-ஆதிமூலகிருஷ்ணன்
இரவு பதினொரு மணி. அவசரகோலமாக சில உடைகளையும், இரண்டு புத்தகங்களையும், செல்போன் சார்ஜரையும் கையில் கிடைத்த ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டேன். இந்த மனநிலையிலும் புத்தகங்களை ஏன் எடுத்துவைத்துக் கொள்கிறேன் என்று புரியவில்லை. மஞ்சு எதையும் கவனிக்காமல் மூலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். கதவை அறைந்து சார்த்திவிட்டு படிக்கட்டுகளில் இரண்டிரண்டாக தாவி இறங்கி கீழே வந்தேன். இந்த நேரத்தில் எங்கே போவது? வண்டியை எடுத்துக்கொள்ளவா? வேண்டாமா?
பைக்கை வெளியே எடுத்து கேட்டை சார்த்திவிட்டு அந்த இரவு நேர தெருவின் அமைதியக் கலைத்து, அதை ஸ்டார்ட் செய்து வேகமாக கிளப்பினேன். வண்டி ஓடிக்கொண்டிருக்கையில் வெற்றாக ஆக்சிலரேட்டரை முறுக்குவது, கியர் லிவரை உதைப்பது என கோபத்தை அனிச்சையாக வெளிப்படுத்தியவண்ணம் இருந்தேன். இப்படியே தாம்பரம் சென்று ஸ்டாண்டில் வண்டியைப் போட்டுவிட்டு ஏதாவது பஸ்ஸைப் பிடித்து ஊருக்குப் போய்விடலாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னர் சரியென்று தோன்றிய இந்த முடிவின்மேல் இப்போது கேள்வி எழும்பியது. ஊருக்குப் போய்.? மனம் ஒரு நிலையில் இல்லை. அடுத்தத் தெருவின் முனையில் இருந்த ஒரு கடையின் முன்னால் திடுமென வண்டியை பிரேக்கிட்டு நிறுத்திவிட்டு அந்தக் கடை வாசலில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தேன்.
அங்கிருந்த எல்லாக் கடைகளுமே சார்த்தப்பட்டிருந்தன. எந்த ஆளரவமும் இல்லை. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. உடம்பு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. நெஞ்சு விம்மி ஒரு குழந்தை அழுவதைப்போல ஏக்கத்தோடு அழுகை வெளியாகி, சற்று சத்தமாகவே அழுதேன். கண்ணீர் கன்னங்களில் வழிந்து கைகளில் விழுந்தது. இப்படி நடு இரவில், தெருவில் உட்கார்ந்துகொண்டு அழுதுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வே என்னை ஏதோ செய்தது.
அவளை அடித்திருக்கக்கூடாதோ?
ஆனால் பொறுமையின் எல்லைவரை கொண்டு செலுத்திவிடுகிறது அவளது வார்த்தைகள். பதிலுக்கு பதிலாய் அவளைப்போல காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தமுடிவதில்லை என்னால். இறுதியில் அவளை வீழ்த்த இதைத்தான் செய்தாக வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் இது இரண்டாவது தடவை. முதல் தடவையே அதைச்செய்து மோசமான பின்விளைவுகளை சந்தித்தேனே.. பின்விளைவுகளை விடவும் என் குணத்துக்கு ஒவ்வாத இந்த செயலால் என் மனசாட்சிக்கே நான் பதில் சொல்லியாக வேண்டியதிருக்கிறது. அவளை அடித்த குற்றவுணர்வும், அதற்கு முன்னதாய் அவள் வீசிய வார்த்தைகளும் மனதுக்குள் சுழன்றுகொண்டிருந்தன. அவளுக்கு இது குறைவு என்று ஒருபுறமும், இப்படியா இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது நீ என்று மறுபுறமுமாய் எனக்குள்ளேயே கேள்விகள் எழுந்துகொண்டிருந்தன.
செல்போனை எடுத்து வரிசையாய் பெயர்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தேன். யாரிடம் பகிர்ந்துகொள்வது? யார் என்னைப் புரிந்துகொள்ளமுடியும்? இத்தனை அழுகையோடு பரிபூரணமாய் என்னை யார் முன்னால் நான் காண்பிக்கமுடியும்? தோன்றிய ஓரிருவரையும் தயக்கத்தோடே கடந்தேன். குழப்பமாக இருந்தது.
ஆறுதலுக்காக நண்பர்களுடனோ, மாமாவிடமோ பிரச்சினைகளை சொல்லி வருந்தும் போதும் கூட சண்டைக்கான காரணங்களைச் சொல்ல வெட்கமாக இருக்கும். அந்த அளவுக்கு சின்னச்சின்ன முக்கியத்துவமில்லாத காரணங்களாகத்தான் அவை இருக்கின்றன. ஆனால் பொறியிலிருந்து கிளம்புவதோ பெரும் தீக்காடு. இந்தப்பிணைப்பு வலி நிறைந்ததாய் இருக்கிறது. வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் இரண்டு நபர்களை எப்படி இப்படி வாழ்நாள் பூராவும் ஒரே கட்டுக்குள் வைத்திருக்கமுடியும்?
மஞ்சுவுக்கு என்னதான் வேண்டும்?
வீட்டில் இல்லாத வசதிகள் இல்லை. ஆயினும் அகலப்பட்டுக்கொண்டே போகும் இந்த பேராசைகொண்ட உள்ளம் எப்படி அவளுக்கு மட்டும் சாத்தியமாகிறது? வயிற்றில் ஆறு மாத பிள்ளையை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் இவளிடம்? அன்பு, அமைதி என்ற சொற்களையெல்லாம் இவள் அறிந்திருக்கவே இல்லையா? எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் வந்து வாய்க்கிறது நிகழ்வுகள்?
அன்பில் துவங்கவேண்டும் இந்த ஆண், பெண் பிணைப்பு. ஆனால் இது திருமணம் என்ற பெயரில் உடலுறவில் துவங்குகிறது இங்கே. ஒவ்வொரு நாளும் அவ்வளவு எளிதில் விலகிக்கொள்ள முடியாதபடி ஒவ்வொரு தளையாய் விழுந்துகொண்டேயிருக்கிறது இந்த உறவில். அதில் அன்பும் ஒரு தளையாய் விழாமல் போய்விட்டால் அந்த துரதிருஷ்டத்தைச் சகிப்பதுதான் பெரும் சவாலாய் ஆகிவிடுகிறது.
என்னிடம் எதுவும் தவறுகள் இருக்கலாமோ? எப்படிச் சிந்தித்தாலும் பிடிபடவில்லை. வண்டியைக் கிளப்பினேன்.
“அடப்பாவி, நீ என்ன லூசா? நடுராத்திரி வயித்துப்பிள்ளைக்காரியை ஒத்தையில விட்டுட்டு இங்க வந்து நிக்கிற?”
ராகவன் கொஞ்சம் கடுமையாகவே சொன்னார். அவரது கண்டிப்பில் உண்மையான அக்கறையும், கோபமும் இருந்தன. அவர் எப்போதும் என்னிடம் இப்படி பேசியதில்லை. இருப்பினும், இந்தப்பிரச்சினையில் பொதுவான அறிவுரை சொல்வதில் எல்லோருமே இப்படித்தானே! யாருக்குத்தான் நிஜமாகவே புரிந்துவிடப்போகிறது இரண்டு மனங்களுக்கிடையே உள்ள சிக்கல்கள்? அமைதியாகவே இருந்தேன்.
“முதல்ல வீட்டுக்குப்போ. கிளம்பு நீ.. எல்லாம் காலையில பேசிக்கலாம்”
ராகவன் எனக்கு கீழ் போர்ஷனில் இருப்பவர். பக்கத்திலிருந்த ஒரு தியேட்டரில் மேனேஜராக இருந்தார். இரவு இரண்டாவது காட்சி இடைவேளைக்குப் பிறகு, இரவு பன்னிரண்டு மணி வாக்கில்தான் வீட்டுக்குக்கிளம்புவார். எனக்கு அப்படி ஒன்றும் மிக நெருக்கமானவர் இல்லைதான். புத்தகங்கள் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் பழக்கம் இருந்தது. ஆனால் எனக்கு இப்படியான ஒரு நபர்தான் இப்போது தேவை என்று நினைத்தேன். நான் இப்போது வீட்டுக்குப் போவதாய் இல்லை என்றும், கூடுதலாக அவளை அடித்துவிட்டு வந்திருக்கிறேன் என்று தெரிந்ததும் இன்னும் எரிச்சலானார் ராகவன்.
“எல்லா விஞ்ஞானமும் பேசுறீங்க.. விளங்காத படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க.. ஆனா ஒரு பொம்பளைய எப்படி சமாளிக்கிறதுனு தெரியல.. எல்லாவனும் ஒரே மாதிரிதானடா இருக்கீங்க?”
தொடர்ந்து, “ஏதாவது சாப்பிட்டியா இல்லையா?” என்றவாறே தியேட்டரின் கேண்டீன் பகுதிக்கு கூட்டிச்சென்றார். நான் சாப்பிடும் மனநிலையில் இல்லை எனினும் பசித்தது. அமைதியாக அவர் பின்னால் சென்றேன். பொருட்களை எடுத்துவைத்துவிட்டு கேண்டீன் ஊழியர்கள் கிளம்பிக்கொண்டிருந்தனர். காய்ந்துபோயிருந்த இரண்டு வெஜ்-பஃப்ஸ்களையும் ஒரு கூல்டிரிங் பாட்டிலையும் எடுத்துத்தந்து சாப்பிடச்சொன்னார். நான் சாப்பிடுவதையே சற்று நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். நான் முடித்து கைகளைத் துடைத்துக்கொண்டதும்,
“சிகரெட்?” என்றார்.
வேண்டாம் என்பதாய் தலையசைத்தேன். அவர் மட்டும் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு,
“உனக்கு நான் என்ன அட்வைஸ் பண்றது? அவ்வளவு விவரம் தெரியாதவனா நீ?”
“எத்தனையோ பேரை பார்த்துட்டேன் ராகவன், ஆனா இவள மாதிரி ஒருத்திய பார்த்ததே இல்லை..”
சிரித்துக்கொண்டே, “என்ன அட்வைஸ் பண்றதுனு சொன்னேன்ல, ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ. எத்தனையோ பேரை பார்த்துட்டேன்னல்ல, அது தப்பு. இதெல்லாம் கொஞ்சம்தான். இன்னும் நிறைய பேரை பார்க்கவேண்டியிருக்குங்கிறதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ..”
சட்டென்று சிரித்துவிட்டேன், “அடப்பாவிகளா.. இதுக்கும் மேலயா?”
சிரித்த ராகவன், “உன்னை சமாதானமெல்லாம் ஆகச்சொல்லல, இந்த நிலைமையில அவளத் தனியா விட்டுட்டு போறது நல்லாயிருக்காது. எப்பிடியும் இரண்டு நாள்ல கோபம் தணிஞ்சு வந்துதானே ஆகணும். அதை இப்போவே பண்ணினதா வச்சுக்கோ. கிளம்பு, மற்றதைக் காலையில பேசிக்கலாம்.”
யோசனையோடே கிளம்பினேன். வெளியே வந்தபோது அவரும் என்னுடனேயே கிளம்பிவிட்டார். எதையோ யோசித்தவர், “வா, ஒரே வண்டியிலயே போகலாம். நாளைக்கு காலையில் நடந்தே வந்துக்கறேன்” என்று என் வண்டியலேயே ஏறிக்கொண்டார்.
“இல்ல ராகவன், வீட்டுக்குப் போயிடுவேன். நம்புங்க.. காலையில எதுக்கு நீங்க வேஸ்ட்டா நடக்கணும்? உங்க வண்டியும் எடுத்துக்கங்க” என்றேன்.
“நீ கிளம்பு முதல்ல..” வண்டியை விட்டு இறங்கவில்லை. கிளம்பினோம்.
பாதி தூரம் கூட போயிருந்திருக்கமாட்டோம். திடுமென அவரைப் பார்த்து கேட்டேன், “ராகவன்.. இந்த நேரத்துக்கு பழக்கடை ஏதாச்சும் பக்கத்துல திறந்திருக்குமா?..”
.
- முள்வெளி- அத்தியாயம் -4
- நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்
- அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு
- சுனாமி யில் – கடைசி காட்சி.
- இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை
- ஆணுக்கும் அடி சறுக்கும்…!
- தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)
- கருணாகரன் கவிதைகள்
- சம்பத் நந்தியின் “ ரகளை “
- குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு
- பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு
- ஈக்கள் மொய்க்கும்
- தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்
- வரங்கள்
- சட்டென தாழும் வலி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8
- ‘பிரளயகாலம்’
- நூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000
- பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்
- காலப் பயணம்
- மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19
- பின்னூட்டம் – ஒரு பார்வை
- நீர் சொட்டும் கவிதை
- கவிதை!
- இறந்தும் கற்பித்தாள்
- பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )
- பண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘
- நானும் ஷோபா சக்தியும்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்
- தாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்
- “ பி சி று…”
- தீபாவளியும் கந்தசாமியும்
- புதுமனை
- அன்பெனும் தோணி
- என் சுற்றுப்பயணங்கள்
- சருகாய் இரு
- கவிதை
- வந்தவர்கள்
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10
- இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56