தோட்டத்தில் மகிழ மரத்தில் கூடுகட்டி வாழும் அந்த புள்ளிப்போட்ட புள் கூட்டம் தான் வைத்த அந்த ஒரு பிடி சோற்றில் உயிர் வாழுவது போல ஒரு மன நிறைவில் இன்பமாக இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி அங்கையற்கண்ணி, சமயலறை சன்னல் வழியாக. வழக்கம் போல. அன்றாடம் இரவு ஒரு பிடி சோறு தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும், பாத்திரத்தை சுத்தமாக கழுவி கவிழ்க்கக் கூடாது, காரணம் இறந்து போன நம் முன்னோர்கள் சில நேரங்களில் பசியுடன் வந்து தன்னை நினைத்து ஏதும் மிச்சம் வைத்திருக்கிறார்களா என்று சோதிக்க வருவார்களாம். இப்படி ஏதும் வைத்திருந்தால் தன்னை நினைத்துத்தான் வைத்திருக்கிறார்கள் என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்களாம். அதனால் அன்றாடம் ஏதேனும் கொஞ்சமாவது மீதம் வைக்க வேண்டும் என்பது தன் மாமியாரின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், இந்த கொஞ்ச உணவை அதிகாலையில் புள்ளினங்கள் பலதும் உண்டு பசியாறக் காண்பதில் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது. இது அன்றாட தியானம் என்பதானதொரு உன்னத விசயமாகவும் ஆகிவிடுகிறது.
வாசலில் பால்காரரின் மணியோசை கேட்டு தியானம் கலைந்து போக, மெதுவாகச் சென்று பாலை வாங்கிக் கொண்டு உள்ளே வந்து கடிகாரத்தைப் பார்ப்பதற்கு முன் தொலைக்காட்சியைத் திருகிவிட்டுத் தான் மறு வேலை. அவளுடைய மானசீக குருவின் ஆன்மீக உரை ஒலிபரப்பாகும் நேரம் அது. அந்த பதினைந்து நிமிடங்கள் யார் வந்து குறுக்கிட்டாலும் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிடுவாள். அதுவரை குழந்தைகளையும் எழுப்பிவிட மாட்டாள். கணவனுக்கு காபி கூட இதற்குப் பிறகுதான் கிடைக்கும். வாழ்வியல் தத்துவங்களை அழகாக ஒரு குட்டிக் கதையுடன் சொல்லி விளங்க வைப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அத்துனை தெய்வீகத் தொனி வீசும் அவர் சொற்பொழிவில் என்பது அங்கையின் எண்ணம். தன்னுடைய சில குடும்ப பிரச்சனைகளுக்குக்கூட ஏதோ ஒரு வகையில் ஒரு தீர்வு அவரிடமிருந்து வரும் என்று ஆழமாக நம்புவாள்.
“அங்கை.. என்னமமா.. காப்பி ரெடியா?”
“வரேன்.. வரேன். பால் காய்ந்துதானே ஆக வேண்டும். நானும் கூடவா காய முடியும்?”
“ அடடா நான் உன்னையும் சேர்ந்து காயவா சொன்னேன். சரி, அதிருக்கட்டும், இன்று உன் தங்கை குடும்பத்தோடு வரேன்னு சொன்னதாகச் சொன்னாயே, அவர்களை இருந்து சாப்பிட்டுவிட்டு போகச் சொல். ஏதாவது நல்ல சமையலாகச் செய்”
“ஓ.. சம்பாதிக்கிற மகராசர் அனுமதி கொடுத்தாச்ச்ச்ச்ச்ச்.. செய்துட வேண்டியதுதான்”
“இந்த குசும்புதானே வேண்டாங்கறது… நம்ம வீட்டிற்கு விருந்தாளியா வறாங்களே, நல்லபடியா கவனித்து அனுப்பனுமேன்னு ஒரு ஆசையா சொன்னா என்ன குதர்க்கமா பதில் சொல்ற… இதுல வேற காலையில தவறாம ஆன்மீக் உரை வேற.. இன்னும் மனம் பக்குவப்படாமலே இருக்கறயே?”
திரும்பி ஒரு முறைப்பை மட்டும் பதிலாக வீசிவிட்டுச் சென்றாள்.
அடுத்து பரபரவென வேலைகள், பம்பரமாக சுழன்று முடித்து கணவனையும், குழந்தைகளையும், அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் அனுப்பிவிட்டு அக்கடாவென கையில் ஒரு காப்பி கோப்பையுடன் உட்கார்ந்தபோதுதான் காலையில் கணவன் சொன்ன விசயம் நினைவிற்கு வந்தது.. எத்தனைதான் நல்ல விசயங்கள் செவிக்குணவான போதும், பாழாய்ப்போன இந்த பிறவிக்குணம் பொங்கலிட்டாலும் போகாது என்பது போலல்லவா ஆட்டம் கட்டுகிறது. இனி மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் பக்குவத்தை இழக்கக் கூடாது.. கோபம் சிறிதும் கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக முடிவு செய்த பின்புதான் மனம் அமைதியானது. சிறிது நேர ஓய்விற்குப் பிறகு போய் சுகமாக நீராடிவிட்டு, தங்கை வருவதற்காக ஏதாவது விசேசமாக சமைக்கலாம் என்று சமையலறை சென்று மளமளவென சமையலை முடித்தாள். தங்கையின் கணவர் மதிய நேர ஷிப்டிற்கு கம்பெனிக்குச் செல்ல வேண்டியவர் மனைவியையும் குழந்தையையும் கொண்டுவந்து விட்டுவிட்டு மதிய உணவு முடித்து கிளம்பி விடுவார். இன்று எப்படியும் சென்று தன் மானசீகக் குருவை சந்தித்தே தீருவது என்று தங்கையுடன் பேசி வைத்திருந்தாள். துணைக்குத் துணையாக தங்கை வரும்போது கணவனிடம் பேச்சு வாங்க வேண்டிய அவசியம் வராது….
உண்மையான தியானம் என்பது பற்றி ஐயா பேசிக் கேட்க வேண்டும். அந்தப் பேச்சைக் கேட்பதே ஒரு தியானம்தான். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக ஐயாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தும், முதன்முதலில் இந்த பேச்சுதான் அவளை அவருடைய பரம சிஷ்யையாக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் நல்ல பல சிந்தனைகளை சிந்தாமல், சிதறாமல் அத்துனை அழகாக அவர் சொல்லும் விதம், அவரை ஒரு நாளாவது நேரில் சென்று காலில் விழுந்து ஆசிகள் வாங்க வேண்டும் என்ற ஆவலை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருந்தது. கணவனிடம் வாதம் செய்து இரண்டு முறை அவரை சந்திப்பதற்காக மெனக்கெட்டு அத்தனை தூரம் சென்றும், ஐயா வெளிநாடு சென்றிருந்ததால் பார்க்க முடியவில்லை. இந்த முறை எப்படியும் சந்தித்து ஆசி வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஐயா அடிக்கடி சொல்வது போல,
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
என்ற கீதையின் தாரக மந்திரம் மட்டும்தானே தன்னுடைய போராட்டமான மத்தியதர வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு வடிகாலாக இருக்கிறது. திருமூலரின் திருமந்திரமும், திருவாசகத்திற்கு உருகும் பண்பும், வள்ளலாரையும், இராமகிருஷ்ண பரமஹம்சரையும், விவேகானந்தரையும் துதிக்கும் பேரானந்தமும் தனக்கு வேறு எங்கனம் வாய்த்திருக்கும்? இப்படி குடும்பப் பிரச்சனையில் உழன்று, உழன்று மனம் நொந்து, டீவி சீரியலில் கரைந்துறுகி, பொழுதன்னிக்கும் கண்டவர்களிடமெல்லாம் புலம்பித் தீர்க்கும் ஒரு சராசரி குடும்பப் பெண் போலல்லவா ஆகியிருக்கும் இவள் நிலையும். ஆனால் இன்று எதையும் தாங்கும் இதயம் மட்டுமல்லாமல் நல்ல ஆன்மீக இலக்கியங்கள் வாசிக்கும் பழக்கமும் வாய்த்திருக்கிறதே. அதற்கு ஐயாவிற்கு காலம் முழுவதும் கடமைப்பட்டவளாக இருக்க வேண்டும். நேரம் போனதே தெரியாமல் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தவளுக்கு அழைப்பு மணியின் ஒலி நினைவுலகிற்கு மீட்டது.
வாசலில் தங்கை குடும்பம் நின்றிருந்தார்கள்.. குழந்தை மழலையில் பெரீம்மா என தேனிசையாய் ஒலிக்க அப்படியே வாரிச்சென்று குழந்தையை அணைத்துக் கொண்டாள் அங்கை. தங்கை கணவருக்கு உணவு பரிமாறி அவரை அனுப்பி விட்டு தாங்களும் சாப்பிட்டு ஓய்வெடுத்து, மகன் பள்ளிவிட்டு வந்தவுடன் அவனையும் அழைத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள் குழந்தையுடன். வழியெல்லாம் இன்று ஐயாவை எப்படியும் சந்திக்கும் வழி செய்ய வேண்டும் என்று தம் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டாள். அவள் வேண்டுதல் செவி சாய்க்கப்பட்டது அந்த தெரு முனைக்குச் செல்லும் போதே அங்கு வாகனங்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதில் தெரிந்தது… ஐயா இன்று ஊரில்தான் இருக்கிறார் என்பது புரிந்தது.
நன்கு பரந்த முன் வாசலில், இருக்கைகள் போடப்பட்டு, வருபவர்களை அமரச் செய்திருந்தனர். சுவரில் ஐயாவின் மிகப்பெரிய புகைப்படம். நெற்றி நிறைய திருநீரும் சிரித்த முகமும், அமைதி தவழும் முகமும் கையெடுத்து கும்பிடத் தோன்றியது. அங்கு அமர்ந்திருந்தவர்களை அப்படியே சுற்றி நோட்டம் விட்டவள் கரை வேட்டிக்காரர்களுக்கெல்லாம் இங்கு என்ன வேலை இருக்கும் என்று ஆச்சரியமாகப் பார்த்தாள்… ஏதோ மூன்று பேர் சேர்ந்து கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். கையில் இருந்த பெட்டியை அவ்வப்போது தொட்டுக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தங்கையின் குழந்தை அதற்குள் சிணுங்க ஆரம்பித்து விட்டாள். ஒரே இடத்தில் கட்டிப்போட்டது போல் இருந்தது அவளுக்கு போர் அடித்திருக்கும் போல.. சமாதானம் செய்து, கையோடு கொண்டு வந்திருந்த தின்பண்டங்களைக் கொடுத்தாலும், அவள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. சிணுங்கல் அழுகையாக மாறுவதற்குள் ஒருவர் ஓடிவந்து, குழந்தையை வெளியே எடுத்துச் செல்லுங்கள் இங்கெல்லாம் சத்தம் வரக்கூடாது என்றார். உடனே அங்கையற்கண்ணி குழந்தையை தங்கையிடமிருந்து வாங்கி வெளியே எடுத்துச் சென்றாள். பக்கவாட்டில் தோட்டம் இருந்த பக்கம் எடுத்துச் சென்று குழந்தைக்கு சற்று வேடிக்கை காட்டலாம் என்று சென்றவள் அங்கு இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்ததை வைத்து ஐயா அரசியலில் நெருங்கிய தொடர்புடையவர் என்பதை புரிந்து கொண்டதால் ஆச்சரியம் ஏற்பட்டது. ஏனோ மனதில் லேசாக ஒரு சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தன் கறபனையில் இருந்த ஐயாவிற்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இருப்பது போன்று இருந்தது.. திடீரென்று வெளியில் ஒரே பரபரப்பு, சரசரவென்று கார்களின் அணிவகுப்பு, பரபரப்பாக அனைவரும் இயங்க ஆரம்பித்தார்கள். அதற்குள் வெளியிலிருந்து வேகமாக ஒரு மின்னல்வெட்டு பளிச்சென்று… அட.. இது திரைப்பட நடிகை ஜில்ஜில்ஸ்ரீ போலல்லவா இருக்கிறது என்று யோசித்த போதே, அருகில் இரண்டு பேர் , “போச்சுடா, இந்த அம்மா வேற வந்துடுச்சா, இன்னைக்கு ஐயாவை பாத்தாப்போலத்தான்….. “ என்று இழுத்துவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். மனதில் ஏதோ பெரிய கட்டு விட்டது போல தோன்றியது. ஏனோ அதற்கு மேல் அவளுக்கு அங்கு நிற்கவும் பிடிக்கவில்லை. தன் மனதில் தெய்வமாக நிலைத்திருக்கும் அந்த ஐயாவின் பிம்பத்தை இழக்கவும் அவள் விரும்பவில்லை…. ஐயா சொல்லுகிற அந்த வாசகம் நினைவில் வந்து அவளை ஒரு முடிவு எடுக்க வைத்தது…
வாசகங்களை மனதில் கொள்ளுங்கள்
வாசிப்பவரை அல்ல!
படித்ததை நேசியுங்கள்
படிக்கச் செய்பவரை அல்ல…….
—————————————————————————————————–
- ரங்கராட்டினம்
- சே.ரா.கோபாலனின் “ மை “
- தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !
- ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”
- குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
- முள்வெளி அத்தியாயம் -6
- சாதி மூன்றொழிய வேறில்லை
- பணம்
- வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 21
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 17) எழில் இனப் பெருக்கம்
- 2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்
- ரோஜா ரோஜாவல்ல….
- வேறோர் பரிமாணம்…
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10
- விவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “
- தங்கம் 4 – நகை கண்காட்சி
- பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23
- கடவுளும் கடவுளும்
- நூபுர கங்கை
- அக்கினி புத்திரி
- மறு முகம்
- ‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழு
- முன்னால் வந்தவன்
- பள்ளிப்படை
- நியாயப் படுத்தாத தண்டனைகள்..!