ஹெச். ஜி. ரசூல்
1) பெண்ணின் உடல் – உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது.
இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் பட்டிருக்கும் பெண்மை, தாய்மை, கற்பு என்பதுபோன்ற பண்பாடுசார்ந்த மதிப்பீடுகளின் மனக்கட்டமைப்பும் மிகமுக்கியமானது. பெண்ணிய இனவியலும், அரசியல் பொருளாதார தளங்களில் விரிந்து செல்லும் பெண்ணிய அரசியலும் இவ்வகையில் அடுத்த கவனத்தை பெறுகின்றன. இவை மேல்/கீழ் என சமூக வாழ்வில் கட்டமைக்கப் பட்டிருக்கும். பாலின படிநிலை அதிகாரத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன.
ஒற்றைப் படுத்தப்பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது.
ஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.
ஐரோப்பியச் சூழலில் பெண்களுக்கான ஒட்டுமொத்த பிரச்சனைகள் வெள்ளையின, கறுப்பின, லெஸ்பியன் இனப் பெண்களுக்கானது என தனித்தனியாக வேறுபடுத்தியே பார்க்கப்படுகிறது. இந்தியச் சூழல்களிலே சாதீய கட்டுமானத்திற்குள் இயங்கும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான பெண்ணியம், மத நிறுவன அமைப்புக்குள் செயலாக்கம் புரியும் பெண்ணியம் என்பதாக இதன் எல்லைகள் மாறுபட்டு விரிவடைந்துள்ளன.
இவ்வாறாக நுண் நிறுவனங்கள் வழி பெண்ணின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதும், உயிரியல் தாழ்வு நிலையை மையமாகக் கொண்டு பாலியல் ஏற்றத் தாழ்வுகளை நிரந்தப் படுத்துவதும் தொடர்ந்து நிகழ்கிறது.
இஸ்லாம் கூறும் பெண் சமத்துவத்திற்கு ஆதாரமாக திருமறையின் சிலகருத்துக்களை நாம் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.
1. ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன (அவ்வாறே) பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்தவை உரிமை (திருக்குர்ஆன் அத்தியாயம் 4 வசனம் 32)
2. நிச்சயமாக அ(த்தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சிபுரிவதை நான் கண்டேன். இன்னும் அவளுக்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது. மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. (திருக்குர்ஆன் அத்தியாயம் 27 வசனம் 22, 23)
3. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (திருக்குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 187)
இஸ்லாமில் அதிகபட்சமாக முன்வைக்கப் படும் ஆணுக்கும் பெண்ணுக்குமான சமமான விதிமுறைகள், சமமான கடமைகள், சமமான உரிமைகள் பெண் அரசாட்சியை ஏற்றுக் கொள்ளுதல் என்பதான இக்கருத்துகளின் அடிப்படையில் சமத்துவக் கோட்பாட்டை நோக்கி உரையாடலை நிகழ்த்தலாம்.
ஒவ்வொரு பெண்ணும் தான் செய்யும் நற்செயல்களுக்குத் தக்கவே மதிப்பீடு செய்யப்படுகிறாளே அன்றி அவளது கணவன் சார்ந்து பெருமையோ சிறுமையோ அடைவதில்லை என்கிற சுயசார்புத் தன்மையை திருக்குர்ஆன் கூறுகிறது. இறைவனால் மனிதக் கூட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூஹ் மற்றும் லூத் நபிமார்களின் மனைவிமார்கள் அவர்களது செயல்பாட்டு நிலைபாடுகளினால் நரக நெருப்புக்கு ஆளாவார்கள் என்பதும் இஸ்லாத்திற்கு எதிராக போர் தொடுத்த பிர் அவ்ன் ஆட்சியாளனின் மனைவி, ஆசியா இறைவழிப்பாதையில் தீமையைத் தட்டிக் கேட்டதால் கொடுமைப் படுத்தப்பட்டு உயிரையே தியாகம் செய்த வரலாறும், முன்உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இங்கு இஸ்லாமியப் பெண்,இஸ்லாம் அல்லாத பெண் என்பதான இருமை எதிர்வுகள் கட்டமைக்கப்பட்டுல்ளன.
இஸ்லாமியப் பெண்ணியச் சிந்தனையை பேசியவர்களில் இருபதாம் நூற்றாண்டின் துவக்ககால எகிப்திய அறிஞர்கள் காசீம் அமீன் (1863 – 1908) சலமா மூஸா (1887 – 1958) ஷெய்க் முஹம்மத் அப்தூ (1849) உள்ளிட்டோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். ஷரீ அத்தை விஞ்ஞானத்தின் துணை கொண்டு அணுகுதல், பெண்களுக்கான கல்வி, சுதந்திரம், சமத்துவம், அறிவுத்துறை தொடர்பான பிரச்சனைப்பாடுகளை பதிவு செய்தல் என்பதாக இது நடந்தேறியது.
ஈரானிய சமூக அறிஞர் அலிஷரிஅத்திய் பழமைவாதப்பெண், ஐரோப்பிய நாகரீகப் பெண் என்கிற இருவித எல்லைகளையும் விமர்சனப்படுத்தி மூன்றாம் நிலையிலான இஸ்லாமியப் பெண்ணை கட்டமைக்கிறார். பெண் பாலியல் பண்டமாக்கப்பட்டமைக்கு எதிர்வினையையும் ஆற்றுகிறார். மொழியியல் ஆய்வின் அடிப்படையில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட கருத்தை சிதைத்து மறு கட்டுமானம் செய்கிறார். ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா படைக்கப் பட்டாள் என்கிற சொல்லாடலை மறுத்து திருக்குர் ஆனிய மூலமொழியில் ஆதமும், ஹவ்வாவும் ஒரே வித இயற்கையிலிருந்து படைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்பட்டு இருப்பதை விவரிக்கிறார்.
இந்தத் திசை வழியிலேயே பஞ்சாபில் பிறந்த குலாம் அஹ்மத் பர்வேஸ் தெற்காசிய சூழலில் முக்கியமானவராகிறார். திருக்குர்ஆனை நவீனத்துவ பிரதி களாக மாற்றமடையச் செய்யும் முறையியலை இந்தியச் சூழலில் அஸ்கர் அலி இன்ஜினியர் உள்ளிட்டோர் முன்வைப்பதையும் இத்தோடு இணைத்துக் காணவேண்டியுள்ளது.
அரேபியச் சூழலில் ஏமனில் யூத மதமும், ரோமில் கிறிஸ்தவமும் வழக்கில் இருந்தபோது மக்காவில் குறைஷ், பதூயீன்கள் உள்ளிட்ட பழங்குடி மக்கள் பகுதியிலிருந்து நபிகள் நாயகத்தின் தோற்றம் நிகழ்ந்தது. யூத, கிறிஸ்தவ சமயங்கள், ஏற்கனவே வேதம் வழங்கப்பட்ட சமயங்கள், குறைஷி மக்கள் இதற்கு மாற்றாக புறச்சமயத்தை சார்ந்த பழங்குடி இன கலாச்சார பின்னணியைக் கொண்டவர்கள். இஸ்லாத்திற்கு முன்பு யூத கலாச்சாரத்தோடு தொடர்புடைய பெரும் வர்த்தகராக இருந்த கதீஜா நாயகியிடம் தான் நபித்துவம் பெறுவதற்கு முன்பு நபிகள்நாயகம் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஐரோப்பிய முற்காலச் சூழலில் பெண்களும் சொத்துரிமையை அனுபவித்திருக்கிறார்கள் என்பதற்கான குறிப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இஸ்லாமிய பெண்ணின் பொருளியல் சுயசார்புத் தன்மையினை மறுப்பதற்கான தடயங்களை தீனின் கோட்பாடுகளிலிருந்து கண்டெடுப்பது மிக அரிதாகவே இருக்கிறது. இது இருவகைப்பட்ட தன்மை கொண்டதாகும்.
ஒன்று பெண் சுயமாக சம்பாதிக்கும் செல்வத்தை சுயமாக பயன்படுத்துவதற்கு எந்த விதமான தடையு மில்லை. அவரவர் சம்பாதிப்பது அவரவர்க்கே என்கிற கருத்தாக்கம் மிக அழுத்தமாக சொல்லப்படுகிறது. இதில் ஆணுக்கென்று தனித்த அந்தஸ்து வழங்கப் படவில்லை.
அதே சமயம் தந்தை வழி சொத்துரிமையை பங்கீடு செய்யும் சூழலில்தான் ஆணுக்கு ரெண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.
வாரிசுரிமை சொத்தின் பாகப்பிரிவினையில் ஆணுக்கு ரெண்டுபாகம், பெண்ணுக்கு ஒருபாகம் என்பது திருமறையின் விதிமுறை. அக்காலச் சூழலில் பெண் உள்ளிட்ட குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஆணைச் சார்ந்திருந்தது. திருமணத்தின் போது மஹர் என்கிற பொருளாதாரச் சொத்து கணவன் மூலமாக பெண்ணுக்கு கிடைக்கிறது என்பதாக இதற்கு விளக்கங்களும் கூறப்படுகின்றன. மஹர் என்பது திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்கு வழங்கும்பணம் அல்லது செல்வமாகும். உடல்ரீதியாக ஆண் பெண்ணிடம் பெறுகிற இன்ப அனுபவத்திற்காக பெண்ணுக்கு வழங்கும் கொடையாகவும் இது சொல்லப்படுகிறது.
மஹரை செல்வமிருக்கும் ஒருவன் உஹது மலையளவு கூட வழங்கலாம். எதுவும் இல்லாதவன் குர்ஆன் வசனம் சொல்வதைக்கூட மஹராக்கலாம். இத்தகைய நெகிழ்ச்சியான, தீர்மானிக்கப்படாத அளவீட்டை பெண்ணுக்கு வழங்கப்படும் வாரிசுரிமை சொத்துப் பிரிவினையோடு இணைத்துப் பார்ப்பது எப்படி சரியாகும் என்பதான விமர்சனப் பதிவும் இதில் உண்டு.
இந்நிலையில் ஆணுக்கு ரெண்டு பாகம் பெண்ணுக்கு ஒரு பாகம் என்ற இக்கருத்தாக்கம் கூட சூழல் சார்ந்து மாறுபாடடைகிறது. ஆணுக்கு அதிக உரிமை பெண்ணுக்கு குறைவான உரிமை என கருதிக் கொண்டிருக்கும் மனோநிலையை இமாம் அபூஹனிபாவின் கருத்தாக்கம் வெகுவில் கலைத்துப்போடுகிறது.
இமாம் அபூஹனிபா ஆண் பலகீனமானவனா, பெண் பலகீனமானவளா என்ற கேள்வியை கேட்கிறார். அவரிடம் விவாதிக்க வந்த இமாம் ஜாபர் சாதிக் இதிலென்ன சந்தேகம் ஆண்தான் பலமானவன் ஆணுக்கு ரெண்டு பங்கு பெண்ணுக்கு ஒரு பங்கு என்று கூட திருமறை சொல்வதாக கூறுகிறார். உடனே இமாம் அபூஹனிபா மறுத்துக் கூறுகிறார். நீங்கள் சொல்வது தவறு. திருக்குர்ஆன் கருத்தாக்கத்தின் படி ஆண்தான் பலகீனமானவன். ஏனெனில் பலகீனமான நிலையின் இருப்பவர்க்குத்தானே அதிகம் செல்வம் தேவைப்படும். எனவே ஆண் பலகீனமானவனாக இருப்பதால் இரு பங்கும், பெண் பலமானவளாக இருப்பதால் அவளுக்கு ஒரு பங்கு மட்டும் என்கிறார். இது சொந்த அறிவையும் ஆராய்தலையும் கொண்டு தீர்ப்புச் சொல்லும் ஒரு மாறுபட்ட அணுகுமுறையாக உள்ளது.
ஒரு கோட்பாட்டின் உள்ளார்ந்த சாரம் ஒன்றாகவும் அதன் மேலோட்டமான வடிவம் மற்றொன்றாகவும் செயல்படுகிறது. ஆண்-பெண் சொத்துரிமை சார்ந்த விவாதத்தில் வெளிப்படும் இந்த சொத்துப் பங்களிப்பின் உள்ளார்ந்த சாரம் என்பதே “பலவீனமானவர்களுக்கு அதிக பங்கு” என்பதாகும். இந்த வகையில் இந்தியா உள்ளிட்ட வாழ்வியல் சூழல்களில் அதிகாரத்தின் ஆளுமைகளால் நசுக்கப்படுகிற பலவீன நிலையில் உள்ள இஸ்லாமிய பெண்களுக்கே அதிக அளவில் சொத்துப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குர்ஆனிய கருத்தாக்கத்தின் சொல்லப்படாத அர்த்தமாகவும் விரிவடைகிறது.
- கருணையினால் அல்ல…..!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1
- கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்
- கேள்விகளின் வாழ்க்கை
- இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42
- மொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்
- அஸ்லமின் “ பாகன் “
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு
- உறு மீன் வரும்வரை…..
- 2016 ஒபாமாவின் அமெரிக்கா
- தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
- மிஷ்கினின் “ முகமூடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27
- இந்த நேரத்தில்——
- Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்
- முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)
- சத்யானந்தன் மடல்
- தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.
- (99) – நினைவுகளின் சுவட்டில்
- திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு
- காலம்….!
- கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!
- இஸ்லாமிய பெண்ணியம்
- 35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.
- ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!
- கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற
- Bharathiar-Bharathidasan Festival 2012,Singapore