செலவுப் பத்து

Spread the love
  1. செலவுப் பத்து

செலவுன்னா ஒரு எடத்துலேந்து வேற எடத்துக்குப் போறதுன்னு பொருள்.

இந்தப் பகுதியில இருக்கற பத்துப் பாட்டுகளும் அந்தச் செலவைப் பத்திப் பேசறதால இந்தப் பெயர் வந்தது.

=================================================================================

செலவுப் பத்து—1

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்

ஆர்இடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம்

காடு இறந்தனரே காதலர்

நீடுவர் கொல்என நினையும் என் நெஞ்சே!

`[கொய்யுநர்=பறிப்பவர்; பஞ்சுரம்=பாலைநிலப் பண்; ஆர்-அரிய;

விளிப்பினும்=பாடினாலும்; ஆறு=வழி; வெரூஉம்=அஞ்சும்; இறந்தனர்=கடந்தனர்]

அவன் பிரிஞ்சு போனதால அவ ரொம்பவும் வருந்திக் கெடக்கறா. அப்ப வந்தவங்க அவளோடத் தோழிக்கிட்ட அவன் பாலை வழியைக் கடந்து போயிட்டான்னு சொல்றாங்க. தோழி நிம்மதி அடையறா. ஒடனெ போயி அவக்கிட்ட சொல்றா. அப்ப அவ சொல்ற பாட்டு இது.

”வேங்கை மரத்தோடப் பூக்களைப் பறிக்கறவங்கப் பஞ்சுரம்ன்ற ராகத்துல பாட்டுப் பாடுவாங்க. அதைக் கேட்டுக்கிட்டுப் போறவங்க கொடுமையான காட்டு வழியிலப் போறதுக்குப் பயப்படுவாங்க. அதைக் கடந்து போயிட்டார்னு சொல்றே; இருந்தாலும் அங்கியே தங்கிட்டார்னா பிரிஞ்சிக் கெடக்கற நாளு அதிகமாப் போயிடுமேன்னு மனசு நெனக்குதடி”

==================================================================================

செலவுப் பத்து—2

அறம்சா லியரோ! அறம்சா லியரோ!

வறன்உண் டாயினும் அறஞ்சா லியரோ!

வாள்வனப் புற்ற அர்ய்விக்

கோள்வல் என்னையை மறைத்த குன்றே!

[சாலியர்=மிகுக; வறன்=வறட்சி; வாள்=ஒளி; வனப்பு=அழகு;

கோள்வல்=கொலைபுரிவதில் வல்ல; ஐ=தலைவன்]

அவ அவன்கூடப் போயி அவனைக் கட்டிக்கிட்டா. கொஞ்ச நாள் கழிச்சு அப்பா அம்மா கோபமெல்லாம் கழிஞ்ச பின்னாடி அவ வர்றா. அப்ப தோழி, “ஒன்னைத் தேடிக்கிட்டுச் சொந்தக்காரங்க வந்தாங்களே! அப்ப அங்க என்னா நடந்தது”ன்னு தோழி கேக்கறா. அப்ப அவ சொல்ற பாட்டு இது.

”மழை நல்லா பெஞ்சுதுன்னா எப்படி மலைலேந்து அருவி நெறய கொட்டுமோ அப்படி அவன் என்மேல அன்பை வச்சிருக்கான். எதிரிங்க யார் வந்தாலும் வெற்றிதான் அடைவான். அவனை என்னைத் தேடி வந்தவங்க கண்ணுலப் படாதவாறு மறைச்சு வச்ச இந்த மலை ஒலகத்துல எல்லா எடத்துலயும் வறட்சி வந்தாலும், வளம் நெறய இருக்கறதாய், தருமம் மேலும் மேலும் பெருகறதாய் வாழ்க!

=====================================================================================செலவுப் பத்து—3

தெறுவது அம்ம நும்மகள் விருப்பே!

உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்

பாழ்படு நெஞ்சம் படர்அடக் கலங்க,

நாடுஇடை விலங்கிய வைப்பின்

காடுஇறந் தனள்; நம்காத லோளே!

[தெறுவது=சுடுகின்றது; அம்ம=அசைச்சொல்; அவலம்=துன்பம்;

சாஅய்=மெலிந்து; படர்=நோய்; அடர்=வருந்த; விலங்கிய=பிரித்த; வைப்பு=இடம்; இறந்தனள்=கடந்தனள்]

அவ அவனோட சேந்துக்கிட்டு ஊட்டை உட்டுப் போயிட்டா. அவளை வளத்த செவிலி ரொம்பவும் வருந்திக் கெடக்கறா. அப்ப பெத்த தாய் செவிலிக்கிட்ட சொல்ற பாட்டு இது.

”நம்ம மனசு வருந்தற மாதிரி ஒன் பொண்ணு அவன்கிட்ட வச்ச ஆசையால அவன் கூடக் கொடுமையானக் காட்டு வழியியைக் கடந்து போயிட்டா. நமக்கோ உயிரே போகற மாதிரி துன்பம் வந்து சேந்திடுச்சு. இப்படி அவ அவன்கிட்ட வச்ச ஆசை நமக்கெல்லாம் துன்பம் வர வச்சிடுச்சு பாரு”

அவன் அவனோட மகிழ்ச்சியா இருக்கறா. அப்புறம் அவன்கூட இங்க வருவான்றது மறைபொருளாம்.

====================================================================================

செலவுப் பத்து–4

அவிர்தொடி கொட்ப கழுதுபுகவு அயர,

கருங்கண் காக்கையொடு கழுகுவிசும்பு அகவ,

சிறுகண் யானைஆள் வீழ்த்துத் திரிதரும்,

நீள்இடை அருஞ்சுரம்’ என்பநம்

தோள்இடை முனிநர் சென்ற ஆறே.

[அவிர்தொடி=ஒளி பொருந்திய வளை; புகவு=உணவு; கொட்ப=சுழல; கழுது=பேய்; அயர=வருந்த; விழும்பு=வாள்; அகவ=ஒலிக்க; முன்னர்=வெறுத்தவர்]

பிரிஞ்சு போன்வன் சொன்ன நாள்ல திரும்பல; அவன் கூடப் போனவங்க திரும்பி வந்துட்டாங்க. அவங்க போன வழி பத்தி அவங்க பேசிக்கொள்றத அவ கேக்கறா. கவலைப்பட்டு அவ தோழிக்கிட்ட சொல்ற பாட்டு இது.

”நம்ம தோள வெறுத்துட்டு அவர் பிரிஞ்சு போன வழி எப்படிப் பட்டது தெரியுமா? அந்த வழியில முன்னாடி போனவங்க செத்துட்டாங்க. கையில போட்டிருக்கற வளையல்லாம் சுழல அங்குள்ள பேயெல்லாம் அவங்களோட உடலைத் தின்னுக்கிட்டு இருக்கும். காக்கையும், கழுகும் நாம எப்பத் தின்னலாம்னு பாத்துக்கிட்டு இருக்கும். சின்ன கண்ணு உள்ள யானை எதிரே வர்ற ஆளுங்களை எல்லாம் கொன்னு போட்டுக்கிட்டே இருக்கும். அப்படிப்பட்ட வழி அதுன்னு போயிட்டு வந்தவங்க சொல்றாங்களே”

அவர் நல்லபடி திரும்பணும்னு என் மனசு தவிக்கிறதுனு மறைபொருளா சொல்றா.

=====================================================================================

செலவுப் பத்து—5

பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்

பூசல் கேளார் சேயர் என்ப!

இழைநெகிழ் செல்லல் உறீஇ

கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே

[செல்லல்=துன்பம்; பனி=குளிர்ச்சி; பாயல்=உறக்கம்; பூசல்= சண்டை[ஆரவாரம்]; இழை=ஆபரணம்;உறீஇ=உருவிற்று; கழை=மூங்கில்]

அவகிட்டச் சொல்றதுக்குப் பயந்துக்கிட்டு அவன் அவ தூங்கறச்சயே போயிடறான். முழிச்சுப் பாத்த அவ அவனைக் காணலியேன்னு வருந்தறா. அப்ப தோழி சொல்ற பாட்டு இது.

”நாம போட்டிருக்கற வளையெல்லாம் நெகிழ்ந்து போற மாதிரி பெரிய துன்பம் குடுத்திட்டு மூங்கிலும், சோலைகளும் இருக்கற காட்டையும் தாண்டி அவரு போயிட்டாரு. பிரிஞ்சு போனதால சோந்து போயிப் படுக்கையிலியே கெடக்கற இவ கண்ணோட போடற சண்டையைக் கேக்கமாட்டார். அவரு கிட்டக்கத்தான் இருக்காருன்னு சொல்றாங்களே”

கண்ணோட சண்டை என்னா தெரியுமா? அவரு போன போது ஏன் முழிச்சுக்கிட்டு இருக்கல்லன்னுதான்.

=====================================================================================

செலவுப் பத்து—6

பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்த

தேரகல் அல்குல் அவ்வரி வாட,

இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப்

புல்அரை ஓமை நீடிய

புலிவழங்கு அதர கானத் தானே!

[பாண்டில்=ஒருவகை அணி; பொலங்கலம்=பொன்னாலான அணிகலன்; நந்த=நெகிழ; அல்குல்=அடிவயிறு; ஓமை=ஒருவகை மரம்; இறந்தோர்=சென்றோர்; பிறங்குமலை=உயர்ந்த மலை; அதர=வழி]

அவன் பிரிஞ்சு போனதால வாடிக்கிட்டுக் கெடக்கற அவளுக்குத் தோழி சொல்ற பாட்டு இது.

”பொன்னால் செஞ்சி இருக்கற வட்டக்காசெல்லாம் கோத்து செஞ்சு இருக்கற பாண்டில் என்கிற அணி நெகிழ்ந்து போகவும், தேர்த்தட்டு போல இருக்கற அடிவயித்தின் வரியெல்லாம் வாடவும், செஞ்சுட்டு, ஓமை மரம் இருக்கற ஒசரமான மலைப்பக்கத்துல புலியெல்லாம் ஒலவற காட்டு வழியில அவரு போயிட்டாரே”

=====================================================================================செலவுப் பத்து—7

சூழ்கம் வம்மோ தோழி! பாழ்பட்டுப்

பைதற வெந்த பாலைவெங் காட்டு

அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்

சென்ற நெஞ்சம் நீடிய பொருளே!

[சூழ்கம்=ஆராய்வோம்; இறந்தோர்=-கடந்தோர்; பைதள=பசுமை நீங்கிய; வம்மோ=வருக; வெம்=கொடிய; பாலை=பாலை மரம்; சுரம்=வழி]

பிரிஞ்சு போனவன் சொன்ன நேரத்துலத் திரும்பி வரல. அவ அவன்கிட்ட அவளோட மனசைத் தூது விட்டா. அதுவும் போயி அவன்கிட்டயே தங்கிட்டுது. அப்ப அவ தோழிக்குச் சொல்ற பாட்டு இது

 

”தோழி! சூரியனின் வெப்பத்தால பச்சையே இல்லாம பாழ்பட்ட பாலைமரங்க இருக்கற, வெப்பமான காட்டு வழியிலப் போயிருக்காரு அவரு. நான் அவருக்கிட்டத் தூதா அனுப்பிய என் மனசும் அங்கியே போய்த் தங்கிட்டதே அதுக்கு என்னா காரணம்னு தெரிஞ்சுக்கலாம் வாடி போகலாம்.”

=====================================================================================செலவுப் பத்து— 8

ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய

வேய்மருள் பணைத்தோள் வில்இழை நெகிழ

நசைநனி கொன்றோர் மன்ற விசைநிமிர்ந்து

ஓடுஎரி நடந்த வைப்பின்

கோடுஉயர் பிறங்கல் மலைஇறந் தோரே!

[படர்=துன்பம்; நலிய=வருத்த; வேய்மருள்=மூங்கில் போன்ற;

இழை=அணிகலன்=நசை=விருப்பம்; விசை=வேகம்; எரி=நெருப்பு; கோடு=உச்சி; பிறங்கல்=மலை]

அவன் நம்மைப் பிரிஞ்சு போகமாட்டான்னு அவ நம்பிக்கிட்டு இருந்தா. ஆனா அவன் போயிட்டான். அப்ப அவளுக்குள்ளேயே சொல்லிக்கற பாட்டு இது

”காட்டுத் தீ ஓசையோட எரியற நெருப்பு இருக்கற மலை உச்சியெல்லாம் கடந்து அவரு போயிட்டாரு. நம்ம அழகெல்லாம் கெட்டுப் போகவும், பசலை வந்து சேரவும், பிரிஞ்சு கெடக்கறதால நாம வருந்தவும், தோள் வளையல்லாம் நெகிழ்ந்து போகவும் நம்ம ஆசையெல்லாம் அழிச்சுட்டாரே அவரு”

====================================================================================

செலவுப் பத்து—9

கண்பொர விளங்கிய கதிர்பெற்று வைப்பின்

மண்புரை பெருகிய மரம்முளி கானம்

இறந்தன ரோநம் காதலர்?

மறந்தன ரோதில் மறவா நம்மே?

கதிர்=சூரிய ஒளிக்கற்றை; தெறு=வருந்துவது; வைப்பு=இடம்;

மண்புரை=தரையில் கானப்ப்டும் பொந்து; கண்பொர=கண்மாறுபட; முளி=உலர்ந்த]

அவன் யார்கிட்டயும் சொல்லிக்காமலே கெளம்பிப் போயிட்டான். அப்ப அவ தோழிக்கிட்ட சொல்ற பாட்டு இது.

தோழி! கண் ஒளியே மாறிப் போற மாதிரி சூரியன் எரிச்சுக்கிட்டிருக்குது. தரையெல்லாம் நெறய பொந்து இருக்கற மரமெல்லாம் விழுந்து கெடக்குது. அந்தக் கருகிப் போன காட்டு வழுயிலதான் அவரும் கடந்து போயிட்டாரோ? அவரை மறக்காத நம்ம மறந்து போயிட்டாரோ?

====================================================================================

செலவுப் பத்து—10

முள்அரை இலவத்து ஒள்இணர் வான்பூ,

முழங்குஅழல் அசைவளி எடுப்ப, வானத்து

உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்

கவலை அரும்சுரம் போயினர்;

தவல் இல் அருநோய் தலைத்தந் தோரே

[இணர்=கொத்து; வளி=காற்று; அரை=அடிமரம்;வாழி=பெரிய மலர்; உருமு=இடி; தலை=நெருப்பு; உறைக்கும்=உதிர்;

அவன் பிரிஞ்சு போயிருக்கற வழியோட வெப்பத்தைப் பத்தி எல்லாரும் சொல்றாங்க. அப்ப அவ தோழிக்கிட்ட சொல்ற பாட்டு இது.

”தோழி! கெட்டதே இல்லாத தாங்கவே முடியாத துன்பத்தை நமக்கு குடுத்துட்டுப் போயிட்டாரு அவரு. முள்ளெல்லாம் அடிமரத்துல இருக்கற இலவ மரத்தோட வெள்ளையான கொத்துல இருக்கற பூவை, வெப்பத்தோட வர்ற காத்து மோத அதெல்லாம் செதறுது. அவையெல்லாம் மானத்துல இடி இடிக்கும்போது உண்டாற  நெருப்புப் போல கீழே விழுதுங்க. அப்படிப்பட்ட கொடுமையான வழியுல அவரு துணிஞ்சு போயிருக்காரு”

=====================================நிறைவு======================================

Series Navigationகழிப்பறைக்காக ஒரு பெண்குழந்தை நடத்திய போராட்டம்‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம்