7.ஔவையாரும் சிலம்பியும்

Spread the love

 

 

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.,) புதுக்கோட்டை.

மின்னஞ்சல்: malar.sethu@gmail.com

சோழ நாடு சோறுடைத்து என்பர். காவிரி பாய்ந்து வளங்கொழிக்கும் நாடு சோழநாடு. நாடு மட்டுமல்லாமல் நாட்டில் வாழ்ந்தோர் அனைவரும் வளமாக வாழ்ந்தனர். அச்சோழ நாட்டில் சிலம்பி என்ற தாசி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு அந்நாட்டில் நல்ல பேரும் புகழும் இருந்தது.

ஆனாலும் அச்சிலம்பிக்கு மனதிற்குள் ஓர் ஆசை கொழுந்துவிட்டு எரிந்தது. மன்னனைப் பாடுகின்ற புலவர் தன்னையும் புகழ்ந்து பாட வேண்டும். அவ்வாறு பாடினால் அப்பாடல் காலம் கடந்து நிற்கும். தன்னுடைய பேரும் இப்பூலகில் நிலைத்து நின்றுவிடும் என்று எண்ண் கொண்டவளாக வாழ்ந்து வந்தாள்.

அப்போது அவ்வூருக்குக் கம்பர் வந்ததை எண்ணி மகிழ்ந்து அவரிடம் சென்று அவரை உபசரித்துத் தன்னைப் பற்றி ஒரு பாடல் பாட வெண்டும் என்று இறைஞ்சினாள். மேலும் அவர் ஆயிரம் பொன் கொடுத்தால் வெண்பா பாடுவார் என்பதை அறிந்து தன்னிடம் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்றாள். அவ்வாறு விற்றுக் கிடைத்த பொன் 500 மட்டுமே.

அந்த 500 பொன்னைக் கொடுத்து தன்மீது ஒரு வெண்பா பாடுமாறு சிலம்பி கேட்டாள். அதனைக் கேட்ட கம்பர் பொன்னை வாங்கிக் கொண்டு,

‘‘தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே

மண்ணாவதும் சோழ மண்டலமே”   

என அரை வெண்பா மட்டுமே பாடிவிட்டுச் சென்று விட்டார்.

       இருந்த அனைத்தையும் விற்றுவிட்டு பாடல் பெற வேண்டும் என்ற விருப்பத்திற்காக ஏழையானாள் சிலம்பி. செல்வச் செழிப்புடன் விளங்கிய அவளது வாழ்க்கை வறுமைக்குள் தள்ளப்பட்டது. இருப்பினும் சிலம்பி வருத்தப்படாது கம்பர் பாடிய அரை வெண்பாவைத் தனது வீட்டுச் சுவரில் எழுதி வைத்திருந்தாள்.

       தனக்கு வருத்தம் ஏற்படும்போதெல்லாம் அந்தப் பாடலைப் பாடிப் பார்ப்பாள். யாராவது ஒரு புலவர் வந்து இதனை முடித்துத் தன்னை மகிழ்விப்பார் என்று அவள் நம்பிக்கையுடன் இருந்தாள்.

       அப்போது ஔவையார் நடந்தே வந்து சோழநாட்டை அடைந்தார். வெயிலின் கொடுமையைத் தாளாத ஔவையார் பாதையோரம் இருந்த தாசியின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்.

       தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்த ஔவையாரைக் கண்ட தாசி சிலம்பி அவரை அன்போடு வரவேற்று வீட்டினுள் அமரச் செய்து அவருக்கு தன் வீட்டிலிருந்த கூழைக் கொடுத்து நன்கு உபசரித்தாள்.

       அவளது அன்பில் மகிழ்ந்த ஔவையார் அவளது வீட்டுச் சுவரில் பாதியுடன் எழுதப்பட்டு முடிக்கப்படாது இருக்கும் வெண்பா அடிகளைப் பற்றிக் கேட்டார். அதனைக் கேட்ட சிலம்பி நடந்தவற்றைக் கூறி தன்னுடைய நிலைமையையும் விளக்கியுரைத்துக் கண்ணீர் விட்டாள்.

       அவளது நிலையைக் கண்டு மனம் இரங்கிய ஔவையார் முடிக்கப்படாமல் இருக்கும் வெண்பாவை,

‘‘தண்ணீரும்காவிரியேதார்வேந்தன்சோழனே
மண்ணாவதும்சோழமண்டலமே – பெண்ணாவாள்

அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு “

என்று பாடி முடித்தார். தண்ணீரில் சிறப்புக்குரியது காவிரிநீர். அரசர்களில் சிறந்தவன் சோழன். மண்ணிலே சிறந்ததுசோழமண்டலம். இவற்றைப் போலவே சிலம்பில் சிறந்தது சிலம்பி என்னும் இந்த நல்லாள் காலில் உள்ள சிலம்பே ஆகும் என்பது அந்த வெண்பாவின் பொருளாகும்.

       அந்த வெண்பாவைக் கேட்ட சிலம்பி பெரிதும் மகிழ்ந்தாள். ஔவையின் வாக்கால் சிலம்பியின் வறுமை ஒழிந்தது. அவள் பொன்னாலான சிலம்பினை அணியும் அளவிற்கு பெரும் செல்வச் செழிப்பினைப் பெற்றாள். அவளை விட்டு வறுமை ஓடிப்போயிற்று. ‘‘கூழுக்கும் பாடினார் ஔவை’’ என்ற பெயரும் புலவர் உலகில் ஔவைக்கு ஏற்பட்டது.

(தொடரும்)

Series Navigationஎன்னை பற்றிஇவர்களின் பார்வையில் முருகபூபதியின் ஏழாவது கதைத் தொகுதி