செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)

This entry is part 13 of 28 in the series 5 மே 2013

 

நான் முதன் முதலாக 1961-ல் செல்லப்பாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கு திரிகோணமலையிலிருந்து வந்திருந்த தருமு சிவராமுவை, செல்லப்பாவின் வீட்டில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன். அது எனக்கு எதிர்பாராத  மகிழ்ச்சி தந்த ஒரு சந்திப்பு. திரிகோணமலையிலிருந்து வந்தவருக்கு தமிழ் நாட்டில், சென்னையில் யாரைத் தெரியும்? எழுத்து பத்திரிகையைத் தெரியும். அதன் ஆசிரியர் செல்லப்பாவைத் தெரியும். செல்லப்பா அப்போது என்ன, எப்போதுமே சம்பாத்தியம் என்பது ஏதும் இல்லாத மனிதர். வத்தலக்குண்டுவிலிருந்து சென்னைக்கு எழுத்தாளராகவே வாழ வந்தவர். க.நா.சு பத்திரிகை ஒன்று வெளியிட்டுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவியாக ஆசிரியர் குழுவில் இருந்தவர். சிறு பத்திரிகைகள் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? தினமணி கதிரில் சில காலம் வேலை செய்து வந்தார். பின்னர் அங்கு ஆசிரியராக இருந்த துமிலனோடு ஒத்துப் போக முடியவில்லை என அதையும் விட்டு வெளியே வந்தவர். அப்போது பிறந்தது தான், “நமக்கு மரியாதை இல்லேன்னா, ஒருத்தர் வீட்டு வாசற்படியை என்னத்துக்கு மிதிக்கறது?” என்ற மந்திரச் சொல் அறச்சீற்றமாக அவ்வப்போது அவரிடமிருந்து வெளிவரும். அந்த சமயத்தில் தான் சிவராமூவை, செல்லப்பா தன்னுடனேயே வீட்டில் தங்கச் செய்தார்.  சிவராமூ தான் வேறு எங்கு செல்லக் கூடும்!

 

செல்லப்பாவும் தன் பொருளாதார சிரமங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தவரில்லை. அதிலும் சிவராமூ விஷயத்தில். எழுத்து பத்திரிகையின் இரண்டாம் வருடத்திலிருந்தே சிவராமூ என்ற புதிய பெயர் நுண்ணிய இலக்கிய உணர்வு கொண்டவர்களின் கவனத்தை பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். முற்றிலும் ஒரு புதிய குரலாக அவரது எழுத்துக்கள் ஒலித்தன. கவிதையிலும், கட்டுரைகளிலும்.

 

அவர் இலங்கைத் தமிழர். இலங்கைத் தமிழ் எழுத்துக்களை தமிழகத் தமிழர் அங்கீகரிப்பதில்லை, மதிப்பதில்லை என்று ஒரு புகார் அக்காலத்தில் இருந்தது. ஆனால் ஒரு புதிய குரல், தனித்வம் மிக்க, ஒரு குரல் திரிகோணமலையிலிருந்து வந்துள்ளதை அவர்கள் அங்கீகரித்ததுமில்லை. மதித்ததுமில்லை. அவர்கள் கண்டுகொள்ளாமல் ஒதுக்குவதே செய்யக்கூடியது என்று தீர்மானித்திருந்தது போலத் தான். அப்போது இலங்கையில் முற்போக்குகளின் சாம்ராஜ்யம் அதிகாரம் வகித்திருந்த காலம். அவர்களுக்கும் சிவராமு பிடித்ததில்லை. முற்போக்குகளை தனி ஆளாக எதிர்த்து நின்ற எஸ் பொன்னுத்துரைக்கும் சிவராமூவைப் பிடித்ததில்லை.

 

சிவராமூவினது தனிக்குரல் மாத்திரமில்லை. தனித்து விடப்பட்ட குரலும் கூட. அத்தகைய ஒரு குரலுக்கு செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் தான் அங்கீகாரம் கிடைத்தது. எழுத்து பத்திரிகையில் மாத்திரம் இல்லை. க.நா.சு. செல்லப்பா இருவரின் அக்கால எழுத்துக்களால் விழிப்புற்ற ஒரு தலைமுறையினருக்கு இந்த புதிய தனித்த, தனித்து விடப்பட்ட குரல் உற்சாகம் தருவதாக இருந்தது. ஒரு இலக்கிய சிறு பத்திரிகைச் செயல்பாட்டின் லட்சியமே இத்தகைய புதிய குரல்களைக் கண்டு கொள்வதும் அவற்றுக்கு இடம் அளிப்பதும் தானே. செல்லப்பாவுக்கு இப்படி ஒரு குரல் எழுத்து பத்திரிகையின் கண்டுபிடிப்பாக வந்துள்ளதில் மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் கூட. சிவராமூ தன்னிடம் வந்து தங்கியதில் அவருக்கு சந்தோஷம் தான். தன் பொருளாதார கஷ்டங்களையும் ஒரு பொருட்டாகக் கருதாத உற்சாகம் அது. நான் முதன் முதலில் செல்லப்பாவைப் பார்க்கச் சென்ற போது அங்கு உட்கார்ந்திருந்த சிவராமூவை எனக்கு மிகுந்த பூரிப்புடன் செல்லப்பா, “பாருங்கோ யார் இங்கே வந்திருக்கான்னு” என்று சுட்டியபோது, உட்கார்ந்தபடியே அண்ணாந்து பார்த்த சிவராமூவின் முகம் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க இருப்பதைப் பார்த்தேன்.

 

அது முதல் தடவை. அத்தோடு நிற்கவில்லை. அதன் பிறகு சிவராமூவின்  திரிகோணமலைக்கும் திருவல்லிக்கேணிக்குமான பயணங்கள் தொடர்ந்திருக்கின்றன. சிவராமூ சிதம்பரத்துக்குப் போய்வருவார். மௌனியைப் பார்க்கவும் அவருடன் உரையாடவும். மௌனி ஒரு மிகப் பெரிய இலக்கிய வியக்தியாக அவரால் இனங்காண முடிந்திருக்கிறது. மௌனி கதைகள் கிடைத்தவற்றையெல்லாம் தொகுத்து ஒரு சிறந்த தொகுப்பை கொணர்ந்தது அவரால் நடந்திருக்கிறது. பின் லா.ச.ரா. பிச்ச மூர்த்தி,

 

இப்படி பலர் அவரை சென்னையில் ஈர்த்தனர். இலங்கை யிலிருந்து சென்னைக்கு வந்து கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்த சில மாணவர்களையும் அவர் தேடி அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.  வேலணையிலிருந்து சென்னைக்கு கற்க வந்திருந்த க. சட்டநாதன் என்னும் யாழ்ப்பாணக் காரரின் சிறு கதைத் தொகுப்பில் அவர் தன்னை மைலாப்பூரில் தான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து,  “நானும் திருமலைக் காரன்” என்று சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்ட சிவராமுவை பற்றி எழுதியிருக்கிறார். பின் சட்டநாதனையும் அழைத்துக்கொண்டு செல்லப்பாவைப் பார்த்த விவரமும் அதில் இருக்கும். அதில் அவர் சிவராமூவை பெரிதும் பாராட்டியே எழுதியிருக்கிறார். செல்லப்பாவும் சிவராமுவை தான் சந்திக்கச் சென்றவர் களிடமெல்லாம் சிவராமுவையும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். ந.முத்துசாமி, சச்சிதானந்தம் என்று பலரும் அவருக்கு நெருக்கமானார்கள்.

ஆரம்பத்தில் மாமிக்கும் இது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை தான். அடுத்த முறை நான் விடுமுறையில் சென்னை வந்திருந்த போது செல்லப்பாவைப் பார்க்கச் சென்றேன். சிவராமூவைப் பற்றிப்பேசும் போது, மாமி சிரித்துக்கொண்டே சொன்னார்.  “அவனுக்கு (சிவராமூவுக்கு) சாப்பிடவே தெரியாது. தட்டிலே போடறதையெல்லாம், சாம்பார், கூட்டு, கறி, அப்பளம், எது போட்டாலும், எல்லாத்தையும் ஒண்ணாக் கலந்துக்குவான். இவர் தான் அவனுக்கு எப்படி சாப்பிடணும்னு சொல்லிக் கொடுப்பார். இப்படி ரண்டு மூணு தடவை சொல்லிக் கொடுத்தப்பறம் தான் அவனுக்கு சாப்பிடவே வந்தது. எல்லாத்துக்கும் அவனைப் பழக்கப் படுத்தணும்.” என்றார். ஏதோ ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டி வந்தது போன்ற சந்தோஷமும் வேடிக்கை உணர்வும், மாமி பேச்சில் இருந்தது.

 

வெகு அக்கறையோடும் அன்போடும் தான் செல்லப்பாவும் மாமியும் என்னுடனும் பழகினார்கள். அங்கு நானும் இரண்டு நாட்களோ அல்லது நான்கு நாட்களோ, அவ்வப்போதைய சந்தர்ப்பத்தைப் பொறுத்து அங்கு தங்கியிருக்கிறேன். ஒரு சமயம் பல இடங்களில் பயணம் செய்து கண்டதைத் தின்று வயிறு கெட்டிருந்தது. சாப்பிட உட்கார்ந்த போது செல்லப்பா சொன்னார். ”கொஞ்சம் பொறுங்கள்; மாமி உங்களுக்காக சுண்டைக்காயை நெய்யில் வறுத்து பொடி செய்து கொண்டு வருவாள் அதற்குப்பிறகு சாப்பிட ஆரம்பிக்கலாம் என்று சொன்னார் முதலில் சாதத்தின் நடுவில் குழித்துக்கொள்ளுங்கள். அந்தக் குழிவில் சுண்டைக்காய் பொடியைப் போட்டதும் அந்தச் சூட்டோடு அதைக் கொஞ்சம் சாதம் போட்டு மூடிவிடுங்கள்” என்றார். செய்தேன். கொஞ்சம் கழித்து ”சாதம் எல்லாத்தையும் ஒன்றாகப் பிசைந்து இனிமேல் சாப்பிடலாம்” என்றார்.

 

அங்கு செல்லப்பா வீட்டில் யாரும் காபி சாப்பிடுவது கிடையாது. எனக்கு காலையில் காபி கிடைக்கும். நான் சிகரெட் பிடிக்க வெளியே போனதைப் பார்த்து, ”இனி வெளியே போகவேண்டாம்” என்று சொல்லி,  காகிதத்தில் ஒரு ஆஷ் ட்ரே செய்து என் முன் வைத்தார். எனக்கு 22  வயது மூத்தவர் செல்லப்பா. சிவராமூ இன்னம் 6 வயது இளையவர். நேரில் பேசும் போது நீங்கள் என்று தான் சொல்வார். “உங்களோ டெல்லாம் நேரில் பேசும்போது தான் இப்படி. இன்னொருத்தரிடம் பேசும்போது அப்படி இல்லை. அப்போ நீங்கள் எல்லாம் “அவன்” ஆயிடுவேள். என்றார் ஒரு முறை.

 

இந்த மாதிரியான அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு நெருக்கம் மிகுந்த சூழல் மாறியதை மாமி செல்லப்பாவின் முன்னால் ஒரு தடவை பேசிய கசப்பிலிருந்து உணர்ந்தேன். இலக்கிய அபிப்ராய பேதம் மாத்திரமில்லை. சிவராமுவிடம் கண்டது ஒரு வித மனப் பிறழ்ச்சி என்றும் தோன்றியது. மணி சின்ன பையன். பத்து வயது இருக்குமோ என்னவோ. சிவராமு மணியின் கழுத்தை நெருக்குவது போல் கையை மணியின் கழுத்தைச் சுற்றி வைத்துக்கொண்டே, “இப்படியே இவன் கழுத்தை நெருக்கிடட்டுமா?” ன்னு கேட்டான். “உனக்கு அப்படித் தோணித்துன்னா தாராளமா செஞ்சுக்கோ. நீயும் எனக்குப் பிள்ளை மாதிரி தானே” ன்னு சொன்னேன் என்றார் மாமி. பக்கத்தில் உட்கார்ந்திருந்த செல்லப்பா, ’‘ப்ச்” என்னமோ போ, விடு. அவ்வளவு தான்” என்றோ என்னவோ செல்லப்பா ஒரு வெறுப்புடன் அலுத்துக் கொண்டார். திறமையும் புத்திசாலித் தனமும் கொண்ட ஒரு இருபது வயதுப் பையனாக வந்த சிவராமுவிடம் அவர்கள் கொண்ட ஒரு தனிமனித பாசம் மறைந்து தான் போயிற்று. இலக்கிய தளத்தில் அவர் மீது மதிப்பு கொண்டிருந்த பெரும்பாலோரிடம் அந்த தோழமையும் மறைந்தது. இவரது கோணங்கித் தனங்கள் தூர இருந்த மௌனியையும் பாதித்தது.  இந்த மாற்றம் நிகழ அதிக காலம் வேண்டியிருக்கவில்லை.

 

ஆனாலும், திரும்ப ஆனாலும்,  செல்லப்பாவுக்கு சிவராமூவிடம் இருந்த இலக்கிய பிடிப்பு மாத்திரம் மாறவில்லை. என் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட ராஜபாளையம் நண்பர்கள் செல்லப்பாவை அணுகியபோது, “இத்தோடு சிவராமூ கவிதைகளையும் தொகுத்துப் போடலாமே” என்று சொன்னார். சிவராமூவை யார் அணுகுவது? அந்த சிவராமூவின் எதிர்வினை எப்படி இருக்குமோ? என்ற ஒரு பயமே எல்லாருக்கும் இருந்தது. டேவிட் சந்திரசேகர் என்ற அன்பர் தான் போய் சிவராமூவை அணுகுவதாகச் சொன்னார்.  “அப்படியே சிவராமுவுக்கு சம்மதமென்றால், நான் ஒரு அறிமுகக் கட்டுரை எழுதுகிறேன்” என்று செல்லப்பா சொன்னார். இதெல்லாம் என் முன்னிலையில் நடந்தவை. இதன் பின்னரும் சிவராமூ செல்லப்பாவைப் பற்றி அவதூறாகப் பேசுவதும் எழுதுவதும் நிற்கவில்லை தான். அது, “என் கவிதைகளையும் கட்டுரைகளையும் படித்துத் தான் செல்லப்பாவுக்கு புதுக்கவிதை பற்றிய தெளிவே ஏற்பட்டது” என்று (“தெளிவோ, ஞானமோ, இல்லை அறிவோ” யார் கண்டார் என்னவென்று சொன்னார் என்று? இப்போது அதை எங்கேயென்று தேடி எடுத்து சரிபார்ப்பது இயலாத காரியம்) எழுதத் தொடங்கியாயிற்று.

 

செல்லப்பாவுடனான உறவுகள் இலக்கிய தளத்தில் தொடங்கினாலும் அது அத்தோடு நிற்பதில்லை. அந்த எல்லையை எப்போதும் அது தாண்டிவிடும். எப்போது செல்லப்பா எனக்கு அறிமுகம் ஆனாரோ அன்றிலிருந்து செல்லப்பாவையும் சச்சிதானந்தத்தையும் நான், ஒன்று அவர் வீட்டில், இல்லை இவர் வீட்டில் பார்க்கலாம். சச்சிதானந்தம் நிறைந்த, ஆழ்ந்த தீர்க்கமான படிப்பாளி. ஆனால் அவர் எழுத்துவில் எழுதியது ஏதுமில்லை என்று சொல்லுமளவுக்குத் தான். மற்றவர்கள் எல்லாம் பிரிந்து சென்ற பிறகும் செல்லப்பாவுடனான சச்சிதானந்ததின் பிடிப்பு தளர்ந்ததில்லை. இன்றைய இலக்கிய தளத்தில் செல்லப்பாவை மிகப்பெரிய சக்தியாக மதிப்பவர் சச்சிதானந்தம். எழுத்து நின்று போனதும், செல்லப்பாவின் எழுத்துக்கள் பலவற்றைத் தொகுத்து வெளியிட்டவர் சச்சிதானந்தம் அது அத்தனையும் அவரது ப்ராவிடண்ட் ஃபண்டிலிருந்து கடன் பெற்று பீகாக் பிரசுரம் என்ற பெயரில் தொடங்கி வெளியிடப்பட்டவை. ஒன்றல்ல, இரண்டல்ல, தமிழ் சிறுகதை பிறக்கிறது, தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள், படைப்பிலக்கியம், ஊதுவத்திப் புல், மாயத் தச்சன், இலக்கியச் சுவை, மறு பதிப்பாக, வாடிவாசல், புதுக்குரல்கள் என்று எல்லாம் சச்சிதானந்தம் சொந்தப் பணத்தில் வெளிவந்தவை. சென்னை வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்டு செல்லப்பா சென்றது பங்களூரானாலும் சரி, வத்தலக்குண்டானாலும் சரி, அவரைத் தொடர்ந்து குருவைத் தேடிய சிஷ்யராக உடன் இருந்தவர்.

 

சச்சிதானந்தத்தின் அக்கறைகள் இலக்கியத்துடன் மாத்திரம் சிறைபட்டதல்ல. ஆனால் செல்லப்பாவுக்கு இலக்கியம் தவிர வேறு எதுவும் சிந்திப்பதும் கூட வியர்த்தமான காரியம். இலக்கியம் சிந்திக்கவேண்டும், பேசவேண்டும், எழுத வேண்டும், ஒரு நாளின் விழித்திருக்கும் நேரம் முழுதும். சச்சிதானந்ததுக்கும் செல்லப்பாவுக்கும் இடையேயான ஒட்டுதலை நான் வியப்புடன் எண்ணிப் பார்த்ததுண்டு. இருவரும் தாம் விழித்திருக்கும் நேரங்களை வேறு யாருடனாவது அதிகம் கழித்துள்ளனரா என்பது சந்தேகம் தான். சச்சிதானந்தத்தின் தாயார் உயிரோடு இருந்த காலத்தில் நான் செல்லப்பாவை சச்சிதானந்தத்தின் வீட்டில் பார்த்ததுண்டு. அங்கு செல்லப்பா பெற்றிருந்த அன்னியோன்யம் இலக்கியத்தினால் பெற்றதல்ல. ஒரு முதியவர் தன் காலத்தை உருவகித்து அங்கு உலவிய காரணத்தால் என்று சொல்ல வேண்டும்.

 

ஆனால் வேறு எந்த தமிழ் எழுத்தாளரையும் விட அன்றாட வாழ்க்கையின் அத்தனை காரியங்களையும் அவரே செய்து கொள்ளும் முனைப்பும் திறமையும் கொண்டவர். வத்தலக்குண்டு வீட்டில் தோட்டம் போடுவதாயினும் சரி, வாழ்க்கைச் செலவுக்கு காகித பொம்மைகள் செய்வதாயினும் சரி, தன் தொண்ணூறாவது வயதில், நீண்ட குறுகிய அறையின் வெப்பத்தைப் பொருட் படுத்தாது 2000 பக்கங்கள் கொண்ட சுதந்திர தாகம் நாவலை திருத்தி எழுதுவதானாலும் சரி. எல்லாம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை, சுற்றிக் கண்ட வாழ்க்கையை நுணுக்கமாக அனுபவித்ததன் பதிவுகள். அவற்றில் கடந்த வாழ்க்கையின் மதிப்புகளும், கடந்த வாழ்க்கையின் கூறுகளுமே நிறைந்திருக்கும். ஆனால் சிந்தனையும் எழுத்தும் என்னவோ இலக்கியத்தைத் தவிர வேறு எதையும் எண்ணாதவை.

 

இது ஒரு அதிசயமான ஒரு முரண், இலக்கியம் தவிர வேறு எதிலும் அக்கறை இல்லாதவராக தோற்றமளித்தாலும், அவர் எழுத்துக்கள் அத்தனையிலும் அவர் வாழ்ந்த காலத்தின் அத்தனை முகங்களையும், வர்ணங்களையும் வெகு நுட்பமாக கவனித்தவர். அவர் படித்த காலத்திலிருந்து புயலாக வீசிய விடுதலைப் போராட்டத்தில் அவரைச் சுற்றிய எல்லோரும், அதில் கலந்து கொண்டவர்கள். அவரும் தான். படிப்பை விட்டு சிறை சென்றவர். அந்த உணர்வு, காலமும் வெளியே நாட்டு மக்களும் மறந்தாலும், அவரிடம் நான் பார்த்த எண்பதுக்களிலும் கூட அவரிடம் உயிர்ப்புக்கொண்டிருந்தது. வெளியே ஓட்டு கேட்டு போகும் ஊர்வலத்தைப் பார்த்ததும் தன் வீட்டு நடை பாதையிலிருந்தே,” என் வோட்டு உங்களுக்குத் தான்” என்று உற்சாகத்தோடு சத்தம் போட்டுச் சொன்னதை நான் உடன் இருந்து பார்த்தவன். எனக்கு அப்போது கொஞ்சம் அதீதமாகத் தான் பட்டது. செல்லப்பாவின் அந்த ஆளுமை அதீதம் என்று தான் சொல்ல வேண்டும்.

 

நான் 1966-ல் திருமணமாகி தில்லிக்குத் திரும்பும் வழியில் மாம்பலம் இறங்கி மாமியார் இருந்த மகாதேவன் தெருவில் மூன்று நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது,  ஆர்ய கௌடா ரோடு இன்னும் உருவாகவில்லை. ஒரு கப்பி ரோடு இரு புறமும் ஆங்காங்கே மரங்கள், ஒரு கிராமத்தின் சூழல். நன்றாகத் தான் இருக்கும்.  நான் சிகரெட் வாங்க 100 150 அடி தூரம் தள்ளி இருந்த ஒரு பெட்டிக்கடைக்குப் போவேன். மகாதேவன் தெருவுக்கு அப்பால் வயல் வெளிகள் தான். தெருக்கள் ஏதும் இருக்கவில்லை. நான் தங்கிய வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியிருக்கும். நான் இருந்த பின்புறப் பகுதிக்கு சுற்றி இருந்த சேற்றைக்கடந்து வரவேண்டும். மழைக் காலம். வந்திறங்கிய நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ காலையில் பத்து மணி அளவிற்கு, “சாமிநாதன்கிறவர் இங்கே தான் இருக்காரா? என்று பெரும் சப்தமிட்டுக்கொண்டு வருவது கேட்டது. வீட்டுச் சொந்தக் காரர் வெளியே வந்தார். என் மாமியார் மனைவி எல்லோரும் வெளியே வந்தார்கள். ஏதோ கடன் கொடுத்த மார்வாரி மாதிரின்னா சத்தமும் அதட்டலுமா… மாப்பிள்ளையை வந்ததும் வராததுமா இப்படி ஒருத்தர் தேடி வரணுமா? தெரியாம விசாரிக்காம பொண்ணைக் கொடுத்துட்டோமோ என்ற சந்தேகம் வெளியே எட்டிப் பார்த்து அவர்களைக் கலவரப்படுத்தி யிருக்கலாம். பழகிய குரலாக இருக்கிறதே என்று  வெளியே வந்தால், சேற்றைக்கடந்து வந்து கொண்டிருந்தது செல்லப்பா. நான் எதிர் பார்க்கவில்லை. வியப்பாகத் தான் இருந்தது. நான் சிரித்த முகத்துடன் அவரை வரவேற்ற பின் தான் அவர்கள் மனம் வந்திருப்பது மார்வாரி மாதிரி யாரும் இல்லை என்று சமாதானமடைந்திருக்க வேண்டும். மறுபடியும் செல்லப்பா தன் சத்தமிட்ட அதட்டலைத் தொடர்ந்தார். “ஆமாம். வர்ரதைப் பத்தி ஒரு வார்த்தை சொல்றதில்லையா? கல்யாணம் ஆகி வந்தால் அங்கே நம்மாத்துக்குன்னா வந்திருக்கணும். இதேன்ன சொல்லமக் கொள்ளாம வரதும் போறதும்… நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். வேறென்ன செய்ய முடியும்? நான் அவருக்குச் சொல்லவில்லை. ஆனால் அவர் இந்த இடத்தை எப்படிக் கண்டு பிடித்து, அல்லது யார் சொல்லி வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. கல்யாணம் ஆகி தன் வீட்டுக்குத் தான் முதலில் வரணும் என்று சொல்கிற செல்லப்பா, இலக்கியம் தவிர வேறு சிந்தனை இல்லாத செல்லப்பா அதீதம் தானே. புதிதாக திருமணம் ஆனவர்களை விருந்துக்கு அழைப்பது ஒரு புறம் இருக்கட்டும். அதுவே அவரால் முடியாத ஒரு கட்டம் அது. அப்போது தான் அவருக்கு விடுதலைப் போராட்ட தியாகியாக உதவித் தொகை கிடைக்க ஆரம்பித்ததா அல்லது பின் வருடங்களில் ஒன்றா தெரியாது. முதலில் ஆரம்பித்தது மாதம் ரூ 500 என்று நினைக்கிறேன். அதுவே எழுபதுக்களுக்குப் பிறகு தான் என்று என் நினைப்பு. அப்போது எழுத்து நின்றுவிட்டதா, அல்லது நிற்கும் தருவாயோ தெரியாது.

 

எல்லாவற்றையும் விட எனக்கு அதிகம் ஆச்சரியம் தந்த விஷயம், அவரது தில்லி பயணம். எண்பதுகளின் கடைசி வருடங்களில் தான் என்று நினைவு, ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும் போது அந்த செய்தி வந்தது. செல்லப்பா தொலை பேசியின் மறுமுனையில் என்னுடன் பேச விரும்புவதாக. செல்லப்பா இங்கு எங்கு வந்தார் என்று திகைத்துக் கொண்டிருக்கும் போதே செல்லப்பா தான் தில்லி வந்திருப்பதாகவும் பாரதமணி பி.என். ஸ்ரீனிவாசனும் தானும் குருத்வாரா ரகாப் கஞ்ஜை அடுத்து இருக்கும் ரகாப் கஞ்ஜ் ரோடில் இன்ன நம்பர் வீட்டில், ஒரு எம்.பி யின் வீட்டில் இருப்பதாகவும் சொன்னார். ”எப்படி இது,? எனக்கு முன்னாலேயே சொல்லக் கூடாதோ? என்று கேட்டேன். “எல்லாம் திடீரென்று தீர்மானமானது என்றார்.

 

இப்போது அவருக்கு வரும் தியாகி உதவித் தொகை ரூ 1500.அத்தோடு இந்தியாவில் எங்கும் மற்ற அரசு ஊழியர்களுக்குக் கிடைப்பது போல இலவச ரயில் பயணம் உண்டு. வயதானவர் என்றால் கூட உதவிக்கு வருபவருக்கும் அந்த சலுகை உண்டாம். அப்படித்தான் அவர் கூட வந்திருந்தது இன்னொரு காந்தீய வாதி. பி.என். ஸ்ரீனிவாசன். பாரத மணி என்ற ஒரு பத்திரிகை வேறு நடத்தி வந்தார். அதில் எல்லாம் விடுதலைப் போராட்டம், காந்தீயம், தமிழ் நாட்டு போராட்ட வீரர்கள், தியாகிகள் பற்றிய விஷயங்களே இருக்கும். அவர் போராட்டங்கள் இன்றைய தமிழ் நாட்டின் அரசியல், கலாசார நிலையை மறந்ததாகவே இருக்கும். சிவாஜி சிலை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கக் கூடாது வேறு இடம் தேடுங்கள் என்று ஒரு போராட்டம்.  பீச்சில் ஒரு பகுதி திலகர் திடல் என்று ஒரு வரலாற்றுப் பெயரோடு இருந்ததை சீரணி அரங்கம் என்று பெயர் மாற்றியதை எதிர்த்து திரும்ப திலகர் திடல் என்ற பெயரே இருக்கவேண்டும் என்று ஒரு போராட்டம். பழைய தேசிய விடுதலைப் போராட்ட உணர்வை இன்னமும் செல்லப்பாவைப் போல தக்க வைத்துக் கொண்டிருந்தவர். அவரும் இந்த யாத்திரையில் செல்லப்பா வுக்குத் துணை. இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.

 

செல்லப்பா இருந்தால் இலக்கியம் தவிர வேறு என்ன பேச்சு நடக்கும்?. அதுவும் அவருடைய உச்சஸ்தாயியில். என் மனைவிக்கு செல்லப்பாவின் சுபாவம் நல்ல பழக்கம். அதனால் அதிர்ச்சி ஏதும் இல்லை. பி.என். ஸ்ரீனிவாசன் எங்கள் சண்டையை மிகவும் அனுபவித்துக் கொண்டிருந்தார். “என்ன பாசம் ஐயா ரெண்டு பேருக்கும். என்னமா சண்டை போடறேங்க” இந்த மாதிரி ஒரு உறவை பார்த்து ஆச்சரியமாத்தான் இருக்கு.” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பின்னர் நான் சென்னைக்கு வந்த பிறகும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வார். பாரதமணிக்கு  நான் எழுதவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். வீட்டுக்கும் வந்தார். அந்த தள்ளாத வயதில் அவர் இவ்வளவு ஊக்கத்தோடும் தளர்வின்றியும் செயல்பட்டுக்கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியம் தரும்.

 

நான் அலுவலகத்திலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு, ”சொல்லுங்கள் எங்கெல்லாம் தில்லியைச் சுற்றிப் பார்க்கலாம்” என்று கேட்டேன். இருவருக்குமே அந்த எண்ணமே இல்லை. செல்லப்பா கேட்டது இரண்டே இரண்டு தான். காந்தி சுடப்பட்ட பிர்லா மாளிகைக்குப்  போகவேண்டும். அடுத்து தில்லியில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்களோடு ஒரு சந்திப்பு. செங்கோட்டை வேண்டாம். கன்னாட் ப்ளேஸ் வேண்டாம். இந்த சமாசாரங்கள் எதுவும் வேண்டாம். ஊர் சுற்றிப் பார்க்க வரவில்லை நாங்கள்” என்றார்.

 

பிர்லா மாளிகை இருக்கும் ரோட் இப்போது தீஸ் ஜனவரி மார்க் என்று பெயர் மாற்றப்பட்டிருந்தது. அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றேன் பிர்லா மாளிகையில் அவர் தங்கிய அறையில் கடைசியாக அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவர் அமர்ந்திருந்த திண்டு முதற்கொண்டு. பின் பின்புறமாக இரு பேத்திகளின் தோள் பற்றி பின்புறம் இருந்த புல்வெளியில் அவர் நடந்து வந்த தடங்கள் கடைசியாக சுடப்பட்டு வீழ்ந்த இடம். செல்லப்பா அந்த இடத்தில் நின்று விட்டார். நின்றவர் கைகூப்பி தியானம் செய்தவாறு சில நிமிடங்கள்.

 

அவ்வளவு தான் அவர் தில்லியில் பார்த்தது. காந்தி சமாதிக்கு   அவர் முன்னரே போயிருக்க வேண்டும். பூஸா ரோடில் இருக்கும் தமிழ் பள்ளியில் ஒரு கூட்டம்.  அந்தப் பள்ளியில் இடம் பிடித்து எல்லோருக்கும் சொல்லி வரவழைத்தது  பெண்ணேஸ்வரன்.  அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது என் நினைவில் இல்லை.

 

திரும்ப வீட்டுக்கு வந்தோம். இலக்கிய விவாதம்/கூச்சலிட்டு சண்டை போட. ஸ்ரீனிவாசன் கிட்ட இருந்து சிரித்த முகத்தோடு அந்தக் காட்சியை அனுபவிக்க.

Series Navigationநிழல்தெளிதல்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா says:

    இவர் மாதிரியான இலக்கியவாதிகளும் நம் காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை எதிர்காலம் நம்புமா என்பது கேள்விக்குறியே! 90-வது வயதில் 2000 பக்கம் எழுதும் ஆளுமையும் தன்முனைப்பும் கொண்டிருந்த அமரர் சி. சு. செல்லப்பாவை நினைவூட்டி எழுதிவரும் பெரியவர் வெங்கட் சாமினாதன் அவர்களுக்கு நம் நன்றிகள். – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

  2. Avatar
    எஸ்.எம்.ஏ. ராம் says:

    இதே கட்டுரை சென்ற வார ‘சொல்வனம்’இதழிலும் பிரசுரமாகி இருக்கிறதே? தவறுதலாக ஒரே கட்டுரையை ஒரே நேரத்தில் இரண்டு இணைய தள இதழ்களுக்கும் ஆசிரியர் அனுப்பி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *