7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்

 

ஆகஸ்டு 30லிருந்து பதினோரு நாட்கள் மதுரை தமுக்கம் வளாகத்தில் நடைபெற்ற 7வது மதுரைப் புத்தகத்திருவிழா கடந்த 9ம்தேதி முடிவுற்றது.

’திரு’ என்ற தமிழ்ச்சொல் தன்மதிப்பை இழந்து வருகிறது. ஒரு புத்தக விற்பனையைக்கூட திருவிழாவென்றா அழைக்கவேண்டும்? புத்தக விழாவென்றால் என்ன குறை? பணத்துக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கிறோமோ அப்படி தமிழ்ச்சொற்களுக்கும் நாம் கொடுக்க வேண்டும்.

மதுரை, தன்னை ”மாநகரம்” என்றழைத்துக் கொண்டாலும் மக்கட்தொகை நெருக்கமில்லாவூர். எனினும் புத்தகத்திருவிழாவில் நல்ல கூட்டம். விற்பனையும் கூட.

11  நாட்களும் பிரபலமான மேடைப் பேச்சாளர்களும் அரசியல்வாதிகளும் மாலையில் கலையரங்கில் பேசினார்கள். இரு நாட்கள் அவ்விழாவிற்குச் சென்றேன்.  ஓர் நாள் காலை மாணாக்கருக்குப் பேச்சுப்போட்டி நடைபெற்றது; மாலையில் மதுரைப் பேராசிரியரும் திரைப்பட நடிகரும் ஜெயா தொலைக்காட்சிப் புகழ் முனைவர் கு. ஞான சம்பந்தன் பேசினார். இன்னொரு நாள் ஆரோவொருவர் பேசினார். அவ்விழா காவல்கோட்டம் ஆசிரியருக்குப் பாராட்டு விழா.  அவருக்கு  எங்கெங்கும் பாராட்டு மழைதான். அன்று ஒரு வாசகர் சாமியே ஆடிவிட்டார்.  அந்நாவல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருவதை அவர் அறிவாரென நம்புகிறேன். எனினும் விழா நடாத்துவோர் மாற்றுக் கருத்துடையோர் வாராவண்ணம் முன்னெச்செரிக்கைக் கொண்டோராகவேயிருக்கின்றனர்.  ஊரெல்லாம் புகழும்போது, நாமும் கூட்டத்தோடு சேர்வதுதான் நன்று என்று பொதுமக்கள் நினைக்கட்டும். இலக்கியத்திறனாய்வாளர்களுமா?

முனைவர் கு. ஞான சம்பந்தனின் பேச்சின் தலைப்பு ‘பயணம்’.  கூட்டம் நகைச்சுவையை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தது; நின்றது; சலனப்பட்டது. ஒரு பெட்டி நிறைய துணுக்குச் செய்திகளும், நகைச்சுவை சம்பவங்களும் வைத்திருப்பார் போலும்! எல்லா மேடைகளிலும் அவையே.  ஓரிடத்தில் கேட்டவர் இன்னொரு இடத்திலும் கேட்டால் என்ன நகைச்சுவை அவருக்கு வரும் என்று நினைத்ததில் எனக்கும் நகைச்சுவை உண்மையிலேயே வந்தது!  நான் இதற்கு முன் இவரைக் கேட்டிருக்கிறேன்.  தொலைக்காட்சி பட்டிமண்டபங்களிலும் சில நிகழ்ச்சிகளிலும். அந்த துணுக்குச்செய்திகளையும்தான் !

அதிலொன்று:  சென்னையில் ஒரு மதுரைக்காரர் பேருந்தில் பயணம் செய்தார். நடத்துனரிடம் நூறு உருபாத்தாளை நீட்டி பயணச்சீட்டுக் கேட்க நடத்துனர் சீட்டைக் கொடுத்தபின், மீதிப்பணத்துக்கு சில்லரையில்லை கொஞசம் பொறுங்கள் என்றார். மதுரைக்காரர், ‘பையக் கொடுங்கள்’ என்றாராம். நடத்துனர் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்றவுடன் இவர் பையக் கொடுத்தால் போதும் என்ற மீண்டும் சொல்ல நடத்துனர் ”என் பையை ஏன் இவன் கேட்கிறான்?” என்று கலவரப்பட்டாராம். அப்போது இன்னொரு மதுரைக்காரப்பயணி, ‘பைய’ என்றால், மெதுவாக என்று மதுரையில் பொருள் என்று விளக்கினாராம்.

‘பையபைய பறந்துவா!’ பாலும்சோறும் தின்ன வா! என்று தாய் தன் குழந்தைக்கு அமுதூட்டும் பாட்டாக சிறார் தமிழ்ப்பாடநூலில் வரும் இப்பாடலைச் சிறுவயதிலேயே கற்று விட்டுத்தான் எல்லாரும் வாழ்க்கையில் நுழைகிறார்கள். அந்த நடத்துனர் ஓன்றாவது வகுப்புக் கல்லாமல் வேலைக்கு வந்திருப்பாரா?  ஆனால் முனைவர் கு. ஞான சம்பந்தன்  மதுரைக்காரர்களுக்குத்தான் தெரியும் என்று நம்புகிறார். அடுத்து அவர் பேசியதுதான் என்னை வருத்தத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியது. மதுரையில் ஞான சம்பந்தர் நிறுவிய மடத்தைப்பற்றிச் சொல்லும்போது ‘சமணர்கள் தீவச்சுப்புட்டானுக!’ என்றார்.

இவர் ஒரு மதுரைக்கல்லூரி ஒன்றில் தமிழ்ப்பேராசிரியர் என்ற அறிகிறேன். ஒரு தமிழாசிரியர் வாயிலிருந்த வரும் சொற்கள் எப்படியிருக்க வேண்டும்? அதுவும் பொது மேடையில்? அதுவும் தமிழுக்கு மாபெரும் தொண்டு செய்தோரைப்பற்றிப் பேசும்போது!?  சமணர்களில்லாவிட்டால் தமிழன்னையில் கழுத்து மூலியாகத்தான் இருக்குமென்பது தமிழுலகம் ஒத்துக் கொண்ட உண்மை. அப் புத்தகவிழாவில் நான் வாங்கிய நூல்களுள் தெ. பொ.மீயின் ‘சமணர்களும், சம்பந்தரும்’ ஒன்று. அதில் மாபெரும் தமிழறிஞரும் உ வே சாவின் ஆசிரியருமான தெ பொ மீ முன்னுரையில் சொல்வதைக்கேளுங்கள்.

”சம்பந்தர் பாடல்களை ஆராய்வதோடு அவர் வரலாற்றைப் பின்வந்தார் எவ்வாறு பாடியுள்ளார் என்றும் ஆராயவேண்டுவது ஆயிற்று.  கதை கூறுவாரின் போக்கோடு ஒட்டி முதலிற் கதையை ஆராய்வதே பொருத்தமாதலின், அவ்வாறு விளக்கி உள்ளேன்.  ஆதலின், அங்குக் கூறுவன எல்லாம் என்னுடைய கருத்தென்று கொள்ளுதலாகாது என மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.  யான் சமணன் அல்லனாதலால் சில போது நடுநிலை தவறினேன் என்று எண்ணிவிட வேண்டா. ”

இவரன்றோ தமிழாசிரியர்! தமிழென்றால் கண்ணியம் என்று இவரைப் படித்தாலோ கேட்டால் புரிய வரும். பலர் ‘ஏதோ வட்டாரத் தமிழைப் பேசிவிட்டால் பெரும் தமிழ்த்தொண்டு ஆற்றிவிட்டதாக நினைத்து மேடையிலே நல்ல தமிழைக் கைகழுவி விட்டு வட்டாரத் தமிழைப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பேரா சாலமன் பாப்பையா, முனைவர் கு. ஞான சம்பந்தன் போன்றோர் எப்போதுமே மேடைகளில் மதுரைத் தமிழை (அதாவது கொச்சைத்தமிழ் சொற்களும் உச்சரிப்பும்கூடி எ.கா…அவர்கள் என்ற சொல் ’அவியிங்க” என்றாகும். இஃதொரு பெருமையா!?) மட்டுமே பேசுகிறார்கள். பேராசிரியர்களான. இவர்களின் தமிழைக்கேட்டு இன்புறத்தான் வருகிறோம். இவர்களே கொச்சைகளை மேடையில் அவிழ்த்துவிட்டால் எப்படி? நல்ல தமிழில் பேச முடியாதா? சங்கப்பாடல்களுக்கு விளக்கங்கள் எழுதும் முனைவர் கு. ஞான சம்பந்தனுக்கும், தொலைக்காட்சிகளில் திருக்குறளுக்கு  பொழிப்புரை வழங்கும் பேரா சாலமன் பாப்பையாவுக்கும் நல்ல தமிழ் நன்றாகவே வரும். தமிழாசிரியர்கள் மாணாக்கரும் பிறரும் நல்ல தமிழை அறிய என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் அவர்களும் செய்து பிறரையும் செய்யத் தூண்டவேண்டும்.. இல்லையென்றால், வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும். தமிழை மேடையில் அழித்தோர் தமிழாசிரியர்களே! என்ற குற்றச்சாட்டு எதிர்காலத்தில் வைக்கப்படும்.

முற்றிற்று.

Series Navigationசுபாவம்கவிதை