பண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘

This entry is part 28 of 44 in the series 15 ஏப்ரல் 2012

மெல் கிப்ஸனின்ன் ‘ அப்போகாலிப்டோ ‘ பார்த்திருக்கிறீர்களா? அடிக்கடி சோனி பிக்ஸில் போடுகிறார்கள். சூப்பர் படம். அருமையான வண்ணங்கள். துல்லியமான ஒளிப்பதிவு. காட்டில் வாழும் இரு ஆதிவாசிக் கூட்டங்களுக்கிடையே நடக்கும் சண்டை. வலிய கூட்டம், எளிய கூட்டத்தைப் பிடித்து, கட்டிப்போட்டு, சித்திரவதை செய்து, கொன்றொழிக்கும் கதை. கொஞ்சம் ஈழச் சாயல். தப்பிக்கும் ஒருவன், அவனது நிறைக்கர்ப்பிணி மனைவி, இரண்டு வயது மகன், துரத்தும் நான்கைந்து பேர். அவன் அவர்களை வென்றெடுத்து, மனைவி, குழந்தையை மீட்பது அப்போகாலிப்டோ.
கருணா ( ராஜேஷ் கனகசபை ) மற்றும் இரண்டு தோழிகள் ( வித்யா, விக்டோரியா ), மூன்று தோழர்கள் (ரகு, சரண், ரமேஷ் ), ஒரு வழிகாட்டியின் உதவியுடன் காட்டுக்குள் டிரெக்கிங் போகிறார்கள். முதலிலேயே வழிகாட்டி கொல்லப்படுகிறான். நர மாமிசம் தின்னும் காட்டுவாசிகளால் மீதியிருப்போர், பிடிக்கப்பட்டு, மரங்களில் கட்டி வைக்கப் படுகிறார்கள். போலியாவினால் சூம்பினக் கால்களைக் கொண்ட அவர்களது தலைவன் தினமும் கை காட்டும் ஒருவர் கொல்லப்படுகிறார். காட்டுவாசிகள் மொத்தமே ஐந்து பேர்தான். கூடவே ஒரு பெண்ணும். தப்பிக்க வழி தேடும் கருணா, தினமும் தண்ணீர் குடிக்க அழைத்துச் செல்லப்படும்போது, தப்பிக்க முயல வேண்டும் என்கிறான். அதற்குள் அவர்களில் ஒருவனைக் கொன்று விடுகிறார்கள். அடுத்த நாள் ஒருவன் தப்பித்து ஓடும்போது கொல்லப்படுகிறான். மனித வேட்டை. மூன்றாவது நாள் அவர்களில் ஒரு பெண் தலைவனால் தேர்ந்தெடுக்கப்படுகிறாள் பலிக்கு. அவளை ரகசியமாகக் காதலிக்கும் ஒருவன், கைக்கட்டைப் பிய்த்துக் கொண்டு சம்மட்டியால் தலைவனைப் போட்டு விடுகிறான். தலைவன் காலி. போட்டவனும்.. ஒரு நாளைக்கு ஒரு பலிதான். அதனால் பெண் சாவிலிருந்து தப்பிக்கிறாள். அடுத்த நாள் கருணா தப்பித்து விடுகிறான். கற்றாழைச் செடியின் முள் பட்டையைப் பயன்படுத்தி, கைக்கட்டை அவிழ்த்துக் கொள்கிறான். தன்னைத் துரத்தி வந்த காட்டுவாசி ஒருவனைக் கொன்று அவன் சம்மட்டியைக் கைப்பற்றுகிறான். பெண்களை விடுவிக்கிறான். துரத்தும் காட்டுவாசிகளை, பெண்களைத் தூண்டில் புழுவாகப் பயன்படுத்தி கொல்கிறான். ஆனாலும் இரண்டு காட்டுவாசிகள் எஞ்சியிருக்கிறார்கள். அதற்குள், அவர்கள் வந்த வண்டி இருக்கும் இடம் வந்து விடுகிறது. தப்பிக்கிறார்கள். பின்சீட்டில் இருந்து ஒரு காட்டுவாசி எழுந்து, பெண்களின் கைகளைப் பிடிக்கும் காட்சியுடன் முடிகிறது “அஸ்தமனம்” பார்ட் டூவுக்கு அஸ்திவாரம்?
அப்போகாலிப்டோ சூப்பர் படம் என்றால் இது ஸ்டிக்கர் பொட்டு. ஆனாலும் தமிழில் இது புதுமுயற்சி. ராவணன் படத்தில் காட்டுவது போல காடு. ஆனால் இயற்கைதான் க்ளோசப். ஐஸ்வர்யா ராய் அல்ல. ஊறும் எறும்புகள், நெளியும் நத்தை, கரிய மரங்கள், மென்வெளிச்சம் என படம் ஒரு வித்தியாச அனுபவம். அதோடு பாத்திரங்களின் புதுக்கலவை: சட்டமன்ற உறுப்பினரின் மகன்,( கையில் துப்பாக்கி வைத்திருப்பவன் “அந்த தீபாவளி துப்பாக்கியை உள்ளே வை “ ) கார் மெக்கானிக், எந்நேரமும் தலையில் ஹெல் மெட்டுடன், ரிமோட் கண்ட்ரோல் பொம்மைக் கார் ஓட்டும் இளைஞன், புத்தகம் படித்துக் கொண்டே இருக்கும் பெண், காமிரா கையுமாக படமெடுத்துக் கொண்டிருக்கும் இன்னொரு பெண், கார் ஓட்டும் கருணா, வழிகாட்டி லுங்கியுடன் பீடி பிடிப்பவர்.
அறிமுகக்காட்சியிலேயே வித்தியாசம் காட்டிவிடுகிறார் இயக்குனர். பாத்திர அறிமுகம். துளி வசனங்கள், நக்கலான நகைச்சுவை என கொஞ்சம் சுவாரஸ்யம். அதேபோல் நகைச்சுவைக்காக சொன்னது உண்மையாகிறபோது அதிர்கிறது. காட்டுவாசிகளால் பிடிக்கப்படுவதற்கு முன் கருணா சொல்கிறான்:
“ டேய் ஏதாவது பண்ணுடா.. நீதானே துப்பாக்கி வச்சிருக்கே? “
“ நீதானே அத தீபாவளித் துப்பாக்கின்னு சொன்னே.. அது உண்மைதான்!”
நெஞ்சு படபடப்பது நிச்சயம். அதேபோல் வழிகாட்டி ஒரு இடத்தில் :
“ நெறய பணம் கொடுக்கறீங்க.. ஆனால் எனக்கு ஒரே ஒரு ஆசை.. ஹெல்மெட்டைக் கழட்டி அவர் முகம் எப்படி இருக்குன்னு பாக்கணும்.”
“ என்ன பேசறே? “ “ தமிழ் “ ஆனால் இதையே, மரணத்தை எதிர்நோக்கும் ஆபத்தான கட்டங்களிலும் பயன்படுத்தியிருப்பது இடிக்கிறது. எல்லோரும் கட்டி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு வசனம். சுற்றி இருக்கும் காட்டு வாசிகளைப் பார்த்து ஒருவன் கேட்கிறான்.
“ யாருடா இவனுங்க? “
“ ஒருத்தன் என் மச்சான். மத்தவங்க அவன் சொந்தக்காரங்க “
கருணாவாக நடிக்கும் ராஜேஷ் கனகசபை தேறுகிறார். படத்தில் வன்முறைக் காட்சிகள் இல்லை. சம்மட்டியால் அடித்தோ, கத்தியால் தலையை வெட்டியோ கொலை செய்யப்படும் காட்சிகளில், வெட்டுண்ட தலை, முண்டமான உடல் என்று எதுவும் காட்டப்படவில்லை. ரத்தத் தெறிப்போடு சரி. இசை விபின். கோட்டான், ஆந்தை அலறல், காட்டு ஒலிகள், கொஞ்சூண்டு டிரம்ஸ் என்று ஒப்பேற்றி விடுகிறார். பாடல்கள் இல்லை. பின்னணியில் ஒரு மந்திரம் கேட்கிறது. அது எந்த மொழி என்று கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் துல்லியம். காடு என்பதால் அரையிருட்டு. அதனால் ப்ளூ பில்டர் போட்டு படம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது. வண்ணத்து வழியில்லை. காணக்கிடைக்கும் ஒரே நிறம் இலைகளின் பச்சை.
ஒன்றரை மணிநேரம் படம் ஒரு ஆறுதல். பாடல்கள் இல்லை என்பது ஒரு பெரிய ரிலீப். சம்பவங்கள் பற்றாக்குறை படத்தின் சரிவு. குறைந்த பட்ஜெட் என்பதால் ஒரு வாரம் ஓடினால் அடுத்த படம் எடுப்பார் பண்டி.
பண்டியின் முதல் படம் ‘ போர்க்களம் ‘ வித்தியாசமான கதைக்களம் கொண்டது. அதில் கிஷோர் பார்வையற்றவர் என்பது படத்தின் இடைவேளையில் தான் தெரியும். அதுவும் கண் தெரியாத அவர் போடும் சண்டை ஹைலைட். அஸ்தமனத்தில் டிவிஸ்ட் எதுவும் இல்லை. அதனாலேயே வெளுத்துவிட்டது. ஆனாலும் பண்டியைப் போன்ற ஆட்கள் திரையுலகில் வரவேற்கப்படவேண்டியவர்கள். நேரடியாக ஆங்கிலப் படம் எடுக்கும் திறமை இவரிடம் இருக்கிறது. இன்னமும் ஏன் தமிழைக் கட்டிக் கொண்டு அலைகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!
#
கொசுறு
விருகம்பாக்கம் பேம் மல்டிப்ளெக்சில், ஒரு எட்டாங்கிளாஸ் படிக்கும் சிறுவனும், அவனது தந்தையும். பத்து ரூபாய் டிக்கெட்டில் படம் பார்க்க வந்தவர்களை, அலைக்கழித்து விட்டார்கள். அரசு உத்தரவு, அது இது என்று சத்தம் போட்டதால் எனக்கு தந்துவிட்டார்கள். சிறுவன் தலையில், பத்து ரூபாயோடு, காம்போ என்று எண்பது ரூபாய்க்கு பெப்சியும் பாப்கார்னும் கட்டிவிட்டார்கள். அதனால் கொசுறுக்கு செய்தியும் கொஞ்சம் போறும் பாப்கார்னும் எனக்குக் கிடைத்தது.
இனி வழியில் பார்க்கும் சிற்றுண்டி கடைகளைப் பற்றி நல்ல விதமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். கூட்டாஞ்சோறு கடையைப்பற்றி ‘ கூட்டமும் இல்லை, சோறும் இல்லை ‘ என்று எழுதியதால் தானோ என்னவோ கடையை மூடி விட்டார்கள். நாக்குல சனி!
#

Series Navigationபி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )நானும் ஷோபா சக்தியும்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    punai peyaril says:

    மேலோட்டமான புரிதல் கொண்ட நிலையில், அப்பகாலிப்டோ பற்றி சொல்கிறார். அப்பகாலிப்டோ ஜஸ்ட் லைக் தட் “இரு ஆதிவாசிக் கூட்டங்களுக்கிடையே நடக்கும் சண்டை.” என்று இவர் சொல்கிறார். மெல்கிப்ஸன் பின்புலம் அவர் எண்ணம் பற்றி அறியாத பிதற்றல் இது. செவ்விந்தியர்களை விரட்டியடித்து அவர்கள் நாதியற்றவர்கள் ஆக்கிய நிலையை நியாயப்படுத்த, காடுமிராண்டித் தனமாக ரத்த வெறியுடன் மோதிக் கொண்டலைந்த பகுதியில் நாகரீகத்தைக் கொண்டு வந்தவர்கள் நாங்களே என்று பறைசாற்ற எடுக்கப்பட்ட படம். அதுதான் படத்தின் இறுதியில் வரும் கப்பல்….. தயவு செய்து, திண்ணையின் விமர்சனங்கள் ஆழமான நிலையில் இருக்க வேண்டும். தமிழ்திரையின் குப்பைகளை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்… அதற்காக சும்மா இந்த மாதிரி உதாரணம் வேண்டாம்.. ஆபாச வரிகளை கூட பிரசுரித்து விடலாம்,ஆழமற்ற மேம்போக்கான எழுத்துக்கள் தவறானவை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *