அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்

This entry is part 7 of 28 in the series 5 மே 2013

 

எல்லோருக்கும் பிடித்த சுஜாதா பின்னர் எல்லோருக்கும் பிடித்த அவரது தேசிகன் மற்றும் நேசமிகு ராஜகுமாரன் ( என்ன அருமையான பெயர்  ), மணிகண்டன், ரா.விநோத் பின்னர் ஞானுமாக எல்லாருமாச்சேர்ந்து கப்பன் பூங்காவில் ஒரு மூலையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம் நேற்று  28 ஏப்ரல் 2013,  மங்கிய மாலைப்பொழுது , வெய்யில் முற்றுமாகத்தணிந்து குளிர்ந்துகிடந்தது புல்தரை. வழக்கம் போல வட்டமாக அமர்ந்து பேசத்தொடங்கினோம். எனக்கு கொஞ்சம் வந்து சேர்வதற்கு நேரமாகிவிட்டது. ஆச்சரியம் 6-7 பேர்களே வந்திருந்த கூட்டம் ஆரம்பித்தேவிட்டது. கடைசியாக நானும் சேர்ந்துகொள்ள அறிமுக சுற்றுக்குப்பின் , ராஜகுமாரன் “ஃபோட்டோ” எடுத்துருங்க , பின்னர் ஆரம்பிக்கலாம் என்றார்.

 

ஃபோட்டோ சுற்று முடிந்து, அறிமுகச்சுற்று ஆரம்பித்தது. ரா.விநோத் நிறையப்பேசினார். அரசியல் செய்திகள் சேகரிப்பது பற்றி , உலகின் அழகிய , அவருக்கு மிகவும் பிடித்த நடிகையுடன் காரில் பெங்களூரிலிருந்து மைசூர் வரை பயணித்து ( பேட்டிக்காகத்தான் சாமி  ) அளவளாவியதைப்பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். எங்க விட்டால் இவரது பேச்சிலேயே கூட்டம் முடிந்துவிடுமோ என்று நினைக்குமளவிற்கு. பின்னர் அவரவர் அறிமுகம் நடந்தேறியது. திருஜி மிகவும் குறைப்பட்டுக்கொண்டார் , தேசிகன் மிகக்குறைவாகவே எழுதுவதாக. மணியும் சேர்ந்து பேசினார். ராஜேஷ் தொடர்ந்து சுற்றி சுற்றி  (அஞ்சு பேர எத்தன ஃபோட்டோதான் எடுக்கிறது ?! ) போட்டோ எடுத்துக்கொண்டேயிருந்தார்.

 

நூல் வெளியிடப்பட்டது , ராஜகுமாரன் வழங்க வினோத் பெற்றுக்கொண்டார். நேசமிகு ராஜகுமாரன் ஏற்கனவே எழுதி வைத்துக்கொண்டு வந்திருந்த உரையைப் படிக்கத்தொடங்கினார்.  தமக்கு சிங்கப்பூரில் ஒரு இதுபோன்ற ஒரு விழாவில் கலந்துகொள்ள இருந்தது கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டது பற்றி சொன்னார். பின்னர் நிறைய சிறுகதைகளைப்பற்றி சிலாகித்துப்பேசினார். பூபி,பாபி ,வின்னி போன்ற கதைகள் பற்றி குறிப்பாக விவாதித்தார். அப்பாவின் ரேடியோ’ கதையைப்பற்றிக் குறிப்பிடுகையில் , அவரின் கிராமத்திலேயே தமது வீட்டில் மட்டுமே முதன்முறையாக ரேடியோ வந்ததையும், முதல் மின்சார சுடுகாடு வந்து அதில் தம் அன்னையை கொணர்ந்து சேர்த்ததையும் , அதுபற்றிய ஒரு சிறுகதை ஆனந்தவிகடனில் வெளிவந்து அனைவரின் பாராட்டுகளைப் பெற்றதையும் பகிர்ந்துகொண்டார். மேலும் தேசிகனின் தொகுப்பு சிறுகதைகளும்,கட்டுரைகளுமாகப் பின்னிக்கிடப்பதைச் சுட்டிக்காட்டினார்.பின்னர் விழா நாயகனைப்பேச அனைவரும் கேட்டுக்கொண்டனர். எல்லோரும் பேசி முடிக்கட்டும் அணிந்துரையாக எனது இருக்கட்டும் என்று கூறிவிட்டு , விநோத்தை பேசப்பணித்தார்.

 

விநோத் எல்லோரையும் போல , ‘இப்போதெல்லாம் நான் சிறுகதைகள் வாசிப்பதேயில்லை’ , இந்தத் தொகுப்பு என்னை வாசிக்கத்தூண்டிவிட்டது என்று ஆரம்பித்து , வின்னி என்ற சிறுகதையைப்பற்றி தமது ஆரம்ப பள்ளிக்கால அனுபவங்களுடன் ஒப்பிட்டு பேசத்தொடங்கினார், வெகு சுவாரசியமாக இருந்தது அவர் பேச்சு. “ராகவன் ராகபன்” என்ற கதையில் வரும் பாத்திரப்பெயர்களை சொல்லி ரசித்துக்கொண்டதாக பேசிக்கொண்டிருந்தார். இருப்பினும் கூட்டம் குறைவாகவே இருந்ததால் பேசுவதற்கு அனைவர்க்கும் வெகு நேரம் கிடைத்தது. திருஜி இன்னும் தொகுப்பை வாசிக்கவில்லை என்று நான் நினைத்ததையே சொன்னார்.

 

என் பங்குக்கு , இப்போதெல்லாம் சிறுகதை வாசிப்பு குறைந்துவிட்டது. அதனால் கவிதை (?) எழுதத் தொடங்கிவிட்ட கதையை ராஜகுமாரனிடம் சொன்னேன். அப்ப்டியெல்லாம் ஒன்றுமில்லை , வாசிக்க நினைப்பவர் தேடிப்பிடித்து வாசிக்கத்தான் செய்கின்றனர், நீங்க விகடனுக்கு எழுதி அனுப்புங்க என்று கூறினார்   ( உடனே வந்துவிடும்   )

 

கடைசியாக தேசிகன் பேசத்தொடங்கினார். கதை எழுதியதை விட அவர் எங்கனம் சுஜாதாவிடம் ஒரு கதையை எழுதிக்கொண்டுபோய் காண்பித்த கதையை விலாவாரியாக ரசித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் , ஒவ்வொரு வாரமும் கதையைத்திருத்தி திருத்தி எழுதிக்கொண்டு போய் ஆசானிடம் காண்பித்த ‘காதையை’ப் பற்றி சிலாகித்துக்கூறினார். எட்டுப்பக்கங்களை ஐந்து பக்கங்களாக்கு , முதல் பாராவும் கடைசிப்பாராவும் அருமை , இடையில் எல்லாவற்றையும் மாற்றிவிடு, அந்தப்பையனை ரொம்ப நோஞ்சானாகக்காட்ட முயற்சி செய், ப்ரிண்டவுட் எடுத்துக்கொண்டுவா , திரும்பத்திரும்ப வரும் சொற்களை நீக்கு , இப்படியான கட்டளைகளை சிரமேற்கொண்டு ,விடாமுயற்சியுடன் உருப்பெற்ற அந்தக்கதை, ஒரிஜினல் கதையை விட சிறப்பாக இருந்தது . அதை அவர் சொல்லியவிதமும் அருமை.

 

‘பிச்சை’ என்ற கதைக்குத் தலைப்பை ‘பிச்சைப்பாத்திரம்’ என்றே வைத்திருந்ததாகவும் பின்னர் விகடனில் அது ‘பிச்சை’யாக மாற்றப்பட்டதையும் கூறினார். தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஓருவரின் பின்னணியில் அந்த ‘நான் கடவுள்’ படத்தின் பாடல் எழுதத்தூண்டியதாக சொன்னார்.இப்படி ஒவ்வொரு கதையுமே எதோவொரு சம்பவத்தின் உந்துதலாக, அல்லது தமது வாழ்வில் முன்னரே நடந்த விஷயங்கள் தம்மை எழுதத்தூண்டியதாகவுமே கூறிக்கொண்டிருந்தார். “இரண்டு மணி நேரத்தில் ஒரு சிறுகதை எழுதிக்குடுங்க’ என்று சொன்னால் தன்னால் எழுதவே இயலாது என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆசானுடன் பயணித்த காலங்களைப்பற்றிய அவர் அனுபவங்கள் , கதைகளை எங்கனம் எழுதுவது என்று அவர் கொடுத்த அறிவுரைகள் ( ஹ்ம்…நமக்குத்தான் அந்தக்கொடுப்பினை இல்லை  ) எல்லாமாகச் சேர்ந்து ஒரு புதுவித அனுபவமாக எனக்கு வாய்த்தது.

 

தேசிகன்  எப்போது எழுதத்தொடங்கினார், எவையெல்லாம், எதெல்லாம் அவரை எழுதத்தூண்டியது என்ற விஷயங்கள் வெகு சுவாரசியமாக இருந்தன. வீட்டிலிருக்கும் சிறு குழந்தைகள் , பெரியவர்கள் செய்யும் எல்லாச்செயலையும்! தாமும் செய்து பார்க்க எத்தனிப்பது போல, அம்மா சமையல் செய்தால் தாமும் செய்ய முயற்சிப்பது , அப்பா பைக் ஓட்டினால் தாமும் ஓட்டிப்பார்க்க நினைப்பது போன்றே , சுஜாதா எழுதுகிறார் அதுபோலவே நானும் சிறுகதை, கட்டுரை எழுத முயற்சிக்கிறேன் என்று கூறியது ரசிக்கும்படி இருந்தது.

 

பின்னர் ஒவ்விரு கதையும் எவ்வாறு கதையாக உருவெடுத்தது என்ற கதையை சொல்லிக் கொண்டிருந்தார். அவரது கதையில் வரும் பாத்திரங்கள் எல்லோரும் எதோ ஒரு காலத்தில் தேசிகனுடன் பயணித்தவர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் நாஸ்ட்டால்ஜியா கலந்த குறிப்புகளாகவே கதைகள் அனைத்தும் இருக்கும் என்றே நினைக்கிறேன். இன்னும் தொகுப்பை வாசிக்கவில்லை , வாசித்த பின்னர் ஒரு விமர்சனக்கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன்.

 

விவாதிக்க மேலும் விஷயங்களில்லை என்ற அந்த மங்கிப்போன மாலைப் பொழுதில் பின்னர் இன்னொரு கூட்டத்தில் சந்திக்கலாம் என்று நேசகுமாரனும், தேசிகனும் விடை பெற்றுச்சென்ற பின் , மணி, நான் , விநோத் ,மற்றும் ராஜேஷ் எல்லாருமாச்சேர்ந்து அப்போது எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். இனி வரும் கூட்டங்களை எங்கு நடத்துவது , யாரை அழைப்பது என்று பேச்சு வேறு திசை நோக்கிச்சென்றது. எல்லாம் முடிந்த பின்னர் சிவகுரு, மணியின் பைக்கில் அமர்ந்து கொண்டு கையசைத்து விடை பெற்றுச்சென்றார். நானும் திருஜியும் கொஞ்சம் காலார நடந்துகொண்டு கூட்டம் பற்றி அசை போட்டுக்கொண்டே சென்றோம்.. 

 

ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டம் சேராதது ஒரு குறை, பின்னரும் சனிக்கிழமை நடைபெற இருந்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமையாக மாற்றப்பட்டதும் ஒரு காரணம்.ஹோசூர் கோஷ்ட்டி வராமற்போனதும் குழு சிறுத்துப்போனதற்கு ஒரு பெரிய காரணம்…இப்படி பல காரணங்கள்..!  கூட்டம் அதிகமில்லாமற் போனாலும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் நல்ல அனுபவங்களாகவே அமைந்தது.

 

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationமருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்
author

சின்னப்பயல்

Similar Posts

2 Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா says:

    இலக்கிய விவாதங்களுக்கும் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பதை விட, இலக்கியத்தரம் வாய்ந்தவர்களும், உண்மையான ரசிகர்களும் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பதையே பார்க்கவேண்டும். எண்ணிக்கை முக்கியம் தான், ஆனால் அதுவே முக்கியமில்லை. விடாமல் நடத்துங்கள். –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

  2. Avatar
    சின்னப்பயல் says:

    மிக்க நன்றி கவிஞர் செல்லப்பா. இருப்பினும் கூட்டம் குறையும் போது சுரத்தும் குறைந்துவிடுவதென்னவோ தவிர்க்க இயலாதது தான். ;)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *