையெல்லாம் இருக்கற நாட்டைச் சேந்தவனோட போன என் மனசு திரும்பி எங்கிட்ட வருமா? இல்ல, அவனோடயே தங்கி விடுமா? தெரியாம தவிக்கிறேனே”

=====================================================================================மஞ்ஞைப் பத்து—6

கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்

அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட!

நடுநாட் கங்குலும் வருதி;

கடுமா தாக்கின் அறியேன் யானே!

[கொடிச்சி=குறமகள்; ஏனல்தினை; அடுக்கல்=மலைப்பக்கம்; கங்குல்=இரவு; கடுமா=கொடிய விலங்கு;

”கொடிச்சின்ற கொற மகள் காவல் காக்கற பெரிய கதிரெல்லாம் இருக்கற தெனையை மலைப்பக்கத்துல இருக்கற மயில் எல்லாம் வந்து தின்ற மலைநாட்டைச் சேந்தவனே! நீ நடு ராத்திரியில வர்ற. அப்படி வரும்போது கொடிய வெலங்கு தாக்கினால் ஒனக்கு என்னா ஆகுமோ? எனக்கு அது தெரியாதே?”

அதால ராத்திரியில வராதே. சீக்கிடம் வந்து கல்யாணம் செஞ்சுக்கன்னு மறைபொருளா சொல்றா.

===================================================================================

மஞ்ஞைப் பத்து–7

விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை

பூக்கொய் மகளிரின் தோன்று நாட!

பிரியினும் பிரிவது அன்றே

நின்னொடு மேய மடந்தை நட்பே!

[மேய=பொருந்திய; சினை-கிளை; தோகை=மயில்]

கொஞ்ச நாள் போனதக்கப்பறம்தான் கல்யாணம் செஞ்சுக்க முடியும்னு அவன் சொல்றான். அப்ப தோழி தலைவியோட நெலமயைச் சொல்லி சீக்கிரம் வந்து கட்டிக்கணும்னு சொல்ற பாட்டு இது.

நல்லா பூப்பூத்திருக்கற வேங்கை மரத்தோட பெரிய கெளையில ஒக்காந்திருக்கற மயிலானது பாக்கறதுக்கு, அந்தப் மரத்துல ஏரிப் பூப்பறிக்கற பொண்ணு போலத் தெரியுது. அப்படிப் பட்ட மலைநாட்டைச் சேந்தவனே! நீ அவள உட்டுப் பிரிஞ்சு போனாலும், அவ ஒன்னோட கொண்ட அன்பு என்னிக்குமே பிரியாது”

=====================================================================================மஞ்ஞைப் பத்து—8

மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்

அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி

தான்எம் அருளாள் ஆயினும்

யாம்தான் உள்ளுபு மறந்தறி யேமே!

[அறியா=அறிந்து; ஆலும்=ஆடும்; அடுக்கல்=பக்கமலை; உள்ளுபு=நினைத்து]

அவளப் பாக்க முடியாம போயிடுச்சு. அதால அவன் தோழிகிட்ட ஒதவி கேக்கறான். தோழி அவக்கிட்ட போயி சொல்றா. அவளோ பேச்சால வேண்டாம்னு சொன்னாலும் உள்ளுக்குள்ள விரும்பறா. அதைத் தோழி வந்து அவன்கிட்ட சொல்ல அவன் சொல்ற பாட்டு இது.

”மழை வரப்போவுதுன்னு மயிலெல்லாம் ஆடற மலைப்பக்கத்துல இருக்கற நல்ல ஊர்ல இருக்கற அசைஞ்ச நடை நடக்கற குறிஞ்சி நெலப் பொண்ணு அவ எனக்கு அன்பு காட்டாட்டா கூடநான் அவள என்னிக்கும் மறக்க மாட்டேன்.

=====================================================================================மஞ்ஞைப் பத்து—9

குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்

பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்

அஞ்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி

கண்போல மலர்தலும் அரிது; இவள்

தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே!

[குன்றநாடன்=முருகன்; கவாஅன்=மலைச்சாரல்; அஞ்சில் ஓதி=ஐந்து பிரிவுகள் உடைய கூந்தல்; பகுவாய்க் குவளை=மலர்ந்த குவளை மலர்]

அவனோட கலந்துட்டா. அப்பறம் அவ தன் கூட்டத்தோட போயி நிக்கறா. அப்ப அவளைப் பாத்த அவன் தனக்குள்ள சொல்லிக்கற பாட்டு இது.

”முருகனோட மலைச்சாரல்ல பச்சையான சுனையில பூத்திருக்கற குவளைப் பூவுக்கு, அழகா இருக்கற கூந்தலும், அசைஞ்சு நடக்கற நடையும் கொண்ட இந்தக் குறத்தியோட கண்ணு போல மலர்றதும். அவளோட சாயல் மாதிரி இருக்கறது மயிலுக்கும் முடியாது.

====================================================================================

மஞ்ஞைப் பத்து—-10

கொடிச்சி கூந்தல் போலத் தோகை

அஞ்சிறை விரிக்கும் பெருங்கல் வெற்பன்

வந்தனன்; எதிர்ந்தனர் கொடையே;

அம்தீங் கிளவி! பொலிக நின் சிறப்பே!

[அஞ்சிறை=அழகிய தோகை; பெருங்கல் வெற்பன்=பெரிய கற்கள் கொண்ட மலைக்கு உரியவன்; எதிர்ந்தனர்=நேர்ந்தனர்; அந்தீங்கிளவி=அழகிய இனியசொல்; சிறப்பு=பெண்மையின் சிறப்பு]

அவன் அவளப் பொண்ணு கேட்டு அவ ஊட்டுக்கு வந்தான். அவ ஊட்லயும் ஒத்துக்கிட்டாங்க. அதைத் தோழி போயி அவக்கிட்ட சொல்ற பாட்டு இது.

”குறத்தி மகளின் கூந்தல் போல மயில் அழகா அதோடத் தோகையை விரித்தாடற மலையைச் சேந்தவன், அவனச் சேந்தவங்களொட ஒன்னைப் பொண்ணு கேட்டு வந்தான். ஒன் ஊட்லயும் அவனுக்குக் குடுக்க ஒத்துக்கிட்டாங்க. இனிமே ஒன்னோட பெண்மை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.

========================================================நிறைவு=====================

 

 

 

Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 2மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன?