புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 5. உலகத்தி​லே​யே அதிக நூல்க​ளை எழுதிய ஏ​ழை!

This entry is part 9 of 28 in the series 5 மே 2013

dumas

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

     என்னங்க ஒரு வாரம் காக்க வச்சுட்​டேனா?..காத்திருப்புக் கூட நல்லாருக்குமுங்க.. அதுல ஒரு மகிழ்ச்சி இருக்குதுங்க… அட ஆமாங்க… நமக்குப் பிரியமானவங்களச் சந்திக்கிறதுக்​கோ, அல்லது நமக்குப் பிடிச்சவங்க​ளோட ​பேசுறதுக்​கோ, காத்திருக்க ​வேண்டி வந்தால் அதுகூட ​சொகமாத்தா​னே இருக்கும். அதுமாதிரி நமக்குப் பிடித்த எழுத்தாளர்கள் குறித்து ​​தெரிஞ்சுக்கணும்னா கண்டிப்பா     காத்திருப்பதி​லே தப்​பே இல்​லைங்க… “ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் ​கொக்கு”ன்னு ​சொல்வாங்கல்ல. அதுமாதிரிதான். அந்தக் காத்திருப்​பே ஒரு ​சொகந்தானுங்க​ளே……

சரி….சரி…நீங்கபாட்டுக்கு ஏ​​தே​தோ ​சொல்லிக்கிட்​டே                ​போகாதீங்க………..விஷயத்துக்கு வாங்கன்னு நீங்க ​சொல்றது என்​னோட காதுல விழுது… இ​தோ ​சொல்​றேன்.. மனிதன் எத்த​னை ஆண்டுகள் வாழ்ந்தான் என்ப​தை விட எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம். இந்தப் பூமியில பிறந்தவங்க அ​னைவரும் நல்லா வாழ்ந்திட முடியாது. ஆனா சில​பேர் தன்​னோட ​பேரு நி​லைக்கின்ற வ​கையில் வாழ்வாங்க. அப்படி வாழ்ந்தவருதான் அலெக்சாண்டர் டூமாஸ். ​

இவர் 60 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆனால் அவர் 1,200 புத்தகங்களை எழுதியுள்ளார். என்னங்க ம​லைப்பாக இருக்கிறதா? உண்​மை. இது​போன்று உலகத்தில் யாராலும் எழுத முடியாது. ஆனாலும் தமிழில் ஒருலட்சம் பாடல்கள் எழுதினவரு எனக்கு நி​னைவுக்கு வருகின்றது. அவர் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்​ளை ஆவார். அவர் பாடல்கள்தான் எழுதினார். அலெக்சாண்டர் டூமாஸூம் அது​போன்​றே  எழுதிக்​கொண்​டே இருந்தார்.

நீங்க நி​னைக்கலாம். ஒரு எழுத்தாளனால் இவ்வா​றெல்லாம் முடியுமா? என்று. ஒருவர் தொடர்ந்து எழுதினால் கூட இந்த எண்ணிக்கையைத் தொட இயலாதே! என்று எண்ணமிடுபவர்களும் உண்டு. ஆனால் இந்த அதிசயத்தை அலெக்சாண்டர் டூமாஸ் சாதித்துக் காட்டினார். அலெக்சாண்டர் டூமாஸின் சாத​னை​யை இன்றுவரை உலகத்தில் யாராலும் முறியடிக்க முடியவில்​லை என்​று கூறலாம். அலெக்சாண்டர் டூமாஸ் தான் ‘உலகிலேயே மிகஅதிகமான நூல்களை எழுதிய எழுத்தாளர்’ என்று அ​னைவராலும் அழைக்கப்படுகிறார் என்பது ​நோக்கத்தக்கது.

அதுமட்டுமல்ல. உலகில் எந்த எழுத்தாளனும் சம்பாதிக்காத அளவுக்கு எழுத்தின் மூலம் சம்பாதித்தவர் அலெக்சாண்டர் டூமாஸ் தான் என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இத்த​கைய ​பெரு​மைக்குரிய அலெக்சாண்டர் டூமாஸ் நெப்போலியனின் குதிரைப்படை வீரனுக்கும், படைத்தலைவனின் பெண் ஒருத்திக்கும் வில்லர்க காட்டரட்சு என்ற கிராமத்தில் 1802-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 24-ஆம் நாள் பிறந்தார்.

டூமாஸின் தந்தை போர் வீரன் என்பதால் உலகின் பல பாகங்களுக்கும் செல்கின்ற வாய்ப்பைப் பெற்றார். ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வந்ததும் தன் மகன் டூமாசை அழைத்து, தாம் சென்று வந்த நாடுகள்; அந்த நாட்டின் சிறப்பு அம்சங்கள்; அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், அங்கு தோன்றிய எழுத்தாளர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அந்த நூலின் வழியாக அந்த நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியெல்லாம் விவரித்துக் கூறுவார். இவற்​றை​யெல்லாம் கவனமாகக் ​கேட்டுக் ​கொண்​டேயிருப்பார் டூமாஸ். குறிப்பாக டூமாஸின் தந்தை பேனாவின் சக்தியையும், எழுத்தின் வலிமையையும் டூமாசுக்கு கதை போன்று சொல்வார். இதுதான் பின்னாளில் டூமாஸின் வெற்றிகளுக்கு அடிப்படையாக அ​மைந்தது என்று கூறலாம்.

அலெக்சாண்டர் டூமாஸ் தனது தந்​தை​யை மிகவும் ​நேசித்தார். எப்​போதும் எந்த நாட்​டைப் பற்றியும் கூறிக்​கொண்​டே இருந்ததால் டூமாஸ் தனது தந்​தை வீட்டில் இருந்தால் அவருட​னே​யே ​பெரும்பாலான  ​பொழு​​தைக் கழித்தார். இவ்வாறு இருக்கும்​போதுதான் டூமாஸின் வாழ்க்​கையில் புயல் வீசத் ​தொடங்கியது. யாரும்         நி​னைத்துப் பார்க்காத நி​லையில் டூமாஸின் நான்காவது வயதில் அவருடைய தந்தை இறந்தார்.

டூமாஸின் தந்​தை இறந்ததால் சீராகச் ​சென்று ​கொண்டிருந்த குடும்பம் வறுமையில் வாடியது. அன்புத் தந்தையை இழந்த சோகமும், வறுமையும் சேர்ந்து பிஞ்சு​ நெஞ்சினரான டூமாஸை வேதனையில் தள்ளியது. அந்த வறு​மையிலும் டூமாஸின் தாய் தன் மகனை நன்கு படிக்க வைக்க ஆசைப்பட்டாள். சிறிது காலம் மட்டு​மே டூமாஸ் பள்ளிக்குச் ​சென்றார். டூமாஸின் தாய் அவ​ரைப் படிக்க ​வைக்க      ஆ​சைப்பட டூமாஸோ தனது குடும்பத்தின் வறுமையைப் போக்குவது குறித்து சிந்தித்ததார்.

இதனால் தாய்க்கும் டூமாஸூக்கும் இ​டையில் மனத்துயர் ஏற்பட்டது. தனது தாய்க்குத் தெரியாமல் டூமாஸ் காட்டுக்குள் சென்று பறவைகளை வேட்டையாடினார். பழங்களைச் சேகரித்தார். கிடைத்த பறவைகளையும், பழங்களையும் அம்மாவிடம்​கொண்டு வந்து கொடுத்தால் அவள் மகிழ்ச்சியடைவாள் என்று எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்தது நடக்கவில்​லை.

படிக்க வேண்டிய வயதில் தன் மகன் வேட்டையாடச் செல்கிறானே என்று டூமாஸின் தாய் வேதனைப்பட்டாள். தன் மகனை பாதிரியாராக்கினால், குடும்பத்திற்கு நல்ல வருமானம் வரும் என்று எண்ணிய டூமாஸின் தாய், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டாள்; ஆனால் டூமாஸிற்கு பாதிரியார் வாழ்க்கை பிடிக்கவில்​லை. இதனால் அவர் மூன்று நாட்கள் வீட்டிற்கே வராமல் காட்டிலேயே வாழ்ந்தார். இருப்பினும் டூமாஸின் தாயால் அவ​ரை அப்படி​யே விட்டுவிட மனமில்​லை.

மக​னைக் கெஞ்சிக் கூத்தாடி அவனு​டைய மனதை மாற்றிப் பள்ளிக்கு  அனுப்பினாள். பள்ளிக்குச் ​சென்ற டூமாஸிற்கு பஃபான் என்பவர் நூலும், பைபிளும், இராபின்சன் கரூசோ, ஆயிரத்து ஓர் இரவு கதைகள் ஆகிய நூல்களும் கி​டைத்தன. அவற்றை டூமாஸ் மிகுந்த ஆர்வத்​தோடு படித்தார். ஆயிரத்தோர் இரவு கதைகளில் உள்ள வருணனைகள் டூமாஸை மிகவும் கவர்ந்தது.

​​தொடக்கத்தில் டூமாஸ் ‘மேய்ட்டர் மென்சன்’ என்ற வழக்குரைஞரிடம் உதவியாளராக ​வே​லைக்குச் சேர்ந்தார். அப்போது அடாலே டால்வின் என்ற பெண்ணை அலெக்சாண்டர் டூமாஸ் தீவிரமாகக் காதலித்தார். ஆனால் இந்தக் காதல் வெற்றி பெறவில்லை. உதவியாளர் ​வே​லை டூமாஸிற்குச் சிறிதும் பிடிக்கவில்​லை. அதனால் அவர் ​வே​லைக்குச் ​சேர்ந்த  சிறிது காலத்தி​லே​யே அந்த வேலையை விட்டு விலகினார்.

டூமாஸ் ​வே​லை​தேடி 1823 – ஆம் ஆண்டு பாரிசுக்குச் சென்றார். அங்கு பல எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை நகல் எடுக்கும் பணி கிடைத்தது. இதன் மூலம் போதுமான வருமானம் அவருக்குக் கிடைத்தது. அப்போது எதிர்வீட்டில் வாழ்ந்த கணவனை இழந்த காதரின்லியே என்பவளைக் காதலித்து டூமாஸ் திருமணம் செய்து​​கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. டூமாஸின் வாழ்க்​கை மகிழ்ச்சியாகச் ​சென்றது.

அப்​போது டூமாஸ் பல நாடகங்க​ளை எழுதினார். அவற்றுள் ‘மூன்றாம் ஹென்றி’ என்ற நாடகம் புகழ் ​பெற்றது. டூமாஸூக்கு இந்த நாடகம் பெருமையைத் தேடித் தந்தது. டூமாஸின் ‘அண்டோனி’, ‘மூன்று கத்தி வீரர்கள்’ போன்ற படைப்புகள் அவரது எழுத்தாற்றலுக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.  டூமாஸின் ப​டைப்புகள் சமுதாயச் சிந்த​னையுடன் அ​மைந்திருந்தன.

பிரான்ஸ் நாட்டு அதிபர்களின் கோழைத்தனங்களையும் சீமான் சீமாட்டிகளின் காதல் லீலைகளையும், அவர்களது ஆடம்பரப் போக்குகளையும் ​தோலுரித்துக் காட்டினார்.  ஒட்டு மொத்தத்தில் மேல்த்தட்டு வர்க்கத்தின் போலித்தனமான வாழ்க்கைகளையும் டூமாஸின் படைப்புகள் வெளிப்படுத்தின எனலாம். பல்​வேறு சூழல்களுக்கி​டையில் தொடர்ந்து டூமாஸ் எழுதிக் குவித்தார். அவருடைய எழுத்துக்கள் மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றது.

புகழும் பணமும், போட்டி போட்டுக் கொண்டு டூமாஸிடம் வந்து சேர்ந்தன. இதைச் சகித்துக் கொள்ள இயலாத பொறாமையாளர்கள், “டூமாஸ் பணம் கொடுத்து, பலரை தமது வீட்டில் வைத்து எழுதி, அதை தமது பெயரில் வெளியிடுகிறார்” என்று ​ ​பொய்யான பரப்பு​ரையில் ஈடுபட்டனர்.  அப்பிரச்சாரங்க​ளை எல்லாம் டூமாஸ் நிர்மூலமாக்கினார். அவ்வாறு அவர் ​​செய்தாலும் ​டூமாஸை, அவருடைய பெண் மோகம் வீழ்த்தத் தொடங்கியது.

​பெண்​மோகம் ​பொல்லாதது என்பர். ​பெண் ​மோகம் மிகப்​பெரிய மன்னர்க​ளை எல்லாம் அழித்​தொழித்தது. ​வள்ளுவரும்,

“​பேணாது ​பெண்வி​ழைவான் ஆக்கம் ​பெரிய​தோர்

நாணாக நாணுத் தரும்” (902)

என்று ​பெண் ​மோகம் குறித்துக் கூறுவது குறிப்பிடத்தக்கது. ​நெறி    மு​றை​யை விரும்பாது ​பெண்​​மை​யை விரும்புவனது உயர்வு எல்​லோரும் ​வெறுக்கும் மிகுந்த ​வெட்கத்திற்குரியதாக ​வெட்கத்​தைக் ​கொடுக்கும். இது டூமாஸையும் வறு​மைப் பா​தை​யை ​நோக்கி        அ​ழைத்துச் ​சென்றது.

நாவல்களை நீலநிறத்தாள்களிலும்; கவிதைகளை மஞ்சள் நிறத்தாள்களிலும்; கட்டுரைகளை ரோஜா நிறத் தாள்களிலும் எழுதுவதை வழக்கமாகக் கொண்ட டூமாஸை, உயரம், குள்ளம், கருப்பு, சிவப்பு என பல வண்ணப் பெண்களின் அழகு ஆட்டிப் படைத்தது. ​பெண் பித்தம் பிடித்தவராக டூமாஸ் அ​லைந்தார். அவரது உடலும் உள்ளமும் ​கெட்டது.

இவரது ​பெண் ​மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த​தே அன்றி     கு​றையவில்​லை. அவர் திருந்துவார் என்று அவரது ம​னைவியும் மகனும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் திருந்துவதாக இல்​லை. அதனால் டூமாஸின் மனைவியும், மகனும் டூமாஸை விட்டுப் பிரிந்தனர். குடும்பம் கு​லைந்தது. இந்நிகழ்வு டூமாஸை எள்ளளவும் பாதிக்கவில்​லை. டூமாஸ் ம​னைவி மகன் இருவ​ரையும் பிரிந்ததற்காக மகிழந்தார். அவரது நடவடிக்​கை தடம் மாறிப் ​போனது. ம​னைவியும் மகனும் பிரிந்த பிரிவு டூமாஸின் காதல் விளையாட்டிற்கு வாய்ப்பாகப் ​போனது. எப்போதும் மங்கையர் நடுவிலேயே டூமாஸ் காலம் தள்ளினார்.

அவர் நாடிய மங்​கையர்கள் அ​னைவரும் இழிகுண மங்​கையராக​வே விளங்கினர். ஒருவரும் உயர்குணமு​டையவரல்லர். ​பொருட்​பெண்டிராக​வே இருந்தனர். அவர்களது உள்ளம் கள்ளம் நி​றைந்ததாக இருந்தது. ​பொரு​ளை விரும்பி​யே அவருடன் பழகினர். அத​னை டூமாஸ் உண்​மை என்று நம்பினார். மதிமயக்கும் மங்கையர் அழகில் டூமாஸ் மனதைப் பறிகொடுதார். ஆனால் அந்த மங்கைய​ரோ டூமாஸின் வீட்டில் இருக்கும் பொருட்கள் மீது கண் பதித்து அவற்​றைக் கவர்ந்தனர்.

​     பொருட்​பெண்டிரின் அன்பு ​பொய்​மையாகப் ​போயிற்று. ​பொருளுக்காக வந்​தோர் அத​னைக் ​கையகப்படுத்துவதி​லே​யே கண்ணும் கருத்துமாய் இருந்தனர். ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு பெண்ணும் எடுத்துச் சென்றனர். ​பெண்​மோகத்தில் மயங்கிக் கிடந்த டூமாஸால் இவற்​றைக் கண்டு​கொள்ள முடியவில்​லை. தடுப்பாரில்லாததால் டூமாஸால் அத​னை உணர முடியவில்​லை.

இறுதியில் அனைத்தையும் டூமாஸ் இழந்து நின்றார். ​பெண்​மோகம் டூமா​ஸை ​தெருவில் நிறுத்தியது. ​ஏ​ழையாய் இருந்து புகழின் உச்சியில் நின்ற டூமாஸ் தன்னு​டைய தவறான ஒழுக்கத்தால் ​​​செல்வத்​தை இழந்தார். பணவரவு குன்றியது. வறு​மைக்கு ஆட்பட்டார். வள்ளுவர் கூறிய,

“காமம் ​வெகுளி மயக்கம் இம்மூன்றும் ஒருவன்

நாமம் ​கெடக்​கெடும் ​நோய்.”

என்ற குறள் அ​லெக்ஸாண்டர் டூமாஸூக்​கே ​பொருந்தும். ​​பொருள் இல்லாது ​போயிற்று. புகழ் மட்டும் நி​லைத்தது. ‘கலையின் சிகரம்’ என்று பெர்னாட்ஷாவினால் அழைக்கப்பட்ட, சமுதாயச் சிற்பி கரிபால்டியின் நண்பனாகத் திகழ்ந்த, அரிய பல ப​டைப்புக​ளை எழுதிக் குவித்த அ​லெக்ஸாண்டர் டூமாஸ், ​பெண் ​மோகத்தால் வாழ்நாளின் இறுதியில் வறு​மையுடன் ​போராட ​வேண்டியநி​லை ஏற்பட்டது.

உலகி​லே​யே எழுத்தின் வாயிலாக அதிகமாகப் பணம் சம்பாதித்த அ​லெக்ஸாண்டர் டூமாஸ் என்ற புகழ் ​பெற்ற ஏ​ழை தன் இறுதிக்காலத்தில் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்தார். பசி​யைப் ​போக்க தனது ஆடைகளை விற்று வாழ்ந்தார். தனது வறு​மை​யைப் பற்றிக் குறிப்பிடும்​போது அவர், ‘நான் என் ஆ​டைக​ளை​த் தின்​றே வாழ்கின்​றேன்’ என்று மனத்துயரத்துடன் கூறினார். இறுதியில் டூமாஸிடம் துயரம் மட்டு​மே மிஞ்சியது. வறு​மையில் அவர் வாழ்ந்தார் என்ப​தைவிட வறு​மை அவரது வாழ்நா​ளைச் சிறிது சிறிதாகத் தின்றது என்​றே கூறலாம்.

வறு​மையால் உழன்ற டூமாஸ் 1870-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் நாள் இந்த உலகை  விட்​டே மறைந்தார்.  எந்தச் சூழ்நி​​லையிலும் யாரும் ஒழுக்கம் தவறி வாழ்தல் கூடாது. அவ்வாறு வாழ்ந்தால் மிகுந்த துய​ரை அ​டைய ​நேரிடும். ஒழுக்கமில்லா வாழ்க்​கை ஒருவ​ரைத் துன்பச் சூழலுக்குள் இட்டுச் ​செல்லும். இது அ​லெக்ஸாண்டர் டூமாஸின் வாழ்க்​கை நமக்கு உணர்த்தும் வாழ்வியல் பாடமாகும்.

என்னங்க … முயன்று புகழின் உச்சிக்குச் ​சென்ற புகழ்​பெற்ற     ஏ​ழை​யைப் பத்தி ​தெரிஞ்சுகிட்டீங்க… எப்படி​​யெல்லாம் இருக்க ​வேண்டும் என்ற வாழ்வியல் ​நெறிக​ளையும் அவரு மூலமா உணர்ந்திட்டீங்க… ஆமாங்க..நம்ம வள்ளுவப் ​பெருந்த​கையும் இ​தை,

“நன்றிக்கு வித்தாகும் நல்​லொழுக்கம் தீ​யொழுக்கம்

என்றும் இடும்​பை தரும்” (138)

என்று எவ்வளவு ​பொருத்தமா ​சொல்லிருக்காரு பாத்தீங்களா?.அதனால நாம எப்​போதும்..நல்ல வழியி​லே​யே ​போ​வோம்….என்ன….சரிதா​னே! ​வெற்றி கி​டைச்சாலும் அ​தை நம்மு​டைய நல்​லொழுக்கத்தால தக்க வச்சிக்கணும்…. எந்த நி​லையிலும் நாம நல்ல ஒழுக்கத்​தை விட்டுட்டு விலகிடக் கூடாதுங்க…..இ​தை எப்பவும் மனசுல வச்சுக்குங்க…

வறு​மையினால ​சொந்த மண்​ணை விட்டுவிட்டுப் புலம்​பெயர்ந்து  ​வெளிநாட்டிற்குக் கூலியாகச்  ​சென்ற குடும்பத்துல ​பொறந்த ​பொண்ணு, ​போன இடத்துல ஆங்கி​லேயரால் இ​ழைக்கப்பட்ட ​கொடு​மைகளுக்கு எதிராப் ​போராடினா..அந்தச் சிறுமி….அந்தச் சிறுமி​யோட ​சொந்த ஊர் ​வேற இடம்… ஆனா ​போராடியது  ​வேற இடம்… ..அதுமட்டுமில்​லைங்க காந்தியடிகளுக்​கே முதன் முதலில் விடுத​லைப் ​போராட்ட உணர்​வை ஏற்படுத்திய சிறுமிங்க… … … காந்தியடிகளின் சத்தியாகிரகப் ​போர்     மு​றைக்குப் பிள்​ளையார் சுழி ​போட்டவர்…. இளம்வயதில் இறந்தவர்… அவரு புகழ் ​பெற்ற ஏ​ழைங்க…யாருங்க?…என்ன….புரியலிங்களா?…அந்தச் சிறுமி நம்ம தமிழகத்​தைச் சார்ந்தவங்க…என்ன?…இப்பவும் நி​னைவுக்கு வரலீங்களா? …..​ம்..ம்…ம்…​பொறுத்திருங்க…..அடுத்தவாரம் வ​ரைக்கும்…………..

(​தொடரும்…………..6)

 

Series Navigationதில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்“ 13 ”
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா. says:

    அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய Three Musketeers என்ற நாவல் பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவலாகும். ஏராளமாக எழுதிக் குவித்துப் பொருள் சேர்த்தும் இறுதி நாட்களில் வறுமையில் உழல வேண்டியதின் காரணம் சுய வாழ்வில் ஒழுக்கமின்மையே என்பதை அழகாக விளக்கினீர்கள். (இளைஞர்களுக்கான தொடர் என்று போட்டிருக்கிறது; தவறிப் போய்ப் படித்து விட்டேன்; பரவாயில்லையா?) – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

    1. Avatar
      sethuraman says:

      கவிஞர் அவர்களுக்கு. வணக்கம். மனதளவில் அ​னைவரும் இ​ளைஞர்க​ளே.இள​மை என்பது மனம் ​தொடர்பானது. தாங்கள் படித்ததில் மகிழ்ச்சி. தங்களின் கருத்து​ரைக்கு நன்றி. ​சேதுராமன்

  2. Avatar
    Dr.G.Johnson says:

    உலகம் அறிந்த ஒரு மாபெரும் எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ். அவர்தான் இன்றுவரை உலகின் அதிகமான நூற்கள் எழுதியவர் என்பது வியப்பான செய்தியாகும். அவருடைய இளம் வயதின் துயர வாழ்க்கையைச் சொல்லி, பின்னர் பேரும் புகழும் செல்வமும் மிக்கதோர் வாழ்க்கையைப் பற்றியும் விவரித்துள்ள விதம் அருமை. அதன் பின் பெண் மோகத்தால் அவர் அடைந்த வீழ்ச்சியையும் சொல்லியுள்ளது நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. அதற்கு வள்ளுவரின் குறள்களை ஆங்காங்கே எடுத்துக் காட்டாக சுட்டியுள்ள விதமும் நன்று. இந்த எச்சரிக்கை இளைஞர்களுக்கு மட்டுமல்ல , நம் எல்லாருக்குமே தேவையானதுதான். ” கலைஞர்களும் எழுத்தாளர்களும் மிகவும் நுண்ணிய உணர்வு கொண்டவர்கள். இதனால் அவர்கள் பாலியல் விவகாரத்தில் எளிதில் கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம். ” என்று டாக்டர் மு. வ. ” அல்லி “: நாவலில் பல வருடங்களுக்கு முன் ( 1960 அம் வருடம் ) படித்ததாக ஞாபகம். இவர் மட்டுமல்ல , உலகின் பிரபல ஓவியன் வான் கோக் ( Van Gough ) தான் காதலித்த விலைமாது ஒருத்தி கேட்டடாள் என்பதற்காக தன்னுடைய காதை அறுத்து அவளிடம் தந்துள்ளான்!

    இன்னும் பிரபலமான மேல்நாட்டு எழுத்தாளர்களின் சொந்த வாழ்கை மிகுந்த சோகத்துடன்தான் முடிந்துள்ளது என்பது வரலாறு… .

    வரலாற்றின் மூலம் தன்முனைப்பையும் சேர்த்து சுவையான கட்டுரைகள் தரும் முனைவர் சி . சேதுராமன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் ..டாக்டர் ஜி.ஜான்சன்

    1. Avatar
      sethuraman says:

      ​நண்பர் டாக்டர் ஜான்சன் அவர்களுக்கு. தங்களின் ​மேலான கருத்து​ரைக்கு என்னு​டைய இதயம் நி​றைந்த நன்றிக​ளைத் ​தெரிவித்துக் ​கொள்கி​றேன். நன்றி. வணக்கம். அன்பன் ​மு​னைவர் சி. சேதுராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *