குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)

Spread the love

 

 

 

குருதேசத்து இளவரசர்களுக்கு ஆயுதக் கலையை பயிற்றுவிக்க துரோணரை நியமித்தார்கள் பீஷ்மரும், விதுரரும். வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த துரோணர் இந்த வாய்ப்பை மிதவையாக பிடித்துக் கொண்டு கரைசேர்ந்துவிடலாம் என்று கருதினார். அரச மரியாதையோடு துரோணரை அஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்த போதும் அவருடைய மனம் என்றோ நடந்த ஒரு அவமானத்தை எண்ணிக் குமைந்து கொண்டிருந்தது. விதி துரோணரை கருவியாக்கி குருதேசத்தை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பார்க்கிறது. துரோணரும், யாகசேனன் எனும் பாஞ்சால நாட்டு இளவரசனும் அங்கிலேசரிடம் குருகுலவாசம் செய்த போது உடலும், உயிரும் போல இணைபிரியாத நண்பர்களாய் இருந்தனர். நட்புக்கு இலக்கணம் இருவர்தான் என்று கூட சொல்லலாம். துரோணர் வறுமையில் வாடினார். யாகசேனன் தன் தந்தை உடல்நலக் குறைவாக இருப்பதாகவும் தன்னிடம் ஆட்சிப் பொறுப்பு வரும்போது உனக்கு அதில் ஒரு பகுதியை அளிக்கிறேன் நீயும் வளமான வாழ்வைப் பெறலாம் என துரோணரிடம் உறுதியளித்தான். தந்தை மரணமடையவே ஆட்சிப் பொறுப்பை ஏற்க பாஞ்சால தேசம் சென்றுவிட்டான் யாகசேனன்.

 

குருகுலவாசம் முடிந்து கிருபாச்சாரியாரின் தங்கையை மணந்தார் துரோணர். அவர்களுக்கு ஒரு புதல்வன் பிறந்தான். குடும்பம் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறியது. இதற்கென்ன தீர்வென்று யோசிக்கத் துவங்கிய துரோணருக்கு யாகசேனன் குருகுலவாசத்தில் தந்த உறுதிமொழி ஞாபகத்திற்கு வர பாஞ்சால தேசத்துக்கு புறப்பட்டார். வாழ்க்கையின் போக்கு யாருக்கும் புரியாதது. கூர்மையாக வாழ்வை நோக்கபவர்களுக்குத் தெரியும் வாழ்க்கை இறுதிப்புள்ளியை நோக்கியே நகர்ந்து வருவது. பதவி, அதிகாரத்துக்கு மனிதனை மாற்றிவிடும் சக்தி இருக்கிறது. கையேந்துபவனை அரியாசணத்தில் அமர வைத்தால் அவனுக்கு அரச தோரணை வந்துவிடுகிறது. சுவர்க்கத்தின்  ஆசையைவிடுத்து உண்மைக்காக உண்மையாக வாழ்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெண்ணும், செல்வமும் மனிதனின் அகக்கண்ணை குருடாக்கிவிடுகிறது. யாகசேனன் தன்னைக் கண்டதும் ஓடோடி வந்து அள்ளி அணைத்துக் கொள்வான் என்று எண்ணிய துரோணருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. யாகசேனன் உன்னை எனக்குத் தெரியாது என்று அலட்சியப்படுத்தினான். அதோடு நில்லாமல் ஜடைமுடி தரித்த முனிவன் எப்படி பேரரசனுக்கு நண்பனாய் இருக்க முடியும் என பரிகாசம் செய்தான். குருகுலவாசத்தில் செய்து கொடுத்த உறுதிமொழியை எடுத்துக் கூறியும் யாகசேனன் விளங்கிக் கொள்ளவில்லை. இதனால் சினமுற்ற துரோணர் உன்னைச் சிறையெடுத்து உனது தேசத்தையே பிடுங்கிக் கொள்கிறேன் பார் என அவையறிய சூளுரைத்தார்.

 

காலம் தான் நடத்தும் நாடகத்துக்கு கதாபாத்திரங்களை கச்சிதமாக தேர்வு செய்கிறது. இந்த உலகம் பத்மவியூகம் போன்றது நுழைகிறோமே தவிர வெளியேறுவதற்கு எந்த உயிருக்கும் வழி தெரிந்திருக்கவில்லை. யாருக்கு என்ன வழங்கவேண்டுமோ அதைத்தான் விதி வழங்குகிறது அதைவிடவும் குண்டுமணி அளவுகூட அதிகமாக விதி தராது. பிச்சைக்காரன் பேரரசனாவதும் பேரரசன் பிச்சைக்காரன் ஆவதும் விதியின் கையிலேயே இருக்கிறது. மனிதனின் இயல்பு தான் அவனுக்கு எண்ணத்தை பிரசவிக்கிறது. எந்த தவறும் நிகழ்வதற்கு முன்பு வித்து வடிவில் எண்ணமாக தோன்றுகிறது. ஒரு அளவுகோலினைக் கொண்டு இது தர்மத்துக்கு உகந்ததல்ல என ஒதுக்குவது எல்லோராலும் முடியாது. மனிதன் ஆதாயம் தேடியே செயல்களைச் செய்கிறான் தர்மநீதிக்காக அல்ல. தனக்கான நல்லமுடிவை நேர்வழியாகத்தான் பெறுவேன் என்று யாரும் இங்கு சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். பாப காரியங்களைச் செய்யாதே என்று உபந்யாசம் செய்து கொண்டிருப்பவனின் கூட்டத்துக்கு நான்கு பேர் கூட செல்லமாட்டார்கள். அவனை இவனை காரணம்காட்டி தன் தவறை நியாயப்படுத்துவார்கள்.

 

இந்த உடல் கேளிக்கைகளுக்கும், கொண்டாட்டகளுக்கும் மட்டும்தானா தரப்பட்டது. யாரும் இங்கே நூறு ஆண்டுகள் வாழ்வோம் என்று உறுதிமொழி பெற்றுக்கொண்டு இங்கே ஜனிப்பதில்லை. எவருக்கு எப்போது வேளை வரும் என்று யாருக்கும் தெரியாது. மனிதனை மரணத்தின் நிழல் நெருங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் அவன் ஓடிக்கொண்டிக்கிறான். நாம் மனிதர்களின் முகமூடியைத்தான் காண்கிறோம் நிஜமுகத்தை அல்ல. மனிதன் புறஉலகத்தில் அதுஇது என்று ஓடிக்கொண்டிருக்கின்றானே தவிர உள்முகமாக அவன் திரும்புவதே இல்லை. அகஉலகில் புதையல் இருக்கிறது என அவன் உணர்வதில்லை. புலன்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே அவன் தனது ஆயுள் முழுவதையும் கழித்து விடுகிறான். வலையில் மாட்டிக் கொண்ட அவனுக்கு விடுபடவேண்டும் என்ற விருப்பம் இருப்பதில்லை. இத்தகைய மனதுடைய மனிதன் கட்டியெழுப்பிய கோயிலில் இறைவன் எழுந்தருள்வானா? மனிதன் தனக்குள்ளே உள்ள கடவுளைக் கொன்றுவிட்டு சாத்தானுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறான். கடவுள் தனது சாயலிலேயே தன்னைப் படைத்தான் என்று சொல்லிக் கொள்பவன் சாத்தானின் பிரதிநிதிகளிடம் விலைபோய்விட்டான்.

 

அதிகாரம் கைக்கு வந்துவுடன் தான் மனிதனின் நிஜமுகம் தெரிய ஆரம்பிக்கின்றது. ஒரு யுத்தத்தை நடத்தி முடிப்பதற்காகவே காலம் கண்ணனை பூமிக்கு அனுப்புகிறது. பீஷ்மரே மெச்சும்படி கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஆயுதக்கலையை பயிற்றுவித்தார் துரோணர். அரங்கேற்றத்துக்குப்பின் பின் தனது சிஷ்யர்களிடம் குருதட்சிணையாக தனக்கு நேர்ந்த அவமானத்தை நேர்செய்யுமாறும், தான் சூளுரைத்தபடி பாஞ்சால மன்னன் யாகசேனனை சிறைப்பிடித்துக் கொண்டு வருமாறும் கூறினார். எனது விருப்பத்தை நிறைவேற்றுவது சீடர்களாகிய உங்கள் தலையாய கடமை என்றார். நீ செய்த ஒவ்வொரு செயல் குறித்தும் உன்னிடம் கேள்வி கேட்கப்படும். மனிதன் மனிதனாக இருக்காத வரை உலகம் சுடுகாடாகத்தான் இருக்கும். கங்கை வெறும் நதியாத் தெரிந்தால் அது கண்களின் தவறா? தனது தவறினை நியாயப்படுத்த மனிதன் புனித நூல்களை துணைக்கு அழைக்கிறான். மனிதக் கடவுளுக்கு தனது குமாரனான மனிதன்  மீது பாசம், இரக்கம் இருக்கலாம் ஆனால் இயற்கை பொறுத்துக் கொள்ளாது அதனால் தான் சமீபகாலமாக இரத்தக் களறியை பார்த்துக் கொண்டிருக்கிறது இவ்வுலகம். காலம் கடவுளையே சாட்சிக் கூண்டில் நிறுத்தக் கூடியது.

 

துரியோதனாதியர்களும், பாண்டவர்களும் பாஞ்சால தேசத்தின் மீது படையெடுத்து பேரரசன் யாகசேனனை சிறைப்பிடித்து விலங்கிட்டு துரோணர் முன்பு நிறுத்தினர். என்ன பேரரசரே என்று நகைத்த துரோணர் நீ கொடுப்பதாக சொல்லியிருந்த பாதி ராஜ்யத்தைவிட முழு ராஜ்யமே இப்போது என் கையில். நான் இப்போது கொடுக்கும் நிலையில் இருக்கிறேன் நீ என்னிடமிருந்து யாசகம் வாங்கிக் கொள்ளும் நிலையில் இருக்கிறாய். இந்தா வாங்கிக்கொள் உனக்கு பாதி அரசாட்சியையும் நான் இடும் பிச்சையாக மீதி அரசாட்சியையும் கொடுக்கிறேன் போய்வா. இவனை விடுவியுங்கள் என ஆணையிட்டார் துரோணர். அவமானத்துடன் வெளியேறிய யாகசேனன் துரோணரைக் கொல்ல தனக்கு ஒரு மகனும்.  தன்னை சிறைப்பிடிக்க காரணமாயிருந்த அர்ச்சுனனை ஆள ஒரு புத்ரியும் பெறுவது என சபதமேற்றான். உபயாச முனிவரால் வேள்வி நடத்தி துஷ்டத்துய்மைன் என்ற மகனையும், பாஞ்சாலி என்ற மகளையும் பெறுகிறான். குருதேசத்தின் அழிவுக்கு காலம் துாவிய விதை இது. குருட்ஷேத்திர காலகட்டத்தைப் போலவே இன்று இரு அணியாக பிரிந்து நிற்கும் பாரதத்தில் யார் பக்கம் தர்மம் உள்ளது என்று கண்ணன் மட்டுமே அறிவான்.

Series Navigationகுருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)என்ன தர?