6 தங்கமும் கற்களும் விற்கும் எ.டி.எம்.

இந்தியாவில் முதன்முதலில் தானியங்கி பணப் பட்டுவாடா கருவியை அறிமுகப்படுத்திய போது, அதில் வைக்கப்படும் பணம் பாதுகாப்புடன் இருக்குமா என்ற ஐயம் எழுந்தது. ஆனால் காலப்போக்கில் இருபத்தி நான்கு மணி நேர சேவை காரணமாகவும், அது தரக்கூடிய இன்னபிற வசதியின் காரணமாகவும் இன்று இந்தியா முழுவதும் எண்ணற்ற கருவிகள் மக்களுக்கு பேருதவி செய்து கொண்டிருக்கிறது.

இந்தக் கருவியின் தொழில்நுட்பத்தை பல நாடுகளிலும் பலரும் பல வழிகளில் பயன்படுத்த எண்ணம் கொண்டு, புதுப்புது உபயோகங்களைப் புகுத்தி வருகின்றனர். தானியங்கி விற்பனைக் கருவி வந்தது. குளிர்பானங்கள், பானங்கள், சாக்லெட், பிஸ்கெட்டுகள் விற்கும் தானியங்கி விற்பனைக் கருவி பல நாடுகளில் புகுத்தப்பட்டன. பொருட்களை பல கூடுகளில் இட்டு, தேவையான பொருளை நாம் தேர்வு செய்த பின், பணத்தைக் இட்டால், அந்தப் பொருள் கீழிருக்கும் பெட்டகத்தில் வந்து விழும். இந்தத் தானியங்கி விற்பனைக் கருவியும் எந்நேரம் வேண்டுமானாலும் உபயோகிக்கப் படக்கூடிய காரணத்தால் பல நாடுகளில் இவை பிரபலமானயின.

இந்த இரு கருவியின் தொழில்நுட்பத்தை இணைத்து ஜெர்மனிய நிறுவனம் ஒரு புதிய கருவியை உருவாக்கப் பயன்படுத்திக் கொண்டனர். உலகின் முதன்முதல் தங்கம் விற்கும் தானியங்கிக் கருவியை ஜெர்மனியில் அறிமுகப்படுத்தினர். தங்க நாணயங்களையும், வெள்ளி நாணயங்ககளையும், வைரங்களையும் நாம் இந்தக் கருவியின் மூலம் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாகப் பணத்தைக் கருவியில் இட்டோ, கிரேடிட் கார்ட் மூலமாகவோ, நாம் அதை வாங்கலாம்.

தங்கத்தை விற்பதில் ஒரு பிரச்சினை உண்டு. தங்க விலை நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. அப்படியென்றால் தங்கக் நாணயங்களை விற்பது எப்படி? அதையும் இந்தக் கருவி கவனித்துக் கொள்ளும். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை, தங்கம், வெள்ளி விலைகளை அது உலகச் சந்தையின் நிலவரப்படிப் மாற்றிக் கொள்ளும். அதனால் வாங்குவோர், தங்கத்தின் அப்போதைய விலையில் தான் நாணயங்களை வாங்க முடியும்.

ஜெர்மனியின் தாமஸ் கெய்ஸ்லர், இதைக் கண்டுபிடித்து, உலகின் முதல் கருவியை, அபு துபாயில் உலகின் மிகப் பெரிய கட்டடமான புர்ஜ் கலீபாவில் இருக்கும் ஏழு நட்சத்திர விடுதியான பேலஸ் ஹோட்டலில், ‘கோல்ட் டு கோ’ என்ற இந்தக் கருவியை விடுதியின் உள்ளேயே நிறுவினர். 6 அடி உயரமும், 500 கிலோ எடையும் கொண்ட இந்தக் கருவியை உரிய முறையில் நிறுவ, தரையை மிகவும் உறுதியாக்க வேண்டியிருந்தது. மேலும், இந்தக் கருவியின் பாதுகாப்பும் மிகவும் அவசியமானது. இதன் முகப்பு 19 இன்ச் திரை. இதில் 24 காரட், 1, 5, மற்றும் 10 கிராம் தங்க நாணயங்களை வாங்கலாம். 320 வௌ;வேறு பொருட்களை வாங்கும் வசதியைக் கொண்டது இக்கருவி. எக்ஸ் ஓரியண்ட் லக்ஸ் எ.ஜி எனும் இந்த நிறுவனம், கருவியை மிகச்சிறந்த இடத்தில் நிறுவி, மக்களின் மனத்தில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

வரும் விருந்தினர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்கத்தை வாங்குவதாக மகிழ்ச்சியுடன் சொல்கின்றனர் விடுதியை நடத்துபவர்கள். அதிலும் தங்கக் நாணயங்களில் அந்த விடுதியின் பெயரை இட்டு, மிகவும் அழகிய பெட்டியில் வாங்கும் பொருட்களை தருவதால், வாங்குவோரின் ஆர்வம் தற்போது பன்மடங்குப் பெருகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சிறந்த நினைவுப் பொருளாகவோ, நல்லப் பரிசாகவோ வைத்துக் கொள்ள வசதியாக இருப்பதால், ஆர்வம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

அடுத்து ஐரோப்பாவில் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரிலிருக்கும் “பேலஸ் ஹோட்டல்” லிலும் நிறுவப்பட்டது. ஜெர்மனியின் பல இடங்களில் அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கண்ட மற்ற நாட்டவாரும் இதில் ஆர்வம் கொண்டு, தங்கள் நாட்டிலும் புகுத்த விரும்பினர்.

2011ன்றில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலிருக்கும் கோல்டன் நகட் ஹோட்டலிலும் தங்கம் விற்கும் கருவி நிறுவப்பட்டது. ஹோட்டலில் நிறுவப்பட்டு வந்த இக்கருவி இலண்டன் மாநகரில் வெஸ்ட்பீல்ட் விற்பனைக் கூடத்தில் சாதாரண மக்களும் வாங்கும் வகையில் அடுத்து அமைக்கப்பட்டது.

உலகின் தங்க உற்பத்தியிலும் நுகர்வோர் எண்ணிக்கையிலும் முதலிடம் வகிக்கும் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருக்கும் மிகவும் கூட்டம் அதிகம் கொண்ட வாங் பூ ஜிங் சாலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தங்க விற்பனைக் கருவி அமைக்கப்பட்டது. அக்கருவி பல்வேறு அளவுகளில் தங்கக் நாணயங்களையும் கட்டிகளையும் விற்கக் கூடியது. ஒவ்வொரு விற்பனைக்கும் 10 யுவான் கட்டணம் விதிக்கப்பட்டது. அக்கருவியில் 200 கிலோ தங்கம் வரை வைத்து விற்பதற்கான வசதியுடன் அமைக்கப்பட்டது. மிகவும் அதிக மதிப்பு கொண்ட கருவி என்பதால் அதை அமைக்கும் இடங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டிய அவசியம் உண்டு.
அதிகத் தங்கம் வாங்குவோர் கொண்ட இந்தியா சும்மா இருக்கலாமா? அவர்களும் தங்கம் விற்கும் கருவியை மும்பாயில் நிறுவினர். அதில் தங்கம் மட்டுமல்லாது வெள்ளி மற்றும் விலையுயர்ந்த வைரம், போன்றவற்றையும் வாங்கலாம். தங்க நகைகளுக்கு பெயர் பெற்ற கீதாஞ்சலி நிறுவனம் இதை நிறுவி, இந்தியாவின் முதல் தங்கத் தானியங்கிக் கருவியை நிறுவியப் பேறு பெற்றனர்.

இந்தக் கருவி மூலம் செல்வத்தைக் குறிக்கும் கடவுளான லட்சுமி உருவம் பொறித்த தங்க நாணயங்களும், ஒற்றுமையைக் குறிக்கும் வைரம் பதித்த ஸ்வஸ்திக் பதக்கங்களும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 1000 ரூபாய் முதற்கொண்டு 30000 ரூபாய் வரைக்கும் பொருட்களை வாங்கலாம்.
இதே போன்று 75 கருவிகளை இந்தியாவின் பல பகுதிகளில், விற்பனைக் கூடங்கள், கோயில்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் நிறுவவும் திட்டமிட்டுள்ளனர்.

விழாக்களுக்கும், பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினத்திற்கு பரிசுகளைக் கொடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ள இந்தியர்களுக்கு, இத்தகைய கருவி மிகச் சில நிமிடங்களில் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளும் வசதியுடன் இருக்கக் கூடிய இக்கருவிகள் நேர விரயத்தை தடுக்கக் கூடியது என்றே சொல்லலாம்.

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -81.பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-1)