குருட்ஷேத்திரம் 27 (அஸ்வத்தாமன் எனும் மதம்கொண்ட யானை)

 

 

 

தர்மமும், அதர்மமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. துன்பம், இன்பம் என்ற இருகரைகளுக்கு மத்தியில் ஓடும் நதி தான் வாழ்வு. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்துவிடும் அற்பமானது இந்த வாழ்வு. பிறப்பை தீர்மானிக்கும் சக்தி எது என்று இங்கு யாருக்கும் தெரியாது. மனிதர்கள் தங்கள் பக்கமே நியாயமிருப்பதாகக் கருதுகிறார்கள். வல்லவர்களிடம் கையேந்தும் நிலையில் தான் நல்லவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை விந்தையாகத்தான் இருக்கிறது. சுவர்க்கமும், நரகமும் இங்கேதான் இருக்கிறது. தர்மகிரந்தங்கள் சீந்துவாரற்றுக் கிடக்கின்றன. பூமியில் பெரும்பான்மையோர் பிறந்துவிட்டோம் என்பதற்காகவே வாழ்ந்து தொலைக்கின்றனர். தர்மத்தின் பாதையில் புத்தரைத் தவிர யாரும் போகவில்லை. மதக்கோட்பாடுகள் மனிதர்களை விதியின் கைகளில் ஊசலாடும் விளையாட்டுப் பொம்மைகள் என்கிறது.

 

கலியுகத்தில் பணம் கடவுளாகிவிட்டது. அதை நோக்கி ஓடுவதே வாழ்வின் குறிக்கோளாகிவிட்டது. அநித்யமான இவ்வுலகில் மனிதர்கள் மரணத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. வாழ்க்கை இறப்பை நோக்கியதொரு பயணமாகவே இருக்கிறது. இங்கு காலம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. நாத்திகர்களைவிட ஆத்திகம் பேசுவோர் வெளிவேஷக்காரர்களாக இருக்கின்றனர். தர்மத்தை எடுத்துரைக்கும் இதிகாசங்களை வெறும் கதை என்று ஒதுக்கிவிட முடியாது. ஏட்டுக் கல்வியில் பாண்டித்யம் இருந்து பயனில்லை. ஜனனமும், மரணமும் நடக்காத நாட்களே இந்த உலகில் கிடையாது. செலுத்தப்பட்ட அம்புபோல ஏதோவொன்றை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். மாநிலம் பயனுற சிலபேர்களால் தான் இங்கு வாழ முடிகிறது.

 

அஸ்வத்தாமன் தனது தந்தை துரோணரை உயிராக மதித்தான். பீஷ்மரால் தான் துரோணர் ஆச்சாரியராக நியமிக்கப்பட்டார். வாழ்க்கைக் கடலில் தத்தளித்த துரோணருக்கு இது மாபெரும் வாய்ப்பாக அமைந்தது. தன்னை அவமானப்டுத்திய பாஞ்சால மன்னன் துருபதனை வென்று பாஞ்சால தேசத்தை குருதட்சணையாகத் தா என துரோணர் அர்ச்சுனனிடம் கேட்கிறார். அர்ச்சுனனும் வாக்களித்தபடி துருபதனை துரோணர் காலில் விழ வைக்கிறான். பாஞ்சால தேசத்தின் பாதியை பிச்சையாக துருபதனுக்கு தந்த துரோணர் மற்றொரு பாதிக்கு தானே மன்னனாகிறார். அப்போது இளவரசன் அஸ்வத்தாமன் தானே. ஆனால் இருவரும் பாஞ்சால தேசத்தில் கால்வைத்தது கூட இல்லை. அஸ்வத்தாமன் அஸ்தினாபுரத்தைவிட்டு நகராததற்கு துரியோதனன் மீது கொண்ட நட்புதான் காரணம். துரியோதனனுக்கு கர்ணன் ஒரு கண் என்றால் அஸ்வத்தாமன் மற்றொரு கண்.

 

அர்ச்சுனனுடைய பணிவு, ஆற்றல், வேகம் துரோணரைக் கவர்ந்தது. அர்ச்சுனனோடு அஸ்வத்தாமன் நட்பு கொண்டால் அவனுடைய குணநலனும் நன்றாக அமையும் என்ற துரோணர் எண்ணினார். ஆனால் கர்ணணைப் போன்று அஸ்வத்தாமனும் பாண்டவர்களை கண்மூடித்தனமாக எதிர்த்தான். அர்ச்சுனனுடைய பராக்கிரமத்தையும், குருவின்பால் அவன் கொண்ட பக்தியையும்  கண்ட துரோணர் அவனுக்கு ஆயுதங்களிலேயே அளப்பறிய ஆற்றல் கொண்ட பிரம்மசிரஸ் என்ற அஸ்திரத்தைக் கற்றுத் தந்தார். இதனை அறிந்த அஸ்வத்தாமன் தனக்கும் கற்றுத் தரும்படி பிடிவாதம் பிடித்தான். புத்திர பாசம் துரோணரின் அறிவுக் கண்ணை மறைத்தது. பிரம்மசிரஸ் அஸ்திரத்தின் நுணுக்கங்களை அஸ்வத்தாமனுக்கு போதித்தார், எனினும் பாப காரியங்களுக்காக இந்த அஸ்திரத்தை ஒருபோதும் பயன்படுத்தாதே என வேண்டிக் கேட்டுக்கொண்டார். நினைத்ததை சாதித்த அஸ்வத்தாமன் அன்றிரவு நிம்மதியாக உறங்கினான்.

 

அஸ்வத்தாமன் தன்னுடைய அஸ்திரத்தின் மூலம் கிருஷ்ணனின் சக்ராயுதத்தை வெற்றி கொள்ள முடியும் என்று நம்பினான். தனக்கு நிகரான ஒருவனாக கிருஷ்ணனை மட்டுமே கருதினான். அவனைத் தோற்கடிப்பதிலேயே குறியாக இருந்தான். போர் நடந்து கொண்டிருக்கும் போது துரோணரின் பலகீனத்தை அறிந்து தான் கிருஷ்ணன் தருமனை விட்டே அஸ்வத்தாமன் அம்புபட்டு இறந்ததாக அவர் காதுபட சொல்ல வைத்தான். அதைக் கேட்ட துரோணர் காண்டீபம் கைகளிலிருந்து நழுவ நிலைகுலைந்து போனார். ஆயிரம் தேள்கள் கடித்தது போலிருந்தது அவருக்கு. அச்சமயம் பார்த்து சீறிப்பாயும் வேங்கையான துரோணர் மீது திருஷ்டத்துய்மன் அம்பு எய்தான். அந்த அம்புகள் துரோணரின் உயிரைப் பறித்தது. துரோணர் இறந்த செய்தி கேட்ட அஸ்வத்தாமன் மதம் கொண்ட யானையானான். கெளரவ சேனைகளில் உயிர் பிழைத்த அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மா மூவரும் ஒரு விருட்சத்துக்கு கீழாக படுத்திருந்தனர். அஸ்வத்தாமனின் உள்ளம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது.

 

மரக்கிளையில் ஒரு ஆந்தை இரவை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு காக்கையை மூர்க்கத்தனமாக கொத்திக் கொன்றதை அஸ்வத்தாமன் கண்டான். பழிக்குப் பழி என முடிவு செய்தான். கிருஷ்ணன் எத்தனையோ தடவை யுத்த தர்மத்தை மீறியிருக்கிறான் நான் ஒருதடவையாவது மீற வேண்டாமா என வாளை உருவினான். அறம் பேசினால் தலை இருக்காது என உணர்ந்து கொண்ட கிருபரும், கிருதவர்மனும் அவனைத் தடுக்காமல் விலகிக் கொண்டனர். பாண்டவ சைன்யம் உறங்கிக் கொண்டிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தான். திருஷ்டத்துய்மனின் தலையைத் துண்டித்தான். சிகண்டியும் வாளுக்குத் தப்பவில்லை. உபபாண்டவர்கள் ஐவருக்கும் உறகத்திலேயே உயிர் பிரிந்தது. குருவம்சத்தில் பஞ்சபாண்டவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

 

அர்ச்சுனன் அழுது புலம்புகிறான். அப்பன் பிள்ளைக்கு கொள்ளி வைப்பதைவிட பெருந்துன்பம் இவ்வுலகத்தில் வேறுண்டோ என்கிறான். திரெளபதியாலும் பிள்ளைகள் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிருஷ்ணரைத்தவிர வேறு எல்லோரும் நரக இருளில் தள்ளப்பட்டனர். அதோடு அஸ்வத்தாமன் சினம் தணிந்துவிடவில்லை. பாண்டவ  வம்சமே தலைஎடுக்கக் கூடாது எனக் கருதினான். அவனது அடுத்த குறி அபிமன்யூவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தை நோக்கித் திரும்பியது. இப்போது மாண்டுபோன துரோணர் அவனுக்குக் கை கொடுக்கிறார். கர்பத்திலிருக்கும் சிசுவைக் கொல்ல அஸ்வத்தாமன் பிரம்மசிரஸை ஏவுகிறான். சிசு கரித்துண்டாய் பிறந்தது. கிருஷணன் ஆத்திரம் கொண்டு அஸ்வத்தாமனை சபிக்கிறான். மூவாயிரம் ஆண்டுகள் செய்த பாவத்தின் நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டு அலைந்து திரிவாய் எனச் சபிக்கிறான். அஸ்வத்தாமன் என்ற பெயர் கிருஷ்ணனையே குலை நடுங்கச் செய்தது. விதியின் முன் யுத்த தர்மத்தை மீறிய கிருஷ்ணனும் குற்றவாளியே. காலத்தின் போக்கை எவராலும் கண்டறிய முடியாது.

 

பிரம்மச்சரிய விரதத்தை சிறிதும் நழுவாமல் கடைப்பிடிப்பவர்கள் யாராவது தொட்டால் கரிக்கட்டை உயிர்பெறும் என்கிறார் அனைத்தும் அறிந்த வியாசர். தவசீலர்களும், முனிவர்களும், யோகிகளும் தொட்டும் கரிக்கட்டை உயிர்பெறவில்லை. அவர்களின் தவவாழ்வு கேள்விக்குறியானது. கண்ணன் எழுந்தான் அவையில் சலசலப்பு ஏற்பட்டது சிரிப்பொலியும் கேட்டது சிலர் காதுபடவே ஸ்த்ரீலோலனாயிற்றே என்றனர். இங்கேயும் கண்ணன் தனது லீலையை நடத்திக் காட்டி காண்போரை வாயடைக்க வைத்தான். அவன் தொட்டவுடன் கரித்துண்டு குழந்தையாகி அழுதது. எல்லோரும் வியந்து போயினர். ஆத்மனை உணர்ந்து கொண்டவர்கள் செய்யும் செயலுக்கு அவர்கள் பொறுப்பில்லை அல்லவா? கிருஷ்ணன் பதினாறு  ஆயிரம் மனைவிமார்களைப் பெற்றிருந்தும் அவனது காமம் தலைக்கேறியது இல்லை. பார்த்தனுக்கு மட்டுமல்ல ஐம்புலன்களுக்கும் அவனே சாரதி. உயிர்பெற்ற சிசுவின் பெயர் பரிட்சித்து. குருவம்சத்தின் ஒரே வாரிசு.

 

 

ப.மதியழகன்

115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
cell:9597332952

Whatsapp: 9384251845

Series Navigationகுருட்ஷேத்திரம் 28 (சத்திரிய தர்மம் பற்றி தருமனின் ஐயம்)கனடாவில் கலோவீன் தினம்