9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

வளவ துரையன்


அவனும் அவளும் மனத்தால் ஒன்றுபட்டுக் கலந்தபின் அவன் அவளைத் தன்னூர்க்கு அழைத்து செல்கின்றான். அவள் தன் குடும்பச்சூழலைக் கைவிட்டு அவனுடன் செல்கிறாள். செல்லும் வழியில் அவர்களின் காதல் அன்பையும், மனத் துணிவையும் கண்டோர்கள் போற்றிக் கூறுவதாகவும், அவர்களைத் தேடிச் செல்பவர்கள் கூறுவதாகவும் இப்பத்துப் பாடல்களும் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது.
=====================================================================================
1. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்
யார்கொல் அளியர் தாமே வார்சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன,
உடன்புணர் கொள்கைக் காத லோரே?
[பைம்=பசுமை; மிசைந்து=உண்டு; செங்கால்=செம்மையன வெண்கடம்பு மரத்தின் அடிப்பகுதி; அளியர்=இரங்கத்தக்கவர்; குறுங்கால்=குட்டையான கால்கள்; மகன்றில்=ஒருவகைப் பறவை; வார்=நீண்ட; சிறை=சிறகுகள்]
அவனும் அவளும் போறத வழியில சிலர் பாக்கறங்க. அவங்க ரெண்டு போற வழியில படற துன்பங்களுக்கு வருத்தப்படறாங்க. தஙக்ளுக்குள்ளயே அவங்க சொல்லிக்கிற பாட்டு இது.
”பச்சையான நெல்லிக்காய்களைச் செவப்பான அடிமரம் இருக்கற கடம்பமர நெழல்லத் தின்னுக்கிட்டு இருக்கறவங்க யாரோ? அவங்க ரெண்டு பேரும் நீளமான சிறகும் குட்டையான கால்களும் இருக்கற மகன்றில் பறவை போல எப்பவும் பிரியாம இருக்கற காதல் ஒறவை வச்சிருக்காங்க. அவங்க நல்லா இருக்கணும்”
===================================================================================
2. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
புள்ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள்வேல்,
திருந்துகழல் காளையொடு அருஞ்சுரம் கழிவோள்,
எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப்
புனைஇழை மகளிர்ப் பயந்த
மனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.
[புள் ஒலி=பறவை ஒலி; அமர்த்த=அஞ்சிய; கழிவோள்=கடந்தவள்; கல் என்சீர்=ஒலிக்குறிப்புச் சொல்; எல்=பகல்; மனைகெழு பெண்டிர்=முதிய பெண்டிர்; நோவுமார்=வருந்துவார்]
அவனும் அவளும் போற வழியில ஒரு ஊர்லத் தங்கறாங்க. அப்ப அந்த ஊர்ல இருக்கற சில பொண்ணுங்க அவளப் பாத்து வருத்தப்பட்டுச் சொல்ற பாட்டு இது.
”நல்லா ஒளிவீசற வேலைவச்சுக்கிட்டு, கழல் போட்டிருக்கற காலும் இருக்கற காளையான இவனோட வந்திருக்கற இவ பறவைங்க கூச்சலுக்கே பயப்படறா. இந்தப் பகல்ல இவ வந்து இங்க தங்கறதால ஊர்லயே சத்தம் அதிகமாச்சு. நகையெல்லாம் போட்டிருக்கற பொண்ணுங்களைப் பெத்து வச்சுள்ள மூத்தவங்களுக்கு இதால மனநோயும் வந்திருச்சு”
அவளப் பிரிஞ்ச தாய் அங்க எப்படி வருந்துவாளொன்னு நெனச்சு மூத்தவங்கள்ளாம் வருந்தறாங்க. அத்தோட அவங்களுக்கும் பொண்ணுங்க இருக்குது. அந்தப் பொண்ணுங்களும் இது மாதிரிப் போயிடுமோன்னு நெனச்சு மனநோய் வந்து வருந்தறாங்க.
=====================================================================================
3. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
கோள்சுரும்பு அரற்றும் நாள்சுரத்து அமன்ற
நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி
வலஞ்சுரி வால்இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந் தன்றே;
பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே.
[கோள் சுரும்பு=தேனைக் கொள்ளும் வண்டு; அரற்றும்=ஒலிக்கும்; சுரத்து=காடு; அமன்ற=நெருங்கி; மராஅ=வெண்கடம்பு; குறுஞ்சினை=குட்டையான கிளை; வலஞ்சுரி வால் இணர்=வலமாகச் சுழித்து மலர்ந்திருக்கும் பூங்கொத்துகள்; அம்சாய் கூந்தல்=அழகான கூந்தல்; மள்ளன்=தலைவன்]
அவள அழைச்சுக்கிட்டுப் போற அவன் வழியில ஒரு மராமரத்தோட தாழ்வான கெளயில பூங்கொத்தைப் பாக்கறன். அவளும் அது வேணும்னு கேக்கறா. அவ பறிச்சிக்க அவன் கிளையைத் தாழ்வாப் புடிக்கறான். அவளும் பூக்களைப் பறிச்சுத் தனக்கு ஒரு பங்கும், தன் பொம்மைக்கு ஒரு பங்குமா வைக்கறா. அதைப் பாத்த வழியில போறவங்க சொல்ற பாட்டு இது.
”காட்டுவழியில தேன் எடுக்கற வண்டெல்லாம் ஒலிக்குதுங்க. காலையில மராமரத்தோடக் குட்டையான கெளயிலேந்து அழகான கூந்தலை உடைய அவ பூப்பறிக்கறதுக்காக அவன் அந்தக் கெளய வளைச்சுப் புடிச்சிருக்கான். அதுலேந்து அவ பூவெல்லாம் பறிக்கறா. அந்தப் பூக்களை அவளுக்கு ஒரு கூறும், அவளோட பொம்மைக்கு ஒரு கூறாவும் பிரிச்சு வைக்கறா. அவளோட அறியாமையைப் பாத்து அவனுக்கு மகிழ்ச்சி வருது. அதைப் பாருங்க”
=====================================================================================
4. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
சேட்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்!
நும்ஒன்று இரந்தனென் மொழிவல்; எம்ஊர்,
‘யாய்நயந்து எடுத்த ஆய்நலம் கவின
ஆர்இடை இறந்தனள்’ என்மின்
நேர்இறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே.
[சேட்புலம்=நெடுந்தொலைவில் உள்ள இடம்; முன்னிய=கருதிய; அசைநடை=அசைந்து அசைந்து செல்லும் மெல்லிய நடை; மொழிவல்=கூறுங்கள்; இரந்தனள்=வேண்டினள்; யாய்=என் தாய்; கவின்=அழகுபெற; ஆர் இடை=கடத்தற்கரிய வழி; ஆயத்தோர்=தோழிப்பெண்கள்]
அவ அவனோடத் தன் ஊட்டை உட்டுப் போறா. அப்ப வழியில சில அந்தணருங்க வராங்க. அவங்க தன் ஊர் வழியாப் போவாங்கன்னு அவளுக்குத் தெரியும். அதால அவங்ககிட்ட என் தோழியைப் பாத்துச் சொல்லுங்கன்னு சொல்ற பாட்டு இது.
”ரொம்ப தூரத்துக்குப் போறதை நெனச்சுக்கிட்டு மெதுவா அசைஞ்சு அசைஞ்சு போற அந்தணருங்களே! ஒங்கள நான் ஒண்ணு கெஞ்சிக் கேட்டுக்கறேன். நீங்க போற வழியில என் ஊருக்குப் போகும்போது அங்க அழகான கோடெல்லாம் கையில இருக்கற என் தோழியைப் பாத்து, “ஒன் தோழி அவ அம்மா வளத்த அழகு இன்னும் அதிகமா இருக்கக் காட்டு வழியில அவனோட நல்லாப் போயிக்கிட்டு இருக்கா”ன்னு சொல்லுங்க.
=====================================================================================
5. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
‘கடும்கண் காளையொடு நெடுந்தேர் ஏறிக்
கோள்வல் வேங்கைய மலைபிறக்கு ஒழிய,
வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவள்’எனக்
கூறுமின் வாழியோ! ஆறுசெல் மாக்கள்!
நல்தோள் நயந்து பாராட்டி,
எற்கெடுத்து இருந்த அறன்இல் யாய்க்கே.
[கடும்கண் காளை=தறுகண் வீரம் வாய்ந்த தலைவன்; கோள்வல் வேங்கை=கொல்லுதலில் வல்ல புலி; ஆறு=வழி; யாய்=தாய்; எற்கெடுத்து=தடைசெய்து]
அவ அவனோட தன் ஊட்ட உட்டுப் போறா. அப்ப போற வழியில சிலபேரைப் பாக்கறா. அவங்கக்கிட்ட என் அம்மாக்கிட்ட போயி நான் போறத நீங்க சொல்லுங்கன்னு சொல்ற பாட்டு இது.
வழியில போறவங்களே! என் தோளோட அழகைப் பாராட்டிய என் அம்மா என்னை ஊட்லயே வச்சிருந்து தடுத்திருந்தா. தருமமே இல்லாத அந்த அம்மாக்கிட்ட , “அவ வீரனான காளை போல இருக்கறவனோட பெரிய தேருல ஏறி தன் இரையை எல்லாம் கொல்ற புலி இருக்கற மலையெல்லாம் கடந்து போயிட்டா”ன்னு சொல்லுங்க.
அவ அம்மா தன் பொண்ணோடத் தோளழகைப் பாராட்டி வச்சிருந்தாதான். ஆனா அந்தத் தோளை அணைக்க அவன்கிட்டச் சேத்து வக்கலயேன்னு சொல்றா.
=====================================================================================
6. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம்
நயந்த காதலற் புணர்ந்துசென் றனளே;
நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட
இடும்பை உறுவி!நின் கடுஞ்சூல் மகலே.
[அத்தம்=வழி; புன்கண்=துன்பம்[ இடும்பை=துன்பம்; உறுவி=துன்பமுற்று]
அவனும் அவளும் சேந்து போறதப் பாத்த சில பேருங்க அவ ஊருக்குப் போயி அவளோட அம்மாக்கிட்ட சொல்ற பாட்டு இது.
”நீளமான செவுரு இருக்கற அழகான ஊட்ல ஒக்காந்துக்கிட்டு பொண்ணைப் பிரிஞ்சு வருத்தமா இருக்கறவளே! ஒனக்குத் தலைப்பிரசவமாப் பிறந்த ஒன் பொண்ணு அவளுக்குப் புடிச்ச அவனோட, ரொம்பத் துன்பம் தர்ற யானைகளும் புலிகளும் இருக்கற காட்டு வழியைக் கடந்து போயிட்டாங்க”
அவ அவளுக்குப் புடிச்சவனோட போயிட்டான்னு சொல்றதால நீயே அவளுக்கு அவனக் கல்யாணம் கட்டி வச்சிருந்தா அவ போயிருக்க மாட்டான்னு மறைமுகமாச் சொல்றாங்க.
=====================================================================================
7. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
’அறம்புரி அருமறை நவின்ற நாவின்
திறம்புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்’ என்று
ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே!
கணடனெம் அம்ம, சுரத்திடை அவளை
இன்துணை இனிது பாராட்டக்
குன்றுஉயர் பிறங்கல் மலைஇறந் தோரே
[அருமறை=அரிய வேதங்கள்; நவின்ற=ஓதிய; தொழுவல்=வணங்குகின்றேன்; ஒண்டொடி=ஒளி பொருந்திய தோள்களை உடைய பெண்; பிறங்கல்=மலையின் பக்கத்தில் உள்ள சிறுமலை]
அவளயும் அவனயும் தேடிச் செவிலித்தாய் போறா. அப்ப எதிரே சில அந்தணருங்க வராங்க. அவங்கக்கிட்ட என் பொண்ணைப் பாத்தீங்களான்னு செவிலி கேக்க அவங்க சொல்ற பாட்டு இது.
”தருமத்தைச் சொல்ற வேதங்கள ஓதற நல்ல சொல்லையே சொல்ற அந்தணருங்களேன்னு வணங்கிட்டு, ஒன் பொண்ணைப் பத்திக் கேக்கற வளே! கேளு. அவள நாங்கக் காட்டுவழியிலப் பாத்தோம். அவளப் பாராட்டிக்கிட்டே அவன் அவளோட சேந்து மலையெல்லாம் கடந்து போயிட்டான்”
அவங்கப் போயிட்டாங்க. அதால நீ போறதுல பயன் இல்லன்னு சொல்றாங்க.
====================================================================================
8. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக்
கருங்கால் யாத்து வரிநிழல் இரீஇ,
சிறுவரை இறப்பின் காண்குவை செறிதொடிப்
பொன்ஏர் மேனி மடந்தையொடு
வென்வேல் விடலை முன்னிய சுரனே.
[கனலி=சூரியன்; உருப்பு=வெம்மை; யா=ஒருவகை மரம்; கருங்கால் யாத்து=கருமையான அடிப்பாகம் உடைய; ஏர்=அழகு; விடலை=பாலை நிலத் தலைவன்]
அவனையும் அவளயும் கண்டவர் செவிலியிடம் சொல்ற பாட்டு இது.
”நல்ல தொடியைப் போட்டுக்கிட்டு இருக்கறவளும் பொன்னைப் போல ஒடம்பு இருக்கறவளுமாகிய ஒன் பொண்ணு வெற்றி தர்ற வேலைக் கயில வச்சிருக்கற விடலையோட காட்டுவழியிலப் போயிக்கிட்டிருக்கா. நீ பாக்கணும்னா நெருப்புப் போலப் பொசுக்கற சூரியனோட வெப்பம் கொறையும் வரை கருப்பான அடிமரம் இருக்கற யா மரத்து நெழல்ல தங்கிட்டு, அப்பறம் சின்னதான குன்றெல்லாம் தாண்டிப் போனா பாக்கலாம்.
===============================================================================

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள்
மைஅணல் காளையொடு பைய இயலி’’
பாவை அன்னஎன் ஆய்தொடி மடந்தை
சென்றனள்! என்றிர், ஐய!
ஒன்றின வோ,அவள் அஞ்சிலம்பு அடியே!
[செறிகழல்=இறுகிய வீரக்கழல்; மை அணல்=கறுத்த தாடி; பைய=மெதுவாக; இயலி=நடந்து; நோந்தாள்=வலிமையுடைய அடி”
செவிலித்தாய் எதிரே வர்றவங்கக்கிட்டே கேக்கறா. அவங்களும் பாத்ததைச் சொல்றாங்க. அதைக் கேட்டு செவிலி சொல்ற பாட்டு இது.
”ஐயா! என் கண்ணில இருக்கற பாவை போல, அழகிய தொடி போட்டுக்கிட்டு இருக்கறவ, கால்ல வீரக் கழல் போட்டிருக்கற, கையில கறுத்த தாடி வச்சிருக்கற காளையோட மெதுவா மெதுவாப் போனான்னு சொன்னீங்களே! அவளோட அழகான பாதங்கள் நெலத்துலப் பொருந்திச்சா?”
வெயில் தாங்க முடியாம மெதுவா மெதுவாப் போனான்னு சொன்னாங்க. அதால அந்த வெயில்ல அவ பாதங்க நெலத்துலப் படிஞ்சு இருந்ததா? அவ எப்படித் தாங்கினான்னு கேக்கறாங்க.
=====================================================================================
10. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
நல்லோர் ஆங்கண் பரந்துகை தொழுது,
பல்லூழ் மருகி வினவு வோயே!
திண்தோள் வல்விற் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்திடை யாமே.
[பரந்து=அங்குமிங்கும் ஓடி; பல்லூழ்=பலமுறை; மருகி=தயங்கி; வினவுவாய்=கேட்கிறாய்; சுரம்=காட்டு வழி]
ஊட்டை உட்டு அவனோட போயிட்ட அவளத் தேடி செவிலி போறா. அப்ப எதிர்ல வர்றவங்கக்கிட்ட ‘என் பொண்ணப் பாத்தீங்களா”ன்னு கேக்கறா. அதுக்கு அவங்க சொல்ற பாட்டு இது.
”நல்லவங்க முன்னாடிப் போயிப் போயிக் கையாலக் கும்பிட்டு அவங்கக்கிட்ட “என் பொண்ணைப் பாத்தீங்களான்னு கேக்கறவளே! ஒன் பொண்ணு பருமனான தோளோட கயில பெரிய வில் வச்சிருக்கற காளை போல இருக்கற ஒருத்தனோட போயிட்டிருக்கறதை வழியில பாத்தோம்”
நமக்குத் தகவல் வேணும்னா பணிஞ்சு கேக்கணும்ல. அதாலதான் கை கும்பிட்டுக் கேக்கறாளாம்.
=============================நிறைவு===============================================

Series Navigationகையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்மலையும் மலைமுழுங்கிகளும்