மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்

This entry is part 6 of 28 in the series 5 மே 2013

 

டாக்டர் ஜி.ஜான்சன்

நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள்.

இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 டிகிரி செல்சியஸ் உள்ளது. உயிர் இல்லாத உடல் வெப்பம் இன்றி ஜில்லிட்டுபோகும்.

இரத்தத்தை இப்படி சீராக ஓடச் செய்வது இருதயத்தின் துடிப்பு. இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் சீராக துடிப்பதால்தான் இரத்தமும் இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறது.

இப்படி இருதயத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களை தமனி ( artery ) என்கிறோம்.

தமனி வழியாக செல்லும் இரத்தம் குடல்களிலிருந்து உணவுச் சத்தும், நுரையீரல்களிலிருந்து பிராண வாயுவையும் , நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரப்பு நீரையும் உடலின் எல்லாப் உறுப்புகளின் அறைகளுக்கு ( cells ) கொண்டுசெல்கிறது .

இதுபோன்று உடலின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து கரி இரு ஆக்சைட் ( carbon – dioxide ) வாயுவையும், கழிவுப் பொருள்களையும் சுத்திகரிப்புக்காக மீண்டும் இருதயத்திற்குக் கொண்டு வரும் இரத்தக் குழாய்களுக்கு சிரை ( vein ) என்று பெயர்.

 

இரத்த ஓட்டம் சீராக ஓடிக் கொண்டிருக்கும் போது இந்த முக்கிய பணிகளும் தானாக நடைபெறும் ., உடல் உறுப்புகளுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, நஞ்சு தன்மை மிக்க கழிவுப் பொருட்களும் வெளியேற்றப்படுகின்றன.

ஏதாவது காரணத்தால் இரத்த ஓட்டம் தடைப்பட்டால்அந்தப் பகுதியிலுள்ள உறுப்புக்குத் தேவையான சத்து குறைவு படுவதும், அதிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள் அதிகரிப்பதும் நிகழும். இதுவே வியாதியை உண்டு பண்ணுவது .

 

ஒரு பகுதிக்கு அல்லது உறுப்புக்கு எவ்வாறு இரத்த ஓட்டம் தடைபடும்?

இரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் பிரச்னை உண்டாவாதுவே மிகவும் முக்கிய காரணம் எனலாம். இதில் முதன்மையானது அடைப்பு. இரத்தம் சீராக ஓடமுடியாமல் தடை பண்ணுவது இந்த அடைப்பு. இது எப்படி ஏற்படுகிறது?

அடைப்பை உண்டுபண்ணுவது கொலஸ்ட்ரால் என்பது பலருக்குத் தெரிந்தது.

இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரோல் தொடர்ந்து இருந்தால் அது தமனியின் உட்சுவரில் படிந்து அதை தடிக்க வைத்து சுற்றளவைக் குறைத்து விடுகிறது .இதனுள் செல்லும் இரத்தத்தின் அளவும் இதனால் குறைவு படுகிறது .இதன் மூலமாக சீராகச் சென்று கொண்டிருந்த இரத்த ஓட்டம் தடைபடுகிறது .அப்பகுதிக்கு அல்லது உறுப்புக்குத் தேவையான இரத்தம் இதனால் குறைவு படுகிறது. அல்லது முழுமையாக இரத்த ஓட்டமே இல்லாமல் போய்விடலாம். இது நேர்ந்தால் அதன் பின்விளைவுகள் ஆபத்தை உண்டுபண்ணலாம்.

 

இவ்வாறு தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் உண்டாகும் தடிப்பால் சுற்றளவு குறைவுபடுவதை தமனிச் சுவர் கடினமாதல் ( atherosclerosis ) என்று அழைக்கப் படுகிறது.

இன்று பல உறுப்புகள் இதனால் பாதிக்கப் படுகின்றன. அத்தகைய பாதிப்பை வைத்து வியாதிகள் வகைப் படுத்தப் படுகின்றன.

சில முக்கிய உதாரணங்கள் வருமாறு:

* இருதயம் – இருதய தமனிகள் காரோனரி தமனிகள் ( coronary arteries ) என்று அழைக்கப் படுகின்றன. இவற்றில் சிறு அடைப்பு உண்டானால் அதை அஞ்சைனா ( angina ) என்கிறோம். இது லேசான நெஞ்சு வலியை உண்டுபண்ணும். முழு அடைப்பு உண்டானால் மாரடைப்பு ( heart attack ) உண்டாகும். இது உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும்.

* மூளை – மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனிகளுக்கு செரிபிரல் தமினிகள் ( cerebral arteries ) என்று பெயர்.இவற்றில் சிறு அடைப்பு உண்டானால் திடீர் இருட்டடிப்பு தோன்றும் ( transcient ischaemic attack ) ஏற்படும். இதை சிலர் திடீரென்று ” ப்லேக் அவுட் ” ( black out ) ஆனது என்று வர்ணிப்பதுண்டு. முழு அடைப்பு உண்டானால் ஸ்ட்ரோக் ( stroke ) எனும் பக்கவாதம் உண்டாகும்.

 

* சிறுநீரகம் – சிறுநீரகம் செல்லும் தமனிகள் ரீனல் தமனிகள் ( renal arteries ) என்று அழைக்கப்படுகின்றன.இவற்றில் அடைப்பு உண்டானால் கழிவுப் பொருள்கள் தேக்கமுற்று நஞ்சு பொருட்கள் இரத்தத்தில் உயரும். இவற்றில் யூரியா ( urea ), கிரியாட்டினின் ( creatinin ) போன்றவை ஆபத்தான நஞ்சு தன்மை மிக்கவை. இவை கோமா நிலைக்கு கொண்டு சென்று, உயிருக்கு உலை வைத்துவிடும். இதை அகற்றவே இப்போது இரத்த சுத்திகரிப்பு ( dialysis ) மேட்கொள்ளப்படுகிறது.முழு அடைப்பு உண்டானால் சிறுநீரகம் செயல் இழந்து ( renal failure ) போகும். நீரிழிவு நோயில் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாவதும் இந்த அடைப்பு காரணமாகத்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

 

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் உயர் இரத்த அழுத்தமும் உண்டாகிறது. உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகத்தை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது.

நீரிழிவு நோயின் ஒரு முக்கிய பின்விளைவு தமனிகளில் தடிப்பை உண்டுபண்ணுவது என்பது குறிப்பிடத்தக்கதது.

நீரிழிவு நோயால் இறப்பவர்களில் 65 சதவிகிதத்தினர் இந்த தமனி கடினமாவதால் உண்டாகும் பின்விளைவுகளால்தான் இறக்க நேரிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதே!

 

* கண்கள் – கண்களுக்குச் செல்லும் தமனிகளின் பெயர் ஆப்தால்மிக் தமனி( ophthalmic artery ). இவற்றில் அடைப்பு உண்டானால் கண்பார்வை கெடுவதோடு பார்வையும் நிரந்தரமாக இழந்துபோகும். நீறிழிவு நோயில் இவ்வாறு பார்வை பறிபோவது ஒரு ஆபத்தான பின்விளைவாகும்.

* கால்கள் – கால்களுக்கு இரத்தம் கொண்டுசெல்லும் தமனிகளில் அடைப்பு உண்டானால் அப்பகுதி இறந்து கருநிறமாகி ( gangrene ) புரையோடிப் போகும். அது மேலே பரவாமல் இருக்க காலை வெட்டி விடுவதையும் நம் பார்த்துள்ளோம். இது நீரிழிவு நோயாளிகளிடம் பரவலாகக் காணப்படும் ஒரு பக்கவிளைவு.

 

இரத்த ஓட்டம் சீராக ஒடுவதற்கு இருதயத் துடிப்பு மிகவும் முக்கியமானது. அது நிமிடத்துக்கு 72 தடவை துடித்தால் ஆரோக்கியமாக உள்ளது என்று பொருள். வேகமாக துடித்தால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.அவற்றில் சில வருமாறு:

* பயம், பரபரப்பு, அதிர்ச்சி.

* காய்ச்சல் *

* தைராய்டு சுரப்பி அதிகம் செயல்படுவது

* இருதய செயலிழப்பு

இவற்றில் இருதய செயலிழப்பு ( heart failure ) ஆபத்தானது. நீண்ட நாள் உயர் இரத்த அழுத்தம் இருதயத்தின் இடது பக்க கீழறையை ( left ventricle ) விரிவடையச் செய்து இடது பக்க இருதய செயலிழப்பை ( left ventricular failure ) உண்டுபண்ணிவிடும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால் இரத்தத் தேக்கம் உண்டாகி வலது பக்க கீழறையையும் ( right ventricle ) பாதித்து வலது பக்க இருதய செயலிழப்பை ( right ventricular failure ) உண்டுபண்ணிவிடும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இருதயம் வேகமாக துடிப்பதால் போதுமான இரத்தம் வெளியேற முடியாமல் போய்விடும். இப்படியும் இரத்த ஓட்டம் சீராக ஓட முடியாமல் தடைப் படும்.

 

இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டுமெனில் மேற்கூறிய காரணங்களில் எதனால் சீர்குலைவு உண்டானது என்பதைப் பரிசோதனைகளின் வழியாகக் கண்டறிந்தது அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

( முடிந்தது )

Series Navigationநவீன தோட்டிகள்அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்

9 Comments

  1. Avatar கோவிந்தராஜ்

    மிகவும் நன்றி. நாம் தூங்கி கொண்டு இருக்கும் போது அல்லது நீண்ட பயணம் போது, சில நேரங்களில் கால்கள் அல்லது கைகளில் இரத்த ஓட்டம் இருப்பதில்லை. எழுந்த பிறகு, அது சாதாரண திரும்பி இருக்க வேண்டும்.நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  2. அன்புள்ள கோவிந்தராஜ் அவர்களுக்கு நன்றி. மருத்துவக் கட்டுரையைப் படித்துவிட்டு நல்ல கேள்வியைக் கேட்டுள்ளீர்கள்.பாராட்டுகள்.

    தூங்கும்போதும் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கும்போதும் இரத்த ஒட்டம் நின்று போவதில்லை.. இரத்தம் ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் நாம் படுத்து தூங்கும்,விதம், மெத்தையின் கடினம், தலையணையின் தன்மை,படுத்துள்ள நேரம் பொறுத்து இரத்தக் குழாய்கள் அழுத்தமுற்று தற்காலிகமாக இரத்த ஓட்டம் குறைவு படலாம். குறைவுபட்ட பகுதிக்கு பிராண வாய்வு பற்றாக்குறை உண்டாகி வலி உண்டாகலாம்.நீண்ட நேர விமானப் பயணத்தின்போது கால்கள் வீங்கி வலி எடுப்பது நல்ல உதாரணம். அதில் தொடையில் அழுத்தம் காரணமாக கால் இரத்தக் குழாய்களில் ஓட்டம் தடைப் பட்டு. இரத்தம் தேக்கமுற்று , இரத்தக் கட்டிகள் ( blood clots ) உண்டாகி அடைப்பை உண்டுபண்ணுவதோடு அவை மிதந்து சென்று இருதயத்திலும் அடைப்பை உண்டுபண்ணலாம் ( embolism ). இதை ஆழ் சிரை அடைப்பு ( deep vein thrombosis ) எனலாம்.

    அழுத்தம் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டால் கை கால்களில் மதமதப்பு ( numbness ) ஏற்படலாம்.

    நீரிழிவு நோய், இரத்த சோகை, அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு எளிதில் இரத்தக் குழாய் தொடர்புடைய பிரச்னைகளால் இரத்த ஓட்டம் குறைவு படலாம்.

    சில நுரையீரல் தொடர்புடைய நோய்களாலும் இரத்த ஓட்டம் குறைவு படலாம்.

    இறுக்கமான உடைகள் அணிவதாலும் அழுத்தம் காரணமாக இரத்த ஓட்டம் குறைவு படலாம்.

    ஊட்டச் சத்து குறைவு பட்டாலும் இரத்த ஓட்டம் குறைவு படலாம்.

    இரத்த ஓட்டம்தான் நமக்கு பிராண வாயுவைக் கொண்டு செல்லும் போக்குவரத்து சாதனம். இதில் தடை உண்டானால் பிராணவாயு குறைந்து அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அது சாதாரண விளைவு அல்ல- மரணம்!…டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar வாணிஜெயம்

    பயனான கட்டுரை.எளிதாகப் புரிய வைக்கும் லாவகமும் நன்று.தொடர வேண்டும் உங்களின் சேவை டாக்டர்.

  4. Avatar மேகலா இராமமூர்த்தி

    இரத்த ஓட்டம் குறித்த தங்கள் கட்டுரை பல பயனுள்ள தகவல்களைத் தாங்கியுள்ளது…நன்றி டாக்டர்! தொடர்ந்து மருத்துவத் தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

    சில ’மைக்ரெயின்’ நோயாளிகளுக்கும் இரத்தவோட்டம் தடைப்பட்டு ஒரு பக்கமாக கை கால்கள் மரத்துப்போகும்; பின்பு ஒரு பக்கத் தலைவலி ஆரம்பமாகும் என்றும் அதன் பெயர் ‘hemiplegic migraine’ எனவும் சமீபத்தில் படித்தேன். இவ்வாறு திடீரென்று இரத்தவோட்டம் தடைப்பட்டுப் பின்பு தலைவலி வருவது எதனால்? இதற்குத் தீர்வுண்டா என அறிய ஆவல்.

  5. அன்புள்ள வாணி, கட்டுரையைப் படித்து கருத்து கூறியதற்கு நன்றி. மருத்துவத்தை எளிமையாக்கி புரியும்படி எழுதவே இம் முயற்சியில் இறங்கியுள்ளேன். ..அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

  6. அன்புள்ள மேகலா இராமமூர்த்தி அவர்களே, நீங்கள் குறிப்பிட்டுள்ள Hemiplegic Migraine என்பது கடுமையான ஒற்றைத் தலைவலியாகும். சாதாரண ஒற்றைத் தலைவலியிலிருந்து இது சிறிது மாறுபட்டது. இதில் கை கால் மதமதப்பும் செயலிழப்பும் காணப்படும். இது இரத்த ஓட்டம் தொடர்புடையதல்ல. அதற்கு மாறாக இது மரபணு தொடர்புடையது. இது அசாதாரணமான ஒரு வகையான ஒற்றைத் தலைவலி.

    ஒற்றைத் தலைவலி பற்றி பின்னர் எழுதும்போது இது பற்றி விளக்குகிறேன்…மருத்துவத் துறையில் நீங்களும் உள்ளதால் உங்களின் கருத்துகளை இவ்வாறு தொடர்ந்து வரவேற்கிறேன்..நன்றி …அன்புடன் டாக்டர் ஜி.ஜான்சன்.

  7. மதிப்பிற்குரிய மரு. ஜான்சன்,

    வணக்கம். மிக எளிய நடையில் நல்ல கருத்துக்களையும், தெளிவான விளக்கங்களையும் வழங்கியுள்ளமைக்கு நன்றி. மிகப் பயனுள்ள கட்டுரை.

    அன்புடன்
    பவள சங்கரி

  8. Avatar Adaikalaraj

    கடினமான மருத்துவ விஷயங்களை எளிமையாக யாருக்கும் புரிகிறபடி எழுதி இருக்கிறீர்கள் ஐயா. தங்களுக்கு நன்றியும், பாராடுதல்களும்!

  9. அன்புள்ள திருமதி பவள சங்கரி அவர்களுக்கும், திரு .அடைக்கலராஜ் அவர்களுக்கும் , வணக்கம். மருத்துவக் கட்டுரை உங்களைக் கவர்ந்துள்ளது அறிந்து மகிழ்ச்சி. பாராட்டுக்கும் நன்றி….டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *