தக்கயாகப் பரணி தொடர்ச்சி

This entry is part 18 of 20 in the series 23 மே 2021

                   

                                               வளவ. துரையன்

                                              

                  ஆதி நான்முகனோடு சுராசுரர்         

                        வரவு சொல்லி அமைந்ததோ!

                  சோதி நேமி வலத்தினான் ஒரு

                        பயணம் நின்றது சொல்லுவாய்.                 261

 

[நான்முகன்=பிரமன்; சுரர்=தேவர்; அசுரர்=-அரக்கர்; சோதி=ஒளி; வலத்தினான்=வலக்கையில் ஏந்தியவன்;

 

பிரமனுடன் தேவர் அசுரர் அனைவரும் வந்து சேர்ந்ததோடு வரவேண்டியவர்களின் வரிசை முடியவில்லை. எனவே ஒளி கொண்ட சக்கராயுதம் கொண்ட திருமாலும் வந்து சேர்ந்ததை இனிக் கூறுவோம்.

                  மரகதமே எனலாய வனப்பின

                  குரகதமே பதினாயிர கோடியே.போன்                     262

 

[மரகதம்=பச்சை நிரக்கல்; குரகதம்=குதிரை]

 

மரகதக் கற்கள்  போலப் பச்சை வண்ணம் உடைய குதிரைகள் பதினாயிரம் கோடி வந்தன.

                  ஏறியதாம் இவை போகிலம் எனவே

                  கூறிய கற்கிகளே சதகோடியே.                          261

 

[கற்கி= குதிரை வகைகளில் ஒன்று; சதம்=நூறு]

 

அவற்றை ஏறிச் செலுத்த ஆளில்லாமல் போகுமாறு அங்கு வந்த கற்கி வகைசார்ந்த குதிரைகள் நூறு கோடி ஆகும்.

                    கவனம் உவப்பன கரிய வனப்பின

                    பவனம் வியப்பன பற்பல கோடியே.                264

 

[கவனம்=நடை; உவப்பு=விருப்பம்; பவனம்=காற்று]

 

சிறந்த நடையில் விருப்பம் கொண்ட கரிய வண்ணம் கொண்ட காற்றும் வியக்கும் அளவிற்கு விரைவாகச் செல்லும் குதிரைகள் பல கோடி வந்தன.

                  தரங்கம் நிரைத்தன தரளம் நிரைத்தன

                  துரங்கம் எனப் பல கோடி தொகுத்தே.                265

 

[கடல் அலைகள் வரிசையாக நிற்பன போல முத்துக் கோர்த்தார் போல வெண்ணிறக் குதிரைகள் பல கோடி வந்தன.

                  வெய்யன செக்கர் விசும்பு வெளுக்கச்

                  செய்யன ஆயிர கோடி திரண்டே.                      266

 

[வெய்யன=வெப்பமான; செக்கர்=சிவந்த; விசும்பு=ஆகாயம்; செய்யன=சிவப்பான]

 

வெப்பச் சூடேறிய அந்திவானம் சிவந்து வெளுத்து இருப்பதைப் போல வண்ணம் கொண்ட குதிரைகள் பல ஆயிரம் கோடி வந்தன.

                  பைத்துர கங்கள் விசித்த படைப்பரி

                  கைத்துர கங்கள் கலந்திடை இட்டே.                     267

 

[துரகம்=குதிரை; விசித்த=கட்டிய]

 

இவற்றோடு பாம்புகளையே கயிறாகக் கொண்டு கட்டிய சேணங்கள் கொண்ட குதிரைகளும் இடை இடையே வந்தன. 

                  திரையத் தோய்வன நாலிரு

                        திசையைத் சூழ்வன சூழ்வரு

                        சிலையைப் போல்வன தானவர்

                        திரளைப் போல்வன ஏழ்குல

                  வரையைப் பாய்வன சூல்முதிர்

                        மழையைக் கீழ்வன கால்கொடு

                        மதியைக் காய்வன பேரொளி

                        வயிரத் தேர்சத கோடியே.                      268

 

[திரை=அலை; சிலை=மலை; தானவர்=அசுரர்; போழ்தல்=அளித்தல்; சூல்=நீருண்ட மேகம்; கால்=தேருருளை]

 

கடலின் அலைகள் மீது பாய்ந்தோடுவன, எட்டுத்திசைகளிலும் நிறைந்த அசுரர் கூட்டத்தை இரு கூறாகப் பிளப்பன, ஏழு மலைகளின் மீதும் பாய்ந்தோடுவன, கரிய நிற மேகங்களைப் பிளந்து மழை பெய்விப்பன, உருளைகளினால் சந்திரனையே ஒளி மங்கச் செய்வன என்று வைரத்தால் ஆன தேர்கள் நூறு கோடி வந்தன.

                  பவனப் போர் விரவாதன

                        பருவத்தீ  உறையாதன

                        பரவைக் கால் குளியாதன

                        பறியப் பேரிடி போல்வன

                  கவனத் தால்எழு வாரிதி

                        கழியப் பாய்பரி மாவின

                        கமலத் தோன்முடி தாழ்வன

                        கனகத் தேர்சத கோடியே.                       269

 

[பவனம்=காற்று; விரவாதன=பொருந்தாதன; பரவ=கடல்; பறிதல்=உண்டாதல்; கவனம்=குதிரை நடை; பரிமா=குதிரை; கமலத்தோன்=பிரமன்; கனகம்=பொன்; சதம்=நூறு]

 

ஊழிக்காற்றால் தாக்கப்பட்டு, அழிக்க முடியாதன, ஊழிநெருப்புப் பற்றாதன, கடலுள் மூழ்காமல் பாய்ந்தோடக் கூடியன, இடிபோல் முழங்கி தாவும் பாய்ச்சலால் எழு கடல்கலையும் தாண்டித் தாவக் கூடியன, என்று சொல்லப்படக்  கூடிய குதிரைகள் பூட்டிய, பிரமனாலேயே முடிதாழ்த்தி வணங்கக் கூடிய தங்கத்தேர்கள் நூறு கோடி வந்தன.

                  கடையில் காய்எரிபோல் விரி

                        கனலிக்கே குளிர்கூர்வன

                        கதுவிச் சீதகலாமதி

                        கருகக் காயும் நிலாவின்

                  சடையில் பாய்புனல் வானவர்

                        தறுகண் தீயொடு மூள்வன

                        தமரச் சேனை அறாதன

                        தரளத் தேர்சத கோடியே.                       270

                             

[கடை=இறுதி; கனலி=சூரியன்; கதுவி=மிகுந்து; சீதகலாவதி=குளிர்ந்த கதிர்கள் கொண்ட நிலவு; தமரம்=ஒலி; தரளம்=முத்து]

 

ஊழி நெருப்ப்புப் போல் காய்கின்ற சூரியனுக்கே குளிர்ச்சி ஊட்டுகிற, சந்திரன், சடைமுடியில் கங்கையைக் கொண்டிருக்கும் சிவபெருமான் திருக்கரத்தில் உள்ள நெருப்பையும் அணைக்கிற, பேரொலி எழுப்பும் பெருஞ்சேனையோடு வருகின்ற முத்துத் தேர்கள் ஒரு கோடி வந்தன.

 

 

Series Navigationகவிதையும் ரசனையும் – 17 – தேவதச்சனின் முழுத் தொகுப்புகவிதை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *