கரையைத் தாண்டும் அலைகள்

2
0 minutes, 6 seconds Read
This entry is part 22 of 28 in the series 5 மே 2013

‘முடிவா  நீ என்ன சொல்ல வர்ற….’ சுந்தர், ஹரிப்பிரியாவைக் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான், அவன் பேச்சில், முகபாவத்தில், கண்களில் எரிச்சல் இழையோடியதை அவன் சொன்ன விதம் உணர்த்தியது. இருவரும் மூன்றடி இடைவெளியில் அந்தக் கடற்கரையில் அமர்ந்திருந்தார்கள்.

அவள் கடலைப் பார்த்து அமர்ந்திருந்த விதமும்… கன்னங்களில் வழிந்தோடிய  சுருள் முடியை  எடுத்து பின்புறம் தள்ளிய லாவகமும்… கேசத்திலிருந்து வீசும் மல்லிகைப் பூவின் வாசமும்… காற்றில் இடைச்சேலை விலக பளிச்சென்று தெரிந்த இடைப்பிரதேசமும்… அவன் கை பரபரக்கத்தான் செய்தது. இதுவே வேறொரு தருணமாக இருந்தால்… ம்ம்ம்… இப்பொழுது அவள் சண்டைக்கோழியாக வேறு அமர்ந்திருக்கிறாளே.. மனதைக் கட்டுப்படுத்தி…

‘சொல்லு பிரியா…’ என்றான் மறுபடியும்.. சுந்தரின் அந்தக் கேள்விக்கு சட்டென்று பதில் சொல்லத் தயங்கினாலும் சொல்ல வந்த விஷயத்தை எப்படியும் இன்று கூறிவிடுவது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தாள் அவள்.

தூரத்தில் நீலக்கடலின் கடல் அலையோ கடற்கரையில் அமர்ந்து சோகம் மகிழ்ச்சி வேதனை விரக்தி ஆகியவற்றை தங்களுக்குள் பறிமாறிக்கொண்டிருக்கும் மக்களின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் போல தன் அலைக்கரங்களைக் கொண்டு கரையைத் தொட முயற்சித்து தோற்றுக் கொண்டே இருந்தது.

‘பிரியா.. என்ன பிராப்ளம் இப்ப உனக்கு.. எதுக்கு இப்ப அவசரமா வரச் சொன்ன…’ அவளை மிகவும் நெருங்கி அமர்ந்தபடி கேட்டான் சுந்தர்.

‘நம்ம டைவர்ஸ் பண்ணிக்கலாமுங்க.. இது தான் என்னோட இறுதி முடிவு…’ அவள் அப்படிச் சொன்னதைக் கேட்டு பேயறைந்தவன் போல மாறின அவன் முகத்தை தன் மனத்திரையில் குரூரப் புன்னகையால் ரசித்தப்படி அலுவலகத்தின் மேஜையில் உள்ள கணணியின் திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஹரிப்பிரியா.

சுந்தருக்கும், ஹரிப்பிரியாவுக்கும் திருமணம் ஆகி கடந்த நான்கு வருடங்களில் ஏகப்பட்ட முட்டல் மோதல்கள் வெடித்தாலும்  நீர்க்குமிழி போல அவை வந்த சுவடே தெரியாமல் மறைந்துவிடும், ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இருவருக்கும் நடக்கும் இந்த பனிப்போரின் இறுதி கட்டமாய் ‘பிரிவு’ என்ற பிரம்மாஸ்திரத்தை அவன் மீது எய்தும் அளவுக்கு துணிந்தாள் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

‘ஹாய் பிரியா… என்ன உனக்குள்ளே சிரிச்சிட்டு இருக்கே…. சொல்லேன்… நானும் சிரிப்பேன் இல்ல’ பிரியாவின் அலுவலகத் தோழி கீதா கேட்டபடியே அவள் இருக்கையில் அமர்ந்தாள்.

‘ஓண்ணுமில்ல கீதா.. சின்ன வயசு ஞாபகம்… ‘ பிரியா அழுத்தமானவள்… தன்னைப்பற்றி எதையும் யாரிடமும் வெளிப்படையாக கூறுபவள் அல்ல… அது பிரியமான தோழியாக இருந்தபோதிலும்…

‘உன்ன யாராவது சைட் அடிச்சி மாட்டிக்கிட்டத நெனெச்சியா… ‘

‘ரொம்ப ஸ்மார்ட்டி…. எப்படி கண்டுபிடிச்சே…’ அவளுக்கு அற்ப சந்தோஷம் கிடைக்கட்டும் என்று அப்படிக் கூறினாள்.

‘பொண்ணுங்க சிரிக்கறதே அடுத்தவன் தன்னால அவஸ்தபடற நெனெச்சித்தான்…’ சொன்னவள்  தன் வேலையில் மூழ்கிட.. அது ஒரு பன்னாட்டு அலுவகத்தின் மனிதவளப் பிரிவு.. அவளையும் சேர்த்து பத்து பேர் அந்த அறையில் வேலை செய்கிறார்கள். பிரியா கடந்த இரண்டு வருடம் முன்புதான் அங்கு வேலையில் சேர்ந்தாள்,

‘என்னடி அங்க இன்னும் கண்ணாடியையே மொறச்சி மொறச்சி பாத்திட்டு இருக்கே..’ அம்மாவின் அதட்டலில் கைநடுங்கி… வைத்துக்கொண்டிருந்த கண்மை கண்ணில் இருந்து சற்று விலகி கன்னத்தில் கீறலாய் நீட்டிவிட.

‘ஏம்மா இப்படி கத்தறே…. இப்ப பாரு… மை கன்னத்துல கோலம் போட்டுடுச்சி..‘ அம்மாவை கடிந்து கொண்டாள் ஹரிப்பிரியா.

‘ஆமாண்டி…  நானும் உன் வயச தாண்டித்தான் வந்திருக்கேன்.. காலேஜ்க்கு டைம் ஆகல…. ஏழு மணி பஸ் போயிடப்போகுது… ‘ அவளுக்கு மகள் காலேஜ் செல்வது பெருமையாக இருந்தாலும் அவளின் அழகும் அபரீதமான பெண்மையின் வளர்ச்சியும் மனதை பிசையத்தான் செய்தது. அவளுக்கு அடுத்து இளையமகள் பன்னிரண்டாவது படிப்பதும். இருவருக்கும் மூத்தவன் டிகிரி முடித்துவிட்டு வேலையை தேடிக்கொண்டிருப்பதும் மேலும் அவளை கவலையடையச் செய்தது. அவள் பி.ஏ இறுதி ஆண்டு படிக்கும் பொழுதே மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.

‘எதுக்கும்மா இப்பவே கல்யாணம்… எனக்கு எம்பிஏ படிக்கணுமின்னு ஆசை..’

‘உனக்குப் பிறகு ஒரு தங்கச்சி இருக்கு… அப்புறம் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணனும்… அப்பாவுக்கு வேற வயசாயிட்டுப் போகுது… அவரு ரிட்டையர் ஆகறதுக்குள்ள ரெண்டு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிடமின்னு நெனக்கிறாரு.. ‘கல்யாணம் பண்ணிட்டு படிக்கலாம்மா… என்ன நான் சொல்றது…’ அம்மா சொல்ல.. பெற்றவர்களின் விருப்பத்திற்காக தலையாட்டினாள் அரைமனதுடன்.

வரன் பார்க்க ஆரம்பித்து அப்படி இப்படி என்று சுந்தரை கைப்பிடிக்கவே இரண்டு வருடம் முடிந்துவிட்டது. சுந்தர் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளர் என்ற விபரத்தைத் தவிர மற்ற விவரங்கள் எதையும் அப்போதைக்கு தெரிந்துகொள்ள அவள் விரும்பவில்லை. அவள் எதிர்பார்த்த மாதிரி கணவன் அமையவில்லை என்பதில் அவளுக்கு உள்ளூர வருத்தம்தான். இருந்தாலும் பெற்றவர்களின் மனது நோகாமல் இருப்பதற்கும் அவளுக்குப் பிறகு தங்கையின் திருமணத்திற்கு தான் தடையாய் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவனின் முழுவிவரத்தையும் தெரிந்து கொள்ளாமல் திருமணத்திற்குச் சம்மதித்தாள். ஆரம்பத்தில் சுமூகமாகச் சென்ற வாழ்க்கைப் பயணம் படிப்படியாக பாதை மாறி தடம்புரள ஆரம்பித்தது.. அதற்கு காரணம் அவள் விருப்பமும் அவன் விருப்பமும் வேறு வேறாக இருந்ததே.. போகப் போக சரியாகிவிடும் என்பதால் ஆரம்பத்தில் அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

‘உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்…’

‘எனக்கு ஆபிஸ்.. வீடு….  நேரம் இருந்தா டிவி…. இவ்வளவு தான் என்னோட வாழ்க்கை..’ என்றவன்

‘உனக்கு..’

‘ஜுவல்ஸ், சாரிஸ், சினிமா, அழகழகான செறுப்பு… விதவிதமா சாப்பிடறது….அப்புறம்’

‘இன்னும் லிஸ்ட் இருக்கா…’ ஆச்சிரியமாய் அவன் வினவ..

‘ம்ம்… லிஸ்ட் முடியல…  நிறைய புத்தகம் வாசிப்பேன், கவிதை படிப்பேன், எழுதுவேன்… அப்புறம் நாவல் படிக்கறது ரொம்ப ரொம்ப பிடிக்கும்… ‘

‘ஓ…. ரொம்ப படிப்பாளிதான் நீ.. எனக்கு அதெல்லாம் பிடிக்காது… அது வேலைவெட்டி இல்லாதவங்க செய்யற வேலை… எனக்கு அதிலேல்லாம் கொஞ்சம்கூட விருப்பம் இல்ல…’ அவன் அப்படிச் சொன்னதும் அவன் மேல் அவளுக்கு கோபம் வரத்தான் செய்தது.

‘படிப்புன்னு சொன்னதும் ஞாபகம் வருது… ஒரு சின்ன ரெக்கொஸ்ட்…’

‘என்ன…’

‘எனக்கு மேற்கொண்டு எம்பிஏ படிச்சி வேலைக்குப் போகணுமின்னு ஆசை…. அதுவரைக்கும்  நம்மளோட தனிப்பட்ட சந்தோஷத்தை கொஞ்சம் தள்ளி வச்சா நல்லா இருக்கும்..’

‘அதுக்கென்ன… நீ தாரளமாப் படியேன்… எனக்கு ஆபிஸ்… வீடு.. இது ரெண்டத்தவிர ஒன்னும் தெரியாது.. உனக்கு  நிர்வாகத்தில விரும்பமின்னா உன் இஷ்டம் போலப்படி.‘

முதல் இரவில் நடந்த அந்த உரையாடல் சுமுகமாகத்தான் நடந்தது அதற்கு சரியென்றவன் தள்ளிப் படுக்க… அவர்களையும் மீறி அடுத்த மூன்று மாதத்தில் அவளுக்கு தள்ளிப் போனது… எது  நடக்கக் கூடாதென்றாளோ அது நடந்துவிட்டது. தன் படிப்புக்கு இடையூறாய் இருக்குமென்று அந்தக் கருவைக் கலைக்க முற்பட.. அவன் வேண்டாம் என தடுக்க… இருவருக்கும் முதல்முறை வாக்குவாதம் நடந்தது… அதற்குப்பிறகு தன் படிப்பு முடியும் வரை அவனை அருகிலே அண்ட விடவில்லை அவள்.

படித்து முடித்தபின் வேலை கிடைக்க… அவளுக்கு அந்த வேலை புது அனுபவமாக இருந்ததோடு மட்டும் அல்லாமல் புதிய நண்பர்களையும் சுதந்திர காற்றையும் சுவாசிக்கும் விதமாய் அமைந்தது. அந்த பன்னாட்டு அலுவலகத்தில் பணிபுரியும் இளம் ஆணும் பெண்ணும் ஒன்றாய் பழகும் விதத்தைக் கண்டவளுக்கு தன் இளமைப் பருவத்தை முழுதும் வீணடித்து விட்டதாக நினைத்துப் பொருமினாள்.

தனது இழந்துபோன இளமையை மீண்டும் மீட்க…  மறுபடியும் கணவனிடம் அன்பு பாராட்ட ஆரம்பித்து அவனை சமரசம் செய்து இன்பத்தை காண முயன்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆரம்பத்தில் அவன் ஈடுபாடு காட்டிய தாம்பத்திய உற்சாகத்திற்கு அவள் அணை போட்டதை மனதில் கொண்டு அவளை நெருங்குவதை குறைத்தவன் பின்னர் படிப்படியாக அவள் நெருங்கினாலும் அவளை உதாசினப்படுத்தியோடு அவமானப்படுத்தவும் ஆரம்பித்தான். முதலில் காரணம் புரியாமல் இருந்தவளுக்கு அன்று அஞ்சலில் வந்த அவனின் பாஸ்போர்ட் விளங்கவைத்த\து..

அன்று சனிக்கிழமை அவளுக்கு விடுமுறை தினம் என்பதால் வீட்டில் இருக்க.. சுந்தரோ ஆபிஸ் சென்றுவிட.. பதிவுத் தபாலில் வந்த அந்த பாஸ்போர்ட்டை அவள்தான் வாங்கினாள். பிரித்து பார்த்தவள்… ஏதேச்சையாக அவனின் பிறந்த தேதி கண்டு அதிர்ந்தாள்.. அவளுக்கும் அவனுக்கும் சுமார் பன்னிரண்டு வருட இடைவெளி இருந்தது…  கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள்

ஏற்கனவே கல்யாண மற்றும் விசேஷங்களுக்குச் சென்றாள்… அவர்கள் இருவர்களையும் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள் என்று கணவனோடு சேர்ந்து விசேஷங்களுக்குச் செல்வதையே தவிர்த்து விட்டாள்.. இனி குழந்தை வேறு பிறந்தால்…. குழந்தையோடு பார்ப்பவர்கள் அந்தக் குழந்தை அவனின் பேரனோ பேத்தியோ என்று நினைத்து கிண்டலுக்கு உள்ளாக்குவார்கள்… இப்படி மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேரிட்டதை நினைக்கவே அவளுக்கு உள்ளம் கூசியது. அவனிடமே நேரிடையாக அதைப் பற்றி கேட்க…

‘நீங்க இப்படி வயச மறைப்பீங்கன்னு நான் நெனெக்கவே இல்ல..’

‘நீயும் இதுவரைக்கும் கேட்கவே இல்ல… கேட்டிருந்தா சொல்லி இருப்பேனே.. உங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சு தானே நம்ம கல்யாணம் நடந்தது…’

‘தப்பு தான்.. என்னோட தப்பு தான்..’ அதற்கு காரணமான தன் பெற்றோர்களை மனதிற்குள் சபிக்க ஆரம்பித்தாள்

‘பிரியா.. இது பெரிய மேட்டரே இல்ல.. இதப் போய் பெரிசா எடுத்திட்டு நீ பேசிட்டு இருக்கே..’

‘இதுவா… இதால என்னென்ன அசிங்கம், கேலி, கிண்டல் வரும்மின்னு உங்களுக்குத் தெரியுமா..’

‘என்ன பெரிசா வந்திடப்போகுது… நீ சின்னப்பொண்ணு உனக்கு என்ன தெரியும்’

‘இந்த ஜெனேரேஷன் கேப்தான் உங்கள அப்படிப் பேச வைக்குது… ‘அதானாலே தான் சொல்றேன்.. உங்களுக்கு ஒன்னும் அசிங்கமில்ல… எல்லாம் எனக்குத் தானே.. ஏன்னா நான் இன்னும் சின்னபொண்ணாவே இருக்கிறேனே..’

திருமண ஆன நாளிலிருந்து எந்த ஒரு அபிப்பிராயத்தையும் முடிவையும் அவளுடன் அவன் கலந்து ஆலோசிப்பதில்லை,.. அடிக்கொரு தரம் நீ இன்னும் குழந்தையாவே இருக்கே.. உனக்கு ஊர் நடப்பே தெரியவில்லை என்று பேசிப்பேசி அவளை சுயமாய் சிந்திக்க விடாமல்  அவளை ஒரு அடிமையாய் நினைக்க ஆரம்பித்தது வேறு அவளுக்கு பிடிக்காமல் போனது… தற்போது அவன் வயதை தெரிந்த பிறகுதான் ஒவ்வொரு புதிருக்கும் விடை தெரிய ஆரம்பித்தது அவளுக்கு.

‘நீ அளவுக்கு மீறி பேசற…’

‘இல்ல… இப்பத்தான் வயசுக்கு தகுந்த மாறி பேச ஆரம்பிச்சியிருக்கேன்.. போதும் உங்களோடு வாழ்ந்தது… குட் பை…’

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவனை விட்டு விலகியவள், லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது தான் அவளின் உணர்ச்சிகளுக்கும் மகிழ்ச்சிக்கும் வடிகாலாய் வந்து சேர்ந்தான் ஆத்மா என்ற ஆத்மநாதன்.

ஆத்மநாதன்… நல்ல நிறம்… ஒல்லியான தேகம்.. கன்னத்தில் குழி விழும் கன்னம்.. சிரித்த முகம்.. போதாதற்கு அவளின் ஒத்த வயது… எந்த உதவியையும் முகம் சுளிக்காமல் செய்யும் திறன் அவனிடம் அவளை விழவைத்தது, அதைவிட அவளைப்போலவே அவனுக்கும் இலக்கியத்தில் உள்ள ஈடுபாடு…

‘நீ அவன் கிட்ட வழியிறயா.. இல்ல… அவன் உன் கிட்ட வழியாறானா.. என்ன நடக்குது இங்க..’ ஒரு சமயம் அவள் அலுவலகத் தோழி கீதா அவர்களின் நெருக்கத்தைக் கண்டு பட்டென்று கேட்டுவிட… பதில் சொல்ல கொஞ்சம் திணறித்தான் போனாள் ஹரிப்பிரியா..

‘இட்ஸ் ஜஸ்ட் ஏ பிரெண்ட்ஷிப்… அவ்வளவுதான்…’ ஒப்புக்கு அப்படிச் சொன்னாலும் அவன் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருந்ததை அவளிடம் மறைத்தாள்.

‘வேணாம் பிரியா.. இது நல்லதில்ல… உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு… கரண்ட்ல நாம கைய வச்சாலும்..  நம்ம மேல கரண்ட் உரசினாலும்… சேதாரம் என்னமோ  நமக்குத்தான் தெரிஞ்சுக்கோ…’

‘ம்ம்ம்… மெயின் போர்ட்ல கை வச்சாலே ஷாக்கே அடிக்கமாட்டேங்குது… அந்தளவுக்கு பவர்கட் இருக்கு…’ அவள் தன் கணவனைப் பற்றி மறைமுகமாய் சொல்ல…

‘என்ன ஜோக்கா… சிரிச்சிட்டேன்..’

‘இல்ல கீதா உலக நடப்பு இதுதானே இப்ப… அதான்…’

‘சொல்றத சொல்லிட்டேன்… அப்புறம் உன் இஷ்டம்..’ கடந்த ஆறு மாதத்தில் ஆத்மநாபனுடனான அவளின் நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

பல முறை சுந்தர் அவளை கைப்பேசியில் தொடர்பு கொண்டும் அவள் பதிலலிக்கவில்லை. ஒருநாள் அவள் வேலை செய்யும் அலுவலகத்துக்கே வந்து சந்தித்து ‘ப்ரியா.. வா வீட்டுக்கு.. பிரச்சினையை பேசி தீர்த்துக்கலாம்’ என்று அழைக்க… வேண்டா வெறுப்பாய் அவனைப் பார்த்து இனி சந்திக்க அலுவலகம் வரவேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல் கூறி அனுப்பிவிட்டாள்.

ஒரு மாலை நேரம் மழை பெய்ய, காரில் சென்ற சுந்தர் வழியில் பஸ்ஸூக்காக காத்திருந்த ப்ரியாவை பார்த்தவுடன் காரை நிறுத்தி…  ‘வா பிரியா… மழை ரொம்ப பெய்யுது… ஒரே டிராபிக் ஜாமா இருக்கு… பஸ் வர லேட்டாகும் போல இருக்கு… காரில ஏறு.. ஹோட்டல்ல டின்னர் சாப்பிட்டு அப்படியே உன்ன ஹாஸ்டல்ல ட்ராப் பண்றேன்..’ சொன்னவனை ஒரு புழு பூச்சிப் போலப் பார்த்து சொன்னதை காதில் வாங்காமல் வீம்பாய் மழையில் நடந்தே ஹாஸ்டல் சென்றவள்.. மறுநாள்.. முதல் வேலையாக அலுவலகம் சென்று வர தனக்கென்று ஸ்கூட்டியை வாங்கினாள்.

ஒரு சமயம் அலுவலக வேலையாக பாம்பேயில் நடந்த மீட்டிங்கில் கலந்துகொள்ள அவள் செல்ல நேர்ந்தபோது அவளுடன் ஆத்மாவும் சென்றது அவர்களின் நெருக்கத்திற்கு மேலும் வலு சேர்த்தது. விமானபயணத்தில் அருகருகே அமர்ந்த இருவருக்கும் தனிமையும் நேரமும் கிடைக்க… அவர்களால் நிறைய பேச முடிந்தது.

‘ரமேஷ்… உங்களுக்கு நாவல் படிக்கிறது பிடிக்குமா…’

‘ஓ… யெஸ்.. சுஜாதா.. பாலகுமாரன்… கிரைம்ல ராஜேஷ்குமார் வரைக்கும் பிடிக்கும்’

‘பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள் படிச்சிருக்கீங்களா..’

‘ம்ம்.’

‘அதில எந்த கேரக்டர் உங்களுக்குப் பிடிக்கும்…’

‘எனக்கு சாவித்திரி ரொம்ப பிடிக்கும்….’

‘ஏன்..’

‘அவ தன் கணவனை இழந்த பிறகும் தன் சுயபச்சாபத்தை இழக்காமல் தைரியமாக வாழ்ந்தது… ‘

‘‘ஓ… எனக்கு அதில் வர்ற சியாமளி கேரக்டர் ரொம்ம பிடிக்கும்..’

‘அவளா. புருஷன் கூட இருந்தும் அடுத்தவனை விரும்பி அவன் அறைக்கே போனவதானே.. என்னதான் அந்த கேரக்டர  கதை ஆசிரியர் நியாப்படுத்தினாலும் அவ மேல பச்சாதாபம் வராம… கோவம் தான் வருது….’

‘அத ஏன் அப்படி  நினைக்கறீங்க… அது அவள் விருப்பம் என்று கூட சொல்லாமில்லையா. எல்லா ஆண்களும் மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறாங்களா என்ன…’

‘கதை ஆசிரியர் விருப்பமின்னு சொல்லுங்க….’ கூறிவிட்டு ‘ஹாஹா’ வென சிரித்தான்.

‘அப்படிப்பட்ட பெண்கள் இன்னும் இருக்கிறார்கள் இல்லையா…. எல்லோரும் வெளியே சொல்வதில்லை… தங்கள் உணர்ச்சிகளை எல்லாம் தங்களுக்குள்ளே பூட்டி வைத்து உள்ளம் புழுங்கி ஒரு மரக்கட்டையாய் இருப்பதை விட… இது எவ்வளவோ மேல் அல்லவா… அதைத்தான் வெளிப்படையா அவர் சொல்லியிருக்கார்…’ அந்த அபளைப் பெண்களில் தானும் ஒருத்தி என்பதை அவனுக்கு புரிய வைக்க இந்த உதாரணத்தை மறைமுகமாய் சொல்ல… அவனோ அதைப் பற்றி எதுவும் தெரியாதவனாய்..

‘கதையை ரசிக்கனுமே தவிர… அதில் எவ்வளவு உண்மை… எவ்வளவு கற்பனை என்று ஆராயக் கூடாது…’

‘வாழ்வில் நடப்பதைத்தான் கதையில் கூறுகிறார்களே ஒழிய கற்பனை என்று சொல்வது எல்லாம் நமது கற்பனையின் தாக்கம் தான்..’

‘அதைத்தான் சுஜாதா சொல்வார்…’

‘என்னவென்று..’

‘ஒவ்வொரு கதையிலும் கற்பனையும் உண்மையும் கலந்துதான் இருக்கிறது… அதில் எத்தனை சதவிகிதம் கற்பனை எத்தனை சதவிகிதம் உண்மை என்பது கதையை எழுதும் ஆசிரியர்க்கு மட்டும்தான் தெரியுமென்று…’

‘கற்பனையை உண்மை போல் சொல்வதை விட… உண்மையை கற்பனையாய் சொல்வதில்தான் கிக் அதிகம்..’

‘அட… இது கூட நல்லா இருக்கே…’

அதற்குப் பிறகு பல தருணங்களில் அவள் அவனை விரும்புவதை சாடை மாடையாய் சொல்லிப் பார்த்தாள்… அவன் புரிந்து நடக்கிறானா அல்லது புரியாதவன் போல நடக்கிறானா என அவளுக்குத் தெரியவில்லை. இன்று அவனிடம் தன் விருப்பத்தை எப்படியாவது சொல்லி சம்மதிக்கவைத்து… நாளை கணவனிடம் விவாகரத்தை பற்றி பேசலாமென நினைத்தவளின் எதிரில் ஆத்மா வந்தான்..

‘வாங்க ஆத்மா… ப்ரீயா இருந்தா காண்டீன் போகலாமா.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்..’

‘பிரியா.. இப்ப ஒரு மீட்டிங்க்கு சில டாகுமெண்ட்ஸ் ப்ரெபேர் பண்ணிட்டு இருக்கேன்.. நம்ம சாயந்திரம் எப்பவும் மீட் பண்ற ஹோட்டல்ல சந்திக்கலாம்’ என்றவன் தீவிரமாக அவன் வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.

‘தள்ளு’ என்ற சிவப்பு நிற ஆங்கில எழத்தில் எழுதப்பட்ட கண்ணாடிக் கதவில் தெரிந்த தன் பிம்பத்தை ஒரு முறை பார்த்து கூந்தலை சரி செய்தபடியே அதன் கைப்பிடியை மெதுவாகத் தள்ள அது வெண்ணெயின் வழவழப்பில் பின்புறம் செல்ல உள்ளே நுழைந்த அவளை குளிர்ப்பானில் இருந்து வீசிய சில்லென்ற காற்று முகத்தில் பரவி உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்வித்தது. அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த உணவு விடுதியில் கண்களுக்கு குளிர்ச்சி தரும் விளக்கொளியும் மனதிற்கு சுகம் தரும் மென்மையான சங்கீதமும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டபடி இதயத்தை இழையோடிபடி வருடியது.. புது வாழ்க்கையில் நுழையப் போகிறவளுக்கு புத்துணர்ச்சியாய் அந்த வரவேற்பு இருந்தது.

‘வெல்கம் மேடம்.. ‘ உள்ளே டை அணிந்த அந்த வரவேற்பாளர் அவளை புன்முறுவலுடன் வரவேற்று.. பதிலுக்கு காத்திருக்காமல்…

‘ஹவ் மெனி மெம்பர்ஸ் மேடம்..’

‘டூ…’ வி ஷேப்பில் இரண்டு விரல்களை விரித்தும் காண்பித்தாள்.. விரலில் நெயில் பாலிஷ் பளபளத்தது.

‘பிளீஸ் கம்….’ அவர் முன்சென்று அந்த அறையின் மூலையில் இருந்த டேபிளைக் காண்பித்து… ‘டேக் திஸ் டேபிள் மேடம்…’ என்று கூறிவிட்டு கவிழ்த்து வைக்கப்பட்ட பித்தளைத் டம்ளரை திருப்பி கண்ணாடி ஜாரின் மூக்கு வழியே நீரை அதில் நிரப்பிவிட்டு அவர் நகர்ந்தார்.

அவள் நுழைவதற்கு சற்று முன்தான் ஆத்மா எஸ்எம்எஸ் செய்திருந்தான்… இன்னும் பத்து நிமிடத்திற்குள் வந்துவிடுவதாக..

‘எக்ஸ்கியூஸ்மீ மேடம்.. ஆர்டர் பிளீஸ்..’ பேரர் கையில் நோட்டுடன் எதிரில் வந்து மெனு கார்டை நீட்டி கேட்க..

‘ரெண்டு காபி… அதுவும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சி கொண்டு வாங்க’ சொன்னவள்…. தன் டச் போனில் ஃபேஸ்புக்கின் பக்கங்களை புரட்ட ஆரம்பித்தப்படி அடுத்த டேபிளை சுத்தம் செய்யும் அவளை கவனித்தாள்.. எங்கேயோ பார்த்த  ஞாபகம் வர..

‘ராணி…’ அந்தப் பெண் திரும்பி…

‘நீங்களாமா… எப்படி இருக்கீங்க…’

ராணி.. நான்கு வருடத்திற்கு முன்பு ஹரிப்பிரியா தங்கிருந்த அபார்மென்ட்டின் எதிரில் கட்டிய புது குடியிருப்பில் கட்டிட வேலை செய்து வந்தவள். அவ்வப்பொழுது குடிக்க தண்ணீர், சாம்பார், ரசம், சாப்பிட்ட மிச்சம் மீதி வாங்க அடிக்கடி வீட்டு வர… பழக்கம் ஏற்பட்டு… நெருங்கிப் பழகி, பேச்சுத் துணைக்கு உதவியவள்.

‘நான் நல்லா இருக்கேன்.. நீ…’

‘எனக்கென்னமா குறை.. கிடைக்கிற வேல… உழைச்சா சோறு… ‘

‘ம்ம்… இப்பவெல்லாம் கட்டட வேலைக்கு போறதில்லையா…’

‘இல்லம்மா… அது பெரிய கதை… என்னன்னு சொல்றது.. எல்லாம் என் விதி…’

‘ம்ம்ம்’ கொட்டினாள்.

‘அங்க இருக்கறச்சே.. என் வூட்டுக்காரன் சும்மா குடிச்சி குடிச்சி அடிச்சிட்டிறுப்பான்னு சொன்னேன்னில்ல… அப்பத்தான் அந்த கட்டட மேஸ்திரி என்னன்னமோ பேசி என்ன மயக்கிட்டான் அவன் தான் இந்த ஏரியாவுக்கு கூட்டியாந்து வச்சிருந்தான்… அவன் தேவை முடிஞ்சதும்.. என்ன கழட்டி விட்டுட்டு.. வேற ஒருத்திய பார்த்துட்டு போயிட்டான்.. போதா குறைக்கு  ஒரு குழந்தைய வேற கொடுத்திட்டு போயிட்டான் அந்தப் பாவி.. ம்ம்ம்… என்ன பண்றது… தனியா இருந்தாளாவது மறுபடியும் வூட்டுகாரன் கால்ல கையில விழுந்து அவன் கூட சேந்திருப்பேன்… இப்ப… குழந்தைய வச்சிகிட்டு எப்படி போறது.. அதான் கெடைச்ச வேலைய செய்திட்டிருக்கேன்..’

பேரர் காபியை கொண்டு வந்து டேபிளில் வைத்தான்…

‘கொழந்தையா யாரு பாத்துப்பாங்க ராணி..’

‘பின்னாடி தூளியில தூங்கிட்டு இருக்கும்மா…’

‘ராணி… இந்த டேபிள கிளீன் பண்ணு..’ மேலாளர் அவளை அழைக்க…

‘த்தோ வரேன் சார்… காபி ஆறிட்டு இருக்குமா… சாப்பிடு..’

‘சாப்பிடறேன்..’ காபியை பிரியா எடுத்து உறிஞ்சத் துவங்க…

‘உங்க வூட்டுக்காரரு வரலையாம்மா…’

‘வருவார்….’ அவள் சொல்லும் போதே கைப்பேசியின் திரை மின்னியது…

I am stuck in traffic… Will be there in 5 min’  ஆத்மநாபன் தான் அந்த எஸ்எம்எஸ்யை அனுப்பியிருந்தான்.

‘சரி அப்புறமா பாக்கலாம்மா…’ ராணி செல்ல… பேரரிடம் பில்லை எடுத்து வரச்சொல்லி.. பில்லுக்கு பணம் கொடுத்த அவள்… ‘Traffic is cleared now.. We will meet during dinner at homeவிரல்களால் ஒவ்வொரு எழுத்தாய் தொட்டு டைப் செய்து அந்த எஸ்எம்எஸ்யை தன் கணவனுக்கு அனுப்பி..  தவறை உணந்து அவனிடம் சென்று மன்னிப்பு கேட்டு மறுபடியும் சேர்ந்து வாழ.. வேகவேகமாய் படியிறங்கி தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் ஹரிப்பிரியா.

 

(முற்றும்)

Series Navigationஎன். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)பசுமையின் நிறம் சிவப்பு
author

ரிஷ்வன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா. says:

    தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ற முடிவாக இருந்தாலும், கதாசிரியர் அவசரமாக முடித்துவிட்ட மாதிரி தான் தோன்றுகிறது….! –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  2. Avatar
    ரிஷ்வன் says:

    நன்றி செல்லப்பா அவர்களே… சட்டென்று அவளின் முடிவு மாறியது போல் தோன்றினாலும், சரியான முடிவைத்தான் அவள் எடுத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *